எண்ணூர் அனல் மின் நிலையத்திற்கு ஒன்றிய சுற்றுச்சூழல் துறையால் வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை 6 மாதத்திற்கு நிறுத்தி வைத்து பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னைக்கு அருகே அம்பத்தூர் தாலுகா எர்ணாவூரில் கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வந்த 450 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட அனல்மின் நிலையம் காலாவதி ஆனதால் கடந்த 2017ஆம் ஆண்டு மூடப்பட்டது. இந்த அனல்மின் நிலையத்திற்கு மாற்றாக மற்றும் விரிவாக்கமாக மேலும் இரண்டு அனல்மின் நிலைய அலகுகளை அமைக்க திட்டமிட்ட தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் 600 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க அலகிற்கு கடந்த 2009ஆம் ஆண்டு ஒன்றிய சுற்றுச்சூழல் துறையிடம் இருந்து சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற்றிருந்தது. பின்னர் இந்த அலகின் உற்பத்தித்திறன் 600லிருந்து 660 மெகாவாட்டாக உயர்த்தப்பட்டு மிக உய்ய அனல்மின் நிலையமாக மாற்றப்பட்டது. இந்த அலகிற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியின் காலமான 10 ஆண்டுகளில் 703 கோடி செலவிடப்பட்டு வெறும் 17% பணிகள் மட்டுமே முடிவடைந்திருந்தன.
இதனால் மீண்டும் நான்கு ஆண்டுகள் சுற்றுச்சூழல் அனுமதியை நீட்டித்து உத்தரவிடுமாறு ஒன்றிய அரசருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சாரத்துறை கடிதம் எழுதி இருந்தது. இதற்கு பதிலளித்த ஒன்றிய அரசு இந்த அனல் மின் நிலையத்திற்கு புதிதாக சுற்றுச்சூழல் அனுமதி பெற விண்ணப்பிக்குமாறு தெரிவித்தது. இதனை ஏற்று புதிய சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கு தமிழ்நாடு மின்சாரத் துறை சமர்ப்பித்த விண்ணப்பத்தில் இந்த அனல் மின் நிலையத்தை அமைப்பதற்கான மாற்று இடம் குறித்த ஆய்வு மற்றும் இத்திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.
தொடக்கத்தில் இந்த கோரிக்கையை சுற்றுச்சூழல் துறையின் நிபுணர் மதிப்பீட்டு குழு ஏற்க மறுத்தது. ஆனால், ஏற்கனவே 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சாரத் துறையால் எண்ணூர் விரிவாக்க அனல் மின்நிலையம் அமைக்கப்படும் அதே இடத்திற்கு மிக அருகில் மற்றுமொரு அனல்மின் நிலையம் அமைப்பதற்காக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று இருப்பதாலும் இந்த இரண்டு அனல் மின் நிலையங்கள் இப்பகுதியில் வர விருப்பதை சுற்றியுள்ள பொதுமக்கள் அனைவரும் அறிந்திருப்பததாலும் இத்திட்டத்திற்கு பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்துவது அவசியமற்றது என வலியுறுத்தியதன் பேரில் ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் துறை 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இத்திட்டத்திற்கு மீண்டும் புதிய சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியது.
இந்த சுற்றுச்சூழல் அனுமதியை எதிர்த்து எண்ணூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில் இத்திட்டத்திற்கு பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தாமல் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியிருந்தது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை 2006ன் உட்பிரிவு 7(III)ற்கு எதிரானதாகும் என்பதால் இந்த திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
ஓராண்டுக்கும் மேலாக நடந்த இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு கடந்த 17ஆம் தேதி தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் கொண்ட அமர்வால் வழங்கப்பட்டது.
Ennore judgmentஅத்தீர்ப்பில் ஒரு திட்டம் அமைக்கப்படுவதால் பாதிப்பிற்குள்ளாகும் மக்கள் தங்கள் சந்தேகங்களையும் கருத்துக்களையும் தெரிவிப்பதற்கு பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்துவது முக்கியமானதாகும். அதே நேரத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை என்பதற்காக சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்வது அவசியம் இல்லை. எனவே 2019ஆம் ஆண்டு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியில் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு விலக்களிக்கப்பட்ட பகுதி மட்டும் ரத்து செய்யப்படுகிறது. இந்த சுற்றுச்சூழல் அனுமதி ஆறு மாதத்திற்கு நிறுத்தி வைக்கப்படுகிறது. இரண்டு மாதத்திற்குள் சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2006 இன் படி இத்திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தி திட்டம் குறித்த பொது மக்கள் கருத்தின் அடிப்படையில் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை மாற்றி அமைத்து மீண்டும் ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் குழுவிடம் சமர்ப்பித்து அக்குழுவின் பரிந்துரையின் பேரில் கூடுதக் நிபந்தனைகளோடும் புதிய அனுமதியை ஒன்றிய சுற்றுச்சூழல் துறை வழங்க வேண்டும். மேற்கண்ட அனைத்து நடவடிக்கைகளையும் 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும். இதற்கு இடைப்பட்ட காலத்தில் தமிழ்நாடு மின்சாரத் துறை திட்டத்தின் கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது ஆனால், மின்சார உற்பத்தியைத் துவக்குவதற்கான அனுமதி கிடையாது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
-
சதீஷ் லெட்சுமணன்