அணு ஆற்றல்: செலவுமிக்கது, ஆபத்தானது, நியாயமற்றது

எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டாலும் அணு ஆற்றலுக்கு இந்தாண்டு மோசமான ஆண்டாகவே உள்ளது. உலகின் மிகப்பெரும் அணு உலை கட்டமைப்பு நிறுவனமான அமெரிக்காவின் வெஸ்டிங் ஹவுஸ் (Westinghouse) நிறுவனம் கடந்த மார்ச் மாதம் திவாலாகி விட்டது. அதன் முதன்மை நிறுவனமான (Parent Company) டோஷிபாவிற்கு (Toshiba), கடும் நிதி நெருக் கடியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், பாரிஸை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் அரேவா(Areva) எனும் அணு ஆற்றல் விநியோக நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் திவாலானது. தற்போது அந்நிறுவனம் மறுகட்டமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்தின் அணு உலைகள் கட்டமைப்புத் தொழிலை பல நிறுவனங்கள் வாங்கிக்கொண்டன. அவற்றில் பிரான்ஸின் பொதுத்துறை நிறுவனமும் (Electricite de France) ஒன்று. அமெரிக்காவிற்கு பகிரப்படும் அணுசக்தியின் அளவு 2016-ஆம் ஆண்டு இருந்த 20 சதவீதத்திலிருந்து, 2050-ஆம் ஆண்டுக்குள் 11 சதவீதமாக குறையும் என, அமெரிக்க எரிசக்தி தகவல் நிறுவனம் கடந்த மே மாதம் அறிவித்தது. கொரியா மற்றும் பிரான்ஸின் புதிய அதிபர்கள் தங்கள் நாடுகளில் அணு சக்தியின் பங்கைக் குறைத்துக்கொள்வதாக வாக்குறுதி அளித்துள்ளன. அதேபோல், சுவிட்சர்லாந்தும் அணு சக்தியைப் பயன்படுத்துவதிலிருந்து பின் வாங்கியுள்ளது.

இப்படி திவாலாகிப்போன வெஸ்டிங்ஹவுஸ் (Westinghouse) மற்றும் அரேவா (Areva) நிறுவனங் களுடன் தான் இந்தியாவில் அணு உலைகளை அமைக்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அரேவா நிறுவனம் மஹராஷ்டிரா மாநிலத்தின் ஜெய்தாப்பூரில் (Jaitapur) 10 அணு உலைகளைக் கட்டமைக்க உறுதிகொண்டுள்ளது. இதுபோதாது என, ஆந்திர மாநிலத்தின் கொவ்வடாவில் ((Kovvada) வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனம் 6 அணு உலைகளை கட்டமைக்க உள்ளது என இந்திய பிரதமர் மோடியும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவும் கடந்த 2016-ஆம் ஆண்டு மே மாதம் அறிவித்தனர். ஏற்கனவே திவாலாகிப்போன 2 நிறுவனங்களுடன் அணு உலைகளை கட்டமைக்க ஒப்பந்தம் செய்திருப்பது இந்திய அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையை தெளிவாகக் காட்டுகிறது. இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் இந்தியாவில் வரி செலுத்துவோர் பெரும் தொகையை வரிக்காக செலுத்த நேரிடுவதோடு மட்டுமல்லாமல்,
முழுமையாக நிறைவேற்றப்படாத அணு உலை திட்டங்களுடன் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இதனால், இந்த ஒப்பந்தங்களை விரிவாக மறுமதிப்பீடு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் மத்திய அரசு அனுமதி அளித்துள்ள 10 உயரழுத்த நீர் உலைகள்(Pressurised Heavy Water Reactors – PHWRs) குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும் என்பது தெளிவு. இவற்றின் கட்டமைப்பிற்கான இடங்கள் கடந்த 2012-ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசாங்கத்திலேயே நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், 5 ஆண்டுகளாகியும் தற்போதுதான் 700 மெகாவாட் திறன்கொண்ட முதல் உயரழுத்த நீர் உலை அமைக்கப் பட்டு வருகிறது. உலகளவில் அணு ஆற்றலுக்கு எதிராக வளர்ந்து வரும் மனநிலை, புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான குறைந்த செலவு, இதையெல்லாம் கருத்தில் கொண்டு 10 அணு உலைகளின் திட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும்.

அதிகச் செலவில் உருவாகும் ஆபத்து:

முதலாவதாக, 700 மெகாவாட் உயரழுத்த நீர் உலைகள் இறக்குமதி செய்யப்பட்ட அணு உலைகளைவிட மலிவானவை என்றாலும், அவற்றின் மூலம் கிடைக்கும் மின்சாரம் விலை உயர்ந்ததாக இருக்கும். இந்தவகை அணு உலைகள் இதுவரை இந்தியாவில் அமைக்கப் பட்டதில்லை. மகாராஷ்டிராவின் தாராப்பூரில் அமைந்துள்ள 540 மெகாவாட் திறன் கொண்ட 2 உலைகளே, இந்தியாவில் உள்ள அதிகத் திறன்கொண்ட உயரழுத்த நீர் உலைகளாகும். தற்போது, ராஜஸ்தான் மாநிலம் ரவாத்பாதா (Rawatbhata), குஜராத் மாநிலம் காக்ராபூர் (Kakrapur) பகுதிகளில் 700 மெகாவாட் திறன்கொண்ட உயரழுத்த நீர் உலைகள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் கட்டுமானப் பணிகளும் 2 ஆண்டுகள் பின்தங்கி உள்ளன. இதனால் செலவிடப்படும் கூடுதல் தொகையை மத்திய அரசு வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. காக்ராபூர் மற்றும் ரவாத்பாதா உலை களில் ஒரு மெகாவாட் மின்சாரத்தை தயாரிக்க தோராயமாக 10 கோடி ரூபாய் செலவாகும் என அரசாங்கமே ஒரு செய்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதனால், இந்த உலைகள் செயல்படத் துவங்கிய முதல் ஆண்டில் தயாரிக்கப் படும் மின்சாரம், ஒரு யூனிட்டுக்கு 6 ரூபாய் செலவிலேயே மக்களுக்கு விநியோகிக்கப்படும் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், நிலக்கரி, இயற்கை எரிவாயு, நீர் மின்சக்தி இவற்றின் மூலம் தயாரிக்கப்படும் குறைந்த செலவில் விநியோகிக்க முடியும் என இந்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ள கட்டண மாதிரி மூலமே தெளிவாகிறது. சூரிய மின்சக்தியையும் குறைந்த தொகையில் விநியோகிக்க முடியும் என்பதற்கான சான்றுகள் உள்ளன. ராஜஸ்தானின் பாத்லா ((Bhadla) நான்காம் கட்ட சோலார் பூங்கா மூலம் ஒரு யூனிட் மின்சாரத்தை 2.44 ரூபாய்க்கு விநி யோகிக்க முடிகிறது, அதுவும் இனிவரும் 25 ஆண்டுகளுக்கும். இது தனித்துவிடப்பட்ட ஒரேயரு சான்று அல்ல. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் கிடைக்கும் மின்சாரத்தின் விலை குறைந்துகொண்டே வருகிறது. அரசாங்கம் மதிப்பிட்டுள்ள கட்டண மாதிரியின் மூலம் அணு ஆற்றல் உண்மை நிலையைவிட போட்டித்திறன் கொண்டதாக தோற்றமளிக்கின்றது. ஒரு அணு உலை கட்டமைக் கப்படும்போது அதன் மூலம் எந்தவொரு வருமானமும் அரசாங்கத்திற்கு கிடைக்கப் போவதில்லை. அணு உலை கட்டமைத்தபின், செலவிடப்பட்ட மூலதனம் மற்றும் வருமான வீதம் இவற்றைக் கருத்தில்கொண்டு அரசாங்கம் கட்டணத்தை நிர்ணயிக்கும். இதனால், அணு ஆற்றலில் முதலீடு செய்யப்படும் தொகையின் வருமானவிகிதம், மற்ற மின் ஆற்றல் மூலம் கிடைக்கும் வருமான விகிதத்தைவிட குறைவாகவே உள்ளது. இதனாலேயே அணு ஆற்றல் பொருளாதார ரீதியில் கவர்ச்சிகரமான திட்டமாக இல்லை. இந்த அணு உலைகள் மூலம் 33,400 வேலை வாய்ப்புகளை உருவாக்கமுடியும் என இந்திய அரசாங்கம் கூறுகிறது. இந்த இரண்டு அணு உலைகளின் திட்ட மதிப்பு 70,000 கோடியை நினைவில் கொண்டால் நமது அரசாங்கத்தின் இந்தக் கூற்று நம்மை ஈர்க்கக்கூடியதாக இருக்கலாம். ஆனால், ஒரு திட்டத்தின் மூலம் உருவாகும் வேலைவாய்ப்புகளை அத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையை மட்டும் கருத்தில்கொண்டு மட்டும் தீர்மானிக்க முடியாது. அணுசக்தியால் உற்பத்தி செய்யப்படும் ஒரு மணி நேர மின்சாரத்திற்கு ஆண்டிற்கு 0.14 வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாகியுள்ளதாக கலிஃபோர்னியா (University of California) பல்கலைக்கழகத்தில் மூன்று திறனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்கு முரணாக சூரிய சக்தி ஆற்றல் சம்பந்தமான வேலைகள், அணு ஆற்றல் வேலைவாய்ப்புகளுடன் ஒப்பிடுகையில் 6 மடங்கு அதிகமானதாக இருக்கிறது. சூரிய ஆற்றல் மூலம் கிடைக்கும் ஒரு மணிநேர மின்சாரத்திற்கு ஆண்டிற்கு 0.87 வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. வேலைவாய்ப்பு ரீதியாகவும் அணு ஆற்றல், சூரிய ஆற்றலுடன் ஒப்பிடுகையில் விரும்பத்தகாத ஒன்றாகவே உள்ளது.

பருவநிலை மாற்றத்துக்கு ஒவ்வாதது:

அணு உலைகள் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போர் புரியும் அளவிற்கு வல்லமை கொண்டவை என அரசாங்கம் சொல்லிக் கொண்டு வருகிறது. பருவநிலை மாற்றம் மிகக் கடுமையான சூழலியல் பிரச்சனைதான். ஆனால், அதுமட்டும் நாம் எதிர்கொள்ளும் சூழலியல் பிரச்சனை அல்ல. அணு ஆற்றல் நமது சுற்றுச்சூழலுக்கும் மக்களின் ஆரோக்கியத்தின் மீதும் மிகப்பெரும் தாக்குதலை நிகழ்த்துகிறது. அதனால், அணு ஆற்றல் பருவநிலை மாற்ற விளைவுகளை குறைக்கும் கருவி என்பது வீண் வாதம்.

எல்லா அணு உலைகளும் அணுக்கழிவுகளை வெளியிடும்:

யுரேனியம், புளூட்டோனியம் நிறைந்த அணுக்கழிவுகள் அவை. இந்த அணுக்கழிவுகள் பல நூறாயிரம் ஆண்டுகள் நமது சுற்றத்திலேயேதான் இருக்கும். அணுக்கழிவுகள் நமது சுற்றுச்சூழலில் தவிர்க்க இயலாத, ஒழித்துக்கட்ட இயலாத ஒன்று என்பது பல ஆராய்ச்சிகளின் மூலம் தெரியவந்துள்ளது.

அணு உலைகள் பேரழிவைத் தரவல்லவை:

ஃபுகுஷிமா, செர்னோபில் உதாரணங்களையும் பார்த்துவிட்டோம். ஒரு அணு உலை விபத்து பரந்த நிலப்பரப்பினை அணுக்கதிர் வீச்சால் பாழ்படுத்திவிடும். அந்த நிலத்தை வாழத் தகுதியற்ற நிலமாக மாற்றிவிடும். செர்னோபில் விபத்து நிகழ்ந்து 30 வருடங்களுக்கு மேலாகியும், இன்றளவும் 6,50,000 ஏக்கருக்கும் மேலான நிலத்தை மக்களால் பயன்படுத்த முடியவில்லை.

பொதுமக்கள் நலன்:

அணு உலைகள் மிக ஆபத்தானவை என்பது மக்களுக்கு தெரிந்திருக்கிறது. 1980-களிலிருந்து எல்லா அணு உலைத் திட்டங்களையும் பெரும் எதிர்ப்பு போராட்டத்துடன் தான் மக்கள் வரவேற்பார்கள். இந்த மாபெரும் மக்கள் இயக்கத்திற்கு பின் சில சமயங்களில் அத்திட்டங்கள் ரத்தான எடுத்துக்காட்டுகளும் உண்டு. கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இத்தகைய உதாரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. சமீபத்தில், பாட்டியாலாவிற்கு அருகாமையில் (Patiala) அமையவிருந்த அணு உலைத் திட்டம் ரத்தானதாக செய்திகள் வெளிவருகின்றன. ஆனால், மக்கள் போராட்டங்களை பெரிதாக நினைக்காமல் நிறைவேற்றப்பட்ட அணு உலைத் திட்டங்களும் உண்டு. ஹரியானாவின் ஃபதேஹாபாத் (Fatehabad) இடத்தில் அணு உலைத் திட்டத்தை எதிர்க்கும் மக்களை அவர் களது பொருளாதாரச் சூழ்நிலையைப் பயன்படுத்தி நிறைவேற்றுகிறது இந்திய அரசு. ஆனால், மத்திய பிரதேசத்தின் சுட்கா (Chutka) பகுதியில் அமையவுள்ள அணு உலையை எதிர்த்து மக்கள் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் கடினமான விஷயம் என்னவென்றால், அங்கு ஏற்கனவே பெரும்பாலான மக்கள் பார்கி அணைத் (Bargi) திட்டத்தால் தங்கள் வாழ்விடத்தைவிட்டு இடம் பெயர்ந்தனர். இப்போது அதே மக்கள் அங்கு அமைய உள்ள அணு உலை திட்டத்திற்காக மீண்டும் இடம்பெயர வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. அணு உலைகள் எப்பொழுதும் கிராமப்புற ஏழை மக்களையே பாதிப்புக்குள்ளாக்குகிறது. அணு உலைகள் மூலம் தயாராகும் மின்சாரத்தில் சொற்ப அளவு மின்சாரத்தைப் பயன்படுத்தும் மக்களையே அவை பெருமளவில் பாதிக்கிறது.

‘அணு உலைகள் இந்தியாவின் நிலையான வளர்ச்சிக்காக’ என நமது அரசு சொல்கிறது. ஆனால், செலவுமிக்க, ஆபத்தான, முன்னுக்குப்பின் முரணான இந்த அணு உலைகளா நிலையான வளர்ச்சியை நோக்கிய வழி?

எம்.வி.ரமணா, சுவ்ரத் ராஜூ தமிழில் : நந்தினி

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments