காட்டைக் காப்பாற்றிய மாசை இனப் பெண்கள்

 

தான்சானியா நாட்டின் வட பகுதியில் வாழக்கூடிய பழங்குடியின மக்கள் அவர்கள் – மாசை இனமக்கள். மிகச் சமீப காலம் வரையில் இறுக்கமான தந்தைமய சமூகமாகவே அந்த சமூகம் இருந்தது. சிலமாதங்களுக்கு முன்பு மாசை இனப் பெண்களில் ஒரு சிலர் அவர்களது இன வரலாற்றிலேயே முதன் முதலாக நில உரிமையாளர்களாக மாறியிருக்கிறார்கள். மாசை இனத்தில் நினைத்துப் பார்க்க முடியாத மாற்றம் இது. இந்த மாற்றத்துக்கு விதையாக ஒரு போராட்டம் இருந்தது. 2014ல் நடந்த இந்த போராட்டத்தை முன் நின்று நடத்தியது மாசை இன பெண்கள். ஆனால் போராட்டம், தங்களுக்கு நிலம் வேண்டும் என்பதற்காக அல்ல, அதிகார வர்க்கத்தின் வணிக வேட்டையிலிருந்து தங்களது காட்டை காப்பாற்ற நடந்த போராட்டம் அது. வட டான்சானியாவில் லோலியாண்டோ என்கிற பகுதியில்தான் மாசை பழங்குடியின மக்கள் நிறைய வாழ்ந்து வந்தார்கள். இங்கு சுமார் 1500 கி.மி பரப்பளவு காட்டை வனவிலங்கு பாதுகாப்பு என்கிற பெயரில் துபாயில் இருக்கும்
ஒரு வேட்டை நிறுவனத்திற்கு விற்றுவிட தான்சானியா அரசு முடிவு செய்கிறது. அந்த பகுதியிலேயே வாழும் மாசை பழங்குடியின மக்களின் வாழ்வோ வாழ்வாதாரமோ இந்த முடிவில் கணக்கெடுத்துக் கொள்ளப்படவில்லை. இந்த முடிவால் மாசை இன மக்கள் சுமார் 30,000 பேர் அவர்களுடைய அந்த பூர்வகுடி நிலத்தை விட்டு வெளியேற்றப்படும் ஆபத்து உருவானது. இந்த ஆபத்து முதல்முறை வருவதல்ல. 1959ல் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த போது மாசை மக்கள் முதன்முறையாக மறு குடியமர்த்தப்பட்டார்கள். அவர்கள் வாழ்ந்த செரங்கடி பகுதியிலிருந்து வெளியேறி சற்று தள்ளியிருந்த நிகொரொங்குரோ என்கிற சமவெளிகளில் குடியமர்த்தப்பட்டார்கள். செரங்கடி மனித நடமாட்டமற்ற வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. நிகொரொங்குரோவைப் பொறுத்தவரையில் மாசை இன மக்களுக்கு அங்கு மேய்ச்சலுக்கும் நீருக்கும் ஏகபோக உரிமை எக்காலத்துக்கும் உண்டு என்கிற வாக்குறுதியும் வழங்கப்பட்டது. அங்கிருந்து அவர்கள் மீண்டும் வெளியேற்றப்பட மாட்டார்கள் என்கிற வாக்குறுதியும் வழங்கப் பட்டது. ஆனால் 1961ல் தான்சானியா அரசு உருவான பிறகு இந்த நிலைமை மாறியது. புதிய வன பூங்காக்கள் உருவாக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் வெளியேற்றப்படும் சூழல் உருவானது. சுற்றுலா இந்த பழங்குடியின மக்களைப் பொறுத்தவரையில் பெரிய சாபம். துபாயை தலைமையிடமாகக் கொண்ட சுற்றுலா வேட்டை நிறுவனம் இங்கு செயல்படுகிறது என்பதால் வேட்டையாடுவதற்கு அதிவேகமாக பறக்கும் கார்களில் ஷேக்குகள் இங்கு வலம் வருவார்கள் என்று சொல்கிறது 2009ல் கார்டியன் பத்திரிக்கையில் வெளியான ஒரு செய்திக் கட்டுரை. வேகமாக பறக்கும் வண்டிகளிலிருந்து அவர்கள் மிருகங்களை சுடுகிறார்கள். மிருகங்களுக்கு மட்டுமல்ல, அங்குள்ள மாசை இன மக்களுக்கும் அது ஆபத்தானதுதான். 2009ல் ஒரு 29 வயது மாசை இளைஞர் இப்படி சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக அங்குள்ள மக்கள் சொல்கிறார்கள். சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் அவர் மீது வண்டியை ஏற்றி அதை ஒரு விபத்து மாதிரி காட்டியிருக்கிறார்கள். வறட்சியால் பாதிக்கப்பட்டு மக்கள் வேறு வழியின்றி துபாய் நிறுவனம் கையகப்படுத்திய நிலத்தில் ஒதுங்கிய போது அவர்களது நிலங்களை
உள்ளூர் காவல்துறையினரே கொளுத்திய அவலமும் நடந்தது. சுற்றுலா பயணிகளின் புகைப்படங்களுக்காகவும் அவர்களுடைய பைகளை தூக்கிக்கொண்டு வரவும் அவர்களுக்கு விலங்குகளை காட்டவுமே மாசை இன மக்கள் பயன்படுத்தப்பட்டு வந்தார்கள் என்று மாசை இனத்தைச் சேர்ந்த முதல் நாடாளுமன்ற உறுப்பினரை மேற்கோள் காட்டி எழுதுகிறது கார்டியன். “உண்மையில் இந்த காட்டில் இருக்கும் விலங்குகளின் உயிருக்கு எங்களது உயிர்களை விட மதிப்பு அதிகம்” என்று சொல்லியிருக்கிறார் அவர்.

இந்த நீண்டகால பிரச்னையின் இன்னொரு வடிவம்தான் 2014ல் வெடித்தது. மீண்டும் இந்த மக்களிடமிருந்து 40 சதவிகித நிலத்தை பிடுங்கி அதை துபாய் நிறுவனத்துக்கு தாரை வார்க்க தயாரானது தான்சானிய அரசு. இதை எதிர்த்த போராட்டத்தை முன்னெடுக்க தொடங்கியது பெண்கள். மாசை இன மக்களைப் பொறுத்த வரையில் லோலியாண்டோ அவர்களது பூர்வகுடி நிலம். அதில் எஞ்சியிருப்பது. காலம் காலமாக இந்த நிலத்திலும் காட்டிலும் மேய்ச்சலிலேயே அவர்கள் தங்களது வாழ்க்கையை நடத்தி வந்திருக்கிறார்கள்.

”நிலம் எங்களது கையைவிட்டு போய்விட்ட தென்றால் எங்களுக்கு எல்லாமே போய்விடும். எங்கள் மாடுகளை மேய்ப்பதற்கு நிலம் இல்லாத போது அவற்றை விற்கும் நிலை ஏற்பட்டுவிடும், என் குழந்தைகள் பசியால் இறக்க நேரிடும்” என்று அப்போது ஒரு பேட்டியில் சொல்கிறார் மாசை இனத்தை சேர்ந்த மைரெத்வை ஒலிங்குயோ என்கிற பெண்மணி. அரசு இந்த திட்டத்தை அறிவித்தபோது உள்ளூர் அரசியல்வாதிகள் பலர் தமது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால் அது போல எதுவும் நடக்காததும் அங்கிருந்த பெண்களை கோபப்படுத்தியிருக்கிறது. இதன் பிறகுதான் அவர்களுக்கு அரசியல் கட்சிகளின் மீதிருந்த நம்பிக்கையும் குறைந்திருக்கிறது. லோலியாண்டோ பகுதியில் மரத்தடிகளில் அமர்ந்து பெண்கள் தங்களது போராட்டத்தை தொடங்கினார்கள். ரப்பரால் செய்த செருப்பை அணிந்து கொண்டு இந்த போராட்டங்களில் கலந்து கொள்ள தனது ஊரிலிருந்து இரண்டு நாட்கள் நடந்து வந்திருக்கிறார் பாலினா பெரெ, நான்கு குழந்தைகளுக்கு தாய். போராட்டத்தின் முடிவு தெரியாமல் லோலியோண்டோவை விட்டு நகர்வதில்லை என்கிற முடிவோடு அவர் வந்திருந்தார். ”இந்த நிலத்தில்தான் நான் வாழ்கிறேன். இங்குதான் என் பிள்ளைகளை பெற்றெடுத்தேன். இறக்கும் போது, இந்த நிலத்துக்குள்தான் நான் சென்றடைவேன்” என்று அப்போது சொன்னார் அவர். இந்த போராட்டங்கள் நாள்கணக்கில், வாரக் கணக்கில் தொடர்ந்தன. லோலியாண்டோவை சுற்றியுள்ள கிராமங் களிலிருந்து மொத்தம் 2000
பெண்கள் திரண்டு போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். அதற்கான நிதியை அவர்களுக்குள்ளேயே திரட்டிக்கொண்டார்கள். அவர்களுள் பெரும்பாலானவர்கள் தாங்கள் சார்ந்திருந்த ஆளுங் கட்சியின் உறுப்பினர் அட்டையையும் திரட்டி திருப்பி வழங்கினார்கள். தமது நிலத்தை தம்மிடமிருந்து திருடும் ஒரு கட்சியை இனியும் நம்பமுடியாது என்கிற நிலைப் பாட்டை எடுத்தார்கள். ‘‘நாங்கள் எந்த கட்சியையும் சேர்ந்தவர்கள் இல்லை, எங்கள் நிலம்தான் எங்களது கட்சி” என்று அறிவித்தார்கள்.

சமூகத்தை சேர்ந்த முக்கியஸ்தர்கள் வற்புறுத்திய போதும் போராட்டத்திலிருந்து பின்வாங்க இந்த பெண்கள் மறுத்துவிட்டார்கள். இறுதியாக செப்டம்பர் 2014ல்தான் சானியா பிரதமர் மிசெங்கோ பிண்டா லோலியாண்டோ பகுதிக்கு வருகை தந்து தனது அரசின் சுற்றுலாத்துறை எடுத்த முடிவு நடைமுறைப்படுத்தபடாது என்றும் அந்த நிலம் மாசை இன மக்களுக்கு மட்டுமே உரியது என்றும் அறிவிக்கிறார். அதிகார வர்க்கம் எழுதிய வரலாறுகளால் வஞ்சிக்கப் பட்ட மாசை இனத்தின் வாழ்வியல் மீது இந்த அறிவிப்பு நீதியின் சிறு ஒளிக் கீற்றாய் விழுகிறது. இப்போது மாசை இனப் பெண்களுக்கென சில அமைப்புகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அந்த அமைப்புகளின் தொடர் செயல் பாடுகளின் வழியாகவே இன்று நில உரிமையாளர்களாகி யிருக்கிறார்கள் அந்த பெண்கள். சுற்றுலா வளர்ச்சியின் குறுகிய லாபங்களுக்காக புறக் கணிக்கப்பட்ட இனமாய் இருந்த மாசை இனம் இன்று மிக மெதுவாக வேறு திசை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.

துலிப் மலர்களின் கதைகள்

கவிதா முரளிதரன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments