ஆரோவில் கிரவுண் திட்டத்திற்காக மரங்களை வெட்ட இடைக்கால தடை

Auroville

ஆரோவில் பன்னாட்டு நகரத்தில் கிரவுன் எனப்படும் சர்ச்சைக்குரிய திட்டத்திற்காக மரங்களை வெட்டும் பணிகளை தற்காலிகமாக நிறுத்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ஆரோவில் என்பது ஒரு பன்னாட்டு நகரமாகும்.  உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 50 ஆயிரம் பேர் வசிக்கக் கூடிய நகரமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பன்னாட்டு நகரத்தின் பெரும்பாலான பகுதிகள் விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகாவிலும் புதுச்சேரியின் எல்லைக்குள் சில பகுதிகளும் அமைந்துள்ளன.

அண்மையில் ஆரோவில் பன்னாட்டு நகர வளர்ச்சிக் குழுவானது “க்ரவுன் சாலை” எனும் திட்டத்திற்காக 500க்கு மேற்பட்ட மரங்களை வெட்ட திட்டமிருந்தது. கடந்த 5ஆம் தேதி நள்ளிரவில் சில மரங்கள் வெட்டப்பட்டன. இதனைக் கடுமையாக எதிர்த்த ஆரோவில் வாசிகளை விழுப்புரம் காவல்துறை கைது செய்தது. நேற்று காலையில் மீண்டும் மரங்களை வெட்டும் பணிக்காக வந்த ஜே.சி.பி. வாகனத்தை ஆரோவில் வாசிகள் தடுத்த நிலையில் ஆரோவில் நிர்வாகத்தால் ஏவப்பட்ட குண்டர்களால் அவர்கள் தாக்கப்பட்டனர்.

இந்தப் பிரச்சனை தொடர்பாக நவ்ரோஸ் மோடி என்பவர் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில் ஆரோவில்லில் அமைந்திருக்கும் மரங்கள் அனைத்தும் கோதவர்மன் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் ‘காடு’ என்கிற வரையறைக்குள் வருவதால் காடுகள் பாதுகாப்புச் சட்டம் 1980ன் கீழ் மரங்களை வெட்டவும் சாலை அமைக்கவும் உரிய அனுமதியை ஆரோவில் நிர்வாகம் பெற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

மேலும் இத்திட்டம் குறித்த விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்க ஆரோவில் நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும்  நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் கொண்ட அமர்வு ஆரோவில்லில் சாலை அமைக்கும் பணிகளுக்காக மரங்களை வெட்டுவதற்கு வனத்துறையின் முன் அனுமதி அவசியம் என்கிற மனுதாரரின் வாதத்தில் முகாந்திரம் இருப்பதால், இப்பிரச்சனையின் அவசரம் மற்றும் முக்கியத்துவம் கருதி  தேசிய பசுமைத் தீர்ப்பாயச் சட்டம் 2010ன் உத்தரவு 39, விதி 1 மற்றும் பிரிவு 19(4)ன் கீழ் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி எதிர் மனுதாரரின் வாதத்தைக் கேட்பதற்கு முன்பாகவே மரங்களை வெட்டுவதற்கு 17.12.2021 வரை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஆரோவில் பன்னாட்டு நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் அனைவரும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை டிசமபர் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

interim order

-சதீஷ் லெட்சுமணன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments