கடந்த ஆண்டில் கொரோனா பொதுமுடக்கத்தின் சில நாட்களுக்கு முன்னர், ‘சென்னை நகரின் நடுவே காடு வளர்ப்பு’ என்று செய்தியில் பார்த்தேன். ஆர்வம் கொண்டவனாய் என்னவென்று பார்த்த போது, சென்னை மாநகராட்சி, கோட்டூர்புரத்தில் மியாவாக்கி முறையில் குறுங்காடு ஒன்றினை ஏற்படுத்தி இருந்தார்கள். அந்த இடமே இன்னும் சில ஆண்டுகளில் பசுமை காடாக மாறிவிடும், வெயில் காலத்தில் இதமாக இருக்கும் என்றெல்லாம் அங்கிருந்த மக்களின் பேச்சில் பல பெருமிதங்கள். எனக்கு என்னவோ அது ஒரு சிறிய இடத்தில் வளர்ந்த புதர் போலத்தான் இருந்தது. நிச்சயம் இன்னும் சில வருடங்களில் அதே இடம் காடு போன்ற உணர்வை எனக்கு ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திக்கொண்டேன்.
இந்தக் காட்டினை நேரில் பார்க்க விரும்புபவர்களுக்கு : அடையாறு ஆற்றங்கரை ஓரமாக, சரியாகச் சொல்ல வேண்டுமானால் கோட்டூர்புரத்திற்குச் சென்று மியாவாக்கி காடு எங்கே இருக்கிறது என்று கேளுங்கள், அங்கிருப்பவர்கள் நேராக உங்களை ஓரிடத்திற்கு அழைத்துச் செல்வார்கள். சுமார் 23,000 சதுர அடி பரப்பளவில் அடர்ந்த மரங்களுடன் ஒரு குறுங்காட்டினை நீங்கள் அங்கே காணலாம். முன்பு குப்பை கொட்டும் இடமாக இருந்த நிலத்தைத் தற்போது குறுங்காடாக மாற்றி உள்ளனர். அதாவது சென்னையின் கான்கிரீட் வனத்திற்குள், ஓர் பசுமை காடு. ஆனாலும் இந்த மியாவாகி முறை காடுகள் உண்மையான காடுகள் தானா என்ற ஐயம் எப்போதுமே என்னை விட்டபாடில்லை.
எனது இந்தத் தடுமாற்றத்திற்குக் காரணங்கள் இருக்கிறது. அவற்றைக் கீழே விரிவாகக் கூறுகிறேன். அதற்கு முன்னர் மியாவாக்கி காடுகள் என்றால் என்னவென்று ஒரு சிறிய முதலில் பார்த்து விடுவோம்.
மியாவாக்கி காடுகள்:
அகிரா மியாவாக்கி என்பவர் ஒரு ஜப்பான் நாட்டு தாவரவியலாளர், விதைகள் மற்றும் இயற்கை காடுகள் பற்றிய அறிவியலாளர். இவர் தனது ஆராய்ச்சிகளின் போது ஜப்பான் காடுகளில் அந்நாட்டின் இயல் (native) மரங்கள் குறைந்தும், அயல் (invasive) மரங்கள் நிறைந்தும் இருப்பதைப் பற்றி ஆராய்ந்தார், அதற்கு மாற்றாக முழுவதும் உள்நாட்டு மரங்களைக் கொண்ட காடுகளை விரைந்து வளர்ப்பதற்கான முறைகளை ஆராய்ந்து வந்தார். அவ்வாறு அவரது ஆராய்ச்சியில் உருவானதே இந்த மியாவாக்கி காடு வளர்ப்பு முறை. அதாவது, இடைவெளி இல்லா அடர்காடு என்பதே மியாவாக்கி காடுகள்.
இது, ஒரு குறிப்பிட்ட இடத்தின் மண் வளம், காலநிலை, பருவ மாற்றங்கள் என அனைத்தையும் சார்ந்து தனித்துவமாக உருவாக்கப்படும் காடு வளர்ப்பு முறை ஆகும்.
இந்த முறையில் மிகவும் அடர்த்தியான காடுகளைக் குறைந்த காலத்தில் உருவாக்கி விடமுடியும். சாதாரணமாக ஒரு காடு உருவாவதற்கு 150 முதல் 300 ஆண்டுகள் ஆகும். ஆனால் இந்த மியாவாக்கி முறை மூலம் அதே அளவிலான காடுகளை 15 முதல் 30 வருடங்களில் உருவாக்கிவிடலாம்.
இந்த முறையில் ஒரு சிறிய இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதில் பல்வேறு வகையான மரங்கள் மிகவும் நெருக்கமாக நடப்படும். உங்களிடம் சுமார் 500 சதுர அடி இடம் இருந்தால் கூட, அதில் இந்த முறையில் நீங்கள் காடுகளை வளர்க்கலாம்.
இந்த மரக்கன்றுகளை நெருக்கமாக நடுவதின் மூலம் அவற்றிற்குச் சூரிய ஒளி மேலிருந்து மட்டுமே கிடைக்கும், பக்கவாட்டில் மற்ற செடிகள் நெருக்குவதால், ஒளிச்சேர்க்கைக்காக மரங்கள் சூரிய ஒளியை தேடி ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு மேல்நோக்கி வேகமாக வளரும். இதனால் பத்து ஆண்டுகளில் ஒரு மரம் எவ்வளவு வளர்ச்சியடையுமோ, அந்த வளர்ச்சி இந்த முறையில் இரண்டே ஆண்டுகளில் கிடைத்து விடும். பொதுவாக இந்த முறையில் மரங்கள், இயற்கை காடுகளை விட 10 மடங்கு அதிக வேகமாகவும், 30 மடங்கு அதிக நெருக்கமாகவும் வளரும்.
எந்த அளவிற்கு என்றால், ஒரு வருடத்திற்குச் சுமார் ஒரு மீட்டர் வரை இந்தக் காடுகள் வளர்வதை நீங்கள் பார்க்க முடியும். இதில் முக்கியமாக முதல் இரண்டு வருடங்களுக்கு நன்றாகப் பராமரிக்க வேண்டும். விதைத்த ஒவ்வொரு செடியும் வளர்ந்து செழிக்க வேண்டும் என்ற நோக்குடன் இவை செய்யப்படுகிறது. மூன்று வருடங்களுக்குப் பிறகு பராமரிப்பின்றித் தானாகவே வளரும். அதற்குப் பிறகு இந்தக் காடுகள் தன்னிறைவு பெற்று அதன் சூழல் அமைப்பை தானே நிலைப்படுத்தும் தன்மையை அடைந்து விடும்.
இவற்றை உருவாக்க நாம் கொஞ்சம் செலவு செய்ய வேண்டும். பொதுவாக அறுநூறு சதுர அடி குறுங்காடு உருவாக்க சுமார் இருபதாயிரம் ருபாய் செலவு ஆகும். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள மியாவாக்கி காட்டினை உருவாக்க சென்னை மாநகராட்சி சுமார் 15 லட்சம் செலவு செய்துள்ளது.
இன்றைய உலகில் மியாவாக்கி காடுகள்:
மியாவாக்கி காடுகள் முதலில் ஜப்பானில் காணப்பட்டாலும், 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் உலகெங்கும் பரவ ஆரம்பித்தது. குறிப்பாக ஜப்பானில் மட்டும் சுமார் 4000 மியாவாக்கி காடுகள் உள்ளன. அதிலும் கடந்த இருபது வருடங்களில் மிகப் பெரிய வரவேற்பினை பெற்றுத் தற்போது உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. ஐரோப்பா நாடுகளில் பலவற்றில் இந்தக் காடுகள் பரவலாக உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாகப் பிரான்ஸ், பெல்ஜியம், நெதெர்லாந்து போன்ற நாடுகள் இந்தக் காடுகளைத் தங்கள் நகரங்களில் ஏற்படுத்தியுள்ளன.
இந்த வரிசையில் இந்தியாவும் சமீப காலமாகப் பல பெருநகரங்களில் இதுபோன்ற காடுகளை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரு, ஐதராபாத் சென்னை போன்ற நகரங்களில் இவை தற்போது உருவாக்கப்பட்டுள்ளன. உலகின் மிகப் பெரிய மியாவாக்கி காடு குஜராத்தில் தெற்கு கடற்கரை பகுதியில் உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை மாநகராட்சி திட்டங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலம் அடையாறு, கோட்டூர்புரம், பல்லாவரம், வானகரம், தலைமை செயலகம், முகலிவாக்கம், வளசரவாக்கம், பெருங்குடி போன்ற இடங்களில் 2020ஆம் ஆண்டில் இந்த மியாவாகி வகைக் காடுகள் உருவாக்கபட்டது. மேலும் சோழிங்கநல்லூர் போன்ற பல பகுதிகளில் புதிதாக உருவாக்க முயற்சிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. தமிழ் நாடு முழுவதும் சில விவசாயிகள் தங்கள் நிலங்களில் இந்த வகைச் செயற்கை காடுகளை உருவாக்கி, அதன் நடுவே பழ மரங்களையும் நட்டு பயன் பெற்று வருகின்றனர்.
மியாவாகி முறை நன்றாகப் பயன் தருவதால் தானே இவ்வளவு நாடுகளில் பின்பற்றுகின்றனர் என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது.
இந்த மியாவாக்கி முறை அடர் வனங்களினால் பல நன்மைகள் இருக்கின்றன. அவற்றுள் சில:
- இந்த முறை அடர் வனங்கள் ஜப்பான் நாட்டில் அடிக்கடி நிகழும் இயற்கை பேரழிவுகளில் இருந்து மிகச் சிறந்த தடுப்பு அரணாகத் திகழ்கிறது. பல இடங்களில் சுனாமி தடுப்பு அரணாகவும் இவை உருவாக்கப்பட்டுள்ளன.
- மலை பிரதேசங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு காடுகளை இழந்த இடங்களில், இந்த முறையின் மூலம் காடுகளை உருவாக்குவது பெரும் வெள்ளங்கள் மற்றும் நிலச்சரிவுகளைத் தடுக்க உதவுகிறது.
- ஒரு குறிப்பிட்ட அளவிற்கு இந்தக் காடுகள் பல்லுயிர் பெருக்கத்திற்கு வழி செய்கிறது. பட்டாம்பூச்சிகள், சிறு பூச்சியினங்கள் மற்றும் பல்வேறு பறவையினங்களின் பெருக்கத்திற்கு இவை உதவுகின்றன.
- தரிசு நிலங்களை இந்தக் காடுகள் சில ஆண்டுகளிலேயே செழிப்பான மண்ணாக மாற்றுகிறது.
- மேலும் பெரு நகரங்களில் இத்தகைய அடர்வன மரங்களின் கீழ் வெப்ப அளவு சுமார் 5 டிகிரி வரை குறைவதாகக் கூறப்படுகிறது.
- பெருநகரங்களில் பசுமை போர்வையைப் பல மடங்கு உயர்த்துகிறது.
- நகர்ப்புறங்களில் நடுவே இத்தகைய பசுமையான காடுகளினால் மக்களின் உடல்நலத்தில் மாற்றம் ஏற்படுகிறது. அவர்களின் மனஅழுத்தம் குறைய இத்தகைய காடுகள் உதவுகிறது. இவை நீண்டகாலப் பயனாக மக்களுக்குக் கிடைப்பவை.
- இன்றைய காலத்தில் பெருநகரங்களில் முக்கியப் பிரச்சினையான காற்று மாசுபாட்டினை இந்த வகையிலான குறுங்காடுகள் குறைக்கின்றன.
- காடு அழிப்பினால் நாம் இழந்த பசுமை பிரதேசங்களை, இத்தகைய குறுங்காடுகளின் மூலம் மீண்டும் உருவாக்கம் செய்ய முடியும். வெட்டப்பட்ட மரங்களுக்கு மாற்றாக இத்தகைய காடுகளை ஏற்படுத்தலாம்.
இதுபோல இன்னும் பல பயன்கள் உள்ளன. மியாவாக்கி காடுகள் என்பது நவீன யுகத்தின் ஒரு உன்னதக் கண்டுபிடிப்பு எனபதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இந்த மியாவாகி முறையினை இயற்கை காடுவளர்ப்புக்கு மாற்றாகச் சில விஞ்ஞானிகளும் சுற்றுச்சூழல்வாதிகளும் முன்னிறுத்துவது தான் சற்றே நெருடலை தருகிறது.
பல நலன்களைக் கொண்டிருந்தாலும், இந்தக் காடு வளர்ப்பு முறையினால் இயற்கை காடுகளை ஈடு செய்ய முடியாது. இயற்கை பல நூற்றாண்டுகளாகச் செதுக்கி ஏற்படுத்திய காடுகளை நாம் சில ஆண்டுகளில் உருவாக்க முயல்கின்றோம் எனபதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இப்படிச் செயற்கை வழியில் மனிதன் முயலும் போது அதில் பிரச்சினைகள் இருக்கத் தானே செய்யும். அவற்றில் முக்கியமான சில பிரச்சினைகளைப் பார்ப்போம் :
- பொதுவாக நகர்ப்புறங்களில் உருவாக்கப்படும் மியாவாக்கி காடுகள், கான்கிரீட் கட்டிடங்களுக்கு நடுவே ஒரு சிறிய மைதானத்தில் அடர்ந்த செடிகளும் மரங்களும் வளர்ந்துள்ளதை போலவே இருக்கின்றன. இத்தகைய காடுகள் வளர்ந்த பின்னர் நாம் இந்த மைதானங்களைச் சுற்றி வரலாமே தவிர, உள்ளே சென்று ரசிக்க முடியாது. நண்பர்களுடன் டிரெக்கிங் போகவும் முடியாது.
- இயற்கை காடுகளில் நம் கற்பனைக்கு எட்டாத அளவில் செடிகளும் மரங்களும் உள்ளன. அதில் ஒவ்வொன்றிற்கும் தனித்தனி சிறப்புகளும் உண்டு. உதாரணத்திற்கு இன்றும் பல மூலிகை செடிகள் காட்டில் மட்டுமே காணப்படுகின்றன. இவை அனைத்தையும் மியாவாக்கி காடுகளின் மூலம் பெற முடியாது.
- இயற்கை காடுகளில் சதுப்பு நிலக்காடுகள், வெப்ப மண்டல காடுகள், மழைக்காடுகள் எனப் பல வகைகள் உள்ளன. இவற்றை எல்லாம் மியாவாக்கி முறையினால் உருவாக்கம் செய்ய முடியாது.
- பொதுவாக, காடுகள் அமைந்துள்ள இடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளின் மழை அளவு, தட்ப வெப்பம் போன்றவற்றில் இயற்கை காடுகளின் பங்களிப்பு வெகுவாக இருக்கும். ஆனால் இந்தக் குறுங்காடுகளினால் மழைப்பொழிவை ஏற்படுத்தும் அளவிற்குத் தாக்கம் இருக்குமா என்று கேட்டால், சந்தேகம் தான்.
- மேலும் இந்தக் குறுங்காடுகள் பல்லுயிர் பெருக்கத்திற்கு வழி வகுத்தாலும், வன விலங்குகளின் கூடாரமாக இவை என்றுமே மாறாது. இந்தக் குறுங்காடுகளில் மரங்களின் நெருக்கம் காரணமாகச் சிறிய வன உயிரினங்கள் கூட இங்கு உலாவவோ அல்லது வசிப்பதற்கோ முடியாது. எனவே வன விலங்குகளின் பாதுகாப்புக்கு இவற்றின் பங்களிப்பை நாம் எதிர்பார்க்க முடியாது.
- வெறும் மரத்தொகுப்புகள் மட்டுமே காடுகள் ஆகாது. இயற்கையான காடுகள் என்பது மிகவும் வலுவான உணவு சங்கிலி மற்றும் நுட்பமான சூழல் அமைப்புகளைக் கொண்டது. அந்த அளவினை வைத்து பார்க்கும் போது மியாவாக்கி காடுகள் வெறும் மர தொகுப்புகள் மட்டுமே.
- இயற்கை காடுகள் ஒரு சிறந்த கார்பன் வங்கி ஆகும். அதாவது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக அதன் மரங்களில், மண் அடுக்குகளில் பல மில்லியன் டன் கார்பனை சேமித்து வைத்திருக்கின்றது. நமது செயற்கை காடுகள் 10 அல்லது 15 ஆண்டுகளில் வளர்ந்தாலும் இந்த ஒரு சாராம்சத்தை ஈடு செய்ய முடியாது.
- இந்த முறையில் செயற்கை காடுகளை ஏற்படுத்த அதிகப் பணம் செலவு ஆவதால், ஒரு பெரிய நிலப்பரப்பை இந்த முறையில் காடுகளாக மாற்றம் செய்யும் முயற்சி மேற்கொள்ளப் படுவதில்லை.
- இந்த மியாவாக்கி காடுகள், மறைமுகமாக வியாபார நோக்கோடு செய்யப்படும் காடு அழிப்பினை ஊக்கப்படுத்தக்கூடும் எனச் சிலர் கருதுகின்றனர். மனித இனத்தின் தேவைகளுக்காகக் காட்டின் பெரிய மரங்களை வெட்டி விட்டு அதற்குப் பதிலாக இத்தகைய மியாவாக்கி மரங்களை வைத்து விடுகிறோம் என்று கூறி சில இடங்களில் காடு அழிப்பு நடந்துள்ளது.
இயற்கையின் கொடைகளான காடுகள், மண் முதல் முதிர்ந்த மரங்கள் வரை, மண்புழு முதல் பறவை வரை, தவளை முதல் யானை வரை, குட்டை முதல் நதிகள் வரை, விஷ செடிகள் முதல் அற்புதமான மூலிகைகள் வரை எனப் பல்வேறு நிலைகளில் பல்லுயிர் பெருக்கத்தினைக் கொண்டுள்ளது. அமேசான், போர்னியோ காடுகள் போன்ற பல காடுகளுக்கு என்று தனிச் சுற்றுச்சூழல் அமைப்பே காலப்போக்கில் உருவாகி, தனி உலகமே அதற்குள் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் மனித இனம் பரிணமித்தது முதல் சமீபத்தில் சில ஆயிரம் ஆண்டுகள் முன்பு நாகரிகத்தின் காரணமாக நகரத்தில் நாம் புகும் வரையில், மனிதனுக்கும் காடுகளுக்கும் இருந்த பந்தம் மிகப் பெரியது. நம் மூதாதையர்களைத் தனது வளங்களின் மூலம் வாழ வைத்தது இந்த இயற்கை காடுகள் தான். இவற்றில் எந்த அம்சங்களை மியாவாக்கி குறுங்காடுகள் மூலமாகப் பூர்த்திச் செய்யமுடியும் என்று நீங்களே சிந்தித்துப் பாருங்கள், இவை உண்மை காடுகள் தானா என்று நான் ஆரம்பத்தில் கூறிய எனது தடுமாற்றத்திற்கான காரணம் உங்களுக்கே புரியும்.
ஒருபக்கம் இத்தகைய குறுங்காடுகள் நிறையப் பெருகும் அதே நேரத்தில் மறுபுறம் இயற்கை காடுகள் வரலாறு காணாத அளவிற்கு வேகமாக அழிந்து வருகின்றன. உதாரணத்திற்கு ஒவ்வொரு நிமிடத்திற்கும் 150 ஏக்கர் அளவிற்கு அமேசான் காடுகள் அழிக்கப்படுகிறது. இதனை ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள், அதன் தீவிரம் புரியும். இன்னொரு பக்கம் செம்பனை (பாமாயில்) வியாபாரத்திற்காக மலேசிய மழைக்காடுகள் முழுவதுமாக அழிக்கப்பட்டு வருகின்றன. இயற்கை வளங்கள், கனிம சுரங்கங்களுக்காக ஆப்பிரிக்காவின் காடுகள் பாதி அழிக்கப்பட்டுவிட்டன. இதுபோல உலகின் பல காடுகளுக்கும் இதே நிலைமை தான்.
சுருக்கமாகச் சொல்லப்போனால், இந்த மியாவாக்கி காடுகளைப் பெருநகரங்களில் உருவாக்குவது மகிழ்ச்சியான செய்திதான். ஆனால், இந்த மியாவாக்கி காடுகள் என்றுமே இயற்கையில் தன்னிச்சையாக உருவான காடுகளுக்கான ஒரு மாற்றாக ஏற்றுக்கொள்ள முடியாதவை. இத்தகைய சிந்தனை, தற்போது மீதமுள்ள இயற்கை காடுகளுக்கும் அழிவு பாதையினைக் காட்டிவிடும். மேற்கு தொடர்ச்சி மலை காடுகளைப் பாதுகாக்காமல், அதற்குப் பதிலாக மியாவாக்கி காடுகளை முன்னிறுத்த முடியாது. இது கடலின் தண்ணீர் அளவினை நமது கையில் உள்ள குவளை நீருடன் ஒப்பிடுவது போன்றது. இந்த மியாவாகி குறுங்காடுகள் இயற்கை காடுகளுக்கு மாற்றாக அமையாமல், அவற்றிற்குத் துணையாய் உருவாக்கப்பட வேண்டும் என்பதே என் போன்ற பல சூழல் ஆர்வலர்களின் கூற்று.
இந்தக் குறுங்காடுகளை நகருக்குள் கிடைக்கும் சிறு இடங்களில் உருவாக்கும் பணி நடந்துகொண்டிருக்கும் அதே வேளையில், உண்மையான காடுகளை வளர்க்கவும் இதே ஆர்வம் காட்டப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளை மேலும் தீவிரமாகத் தொடர வேண்டும். இயற்கை காடுகளின் அழிப்பை தடுக்க வழி செய்யாமல், பன்னாட்டு நிறுவனங்களும் சில ஆர்வலர்களும், இந்தக் குறுங்காடுகளை ஏற்படுத்தி விட்டதோடு தமது சுற்றுச்சூழல் கடமையை ஆற்றிவிட்டதாக நினைத்துத் தம்மைத் தேற்றிக்கொள்வது, இப்போது நாம் இருக்கும் காலநிலை மாற்ற அழிவின் நிலையில் ஏற்கத்தக்கதல்ல. இந்த மியாவாக்கி காடுகள், இயற்கை காடுகளின் பாதுகாப்பிற்கு அளிக்கப்படும் பங்களிப்பில் தொய்வை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் நாம் கவனமாகவும், விழிப்போடும் இருக்க வேண்டும்.
– பிரதீப் சரண் , விசை
Thank you great explanation