காட்டுயிர் பாதுகாப்பில் அலட்சியம் காட்டும் ஒன்றிய அரசு

Tiger
Image credit : life india

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் அதிகளவிலான பாதுகாக்கப்பட்ட காட்டுயிர் வாழிடங்களை பல்வேறு திட்டங்களுக்காக நிலப் பயன்பாடு மாற்றம் செய்ய தேசிய காட்டுயிர் வாரியம் அனுமதி வழங்கியிருப்பது Life India அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அக்டோபர் 2 முதல் 9 வரை தேசிய காட்டுயிர் வாரமாக கொண்டப்படுகிறது. காட்டுயிர்களின் முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 1952ஆம் ஆண்டு முதல் இந்த காட்டுயிர் வார விழா அனுசரிக்கப்படுகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவில் ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை  மாற்றத்திற்கான அமைச்சகம் இந்த ஆண்டு காட்டுயிர் வார விழாவை வெகு விமரிசையாக கொண்டாடி முடித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி காட்டுயிர் வார விழாவை முன்னிட்டு ஒன்றிய அரசால் காட்டுயிர் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்படும் திட்டங்களைச் சுட்டிக்காட்டி வாழ்த்துச் செய்தியெல்லாம் வெளியிட்டிருந்தார். நாடு முழுவதும் அந்த வாரம் முழுக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள நடத்தப்பட்டிருந்தது. இப்படி விமரிசையாக கொண்டாடும் அளவிற்கு உண்மையாகவே காட்டுயிர்கள் பாதுகாக்கப்படுகிறதா என்றால் இல்லை என்பதே பதிலாகும்.

குறிப்பாக டெல்லியில் இருந்து இயங்கி வரும் Life India என்கிற அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வறிக்கை ஒன்றிய அரசிற்கு காட்டுயிர் பாதுகாப்பின் மீதுள்ள அலட்சியப் போக்கையும் அவலத்தையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. தேசிய காட்டுயிர் வாரியத்தால் வழங்கப்படும் அனுமதிகளின் எண்ணிக்கை மற்றும் காட்டுயிர் பாதுகாப்பு சாராத திட்டங்களுக்காக பாதுகாக்கப்பட்ட மற்றும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளின் நிலப் பயன்பாடு மாற்றப்படுவது அண்மையில் அதிகரித்து வருகிறது.

Life India என்கிற அமைப்பு தேசிய காட்டுயிர் வாரியத்தின் நிலைக்குழுவால் பாதுகாக்கப்பட்ட இடங்கள் மற்றும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில்  சுரங்கங்கள், நெடுஞ்சாலைகள், அணைகள், ரயில்வே பாதைகள் போன்ற திட்டங்களுக்காக வழங்கப்படும் அனுமதிகள் குறித்து கடந்த 2018ஆம் ஆண்டு முதல் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ”Analysis of Wildlife Clearances in India 2021” எனத் தலைப்பிடப்பட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை தேசிய காட்டுயிர் வாரியத்தால் பல்வேறு திட்டங்களுக்கு வழங்கப்பட்ட திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

wildlife clearances report

 

பாதுகாக்கப்பட்ட இடங்களில் அதிகரிக்கும் நிலப்பயன்பாடு மாற்றம்

இந்த ஆய்வின்படி  நடப்பாண்டின் முதற்பகுதியில் (ஜனவரி முதல் ஜூன்) மட்டும் 1385.34 ஹெக்டேர் பரப்பளவில் நிலப் பயன்பாடு மாற்றத்திற்கு தேசிய காட்டுயிர் வாரியம் அனுமதி அளித்துள்ளது. இதில் 302.89 ஹெக்டேர் பரப்பளவு பாதுகாக்கப்பட்ட பகுதிகளும், 780.24 ஹெக்டேர் பரப்பளவு புலிகள் வாழும் பகுதிகளும் நிலப் பயன்பாடு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு 1200.4 ஹெக்டேர் பரப்பளவு பாதுகாக்கப்பட்ட இடங்கள் மட்டுமே நிலப் பயன்பாடு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. குறிப்பிட்ட ஆறு மாதங்களில் நான்கு கூட்டங்கள் நடத்தப்பட்டு 67 நிலப்பயன்பாடு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டது. இதில், 29 விண்ணப்பங்கள் காட்டுயிர் சரணாலயங்கள், தேசிய பூங்காக்களில் நிலப் பயன்பாடு மாற்றம் செய்ய சமர்ப்பிக்கப்பட்டவை. இதில் ஒரு விண்ணப்பம் கூட நிராகரிக்கப்படவில்லை.

ஒட்டுமொத்தமாக நிலப் பயன்பாடு மாற்றம் அனுமதிக்கப்பட்டதில் அதிகபட்சமாக 87 விழுக்காடு திட்டங்கள் Linear Projects என்றழைக்கப்படக்கூடிய மின்சாரம் கடத்தும் கோபுரங்கள், எண்ணெய் எரிவாயு குழாய்கள், ரயில் பாதைகள், சாலைகள் அமைக்கும் திட்டங்களாகும். 8 விழுக்காடு சுரங்கத் திட்டங்கள், 4 விழுக்காடு நீர் மின் நிலைய திட்டங்களாகும்.

அழிந்து போகும் புலிகள் வாழிடங்கள்

இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை உயர்வது குறித்து மிகவும் பெருமையாகப் பேசி வரும் ஒன்றிய அரசு இந்த ஆண்டு அதிகளவிலான புலிகள் வாழிடத்தை அவற்றின் பாதுகாப்பு சாராத திட்டங்களுக்காக நிலப் பயன்பாடு மாற்றம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது. ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில் மட்டும் 780.24 ஹெக்டேர் பரப்பளவு புலிகள் வாழிடப் பகுதியானது 9 திட்டங்களுக்காக நிலப் பயன்பாடு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புலிகளின் வாழிடங்களைப் பொருத்தவரையில் இளம் வயதிலான புலிகளுக்கு மிகப் பெரிய அளவிலான வாழிடம் தேவை. அப்படிப்பட்ட நிலையில் பல்வேறு வகையான திட்டங்களை அப்பகுதியில் செயல்படுத்தினால் வாழிடப் பகுதிகளுக்கு இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டு சிறு சிறு துண்டுகளாக வாழிடங்கள் மாறிவிடும். அப்படி மாறிவிட்டால் போதுமான அளவு இரை கிடைக்காமல்  புலிகள் மனிதர்கள் குடியிருப்புகளுக்கு வர நேரிட்டு மனித – காட்டுயிர் மோதல் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

பிரதமர் மோடி வெளியிட்ட காட்டுயிர் வார விழா செய்திக் குறிப்பில் கடந்த ஏழு ஆண்டுகளில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் எண்ணிகையை 745லிருந்து 981 ஆக உயர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த வாதம் முற்றிலும் காட்டுயிர் பாதுகாப்பிற்கு எதிரானது என்கிறார் சுற்றுச்சூழல் வழக்கறிஞர் ரித்விக் தத்தா, இதுகுறித்து அவர் கூறுகையில் “ ஏற்கெனவெ இருக்கும் புலிகள் வாழிடங்களை ஏன் அழிக்கிறீர்கள் எனக் கெட்கும்போது நாங்கள் பாதுகாக்கப்பட்ட வாழிடப்பகுதிகளின் பரப்பளவையும் எண்ணிக்கையையும் அதிகரிக்கிறோம் எனக் கூறுவது மிகவும் தவறான வாதமாகும். மேற்கு வங்கத்தின் சுந்தர்பன் காடுகளில் உள்ள புலியின் வாழ்க்கை முறை அங்குள்ள மாங்குரோவ்களைச் சார்ந்தது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வசிக்கும் புலிகளின் வாழ்க்கை முறை அடர்ந்த காடுகளை சார்ந்தது. இப்படி புலிகள் எங்கெல்லாம் வசிக்கிறதோ அந்த வாழிடங்களை பாதுகாப்பது என்பது மட்டுமே உண்மையான காட்டுயிர் பாதுகாப்பாகும். அதை செய்வதற்கு ஒன்றிய அரசு தவறி வருகிறது” என்றார்.

சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள் என அறிவிக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட இடங்களைத் தவிர பிற இடங்களில் நிலப் பயன்பாடு மாற்றம் அனுமதி வழங்கும் அதிகாரம் தேசிய காட்டுயிர் வாரியத்திற்கு கிடையாது. ஆனால், Goa Foundation Vs Union of India என்கிற வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில் அனைத்து பாதுகாக்கப்பட்ட இடங்களையும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலங்களாக அறிவிப்பு செய்ய வேண்டும். அப்படி அறிவிப்பு செய்யும் வரையில் பாதுகாக்கப்பட்ட இடங்களின் எல்லையிலிருந்து 10 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள இடங்களில் நிலப் பயன்பாடு மாற்றம் செய்வதற்கு தேசிய காட்டுயிர் வாரிய அனுமதி அவசியமாகும்.

பாதுகாக்கப்பட்ட இடங்களாக வரையறுக்கப்பட்ட இடங்களின் எல்லைகளுக்கு ஒட்டியுள்ள பகுதிகள் அனைத்தும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால் அந்த இடங்களுக்கும் பாதுகாப்பு அவசியம் என The National Wildlife Action Plan (NWAP) 2002-2016ல் கூறப்பட்டுள்ளது. ஆனால், இதையெல்லாம் அலட்சியப்படுத்தும் விதமாக ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில் மட்டும்  சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலங்களில் 386.14 ஹெக்டேர் பரப்பளவில் நிலப் பயன்பாடு மாற்றத்திற்கு தேசிய காட்டுயிர் வாரியம் அனுமதி அளித்துள்ளது. இதில் 100.47 ஹெக்டேர் பரப்பளவு காட்டு நிலம் என்பது அதிர்சியளிக்கிறது.

கடந்த ஜூன் மாதம் IPCC மற்றும் IPBES இணைந்து வெளியிட்ட ”Biodiversity and Climate Change” என்கிற ஆய்வறிக்கை மிகத் தெளிவாக ஒரு விஷயத்தைக் கூறியது.  நிலம் மற்றும் கடல் சார்ந்த பல்லுயிர் சூழல் அமைப்பை பாதுகாப்பது கால நிலை மாற்றத்தின் தாக்கத்தை தடுப்பதற்கும் மட்டுப்படுத்துவதற்கும் மிகப்பெரிய அளவில் உதவும் என்பதே அந்த அறிக்கையின் முக்கியமான அம்சமாகும். அதனடிப்படையில் பார்த்தால் தேசிய காட்டுயிர் வாரியம் போன்ற ஓர் அமைப்பு தான் பரிசீலிக்கின்ற எல்லா விண்ணப்பங்களுக்கும் அனுமதி வழங்குவதை நிறுத்தி காட்டுயிர் மற்றும் அதன் வாழிடங்களைப் பாதுகாக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

  • சதீஷ் லெட்சுமணன்

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments