தருமபுரியில் மின்சாரம் பாய்ந்து யானை உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம் கெலவள்ளி அருகே உயரழுத்த மின்வடத்தைத் தொட்ட ஆண் யானை அதிகளவில் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தது.

பாலக்கோடு வனச் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் சில நாட்களாக ஆண் யானை ஒன்று சுற்றி வந்தது.  18.03.2023 அன்று காலை கம்பைநல்லூர் டவுன் பஞ்சாயத்திற்கு அடுத்த வி.பள்ளிப்பட்டு கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் அந்த யானை ஏற முயன்றபோது மேலே சென்ற உயர் அழுத்த மின்வடத்தில் அதன்  தலை உரசியதில் மின்சாரம் பாய்ந்து உடனடியாக இறந்தது.

கடந்த 7.03.2023 அன்று பாலக்கோடு அடுத்த மாரண்ட அள்ளி பகுதியில் சட்டவிரோதமாக வயல்வெளியில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி மூன்று யானைகள் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது.

காட்டுயிர்கள் பாதுகாப்பிற்காக எவ்வளவோ சட்டங்களும் வழிகாட்டுதல்களும் இயற்றப்பட்ட பின்னரும் இதுபோன்ற உயிரிழப்புகள் தொடர்வது இச்சட்டங்களும் வழிகாட்டுதல்களும் உரிய முறையில்  நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது. 2019ஆம் ஆண்டே உயர் அழுத்த மின்வடங்களால் காட்டுயிர்கள் உயிரிழப்பதைத் தடுப்பதற்கான வழிகாட்டுதலை ஒன்றிய அரசின் வனத்துறை உருவாக்கி அனைத்து மாநில மின்சார வாரியங்களும் அதனைப் பின்பற்றுமாறு கோரியிருந்தது.

“Eco-Friendly Measures to Mitigate Impacts of Power Transmission lines and other Power Transmission Infrastructures on Elephants and other Wildlife” எனும் அந்த வழிகாட்டுதலில் ”யானை வாழிடங்களிலும் யானை நடமாடும் இடங்களிலும் உள்ள மின்வடங்களை காப்பிடப்பட்ட வடங்களாக மாற்ற வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.

2020ஆம் ஆண்டு மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக் கோட்டத்திற்கு உட்பட்ட சேரம்பாடி பகுதியில் தனியாருக்கு சொந்தமான எஸ்டேட் வழியாக செல்லும் உயரழுத்த மின்கம்பத்திற்கு அடியில் ஒரு ஆண் யானை, 4 காட்டுப் பன்றிகள், 2 கீரிப்பிள்ளை, 3 பாம்புகள், 1 காகம் ஆகியவை மின்சாரம் தாக்கி இறந்தன. இது தொடர்பான வழக்கில் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய இறுதித் தீர்ப்பில் தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட காடுகள் மற்றும் காட்டுயிர் நடமாட்டம் உள்ள இடங்களில் எங்கெல்லாம் வாய்ப்புள்ளதோ அங்கெல்லாம் மின்வடங்களை நிலத்திற்கு அடியில் புதைத்துக் கொண்டு செல்ல வேண்டும் எனவும் முடியாத இடங்களில் காட்டுயிர்கள் மின்வடங்களைத் தொட்டாலும் பாதிக்காதவாறு காப்பிடப்பட்ட மின்வடங்களையும், ABC (Aerial Bunched Cables) வடங்களையும் பயன்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

மேலும் இதுபோன்ற விபத்துகள் தொடர்ந்து நடைபெறும் இடங்களில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வனத்துறை செயலர், வனத்துறைத் தலைவர், முதன்மை தலைமை காட்டுயிர் பாதுகாவலர், மின்சாரத்துறை, வனத்துறை மூத்த அதிகாரிகள் கொண்ட குழுவை கட்டாயமாக அரசு உருவாக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவுகளை எல்லாம் பின்பற்றியிருந்தால் கடந்த 4 ஆண்டுகளில் பல காட்டுயிர் இழப்புகளைத் தவிர்த்திருக்கலாம்.  இனிமேலும் தாமதிக்காமல் மேற்கண்ட உத்தரவுகளை உடனடியாக தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி, காட்டுயிர் மனிதர் எதிர்கொள்ளல் சம்பவங்கள் அதிகம் நிலவும் இடங்களில் களச் செயல்பாடுகளையும் விழிப்புணர்வுப் பணிகளையும் மேற்கொண்டால் மட்டுமே இப்பிரச்சனைக்குத் தீர்வுகாண முடியும்.

– சதீஷ் லெட்சுமணன்

 

 

https://forestsclearance.nic.in/writereaddata/Order_and_Release/Agenda/9111612171218154.pdf

 

https://greentribunal.gov.in/gen_pdf_test.php?filepath=L25ndF9kb2N1bWVudHMvbmd0L2Nhc2Vkb2MvanVkZ2VtZW50cy9DSEVOTkFJLzIwMjItMDEtMTkvMTY0MjU5MzY0NzYwODU1MjY2MjYxZTdmZDZmODZmZDAucGRm

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments