தமிழ்நாடு அரசின் எதிர்ப்பையும் தாண்டி நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்தும் முனைப்பில் ஒன்றிய அரசு.

தேனியில் நியூட்ரினோ ஆய்வக மையம் அமைக்க ஒன்றிய அரசு நீண்ட காலமாக முயற்சி செய்து வருகிறது. பூவுலகின் நண்பர்கள் அமைப்பின்  சார்பில் இத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கில் 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வழங்கப்பட்ட இறுதித் தீர்ப்பில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதி செல்லும் என்றும் ஆனால், இத்திட்டமானது மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவிற்கு மிகவும் அருகில் வரவுள்ளதால்  தேசிய காட்டுயிர் வாரிய அனுமதியில்லாமல் (NBWL)  திட்டத்தை செயல்படுத்தக் கூடாது எனக் கூறப்பட்டிருந்தது.

ஆனால், கடந்த 2020m ஆண்டு டிசம்பர் மாதம் மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவின் கிழக்கு மற்றும் வட கிழக்கு எல்லைகளை தவிர்த்து பிற பகுதிகளில் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு பாதுகாக்கப்பட்ட சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலமாக ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் துறை அறிவித்தது. இந்த கிழக்கு பகுதியில்தான் நியூட்ரினோ அமைவிடம் உள்ளது.  இதன் காரணமாக இத்திட்டத்திற்கு காட்டுயிர் வாரிய அனுமதி தேவையில்லை என்கிற நிலை உருவானது.

தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகள் கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம்  நியூட்ரினோ திட்டத்தின் முக்கிய அம்சமான குகைப்பகுதியானது முற்றிலுமாக மதிகெட்டான் – பெரியார் புலிகள் வலசைப் பாதையாக கண்டறியப்பட்ட பகுதியினுள் வருவதை அறிந்தனர். இதனையடுத்து தான் புதிதாக காட்டுயிர் வாரிய அனுமதிகோரி 2021 மே 20ஆம் தேதி தமிழ்நாடு வனத்துறையிடம் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் விண்ணப்பித்திருந்தது.

புலிகளின் வாழ்விடமாக பார்க்கப்பட வேண்டிய இடத்த்தில் இத்திட்டத்திற்காக அனுமதி வழங்க முடியாது என வனத்துறை சார்பில் முடிவெடுக்கப்பட்ட பிறகு இறுதி முடிவிற்காக TIFRன் விண்ணப்பம் தமிழ்நாடு மாநில காட்டுயிர் வாரியத்தின் பரிசீலனையில் உள்ளது.

இந்த நிலையில் திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில்  பூவுலகின் நண்பர்கள் தொடுத்த வழக்கில் TIFR சார்பில் பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் இத்திட்டமானது  மதிகெட்டான் – புலிகள் வலசைப்பாதையில் இடம்பெற்றிருந்தாலும் நிலத்திற்கு அடியில் வருவதால் திட்டத்தை செயல்படுத்த எந்தத் ஆட்சேபனையும் இல்லை எனத் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளது.

NTCA

இருப்பினும் இத்திட்டத்திற்கு காட்டுயிர் வாரிய அனுமதி அவசியமாவதாக தமிழ்நாடு  வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம் 1972ன் பிரிவு 38 O (g)ன் படி புலிகள் வாழிடங்கள் மற்றும் காப்பகங்களை இணைக்கும் பகுதிகளை சூழலியல் அடிப்படையில் நீடித்த பயன்பாடு அல்லாத திட்டங்களுக்கு மாற்றும் போது தேசிய காட்டுயிர் வாரியத்தின் அனுமதி கட்டாயமாகிறது. மாநில அளவிலான காட்டுயிர் வாரியம் பரிந்துரை அளித்தால் மட்டுமே தேசிய அளவில் அனுமதி கிடைக்கும்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து மனு அளித்தபோது நியூட்ரினோ திட்டத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தினார். திமுகவின் நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழ்நாட்டு அமைச்சர்கள், அதிகாரிகள் கொண்ட ஒரு குழு ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து இத்திட்டத்திற்கு எதிரான தமிழ்நாடு அரசின்  நிலைப்பாட்டை எடுத்துரைத்தனர்.

இவ்வளவு தீர்க்கமாக தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டைக் கூறிய பின்னரும் நீதிமன்ற உத்தரவுகள் மூலமாக எப்படியாவது இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசு முடிவெடுத்திருப்பதையே உச்சநீதிமன்றத்தில் TIFR சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு உணர்த்துகிறது.

– சதீஷ் லெட்சுமணன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments