குப்பைகளைப் பிரித்து உரமாக்கும் மையங்களையும் மறுசுழற்சிக்கான பொருட்களைப் பிரித்தெடுக்கும் மையங்களையும் சென்னை மாநகராட்சி மூட முடிவெடுத்தது ஏன் என அறிக்கை அளிக்குமாறு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் பெருநகர சென்னை மாநகராட்சி தன்னிடமிருக்கும் 168 உரமாக்கும் நிலையங்களையும் (Micro Composting Centers’ (MCC) மட்காதக் கழிவுகளிலிருந்து மறுசுழற்சிக்கான பொருட்களைப் பிரித்தெடுக்கும் 88 Material recover facility களையும் மூட மூடுவதாக அறிவித்திருக்கிறது.
நம் கழிவுகளில் சரிபாதி மட்கும் கழிவுகளாக இருக்கும் நிலையில், திறன்மிக்கத் திடக்கழிவு மேலாண்மையில் மிக முக்கியப் பங்கு வகிப்பவை ‘Micro Composting Centers’ (MCC) எனப்படும் அங்ககக் கழிவுகளை மட்கச் செய்து உரமாக்கும் நிலையங்கள்தான். சென்னையில் உருவாகும் மட்கும் கழிவுகளை மட்கச் செய்ய முழுமையான உட்கட்டமைப்பை மாநகராட்சி இன்னும் உருவாக்காத நிலையில் தற்போது செயல்பாட்டிலிருக்கும் கட்டமைப்புகளை மூடுவது மிகவும் குப்பை எரிவுலைகளைத் திணிக்கும் முயற்சி என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்திருந்தது.
இம்மையங்களிலிருந்து கடுமையான தூர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இம்முடிவை எடுத்திருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்திருந்தது. இந்நடவடிக்கை தொடர்பாக ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம்.
தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்திய நாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வு முன்பு இம்மனு இன்று (17.03.2025) விசாரணைக்கு வந்தது. திடீரென இம்மையங்களை மூடிவிட்டால் குப்பைகளைப் வகைப்பிரித்து மேலாண்மை செய்ய வேறு என்ன மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் சென்னை பெருநகர மாநகராட்சியின் நடவடிக்கைகள் நீடித்த குப்பை மேலாண்மை நோக்கித்தான் பயணிக்கிறதா என்றும் தீர்ப்பாயம் கேள்வியெழுப்பியது.
மேலும், குப்பை எரிவுலைகள் அதிக நச்சு வாயுக்களை வெளியிட்டு மாசு ஏற்படுத்தியதாக டெல்லியில் செயல்பட்ட ஆலை மூலம் தெரிய வருவதாக தீர்ப்பாயம் கருத்து தெரிவித்தது. இறுதியில் குப்பைகளைப் பிரித்து உரமாக்கும் மையங்களையும் மறுசுழற்சிக்கான பொருட்களைப் பிரித்தெடுக்கும் மையங்களையும் சென்னை மாநகராட்சி மூட முடிவெடுத்தது ஏன் என்றும் குப்பைகளை வகைப் பிரித்துக் கையாள என்ன மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறித்தும் வரும் மார்ச் 27ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு பெருநகர சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை ஆகியோருக்கு உத்தரவிட்டது தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம். இம்மனு மீதான விசாரணை மார்ச் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
order march