பகுத்தறிந்து பல்லுயிர் ஓம்புதல்

விலங்கினங்களில், ஒரே இடத்தில் மறைவாகக் காத்திருந்து தனது இரை அருகில் வந்ததும், பாய்ந்து வேட்டையாடும் உயிரினங்களை ‘Ambush predators’ (பதுங்கி வேட்டையாடுபவை) என்பர். அப்படியாக நாம் அனைவரும் அறிந்த உயிரின வகை, மலைப்பாம்புகள். இவை மரத்தின் மேல் ஏறியோ, நீரில் மூழ்கியோ, புதர்களுக்கிடையே மறைந்தோ தன் இரை வரும் வரை காத்திருந்து, கணப் பொழுதில் அவற்றின் மீது பாய்ந்து தம் வளைந்த பற்களால் இரையை வலுவாகப் பிடித்து அவற்றின் மூச்சை நிறுத்தும் வரை முறுக்கிக் கொன்று, பின்னர் விழுங்கும்.

சமீபத்தில் ஒரு காணொளியைப் பார்க்க நேர்ந்தது. அதில் வாகனங்கள் விரைந்து கொண்டிருந்த சாலையில் ஒரு மலைப்பாம்பு மானைப் பிடித்து விழுங்குவதற்காக இறுக்கி முறுக்கிக் கொண்டிருந்தது. சாதாரணமாக சிறு சிறு எலிகள், பறவைகள் போன்றவற்றை வேட்டையாடினாலும், மான்களைப் போன்ற பெரிய இரைகள் அவற்றை அடுத்த பல மாதங்களுக்கு உணவுத் தேவையின்றி வைத்துக் கொள்ள வல்லவை. இன்னும் சில நிமிடங்களில் மானின் எலும்புகள் முறிந்து, அந்த மலைப்பாம்பின் இரையாக அது மாறவிருந்த நேரத்தில் சற்றும் எதிர்பாரா விதமாக ஒருவர் மரக் கிளையினால் அந்த பாம்பை அடித்து மானை காப்பாற்றிய காட்சி வன ஆர்வலர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த செயல் சரியா தவறா என்ற விவாதத்துக்கிடையே, வனத்துறை அதிகாரி ஒருவர் “கருணைக்கும், சரியானதுக்கும் இடையில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்பட்டால் கருணையைத் தேர்ந்தெடு” என்று அந்த செயலை நியாயப்படுத்தும் வகையில் பதிவிட்டு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். உண்மையில் இது அவரது நிலைப்பாடு மட்டுமல்ல, வெகுமக்கள் பெரும்பாலானோரின் நிலைப்பாடாகவும் இருக்கிறது. இந்த நிலைபாட்டையே மையமாகக் கொண்டு, இயற்கை பாதுகாப்பு என்ற பெயரில் இயங்கும் மக்கள் இயக்கங்களும் இங்கு பல உண்டு. ‘கருணை’, ‘அன்பு’, ‘பாசம்’ போன்ற மனிதனுக்கு தனிப்பட்ட மனநிறைவைத் தரும் தத்துவங்களை வைத்து அனைத்து உயிரினங்களையும் இயற்கையில் சமமெனக் கண்மூடித்தனமாக அணுகி அவற்றைக் காப்பாற்றும் தேவை இருக்கிறதா என்ன?

கருணைஅழகியலைச் சார்ந்தது

பவளத் திட்டுகளில் (Coral reefs) வாழும் மீன்களைப் பற்றிய சமீபத்திய ஆய்வொன்று, எப்படி மனிதர்களின் பார்வைக்கு கவர்ச்சிகரமாகத் தோன்றும் மீன்கள் கவர்ச்சியற்ற மீன்களைவிட மிக எளிதாகப் பாதுகாக்கப்படுவதற்கான முன்னுரிமைகளைப் பெறுகின்றன என்பதை சுட்டிக்காட்டுகிறது1. கவர்ச்சியற்ற மீன்கள், மிக வேறுபட்ட இனக்குழுக்களுள் இருப்பதுடன், அதிக சூழல் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன. இருந்தும் அவை அழகாக இல்லாத காரணத்தால் அவற்றுக்கு தேவைப்படும் பாதுகாப்பை பெறுவதில்லை என்று இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப்போன்ற அழகியல் சார்புகள், உயிரினங்கள் பற்றிய நமது பார்வையிலும் பல இடங்களில் பிரதிபலிப்பதுண்டு.

உதாரணத்திற்கு நம் அன்றாட வாழ்கையில் பார்க்கும் ஓணான்களையும், அணில்களையும் எடுத்துக்கொள்வோம்.  பார்க்க அருவெறுப்பாக இருப்பதால், நாம் கல் எறிந்து துரத்தும் ஓணான்கள், பூச்சிகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திடப் பெரிதும் உதவுகின்றன; மாறாக, நம் கண்களுக்கு அழகாக சுட்டியாகத் தோன்றும் அணில்கள், இன்று எண்ணிக்கையில் அதிகமானதுடன் குருத்துகளைக் கடித்து நாசம் செய்து காய், கனி சாகுபடியைப் பாதிக்கின்றன. இதைப் போன்ற மற்றொரு உதாரணம், பட்டாம்பூச்சிகள்! வண்ணமயமாக, அழகிய தோற்றத்துடன் இருக்கும் பட்டாம்பூச்சிகளை ரசிக்கும் நாம்; அவற்றின் இளநிலையான புழுக்களை அருவெறுப்பாக உணர்கிறோம். இவ்வாறு அழகை வைத்து உயிரினங்களை பாதுகாப்பதும், அணுகுவதும் ஒரு போக்காக இருக்க, இதன் அடுத்த நிலையாகத்தான் ‘அன்பு’ அல்லது ‘கருணையின்’ அடிப்படையில்  நாய் முதல் யானை வரை அனைத்து உயிர்களும் ஒன்றெனவும், அவை அனைத்திற்கும் ஒரே ரீதியிலான பாதுகாப்பு எனவும் நடவடிக்கைகளை உருவாக்கும் நிலையைப் பார்க்க வேண்டியுள்ளது.

சைவ உணவு (Vegan) வாழ்வியலும், நாய் பூனைக் காதலும்

இந்தியாவில் காட்டுயிர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் ஆங்காங்கே அத்தி பூத்தாற் போல மெதுவாக நடந்து கொண்டிருக்கும் வேளையில், நாய், பூனை, மாடு போன்ற விலங்குகளைப் பாதுகாக்க நகர மக்கள் பெருந்திரளாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் இயற்கைப் பாதுகாப்பு என்ற பெயரில் வீகன் வாழ்வுமுறையையும், அனைத்து உயிர்களிடத்தே அன்பு போன்ற தத்துவங்களையும்  மக்களிடையே பரப்பி, கலாச்சார ரீதியாகவும், புரதத்திற்காகவும் விலங்கு இரைச்சியை நம்பி இருக்கும் எளிய மக்களை இயற்கையின் எதிரிகளைப் போல சித்தரித்துக் குற்ற உணர்வில் தள்ளுகின்றனர். மேலும், தெருத்தெருவாக சென்று நாய், பூனைகளுக்கு உணவு வைப்பது, ஆபத்தில் சிக்கியவற்றை மீட்டெடுப்பது போன்ற செயல்களை இயற்கையின் மீதான காதலால் செய்வதாகக் கூறுகின்றனர். ஆனால், இச்செயலின் மூலம் ஏற்படும்  பின்விளைவுகள் அதே இயற்கைக்கு எப்படி வில்லங்கமாகின்றன என்பதை இவர்கள் உணர்வதில்லை.

’Feral’ எனும் ஆபத்து

ஐஸ்லாந்து, பூனைகளுக்குப் பெயர் போன நாடு. ஒரு காலத்தில் விழா எடுக்கும் அளவிற்கு பூனைகளைக் கொண்டாடிய அதே நாட்டில் இன்று பூனைகளை வீட்டைவிட்டு வெளியில் அனுப்பத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றின் எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத அளவில் பெருகியதால் மனிதர்களுக்குத் தொல்லை ஏற்பட்டது ஒரு காரணமாக இருப்பினும், மற்றொரு காரணமும் இதற்குண்டு.

.

ஐஸ்லாந்தில் வேட்டையாடும் விலங்குகளின் எண்ணிக்கை இயல்பிலேயே மிகக் குறைவு; இந்தச் சூழலுக்குப் பழகிக் கொண்டு வாழ்ந்த எண்ணற்றப் பறவைகளை தமக்கு இரையாக்கிக் கொண்டன ஐஸ்லாந்தின் செல்லப் பூனைகள். இதனால் கடற்பறவைகள் மற்றும் அவற்றின் கூடுகளின் எண்ணிக்கை கிடுகிடுவென வீழ்ந்தன6. இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச சங்கத்தின் (IUCN) ‘ஆக்கிரமிப்பு இனங்களை’ப் (Invasive Species) பற்றிய நிபுணர் குழு உலகின் முதல் 100 மோசமான ஆக்கிரமிப்பு உயிரினங்களில் ஒன்றாகப் பூனையைக் குறிப்பிடுகின்றனர். பூனைகள் பழக்கப்பட்ட விலங்குகளாக கருதப்பட்டாலும், அவை இன்னமும் அவற்றின் மூதாதையரான காட்டுப் பூனைகள் போல வேட்டையாடவே செய்கின்றன. சமூக ஊடகங்களில் அதிகமாகப் பரவும் பூனை பாம்புகளை வேட்டையாடும் காணொளிகள், இவை காட்டுயிர்களுக்கு வளர்ந்து வரும் அச்சுறுத்தல் என்பதை நிரூபிக்கின்றன.

இதுமட்டுமல்லாமல், மனிதர்களுடன் ஒன்றி வாழப் பழக்கப்பட்ட உயிரினங்களுள் ஒன்றான நாய்கள், இன்று சுற்றுச்சூழலுக்குப் பெரும் ஆபத்தாக மாறியுள்ளன. பரிணாம வளர்ச்சியில், ஓநாய்களில் இருந்து உருவாகி மனிதனுடன் வேட்டையாட, அருகாமையில் வாழ பரிணமித்துள்ள நாய்கள், காட்டுயிர்கள் போலல்லாமல் மனிதனின் அருகாமைக்கு நன்றாக பழகியுள்ளன. இவ்வாறான வளர்ப்பு நாய்கள், ஒரு கட்டத்தில் உணவு போதாமை, போட்டி, வாழிடத் தேவை போன்ற காரணங்களுக்காக மீண்டும் மனிதனை சாராது வாழவும், கூட்டமாக வேட்டையாடவும், அதே நேரத்தில் மனிதர்களின் அருகாமைக்கும் பழகிவிடுகின்றன. தரை வாழ் பறவைகள், அவற்றின் கூடு, மான்கள், நரி, உடும்பு போன்ற ஏராளமான உயிரினங்களை இவை எளிதாக வேட்டையாடி இரையாக்கி விடுகின்றன. இதுமட்டுமல்லாது, இவற்றால் வன உயிரினங்களுக்கு  ராபிஸ் நோய்த் தொற்று ஏற்படும் அபாயமும் உண்டு. இந்த நாய்கள் அதிர்ச்சியூட்டும் வகையில் நரிகளுடன் இனப்பெருக்கம் செய்கின்றன. இதனால் பிறக்கும் தலைமுறை வன உயிர்களைக் கூட்டமாக, மனித அருகாமைக்கு அஞ்சாமல் வேட்டையாடுகின்றன; மேலும் இவை மலட்டுத் தன்மையுடன் இருப்பதால் நரிகளின் இனம் அழிந்து போகும் அபாயமும் ஏற்படுகிறது.

இமய மலையின் உச்சியைப் பறந்து கடக்கும் பட்டைத் தலை வாத்தை வேட்டையாடிய நாய்

பல்லுயிர் பாதுகாப்பு

இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் நம் ஒவ்வொருவரிடமும் இருந்தாலும், அறிவியல் ரீதியிலான பல்லுயிரியத்தையும் அவற்றின் வாழ்விடத்தையும் பாதுகாப்பதற்கான கூட்டுமுயற்சியாக அவற்றை மாற விடாமல்; கருணை, அன்பு போன்ற போக்குகள் சிதைக்கின்றன; திசை திருப்புகின்றன. சமீபத்தில் வெளியான சுற்றுச்சூழல் செயல்பாட்டுக் குறியீடு (Environmental Performance Index) ஆய்வறிக்கையானது, உலகின் 180 நாடுகளின் சுற்றுச்சூழலை; காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் நலன், சூழல் அமைப்பின் ஆரோக்கியம் (eco-system vitality) போன்றவற்றைக் கொண்டு தரவரிசைப் படுத்தியது. இதில் சூழல் அமைப்பின் நலனுக்கு மட்டும் 42% மதிப்பீடும், அதனுள் பல்லுயிரியம் மற்றும் அவற்றின் வாழ்விட நலனுக்கு 18% மதிப்பீடும் வழங்கியிருந்தது. இந்தத் தரவரிசையில் இந்தியா 180 நாடுகளில் கடைசி இடத்தை பிடித்ததோடு, பல்லுயிரியம் மற்றும் அவற்றின் வாழ்விட பாதுகாப்பில் 179 ஆவது இடத்தைப் பிடித்திருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது2. இந்த நிலையை மாற்றியமைப்பதற்கு, அறிவியல் ரீதியிலான சூழல் கண்ணோட்டத்தில் பல்லுயிர்களை அணுகுதல் மிக முக்கியத் தேவையாக உள்ளது.

வேறுபட்ட வகைப்பாடுகளும் அவற்றின் முக்கியத்துவமும்

சமூகவியலில் positive discrimination (ஆக்கப்பூர்வமான விதத்தில் பாகுபடுத்தி பார்த்தல்) என்ற அணுகுமுறை உண்டு. Discrimination (பாகுபாடு) காட்டுதல் என்றால் ஒருவரை மற்றவர்களைப் போல அல்லாமல் வித்தியாசமாக அணுகுவது என்பதாகும். Positive discrimination என்றால் ஒருவரின் நலனுக்காக, வளர்ச்சிக்காக மற்றவர்களை விட அவரை சற்று வேறு விதத்தில் அணுகுவதாகும். காலம் காலமாக நம் சமூகத்தில் சாதி, மத, பாலின அடிப்படையில் சமூகப் பொருளாதார ரீதியாக ஒரு குறிப்பிட்டக் குழுவினர் பலனடைந்தும், பிறர் பல்வேறு ரீதியில் பாதிக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வந்துள்ளனர். இன்று, இந்தச் சமூகத்தை நிர்வகித்து, இதில் சமத்துவத்தைக் கொண்டுவர வேண்டுமென்பதற்காகப் பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சலுகைகளும், திட்டங்களும் வழங்கி அவர்களை மற்றவர்களைப் போல வளர்ந்து வரச் செய்யப்படுபவை Positive discrimination. இதைப்போலவே, மற்ற உயிரினங்களிலும் சிலவற்றைத் தனிப்பட்ட அக்கறையுடனும், கூடுதல் கவனத்துடனும் பாதுகாத்திட வேண்டும். இதற்கு வழிவகுக்கும் வண்ணம் இயற்கைப் பாதுகாப்பிற்கான சர்வதேச சங்கம் உலகில் உள்ள உயிரினங்களைத் தன் சிவப்புப் பட்டியலில் (IUCN Red List) அவற்றுக்கு எந்த அளவு பாதுகாப்பு தேவைப் படுகிறது என்பதைப் பொருத்து 7 நிலைகளாகப் பிரித்துள்ளன. இதில் பாதிக்கப்படக்கூடிய நிலை(vulnerable), அருகிவரும் நிலை (endangered), ஆபத்தான நிலை (critically endangered) ஆகியவற்றில் உள்ள உயிரினங்கள் உடனடியாகப் பாதுகாப்புக் கவனம் பெற வேண்டிய இடத்தில் உள்ளவை.

இதைப் போலவே, காட்டுயிர் பாதுகாப்புச் சட்டத்தின்படி (Wildlife protection act 1972) இந்தியாவில் உள்ள அனைத்து உயிரினங்களும் 6 பட்டியல்களாகப் (schedules) பிரிக்கப்பட்டுள்ளன. இதில் I,II பட்டியல்களில் உள்ள உயிரினங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை, இதில் பெரும்பாலும் அருகிக்கொண்டிருக்கும் உயிரினங்கள் இடம்பெரும்.

IUCN இன் சிவப்பு பட்டியலில் உள்ள வகைப்பாடு

 

இவற்றை வேட்டையாடவோ கடத்தவோ, எவ்வித இடையூறு விளைவிக்கவோக் கூடாது. பட்டியல் III, IV இல் உள்ளவை I,II இன் அளவுக்கு முக்கியம் இல்லையென்றாலும், பாதுகாக்கப்பட வேண்டியவை மேலும் வேட்டையாடினால் தண்டனை உண்டு. பட்டியல் 5 இல் வெர்மின் (Vermin) எனப்படும் வேட்டையாட அனுமதியுள்ள உயிரினங்கள் இடம்பெறும். இவை பொதுவாக எண்ணிக்கையில் அதிகமாக உள்ள, விவசாயிகளுக்கு ஊறு விளைவிக்கும் எலி போன்ற விலங்குகளாக இருக்கும். பட்டியல் VI இல் தாவர வகைகளே இருக்கும். இவற்றைப் பயிரிடுவதற்கு, பறிப்பதற்கு, பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாது சூழலியலில் மேலும் பல உயிரின வகைப்பாடுகள் உண்டு. ‘உள்நாட்டு உயிரினம்’ (Native species – நம் நிலத்திற்கே உரிய, அதற்கேற்ப பரிணமித்துள்ள உயிரினங்கள்), ‘ஆதார உயிரினம்’ (Keystone species – காட்டின் இருத்தலுக்கு அடிப்படையாக உள்ள உயிரினம்), ‘ஓரிட வாழ்விகள்’ (Endemic species – ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டுமே வாழ்விடமாகக் கொண்ட உயிரினம்) போன்றவை முக்கியத்துவம் அதிகமானவை. இன்னொரு புறம், ‘அயல் உயிரினங்கள்’ (Exotic species: அயல் நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டவை), ‘ஆக்கிரமிப்பு உயிரினங்கள்’ (Invasive species: மற்ற உயிரினங்களை விட அந்தச் சூழலில் எளிதாக அதிகமாகப் பரவும் உயிரினம்) போன்றவை சூழலுக்குத் தீங்கு விளைவிப்பதால், அழிக்கப்பட வேண்டியவை.

இவற்றை அடிப்படையாகக் கொண்டு அறிவியல் ரீதியிலான வகைப்பாடுகளை உள்ளடக்கியதாக பாதுகாப்பு நடவடிக்கைகள் இருத்தல் அவசியம். அன்பும், கருணையும், அழகியலும் மட்டும் போதாது. மேலும், இது போன்று கருணை அடிப்படையில் விலங்குகளின் பாதுகாப்பு என்று வருகையில், அதே சூழலை நம்பி வாழும் மனிதர்களின் மீது அந்தக் கருணை இல்லாமல் போவது வெளிப்படையான முரணாகத் தெரிகிறது.

 மனிதனுக்கான பல்லுயிரியம்

ஜூன் மாதப் பூவுலகு இதழில், ஆப்ரிக்கக் கண்டத்திலிருந்து இங்கு கொண்டுவரப்படவுள்ள சிவிங்கி புலிகளுக்குப் (African Cheetah) புகலிடம் அளிப்பதற்காக மத்தியப் பிரதேச மாவட்டத்தில் உள்ள பக்சா கிராம சஹாரியா பழங்குடியினர்கள் தங்கள் வாழிடத்தை விட்டு வெளியேற்றப்படுவது தொடர்பான கட்டுரை3, உயிரின பாதுகாப்பில் உள்ள இன்னொரு முரணை அழுத்தமாக முன்வைக்கின்றது. வெள்ளையர்களால் வேட்டையாடப்பட்டும், சிற்றரசர்களால் ‘வெளிமான்’ (Black buck) வேட்டைக்காகப் பிடிக்கப்பட்டும் நம் சூழல் அமைப்பில் இருந்தே முற்றிலும் அழிந்து போன ஒரு இனத்தை மீட்டெடுப்பதற்கான விலையை, இன்று எந்தத் தவறும் செய்யாத அந்தக் காடுகளின் பழங்குடி சமூகத்தினர் செலுத்துகின்றனர். சனாதனக் கோட்பாடு தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை மிருகங்களுக்கு இணையாக வைத்திருந்தது. இன்றோ, உயிரினங்களின் நலனுக்காக விளிம்பு நிலையில் உள்ள மக்களை விலங்குகளைவிட தாழ்ந்த இடத்தில் வைத்து பார்க்கும் இந்த நிலையை ‘இயற்கைவாதம் என்னும் நவீன சனாதனம்’ என்று தான் கூற வேண்டும்.

அண்மையில் நாகாலாந்து பழங்குடி ஒருவர், இருவாச்சி ஒன்றினை அடித்துக் கொன்ற காணொளி பரவலாகியதையொட்டி, நகரவாழ் இயற்கைக் காதலர்கள் கொதித்து எழுந்தனர். பழங்குடிகளை மரியாதைக் குறைவாக, இழிவான விதத்தில் சித்தரித்துப் படங்களையும், பதிவுகளையும் பகிர்ந்து வந்தனர். இதே இயற்கைக் காதலர்கள், பெருநிறுவனங்கள் ஏற்படுத்தும் காடழிப்பினாலும்4, காலநிலை மாற்றத்தாலும்5 நாம் இழக்கும் இருவாச்சிகளுக்காக குரலெழுப்புவது அதிசயமே. இயற்கைப் பாதுகாப்பு என்ற பெயரில், பெரியளவில் பாதிப்பு ஏற்படுத்தும் பலம் பொருந்திய பெருநிறுவனங்களையும், அரசையும் கேள்வி கேட்கத் தயங்கும் இவர்கள், பலமற்ற பழங்குடிகளை மட்டும் எளிதான இலக்காக்கிக் கொள்கின்றனர். இருவாச்சியைக் கொன்றதற்காகத் தூற்றப்படும் இதே பழங்குடிகள் தான், அவற்றைப் பாதுகாக்கவும் பெரும் பங்காற்றுகின்றனர் என்று

பழங்குடிகளை இழிவாகவும் , மேலைநாட்டினரை உயர்வாகவும் சித்தரிக்கும் பதிவு

இவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. வடகிழக்கு இந்தியப் பகுதிகளில் வாழும் ’நைஷி’ பழங்குடிகள் ஒரு காலத்தில் அவர்களின் கலாச்சார தேவைக்காக இருவாச்சிகளை வேட்டையாடி வந்தனர். ஆனால் இன்று, அவர்கள் சமூகம் சார்ந்த இயற்கைப் பாதுகாப்பு நடவடிக்கையில் ஒரு பங்காக, இருவாச்சிகளின் கூடுகளைக் காண்காணிப்பது, மரம் வெட்டுவதைத் தவிர்ப்பது என்று இருவாச்சிகளின் எண்ணிக்கை உயர உதவி செய்கின்றனர். இயற்கைப் பாதுகாப்புத் திட்டத்தில் மனிதர்களைத் தவிர்த்து அதிலும் முக்கியமாக இயற்கையைச் சார்ந்து வாழும் மனிதர்களைத் தவிர்த்து செய்யப்படும் எந்தச் செயலும் உண்மையில் இயற்கை பாதுகாப்பிற்கு உதவாது. மக்களை ஈடுபடுத்தி அவர்களின் நலனையும் உட்படுத்திய பாதுகாப்புத் திட்டமே முழு வீச்சுடன் நடக்க வல்லது. ஏனெனில், மனிதர்களுக்காக மட்டுமே இயற்கையைக் காப்பாற்றும் தேவை நமக்கு எழுந்துள்ளது. மனித இனம் அழிவுற்றாலும் இயற்கை தன்னை அதற்கேற்ப நிலை நிறுத்திக் கொள்ளும்; உலகம் எப்பொழுதும் போலச் செயல்படும். இங்கு நம்மை  நிலைநிறுத்திக் கொள்ளவே,  இங்கிருக்கும் உணவுச் சங்கிலியைப் பற்றிக் கொள்ளவே இயற்கையை காப்பதற்குச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில், அன்பு, அழகியல், கருணை போன்ற சார்புகளுக்கு இடம் கொடுக்காமல், விளிம்பு நிலை மனிதர்களின் நலனையும் உட்படுத்தி, பகுத்தறிந்து பல்லுயிரைக் காப்பதே நம் சூழல் நலனைக் காத்திட உதவும்.

– மேகா சதீஷ்

[email protected]

குறிப்புகள்:

[1] The aesthetic value of reef fishes is globally mismatched to their conservation priorities. PLoS Biol. 2022 Jun 7

[2] Environmental Performance Index 2022

[3]In Kuno: Cheetahs in, Adivasis out- Pari

[4]Global Forest Watch 2020

[5]The collapse of Breeding Success in desert-dwelling Hornbills Evident Within a Single Decade – The Frontline

[6] It’s 10 PM. Do You Know Where Your Cat Is? – Hakai Magazine

 

 

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments