பறவைகளை அவதானிப்பது

பறவைகளை அவதானிப்பது அல்லது நோக்குவது என்பது ஒரு பொழுதுபோக்கு, கல்வி, கலை, இயற்கை ஆராய்ச்சி, சுற்றுச்சூழல் செயல்பாடு, அரசியல், பண்பாட்டு செயல்பாடு மற்றும் ஆன்மீகப்பயிற்சி. இப்படிச் சொல்லும் போது சற்று மிகையாகத் தெரியலாம். பறவை நோக்கல் (Bird watching) என்பது என்ன? ஒரு விலங்குக்காட்சிச் சாலைக்கோ அல்லது பறவைகளை கூண்டில் வளர்க்கும் இடத்துக்கோ சென்று அவைகளைப் பார்த்தல் அன்று. இப்போது சில பள்ளிகளில்கூட பெரிய கூண்டுகள் அமைத்து பறவைகள் வளர்க்கப் படுகின்றன. சிலர் தங்கள் வீடுகளிலேயே கூண்டுகள் முதல் தனி அறைகள் அமைத்து உள்நாட்டு, வெளிநாட்டுப் பறவைகளை செல்லப் பிராணிகளாக வளர்க்கிறார்கள். இப்படி வளர்ப்பதும் அவற்றைக் காண்பதும் பறவை நோக்கல் ஆகுமா? உங்கள் வீட்டை விட்டு, அதன் நான்கு சுவர்களை விட்டு வெளியே உள்ள உலகில் எப்போதும் வாழும், பாடும், இரைதேடி அலையும், கூடுகட்டி குஞ்சு பொறித்து வாழும், பறக்கும் திறனுடைய உயிர் களைக் கவனித்தல், அதன் இயல்புகளைக் கூர்ந்து அவதானித்தல், அதன் சூழல், உணவு, இருப்பிடம், துணை இவைகளைக் கவனித்து நோக்கி அறிந்துகொள்ளுதலே பறவை நோக்கல் ஆகும்.

சரி இவ்வாறு பறவை நோக்கலினால் கிடைக்கும் பயன் என்ன என்பது அடுத்த கேள்வி. கல்வியால் பயன் என்ன என்ற கேள்விக்கு எப்படி பல தரத்திலமைந்த விடைகள் உண்டோ அப்படியே பறவை நோக்கலினால் என்ன பயன் என்பதற்குமான விடைகளும். அந்த விடைகளைச் சுருக்கியே முதல்பத்தியில் கொடுத்துள்ளேன். இந்த இதழில் (பகுதியில்) அப்படியான சில பயன்களை மட்டும் காணலாம்.

பொழுதுபோக்கு:

பறவை நோக்கல் முதலில் ஒரு அழகிய பொழுது போக்கு. எந்த மனித முயற்சியில் விளைந்த
பொழுதுபோக்கும் ஒரு திசைவழியை, ஒரு குறிப் பிட்ட எல்லைகளையும் வரையறைகளையும் கொண்டிருக்கும். பறவைகளின் வாழ்வும், இருப்பும், அதன் வடிவமும், நிறமும், வேட்டையும், பல தகவல்களை மட்டுமல்லாது சுவையான திருப்பங்களையும் கொண்டிருக்கும். பறவை நோக்கலின் போது ஒரு முறை துவாக் குடியில் உள்ள ஒரு ஏரியில் பட்டாணி உப்புக்கொத்தி ஒன்றைப் படமெடுத்தேன். இந்த உப்புக்கொத்தி கொஞ்சமே கொஞ்சம் பக்கத்தில் வருமளவுக்கு என்னை அனுமதித்தது. இல்லாவிட்டால் குடுகுடு வென்று சின்னக்கால்களால் ஓடித்திரும்பி ஓடித்திரும்பி நம்மிடமிருந்து விலகிவிடும். இல்லாவிட்டால் அவ்வப்போது கைகள் இரண்டையும் குழந்தைகள் சட்டென காதுகளை ஒட்டினாற் போல தூக்கி இறக்குவது போல சின்ன இறக்கைகளை உயர்த்தி இறக்கிப் பின் தரையை ஒட்டியவாறே பறந்துவிடும். மூக்கும் வாலுமாய் ஒரு அரையடி இருக்கும். ஓட்டமாய் ஒரு நடை. பின் சட்டென நின்று இரையைப் பொருக்குதல், பின் மறுபடியும் ஒரு சிறு ஓட்டம். இப்படியே போகும். நடு நடுவில் இறக்கைகள் இரண்டையும் தூக்கி இறக்கி ஒரு செவ்வணக்கம். மறுபடி ஒரு அள்ளிச் செல்லுவதுபோல விரட்டிச்சென்று எல்லை கடத்துவதை எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

அதே போன்று ஒரு நாள் சிறிய நீர்க்காகங்கள் மீன்களைப் பிடிப்பதை கண்டவாறு இருந்தேன். நீர்க் காகங்கள் மீனைப்பிடித்துக்கொண்டு கரைக்கு வந்து மெல்ல மெல்ல மீனைத்திருப்பி அதன் தலைப்பகுதி வாயினுள் செல்லுமாறு விழுங்கும். நீர்க்காகங்களின் அலகு கொக்குகளின் அலகைப்போன்று மீனை குத்தியோ அல்லது இறுகப்பிடிக்கவோ ஏற்றவை அல்ல. இதனால் மீன்கள் தப்பிச்செல்லவும், மற்ற நீர்க்காகங்கள் பறித்துச்செல்லவும் நேரிடும். அப்போது நீரில் இருந்த ஒரு சிறிய நீர்க்காகம் மீனைப்பிடித்தது என்று நினைக்கும் போது அதன் செயல்கள் வித்தியாசமாய் இருக்கவே கவனித்துப்பார்த்தால், அது மீனென நினைத்துப்பிடித்தது ஒரு நீர்ப்பாம்பு. பாம்பு நீர்க்காகத்தின் உடலைச் சுற்றி இறுக்கிக் கடிப்பதைப் பார்க்கமுடிந்தது. பாம்பை விட பிறகு நீர்க்காகம் போராடலாயிற்று. இப்படி சுவையான திருப்பங்களும் நிகழும்.

கல்வி:

நீர்க்காகங்கள் மீனைப் பிடிப்பதில் இரண்டு வகையான உத்திகளைக் கையாளுகின்றன. தனித்தனியாக மீனைப்பிடிப்பது ஒரு உத்தி. பிறகு கரைக்குக் கொண்டு வந்து உண்பது. இன்னொரு உத்தியானது, பல நீர்க்காகங்கள் ஒன்றிணைந்து ஒரே கூட்டமாய் மீன்களை ஒரு திசையில், குறிப்பாக கரையோடு ஒதுக்கி மீன்களை பிறகு நீரினுள் மூழ்கிப்பிடிப்பது. இப்படி இவைகளை மீன்களை விரட்டிச்சேர்க்கும் போது இறக்கைகளையும் படபடவென்று அடித்துக் கொள்ளும். மீன்கள் ஒதுக்கப்பட்டபின் நீர்க்காகங்களின் வேட்டை ஆரம்பமாகும். இந்த ஒருங்கிணைந்த மீன்பிடிப்பைக் காண நேர்ந்தபோது நான் புத்தகங்களில் இருந்தல்லாத ஒன்றைக் கண்டுகொண்டேன். இவை மீன்களை இப்படிப் பிடிப்பதற்கான உத்தியில் எப்படி இவை ஒன்றிணைகின்றன. இவைகள் தங்களுக்குள் எப்படித் தொடர்புகொள்கின்றன என்பன புதிராகவே இருக்கின்றன.

இது மட்டும் அல்லாமல், கிளியூர்க் குளத்தில் இப்படியான ஒரு ஒருங்கிணைந்த மீன்பிடிப்பை நிகழ்த்த அங்கு பெரும் எண்ணிக்கையில் இருந்த நீர்க் காகங்கள் உத்தேசித்து ஒரு திசைநோக்கி நகர்ந்த போதே அதுவரை அங்குமிங்கும் பறந்து மீன் வேட்டை அடிக்கொண்டிருந்த மீசை ஆலாக்கள் உடனே ஒன்று திரண்டு இந்த நீர்க்காங்களின் அணிவகுப்புக்கு மேலாகப் பறக்க ஆரம்பித்தன. இது கூத்தபார் குளத்தில் நிகழவில்லை. ஏனெனில் அங்கு அப்போது ஆலாக்கள் இல்லை. இந்த ஆலாக்களும் ஏதோ கீழே அணி வகுத்துச்செல்லும் கப்பல் படைக்கு மேலே பறக்கும் வானூர்திக்ளைப்போல தோற்றம் தந்தவாறு பறந்துவந்தன. மீன்கள் செறிந்து ஒதுக்கப்பட்ட போது அந்தத் தருணத்தையும் வாய்ப்பையும் ஆலாக்கள் பயன்படுத்திக்கொண்டு நீரினுள் பாய்ந்து மீன்களைப் பிடித்தவாறு எழும்பிப்பறந்தன. ஒருங்கிணைந்த வேட்டை ஒன்றை இன்னொரு பறவையினம் தனக்கான வாய்ப்பாக்கிக் கொண்டதைக் காணுகின்ற அபூர்வ நாளாக அது இருந்தது. அதே போன்று நீர்ப்பறவைகளின் கால்கள், பாதங்கள், இறகுகள், வால்கள் போன்றவை குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் நவீன கருவிகள், இயந்திரங்களின் வடிவமைப்பை விளக்கு வதற்கு பெரிதும் பயன்படுபவை. நீளவால் இலைக்கோழிகளும், மடையான் எனப்படும் மடக்கொக்குகளும் நீர்பறவைகளே ஆனாலும் நீளவால் இலைக்கோழிகளின் நீண்ட விரல்கள் கொண்ட பாதங்கள் எடையை விரவிப்பதியுமாறு செய்வதால் தாமரை/ அல்லி இலைகளின் மேல் அவைகளால் மூழ்காமல், இலையைக் கிழிக்காமல் நடந்து சென்று உணவைத்தேட உதவுகிறது. அதே சமத்தில் மடையானின் பாதங்கள் இந்த அளவு நீண்ட விரல்களை கொண்டவை அல்ல. அதோடு அவற்றால் பருமனானவையும் கூட. எனவே அவைகளால் இலைகளின் மேல் இயல்பாக நடந்துசென்று தனக்குரிய உணவை கொள்ளமுடியாமல் பெரிதும் கரையோரமாகவே காத்து நின்று உணவைப் பிடிக்கின்றன. எடையை இப்படி பரவலாக்குவதன் மூலம் இயங்க முடிகிற கருவிகளும் இயந்திரங்களும் அனேகம். பனியில் புதைந்துவிடாமல் சருக்க பனிச்சருக்கில் (ஷிளீவீவீஸீரீ) பயன்படும் அட்டைகள், சேறில் புதைந்து விடாமல் இருக்க எந்திரக் கலப்பைகளின் பெரிய சக்கரங்கள், அவற்றின் மீது பொருத்தப்படும் உலோக உருளிகள் இப்படி பல கருவிகளை மனிதன் உருவாக்கியது இப்படியான பறவைகளைக் கண்டே. அதே போல நீர்க்காகங்கள், வாத்துகளின் நீர் ஒட்டாத இறகுகள் மெழுகு தடவிய அல்லது நானோ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட நீர் ஒட்டாத பரப்புகளைக் கொண்ட ஆடைகளை, கட்டுமானப் பொருட்களை உருவாக்க உத்வேக மளித்துள்ளன.

இதேபோன்று பறவைகளின் நிறங்கள், இனப் பெருக்கக் கவர்ச்சிக்காகவும், உருமறைப்புக் காகவும் பெரிதும் பயன்படும் விதத்தில் உண்டாகி யுள்ளன. இந்த நிறங்களுக்கான காரணங்கள் நிறமிகள் என்றே கருதப்பட்டன. ஆனால் மயில் போன்ற பறவைகளின் வண்ணச் சிறகு களுக்குக் காரணம் நிறமிகள் மட்டுமல்ல. மாறாக அவை நானோ அளவு கொண்ட (Nano sized) வடிவமைப்புகளைக் கொண்டிருப்பதே என்பது கண்டுபிடிக்கப்பட்டபோது அப்படியான வண்ணப்பொருட்கள், சாயங்கள் உருவாக்கப் படக் காரணமாய் இருந்தன. இது போன்றே ஈப்பிடிப்பான், இரட்டை வால் குருவிகள் குறுகிய இடங்களில் கூட சட்சட்டென திரும்பித் திறமையாகப் பறந்து பூச்சிகளைப் பிடிக்க உதவுபவை அவைகளின் வால்கள். இவைகளும் நவீன கருவிகள், கிளைடர்கள் போன்றவைகளை வடிவமைக்க உதவுகின்றன. பறவைகளைக் காட்டி இவைகளை விளக்கும் போது அது மிகவும் சரியாகவும் இயல்பாகவும் புரிந்துகொள்ள உதவுகிறது. அதேபோன்று உணவுப் பழக்கங்களைக் கற்றுக்கொள்ள, குழந்தைகளுக்குப் புரியவைக்கவும் பறவை நோக்குதல் பயன்படும். காட்டாக, தேன்சிட்டு பூக்களில் இருந்து தேன் உண்ணும் வகையிலேயே அதன் நீண்ட கூர் அலகு உள்ளது. இந்த அலகைக் காட்டி அதன் உணவின் தன்மையை விளக்கும் போதிலேயே அது தன்னுடைய புரதத் தேவைக்காக சிறிய சிலந்திப்பூச்சிகளை அதே நீண்ட அலகால் வலையில் இருந்து பிடித்து உண்ணுவதையும் காட்டலாம். எனவே உணவு என்பது தேவையை ஒட்டி சூழலைப் பாதிக்காமல் கொள்ளப்படுவதே அன்றி அதில் புனிதமானது, உயர்வானது என்கிற பிரிவினைகள் இல்லை என்பதை விளக்கமுடியும்.

இயற்கை ஆராய்ச்சி:

இயற்கை ஆராய்ச்சி எனும் போது அது மிகவும் விரிந்த ஒரு கருத்து. ஆனால் அதன் அடிப்படையாக இருப்பது இயற்கையின் ஒன்றை ஒன்று சார்ந்த, காரண-காரியங்களால் முறைப் படுத்தப்பட்ட, எவற்றையும் முற்றழிக்காமல் துய்த்துப் பெருகும் குணமே ஆகும். மனிதன் உள்ளிட்ட எல்லா உயிர்களும் ஒன்றை ஒன்று சார்ந்தே இந்த உயிருள்ள உலகை நிரப்பு கின்றன. ஆனால் மனிதனைத் தவிர்த்த எந்த உயிரினமும் அதன் உணவினத்தையோ அல்லது இன்னொரு உயினத்தையோ முற்றாக அழிப்பதை இயற்கையை கூர்ந்து ஆராயுங்கால் காணமுடியாது. உண்ணிக்கொக்குகள் கால் நடைகளுடனேயே எப்போதும் இருப்பதைக் காணலாம். அப்படியே சில பறவைகள் ஆபத்துக்களை எச்சரிப்பதன் அந்தச் சூழலில் தங்களையும் காப்பாற்றிக்கொண்டு பிற உயிர்களுக்கு உதவுகின்றன. பூச்சிகள் பெருகும் போது அவற்றை உண்ணுகிற பறவைகள் அங்கு வலசை வருகின்றன. சூழலில் தங்களைத் திறம்பட பொருத்திக்கொள்ளவும், அதனை சிதைக்காமல் தன் வாழ்வுக்குரியதை எடுத்துக்கொள்ளவும், தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும் ஒவ்வொரு விலங்கும் இயற்கையாகவே தேர்ந்துள்ளன. இதிலும் பறவைகள் விலக்கல்ல. பறவைகளின் கால்களின் உயரம், அலகுகளின் நீளம், பறப்புத்திறன் போன்றவை அது உணவு தேடும் இடத்தை, பரப்பை, அளவை வரையறை செய்கிறது. ஆனால் உண்மையில் நடந்தது என்ன? எங்கெங்கும் உணவுள்ளது. மரங்களிலுள்ள, கிளைகளுக்கு இடையிலும், பட்டைகளுக்கு அடியிலும், பழத்திலும், விதையிலும், நீராழத்திலும், நீரின் மேற்பரப்பிலும், நீர்த்தாவரங்களுக்கு இடையிலும், மண்ணிலும், மண்ணிற்கு அடியிலும், வானிலும், பூவிலும், எங்கெங்கும் உணவுள்ளது. அதைக் கண்டுகொள்ளவும், இணக்கமான முறையில் எடுத்துக்கொள்ளவும், போட்டியைத் தவிர்க்கவும், ஏற்றவகையில் கால்களையும், அலகுகளையும் பறக்கும் திறனையும், உயிர்கள் உருவாக்கிக் கொண்டுள்ளன. இது மட்டுமல்லாது அவை ஒன்றுடன் ஒன்று நல்லிணக்கத்தின் அடிப்படையில் தொடர்பு கொள்ளத் தெரிந்திருக் கின்றன. மொழி என்பது மனித குலம் இன்றடைந்துள்ள முன்னேற்றத்துக்கும், தகைமையணைத்துக்கும் அடிப்படையானது என்பது அறிவியல் துணிபு.

மொழி முதன்மையாக இரண்டு விசயங் களுக்காக உருவாக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. ஒன்று அனுபவ அறிவை சேகரமாக்கி வைக்கும் கருவூலமாக உள்ளது. இரண்டாவது மற்ற உயிரினத்துடன் தொடர்பாடலுக்கான வசதியைத் தருகிறது. பறவைகளும்கூட தொடர்பாடுகின்றன; வலசை போகவும் உணவு தேடவும், ஆபத்துக்களை எச்சரிக்கவும், தங்களுக்குள் உறவுகொள்ளவும் அவைகள் மொழியைப் பயன்படுத்துவதை பறவைகளை நோக்கி அறியலாம். பிற பயன்களை அடுத்த பகுதிகளில் அறியலாம்.

தங்கமணி
படங்கள் : பிரபாகரன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments