புலம்பெயரும் மீனவர்களும் கண்ணுக்கெட்டாத சிக்கல்களும்

Ennore Port - Photo Credit: Swaminathan. E (Poovulagin Nanbargal)

தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் மீன்பிடிக்கூலியாகவோ, பிற பணிகளுக்காகவோ புலம்பெயரும் பாரம்பரிய மீனவர்கள் பொருளாதார ரீதியாக வலுவடைவதற்கு மாற்றாக எண்ணிலடங்கா பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். வாழ்க்கை முறையாக ஓரிடம் விட்டு வேரிடம் இடம்பெயர்ந்து வந்த மீனவர்கள் இன்று கட்டாயமாக புலம்பெயர்ந்தால் மட்டுமே குடும்பத்தைக் காப்பாற்ற முடியும் என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூர் உள்ளிட்ட தொழிலாளர் சட்டங்கள் முறையாக நடைமுறைபடுத்தப்படும் நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த மீனவர்கள் கூட பாதிப்படைந்து வருகின்றனர். இன்று படித்த பல மீனவ இளைஞர்கள் தாங்கள் படித்த படிப்பிற்குப் போதிய வேலை இல்லாத காரணத்தால் தங்களின் பாரம்பரியத் தொழிலை நாடிவந்தாலும், காலப்போக்கில் அவர்களும் புலம்பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

மிழர்களின் தொன்மைமிகு வரலாற்றை (மீனவ) கடல் பழங்குடிகளின் வாழ்வியல் இன்றி எழுதிவிட முடியாது. நெய்தல் நிலத்திணையில் கிளைத்தோங்கும் உணர்வுகளும், பண்பாடும் செழித்தொங்கி விளங்கியதாக தமிழ் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. ஆனால், இன்று  மீனவர்கள் என அவர்கள் ஒற்றைப் பெயருக்குள் அழைக்கப்பட்டாலும் கடலையும், கடல் சார் சூழலியல் அமைவுகளையும் திறன்கொண்டு நிர்வகிக்கும் தொல்குடி மக்கள் அவர்கள். இன்றும் அவர்களது மீன்பிடி முறையிலும், சடங்குகளிலும் அதன் எச்சங்களை அறியலாம்.

பழங்குடியின மக்களைப் போன்று உபரி உற்பத்தி பற்றிப் பேசுவதற்கு வாய்ப்பே இல்லாத தனித்துவமான பங்கீட்டுப் பொருளாதார முறை, சூழலை முற்றிலும் உள்வாங்கிய அறிவு மற்றும் நடைமுறை பழக்கவழக்கங்கள் என இன்று வரை அவர்களின் பண்பாடு, நடைமுறைகள் என்பது உயிர்ப்புடன் வழக்கில் உள்ளது. இத்தகைய சிறப்புமிக்க கடலோடிகள் இன்று சந்தித்துவரும் பிரச்சனைகளில் ஒன்றாக இடப்பெயர்வு(migration) உள்ளது.

மீனவ சமுகத்தினர், ஓரிடம் விட்டு வேறொரு இடம் சென்று சிலகாலம் தங்கி மீன்பிடித்துவிட்டு திரும்புவது என்பது இயல்பான ஒன்றே. மீனவர்கள் காற்றையும், கடலின் நீரோட்டத்தையும் நம்பித் தொழில் செய்யக்கூடியவர்கள். எனவே, அன்று மாறும் தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப அவர்களின் தொழில் வகைமையும் மாறுபடக்கூடியது. உதாரணத்திற்குச் சில நாட்கள் மத்தி மீன் வேட்டைக்குச் செல்பவர்கள், அடுத்த நாள் கோலா மீனின் வரவைத் தேடி வெகுதூரம் பயணிக்க வேண்டியக் கட்டாயம் ஏற்படும். இவ்வாறு,  மோட்டார் படகுகள் இல்லாத காலத்தில் பாய் மரங்களை நம்பிக் கட்டுமரத்தில் பயணித்தவர்கள், தங்கள் சொந்த ஊர் திரும்பத் தகுந்த காற்று வீசாத போது,  காற்றுக்குத் தகுந்தவாறு அங்கேயே கரை அடைந்துவிட்டு அடுத்த நாள் ஊர் திரும்புவார்கள்.  சிலசமயம் குடும்பம் குடும்பமாக வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்து அங்குப் புதிய கிராமங்கள் கூட உருவாகி உள்ளது.

இவ்வாறு உருவான ஊர்களில் ஒன்று தான் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பழையார்.  கொள்ளிடம் ஆறு கடலில் சேரும் இடத்தில் உள்ள பழையாறு  என்ற ஊரின் வரலாறு சுமார் 1௦௦ ஆண்டுகளுக்கும் குறைவானதே. இந்தப் பகுதியின் அருகில் உள்ள பல மீனவ கிராமங்களைச் சேர்ந்தவர்களும் குடியேறிதான் பழையார் என்ற ஊர் உருவாகியது. இங்கு வசிக்கும் மக்களின்  நெருங்கிய உறவினர்கள் வேறு கிராமத்தில் உள்ளதை வைத்தே அந்த ஊரின் இடம்பெயர் வரலாற்றை நாம் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். இன்றும் காரைக்கால் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து ஜெகதாப்பட்டினம் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற  மீனவக்குடும்பங்கள் அங்கயே குடிபெயர்ந்து விட்டதையும் நாம் இதற்கு நிகரான உதராணமாக எடுத்துக் கொள்ளலாம்.

தமிழக கிழக்குக் கடற்கரைப்பகுதியிலுள்ள கடலோர மாவட்டங்களான நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதியைச் சார்ந்த மீனவர்கள் கடல் சீற்றம் அதிகமிருக்கும் அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்களுக்கு இடைப்பட்டக் காலத்தில்  நாகைப் பகுதியின் தென்கோடி முனையில் உள்ள கோடியக்கரைப் பகுதிக்கு பொதுவாகப் புலம்பெயர்ந்து செல்வார்கள்.

கோடியக்கரை பகுதிச்  சென்று அங்கு சிலமாதங்கள் தங்கி மீன்பிடித்துவிட்டுத் திரும்புவார்கள். கோடியக்கரை பாக் நீரிணை  தொடங்கும் இடமாகும். இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடைப்பட்டப் பகுதியாகவும், மீன்கள் உற்பத்தியாகத் தகுந்த சூழல் உள்ளதாலும், கடல் சீற்றம் குறைவாக உள்ளதன் காரணமாகவும்  இந்தப் பகுதியை நோக்கி படகுகளுடனேயே  நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதி மீனவர்கள் காலம் காலமாகப் புலம்பெயர்ந்து செல்வார்கள்.

இவ்வாறு இடம்பெயரும் மீனவர்கள் தனித்து இடம்பெயராமல் தங்களின் படகுகளோடு, அந்தப் படகில் தங்கள் சொந்தக் கிராமங்களில் மீன்பிடியில் ஈடுபட்ட உறவினர்கள் மற்றும் நண்பர்களோடே புலம்பெயர்வார்கள். அதாவது குழுவாகப் பயணிப்பார்கள். குறிப்பிட்டக் காலம் தங்கி மீன்பிடித்துவிட்டுத் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புவார்கள்.  கிழக்கு கடற்கரை பகுதியைச் சார்ந்த நாகை, காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மீனவர்கள் கோடியக்கரை மட்டுமல்லாமல் இலங்கை வரைக்கும் கூட இடம்பெயர்ந்து சென்று, அங்கு சிலகாலம் தங்கி  மீன், இறால் பிடித்துவிட்டு தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பியதும் நடந்தேறியுள்ளது.

ஆனால், தற்போது மீனவர்கள் இடப்பெயர்வு என்பது அவர்களைப் பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவற்குப் பதிலாக  வேறு பல இன்னல்களையும் கொண்டுவரத் தொடங்கியுள்ளது.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பின்னரே மீனவர்கள் இடம்பெயர்தலின் போக்கு குறித்து ஓரளவிற்கான கவனம் ஏற்பட்டுள்ளது என்று கூறலாம்.அது பரந்துபட்ட அளவில் ஊடக கவனத்தையோ, அரசுகளின் கவனத்தையோ ஈர்க்கவில்லை என்பதே உண்மை. பொதுவாக மீனவர்களின் நலன் குறித்து துளியும் கிஞ்சித்தும் பார்க்காத அரசுகளுக்கு  இதில் கவனம் செலுத்தாதில் ஒன்றும் வியப்பில்லை.

இந்நிலையில், இயல்பாக ஆண்டின் சிலநாட்கள் மட்டும் குழுவாக இடம்பெயர்ந்தது மாறி இன்று மீனவர்கள் பெருமளவில் வெளிநாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் இடம்பெயர்கின்றனர். இவ்வாறு இடம்பெயரும் மீனவர்கள் எண்ணற்ற இன்னல்களுக்கு இலக்காக நேர்கிறது. தமிழகக் கிழக்குக் கடற்கரைப் பகுதி மீனவர்கள் என்றல்லாமல் இந்தியா முழுவதும் வசிக்கும் மீனவச் சமூகம் சந்திக்கும் பெரும் பிரச்னையாக ‘மீனவர் இடம்பெயர்வு’ உருவெடுத்துள்ளது.

கடந்த 2002-03 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின் படி(https://www.academia.edu/10610681/Inter-state_migration_of_fishers_from_Srikakulam_district_Andhra_Pradesh),  ஆந்திரா மாநிலத்தின் கடலோர மாவட்டமான ஸ்ரீகாகுளத்தில் உள்ள  (மொத்த மீனவர்களின் எண்ணிக்கையில்) 25,582 பேரில் 56% பேர் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தது தெரியவந்தது. இதேபோன்று, 2020 ஆம் ஆண்டு ஊரடங்கு காலக்கட்டத்தின் போது  குஜராத்தில் உள்ள விராவல்  மீன்பிடித் துறைமுகத்தில் ஆந்திரா மாநிலத்தைச் சார்ந்த எண்ணற்ற மீனவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லமுடியாமலும், போதிய அடிப்படை வசதிகள் இன்றியும் தவித்தனர். இதில் இருவர் உயிரிழக்கவும் நேர்ந்தது. ஆந்திரா மட்டுமின்றி இந்தியாவில் உள்ள கடலோர மாநிலங்களைச் சார்ந்த பல பாரம்பரிய மீனவர்களும் போதிய வருமானத்திற்காக இடம்பெயர்ந்து வருகின்றனர்.

முன்பே குறிபிட்டது போல, மீன்பிடித்தொழில் என்பது இடம்பெயர்வை பிரதானமாகக் கொண்டதே. ஆனால், இன்று அதன் போக்கு மாறியுள்ளது. தெளிவாகக் குறிப்பிட வேண்டுமாயின் முன்பு அண்டை மாவட்டங்களுக்கோ அல்லது மாநிலங்களுக்கோ இடம்பெயர்ந்தவர்கள். இன்று வெகுதொலைவிற்குப் பயணிக்கின்றனர் அல்லது வெகு தொலைவுகளுக்குப் பயணிக்கும் மீனவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனக் கொள்ளலாம்.  இதனை சமீபத்தில் இடம்பெயர் தொழிலாளர்கள் (இது மீனவர் குறித்தான ஆய்வு அல்ல)  தொடர்பாக நடந்த மூன்று மாநில  கள ஆய்வில் (உள்நாட்டு அகதிகள் ,பாரதி புத்தாகாலயம் பக்க எண்.29)வரும்  ஒரு கண்டடைவு உடன் பொருத்திப் பார்க்க விரும்புகிறேன். அது ‘நிறைய கடன் சுமைகள் உள்ளவர்கள் அதிகதூரம் பயணிக்கிறார்கள்’ என்பதோடு பொருத்தி பார்ப்பதென்பது சரியாக இருக்குமென்று நம்புகிறேன்.

குறிப்பாகப் போதிய வரத்து இல்லாததல் தொடர்ந்து அதிகரிக்கும் கடன் சுமையும், மீன்பிடிப்பதற்கான எரிபொருள் மற்றும் வலை போன்றவற்றின் முதலீடு அதிகரிப்பதும், மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததும், மீனவர் நலன் குறித்தத் தெளிவான நடவடிக்கைகள் இன்மையும், இறால் பண்ணைகளின் அதீத இயற்கைச் சுரண்டலுமே மீனவர்களின் கடன் சுமை அதிகரிப்பதற்கானப் முக்கியக் காரணங்கள் ஆகும்.

இதன் காரணமாக மீனவர்கள் இடம்பெயர்வு என்பது தற்போது விருப்பத்தேர்வாக இல்லாது. தங்கள் பாரம்பரியத் தொழிலை விட்டுக் கட்டாயப்படுத்தப்பட்டு வெளியேற்றப்படுவது போன்று உருமாறியுள்ளது. மேலும், இடம்பெயர்வு என்பது மீனவச் சமுகத்தைப் பொருளாதார ரீதியாக வலுப்பதுவதற்குப் பதிலாக கொத்தடிமை, உழைப்புச் சுரண்டல் உட்பட பல இன்னல்களுக்கு வழிவகுக்கிறது.  இதன் காரணமாக வரலாற்று ரீதியில் பல்லாண்டுகளாக அரசின் ஏற்றத்தாழ்வுக்கு உள்ளாகி வரும் மீனவச் சமூகம் மேலும் வஞ்சிக்கப்பட்டு வருகிறது என்பதே நிதர்சனமான உண்மை.

இடம்பெயரும் (நாகை, மயிலாடுதுறை,காரைக்கால்) தமிழக கிழக்குக் கடற்கரை மீனவர்களைப் பொறுத்தவரை நன்கு தொழிற்திறன் பெற்றவர்கள் தேர்வு எழுதிவிட்டு (skilltest)  கட்டிட வேலை மற்றும்  இதர வேலைகளுக்காக  சிங்கப்பூருக்குச் செல்கின்றனர். மற்றவர்கள் மத்தியக் கிழக்கு நாடுகளான துபாய், கத்தார், ஈரான் போன்ற நாடுகளுக்கு மீன்பிடித் தொழிலுக்காகவும் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

இதில் நாம் உற்றுநோக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம், கடல் பழங்குடியின சமுகத்தைப் பொறுத்தவரை பெண்கள் படகுக் கரையை அடைந்ததற்குப் பிறகான  மற்றும் கடலுக்குச் செல்வதற்கான அனைத்து வேலைகளிலும் நேரடியாகப்  பங்காற்றுகின்றனர். எனவே, தங்கள் வீட்டின் உறுப்பினர் ஒருவர் புலம்பெயரும் போது அதன் காரணமாக நேரடியாக  மீனவப் பெண்கள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.  குறிப்பாக,  தங்கள் குடும்ப உறுப்பினர்கள் புலம்பெயர வாங்கும் கடன்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமைக்குத் தள்ளப்படுகின்றனர்.

இவ்வாறு இடம்பெயர்ந்த மீனவர் ஒருவரைச் சந்திக்கையில், சிங்கப்பூரில் கப்பல் சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட ஒரு பாரம்பரிய மீனவரைக் குறித்து தெரிவித்தார்., ‘கப்பலில் உள்ள நீராவி உருளைகளில்(container) வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்ட அவர் ஒரு நாள் பணியின் போதே மயங்கி விழுந்தார். அவரை அவசர அவசரமாக அவர் பணிபுரிந்த நிறுவனம் விடுப்பு கொடுத்துத் தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்தது. அவரும் நிறுவனம் தன் மீது எவ்வளவு கரிசனம் கொண்டுள்ளது என்ற நம்பிக்கையில் சிலநாட்களிலேயே வீடு திரும்பினார். ஆனால், தமிழ்நாட்டிற்கு வந்த சில நாட்களிலேயே அவரது  நிலை மிகவும் மோசடைந்தது. மருத்துவ மனையில் பரிசோதித்த போது அவரது இரத்தத்தில் ரசாயனம் கலந்திருந்தது தெரியவந்தது. அப்போதையத் தமிழக முதல்வர் சிகிச்சைக்காக உதவிய போதும், தொடர்ந்து சிகிச்சை கிட்டாமல், சில மாதங்களிலேயே அவரும் உயிரிழந்தார். அவர் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தே பணிபுரிந்த நிறுவனம் உண்மையை மறைத்து, இழப்பீடு மற்றும் மருத்துவ உதவி எல்லாவற்றையும் மறுதலித்துள்ளது’ என்று  கூறினார்.

இவ்வாறு தொழிலாளர் நல விதிகள் கடுமையாகச் செயலில் உள்ள நாடுகளிலயே இந்நிலை என்றால், மீன் பிடிக்காகப் புலம்பெயரும் சவூதி, கத்தார் போன்ற நாடுகளில் சந்திக்கும் உரிமை மீறல்களை சொல்லித் தெரியவேண்டியதில்லை. கடவுச் சீட்டு பிடுங்கி வைக்கப்படுவது தொடங்கி பலவகையிலும் மீனவர்களைப் பிரச்சனைக்கு உள்ளாகுகின்றனர்.

இந்நிலையில்,  புலம்பெயரும் மீனவர்கள் குறித்து அவ்வப்போது செய்திகளில் சில செய்திகள் வெளியானாலும் கூட, புலம்பெயரும் நெய்தல் மக்களின் நிலை இன்று வரை அரசின் காதுகளை எட்டவே இல்லை.  வலுவான விதிகள் வகுக்கப்பட்டுப் புலம்பெயர் மீனவர்களின் நலனை மேம்படுத்த அரசுகள் முன்வர வேண்டிய அதே வேளையில், கடலையும் கடற்கரையும் பெரும் முதலாளிகளுக்குக் கையளிப்பதையும், நெய்தல் குடிகளை வெளியேற்றும் திட்டங்களையும் அரசு கைவிடுவதே நிரந்தரத் தீர்வாக  அமையும்.

  • பிரதீப் இளங்கோவன்

[email protected]

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments