சன் பார்மா ஆலை விதிமீறல் வழக்கு; ஒன்றிய அரசைச் சாடிய பசுமைத் தீர்ப்பாயம்

உண்மைக்குப் புறம்பான தகவல்களை சமர்ப்பித்து  சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற சன் பார்மா ஆலை மீது நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தை கடுமையாகச் சாடியுள்ளது பசுமைத் தீர்ப்பாயம்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுகாவில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்குள் செயல்பட்டு வரும் சன் பார்மா எனும் மருந்து உற்பத்தி ஆலையானது தனது உற்பத்தித் திறனை 25.5 TPM லிருந்து 134.082 TPM ஆக அதிகரிக்க 2022ஆம் ஆண்டு ஒன்றிய அரசிடமிருந் சுற்றுச்சூழல் அனுமதி பெற்றிருந்தது. இந்த சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்யக்கோரி சென்னையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் எம். ஆர். தியாகராஜன் என்பவர் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் 2022ஆம் ஆண்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்

இதே மனுதாரரால் ஏற்கெனவே சன் பார்மா மருந்து உற்பத்தி நிறுவனம் உரிய சுற்றுச்சூழல் அனுமதியின்றி வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்குள் செயல்பட்டு வருவதாக தொடரப்பட்ட மனு மீது 29.09.2022 அன்று பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியிருந்தது. அதில் 1994 முதல் 2006வரை ஆலையில் நடந்த விரிவாக்கப் பணிகளுக்கு EIA NOTIFICATION 1994ன் கீழ் சுற்றுச்சூழல் அனுமதி பெறாததால் விரிவாக்கம் செய்தது சட்டவிரோதம் எனவும் ஆலை செயல்பாட்டால் உண்டான சேதம் குறித்து மாசு கட்டுப்பாடு வாரியம் உரிய ஆய்வு செய்து முழுமையான இழப்பீட்டை சன் பார்மாவிடம் இருந்து பெற வேண்டும் எனவும் அந்தத் தொகையை வைத்து பறவைகள் சரணாலயத்தைப் பாதுகாக்க செயல் திட்டம் உருவாக்க வேண்டும் எனவும் இடைக்கால நிவாரணமாக ரூ.10 கோடி அபராதம் செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஆலையின் விரிவாக்கத்துக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட மனு மீது 10.04.2023 அன்று நீதித்துறை உறுப்பினர் சத்தியநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணை நடைபெற்றது. சன் பார்மா நிறுவனம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய எல்லையிலிருந்து 3.72கி.மீ. தொலைவில் இயங்கி வருவதாகக் கூறி ஆலை விரிவாக்கத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி பெற்றிருந்ததுது. அந்த அனுமதியில் “தேசிய காட்டுயிர் வாரிய அனுமதி பெறுவது கட்டாயம்” என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழ்நாடு வனத்துறையின் முதன்மை தலைமைப் பாதுகாவலர் 15.02.2023 அன்று தாக்கல் செய்த அறிக்கையில் ஆலையானது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய எல்லைக்குள்ளும் கரிக்கிலி பறவைகள் சரணாலய எல்லையிலிருந்து 2.72கி.மீ தொலைவில் அமைந்துள்ளதாகவும் எனவே ஆலையானது சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலப் பகுதியின் எல்லை வரையறைக்குள் வருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இதனைச் சுட்டிக்காட்டிய தீர்ப்பாய உறுப்பினர்கள் “பொய்யான தகவல்களை ஒன்றிய அரசிடம் சமர்ப்பித்து, ஆலை விரிவாக்கத்துக்கு பெறப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி செல்லுமா எனும் கேள்வி எழுகிறது. 29.09.2022 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் ஆலையானது ஏற்கெனவே சட்டவிரோதமாக, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது” எனக் கூறினர்.

மேலும், ”தமிழ்நாடு வனத்துறை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அளித்த அறிக்கையின்படி ஆலையானது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய எல்லைக்குள்ளாகவே செயல்பட்டு வருவதால் ஆலை விரிவாக்கத்துக்கான சுற்றுச்சூழல் அனுமதியில் உள்ள நிபந்தனைகளை சன் பார்மா நிறுவனம் மீறியுள்ளது” என தீர்ப்பாய உறுப்பினர்கள் கூறினர்.

”இந்த விதிமீறல்கள் தெரிந்தும் ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான அமைச்சகம் அனுமதியை ரத்து செய்வது, திரும்பப் பெறுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பதால் ஒரு திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கிய பின்னர் விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டால் ஒன்றிய அரசால் என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம்” எனக் கூறிய தீர்ப்பாய உறுப்பினர்கள் “ சன் ஃபார்மா தொடர்பான இந்த வழக்கு நிபந்தனைகள் மீறப்பட்ட பின்னரும் ஒரு திட்டத்துக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி செல்லுபடியாவதற்கு  சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது” எனக் கூறினர்.

சுற்றுச்சூழல் அனுமதியின்  நிபந்தனைகளை மீறியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? நடவடிக்கை எடுப்பதற்கான கால அவகாசம் என்ன? வேறு ஏதாவது திட்டங்களில் இதுபோல் சுற்றுச்சூழல் அனுமதி ரத்து, திரும்பப் பெறுவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான அமைச்சகம் விரிவான பதிலறிக்கை தாக்கல் வேண்டும் என உத்தரவிட்ட பசுமைத் தீர்ப்பாயம் வழக்கை இறுதி விசாரணைக்காக 10.05.2023 அன்று ஒத்திவைத்தனர்.

சன் பார்மா நிறுவனம் சமர்ப்பித்துள்ள பதில் மனுவில்  “ மருந்து உற்பத்தி ஆலையானது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்குள் அமைந்துள்ளதாகக் கூறப்படுவதை மறுக்கிறோம். சரணாலய எல்லைக்குள்தான் அமைந்துள்ளதுய் என்பதை நிரூபிக்க வனத்துறை சார்பில் நில அளவை எண்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை.” எனத் தெரிவித்துள்ளது.

மேலும், 09.07.1998 தேதியிட்ட அரசாணை எண் 199ன் படி வேடந்தாங்கள் பறவைகள் சரணாலயத்திற்குள் மருந்து ஆலைகளைத் தவிர வேறு ஆலைகள் செயல்படலாம் எனக் கூறப்படவில்லை எனத் தெரிவித்த சன் பார்மா நிறுவனம், தங்களது ஆலையைச் சுற்றி மட்டும் 21 வேறு நிறுவன ஆலைகள் செயல்படுவதாகவும் இவற்றில் சில ஆலைகளுக்கு வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அறிவிக்கை செய்யப்பட்ட 1998ஆம் ஆண்டிற்குப் பிறகும் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளது.

தேவையான வழிகாட்டுதல்களின் அடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்ட உரிய ஆவணங்களைப் பரிசீலித்தே தங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள சன் பார்மா நிறுவனம் மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து மனுவைத் தள்ளுபடி செய்யுமாறு கோரியுள்ளது.

– செய்திப் பிரிவு

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments