மெரினா கடற்கரை மணல் திருட்டு சம்பவத்தை விசாரிக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

marrina illegal mining

சென்னை மெரினா கடற்கரையில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதைத் தடுக்கக் கோரி தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

சென்னையில் கூவம் ஆறு கடலில் கலக்கக்கூடிய மெரினா கடற்கரையின் முகத்துவாரத்தில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் லாரிகள் மூலம் சட்ட விரோதமாக கடந்த ஓராண்டாக மணல் அள்ளப்படுவதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி செய்தி ஒன்று வெளியானது.

அந்தச் செய்தியில் அதிகாலை நேரத்தில் ஐந்து மணல் லாரிகள் சாலையில் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்திற்கு ஒட்டிய பகுதியில் செல்லும் சிறிய பாதை வழியாக அந்த மணல் லாரிகள் கூவம் ஆறு கடலில் கலக்கக் கூடிய முகத்துவாரம் வரை சென்று சட்டவிரோதமாக மணல் அள்ளிச் செல்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மணல் லாரிகள் தடையின்றி முகத்துவாரத்திற்கு சென்று திரும்ப ஏதுவாக கட்டிடக் கழிவுகளும் அப்பகுதியில் கொட்டப்பட்டிருந்ததாகவும் இந்த நடவடிக்கைகளை எல்லாம் கண்காணிக்க வேண்டிய பொதுப்பணித்துறை இது குறித்து எந்த விபரங்களும் அறியாமல் இருந்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

marina

இந்த விவகாரம் தொடர்பாக சென்னையைச் சேர்ந்த ”மீனவர் தந்தை கே ஆர் செல்வராஜ் குமார் மீனவர் நல சங்கம்” சார்பில் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அம்மனுவில் மணல் கடத்தல் நடைபெற்ற பகுதியானது சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த கடற்கரை ஆகும். கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம் -I A மற்ற I B பகுதிகளில் மணல் எடுப்பது கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2011 கீழ் தடைசெய்யப்பட்ட நடவடிக்கையாகும்.

marrina illegal mining

இவ்வாறு உரிய அனுமதியின்றி தடை செய்யப்பட்ட பகுதிகளில் மணல் எடுத்திருப்பதும் கட்டிடக் கழிவுகளை கொட்டியிருப்பதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், 1986ன் கீழ் குற்றம் என்பதாலும், சென்னை மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம், தமிழ் நாடு அரசு மற்றும் பொதுப்பணித்துறையினரை மெரினா கடற்பகுதியில் நடக்கும் மணல் திருட்டை நிறுத்தவும் இதுகுறித்து தீர விசாரித்து தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், மெரினா கடற்கரையில் கொட்டப்பட்ட கட்டிடக் கழிவுகளை அகற்றவும் உத்தரவிடுமாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

அம்மனுவானது இன்று தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவைப் பரிசீலித்த தீர்ப்பாய உறுப்பினர்கள் இந்த விவகாரம் குறித்து விசாரிக்கக் குழு அமைக்க முடிவு செய்தனர். அப்போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் “ மணல் திருட்டு நடந்த முகத்துவாரப்பகுதியை சென்னையில் உள்ள ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி, தமிழ் நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி, சென்னை மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர், சென்னை மாநகர காவல் ஆணையாளர் அல்லது அவரால் பரிந்துரைக்கப்படும் அதிகாரி ஆகியோர் கொண்ட குழு நேரில் ஆய்வு செய்ய வேண்டும். அனுமதியின்றி மணல் திருட்டு நடைபெற்றதா? லாரி, ஜே.சி.பி. உள்ளிட்ட கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டதா? அல்லது மணல் அள்ள பயன்படுத்தப்பட்டதா? மணல் அள்ளப்பட்டதால் அப்பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகள் என்ன? பாதிப்பிற்கான இழப்பீடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, கடத்தப்பட்ட மணலை பயன்படுத்தியவர்கள் யார் மற்றும் இதுபோன்ற நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டிய வழிகள் குறித்து விரிவான அறிக்கையை அக்டோபர் 8ஆம் தேதிக்குள் தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட குழு அளிக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments