வாங்க! உரமாக்க கற்றுக்கொள்வோம்-1

வீட்டின் பின்கட்டில் இருக்கும் கால் அடி நிலத்தில் வாழை தென்னை வளரும் வீட்டில் வாழ்ந்த அனுபவம் இருக்கிறதா? சமையல் மிச்சங்களை பின்னிருக்கும் காலி இடத்தில் புதைத்து, சில மாதங்களுக்கு பின் உரமாக மாறும் அறிவியலைக் கண்டதுண்டா? இரண்டுக்கு இரண்டு என்ற குழியில் காய்ந்த இலைகள், பூக்கள், சமையல் கழிவுகளை மண்ணோடு கலந்து, சில மாதங்களுக்கு மிதமான அழுத்தத்தில் மூடி வைக்கப்படும். கழிவுகளில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான நுண்ணுயிர்களின் செயல்பாட்டாலும், காற்று வெயில் முதலியவற்றின் ஆற்றலாலும் இக் கழிவுகள் மக்கி, உயிர் சக்தி நிறைந்த உரமாக மாறுகின்றன. இவைத் தோட்டத்தில் இருக்கும் செடி கொடிகளுக்கும் உரமாக இடப்படுகிறது. இப்படியான நிகழ்வினைக் கண்டதில்லை என்பவரா நீங்கள் பரவாயில்லை, வாருங்கள் கற்றுக்கொள்வோம். முன்னொரு காலத்தில் செய்ததை, இப்போது வாழும் விறு விறு நகர வாழ்க்கையிலும் அடுக்குமாடிக் குடியிருப்பு களிலும் சாத்தியமில்லை என்கிறீர்களா, வாருங்கள் மனமிருந்தால் மார்க்கமுண்டு என்ற பழமொழிக்கு சான்று அறிவோம்! நாள்தோறும் வெளியேற்றப்படும் நம் வீட்டின் கழிவுகளில் எவையெல்லாம் உள்ளன என்று கவனியுங்கள். பெரும்பான்மையான வீடுகளின் கழிவுகள், மக்காத நெகிழிப் பைகளில் தூசி குப்பைகளோடும் காய்கறிக் கழிவுகளோடும் சமையல் எச்சங்களோடும் குப்பைத் தொட்டிக்குள் எறியப்படுகிறது. மக்கும்; மக்காத குப்பைகள் கலந்து நஞ் சாகி குப்பைக் கிடங்குகளுக்கு அனுப்பப்படும் இவை, சில காலங்கள் பூமியில் சேர்ந்து மீத்தேன் போன்ற நச்சு வாயுக்களை வெளியிடுகின்றன. இப்படி அலட்சியமாக தூர எறியப்படும் ஆர்கானிக் குப்பைகளில் தங்கம் போன்ற செல்வம் கிடைக்கும் என்று சொன்னால் அது மிகையில்லை நண்பர்களே!

ஆம், காய் கறி கழிவுகளை உரமாக்கி மண்ணின் உயிர் சக்தியை அதிகரிக்கச் செய்யும் உரமாக்கல் வழிமுறை நம் ஒவ்வொரு வீட்டிலேயும் சுலபமாக செய்ய இயலும். உரமாக்கல் பல்வேறு முறைகளில் செய்யப் படுகின்றன. அவற்றுள் ஒன்று பின்கட்டின் கழிவுக் குழிகள். தோட்டம் இருக்கும் வீடு களில் இடமிருப்பவர்கள் இப்படியான உரமாக்கல் செய்ய இயலும். அது போலவே, மொட்டை மாடிகளிலும், balcony  எனப்படும் மாடி முகப்புகளிலும் உரமாக்கலை சுலபாக செய்யலாம். ஏரோபிக் வழியில் உரமாக்கலை சிறிய இடமுள்ள வீடுகளிலும் செய்ய இயலும். இதற்கான வழிமுறைகளை இப்பகுதியில் காண்போம். aerobic எனப்படும் உயிர்வளி கொண்டு செய்யப்படும் உரமாக்கல் மூடியுடன் கூடிய பானை அல்லது டப் பாக்களில் செய்யலாம். காற்று மிக முக்கியப் பங்காற்றும் aerobic உர மாக்கல் வழிமுறையில் சமையல் கழிவுகள், முட்டை ஓடுகள், உபயோகித்த டீ பைகள், காய்ந்த பூ சருகுகள், இலைகள் ஆகியவற்றை மக்க செய்து உரமாக்க இயலும்.

  1. கழிவுகளை ஈரத்தின் அடிப்படையில் பிரித்துக் கொள்ளவும்.
  2. ஈரமாக இருக்கும் கழிவுகளை காய்ந்த இலைகள் மற்றும் காகிதங்களுடன் கலக்கவும்.
  3. ஓட்டைப் பானை (அ) டப்பாவின் உட்பகுதியில் காகிதம் கொண்டு கவர் செய்யவும்.
  4. மண்ணையும் மேல் கலந்த கழிவுகளையும், காய்ந்த இலைகளையும் இந்த காகித உரையின் மேல் அடுக்கடுக்காக அடுக்கவும்.
  5. இந்தக் கலவை ஈரம் குறைந்த அளவில் இருக்க வேண்டும்.
  6. இதனுடன் மாட்டுச் சாணத்தை (அ) புளித்த மோரை ஒரு தேக்கரண்டி அளவிற்கு தெளிக்கவும். உரமாக்கலுக்கு தேவையான நுண்ணுயிர்கள் இவற்றிலிருந்து கிடைக்கின்றன.

தினசரி கழிவுகளை மேற்கூறிய விதத்தில் பானையில் சேர்த்துக் கிளறி வைக்கவேண்டும். பானை நிரம்பிய பின்னர் மூடி வைக்கவும். காற்று புகுவதற்காக இந்தக் குவியலை தினமும் கிளறிவேண்டும். 30 நாட்கள் கழித்து அறுவடை செய்யப்போவது கருப்புத் தங்கம்
எனப்படும் உரமாகும். இவற்றை மண்ணோடு கலந்து செடிகள் வைக்க பயன்படுத்தலாம். 60% தினசரி கழிவுகளை உயிர்சத்தாக மாற்றும் ஏரோபிக் உரமாக்கலைக் கொண்டு எந்தச் செடியை நீங்கள் வளர்க்கப் போகிறீர்கள்? உங்கள் உரமாக்கல் அனுபவங்களை எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அடுத்த இதழில் உரமாக்கலின் வேறு சில முறைகளைப் பற்றிக் காண்போம்.

பி. கு:

ஈரம் மிகுந்திருந்தால் நாற்றம் வீச வாய்ப்புள்ளது. அப்படியிருந்தால் காய்ந்த இலைகளை அல்லது காகிதங்களை சேர்க்கவேண்டும். காற்று புகு வதால் நிகழும் உரமாக்கலுக்கு தினசரி கிளற வேண்டியது அவசியமாகும். மாமிச எச்சங்கள் ஏரோபிக் உரமாக்கல் முறையில் கண்டிப்பாக சேர்க்கக் கூடாது. பெரிய அளவிலான கழிவுகளை சிறு சிறு அளவில் வெட்டிச் சேர்த்தால் உரமாக்கல் நிகழ்வு விரைவாக நடைபெறும்.

தாரிணி பத்மநாபன்

இதையும் படிங்க.!