ஒரு மன்னிப்பு 7 ஆண்டு கால நாசத்தைச் சரி செய்யுமா?

ஓஷன் கன்சர்வன்சி’ (கடல்பாதுகாப்பு) என்ற பெயரில் குப்பைகளிலிருந்து கடல்களைப் பாதுகாப்பதாகத் தன்னை அறிவித்துக் கொண்டு செயல்படும் அமெரிக்க நிறுவனமொன்று 2015 ஆம் ஆண்டில் ஒரு அதிர்ச்சிகரமான அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் கடலை நாசம் செய்யும் நெகிழிக் குப்பைகளில் 50 விழுக்காட்டுக்கும் மேல் பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனேஷியா போன்ற ஐந்து நாடுகளிலிருந்தே வருகின்றன என்றும் இந்தக் குப்பைகளை எரித்து ஆற்றல் பெறுவதன் மூலம் இந்தப் பிரச்சனையைச் சரி செய்யலாம் என்றும் தெரிவித்திருந்தது.

உண்மையில், குப்பைகள் வடகோளத்து நாடுகளின் பிரச்சினை. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளின் நெகிழிக்குப்பைகள் பல ஆயிரம் கண்டெய்னர்களில் ஒவ்வொரு நாளும் இந்தத் தென்கோளத்து நாடுகளுக்கு மறுசுழற்சி என்ற பெயரில் கப்பல்கள் மூலம் எடுத்துச் சென்று கொட்டப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் ஒரு இலட்சம் மெட்ரிக் டன்னுக்கு மேல் இவ்வாறு நெகிழிக் குப்பைகள் கடல் கடந்து பயணிக்கின்றன. இந்தக் குப்பைகள் தென் அரைக்கோள நாடுளின் மக்களையும் சூழலையும் கடுமையாகப் பாதிப்பதுடன் கடலுக்குள்ளும் பெருமளவில் கசிகின்றன. இப்படியிருக்க உண்மையைத் திரித்துக் கூறி வெளியான ஓஷன் கன்சர்வன்சியின் ‘ஸ்டெம்மிங் தி டைட்’ (Stemming the Tide ) அறிக்கை தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த அறிக்கைக்கு GAIA, BFFP உட்படப் பல்வேறு சூழல் அமைப்புகள் பல ஆண்டுகளாகக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில் ஓஷன் கன்சர்வன்சி நிறுவனம் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தனது பகிரங்க மன்னிப்பைக் கோரியிருக்கிறது.

இந்த மன்னிப்பு மிகவும் காலதாமதமானது என்பதை நாங்கள் உணர்கிறோம். பல ஆண்டுகளாக வருத்தங்களைப் பதிவு செய்து வந்த உங்களின் ஏமாற்றத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். உறுதியாக உங்களுக்கு நாங்கள் செவிமடுத்திருக்க வேண்டும், ஆனால், நாங்கள் அதைச் செய்யவில்லை, மிகவும் பணிவாக நடந்துகொண்டிருக்க வேண்டும், ஆனால், நாங்கள் அப்படிச் செய்யவில்லை; அதற்காக, நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம். எங்களது ‘ஸ்டெம்மிங் தி டைட்’ அறிக்கையின் மூலம் பெறப்பட்ட கவனமானது, ஆசியா, பசிபிக் முழுவதும் ஏற்கனவே செயல்பட்டுக்கொண்டிருந்த மாற்றத்துக்கானத் தீர்வுகளை நோக்கியப் பயணத்துக்கு முட்டுக்கட்டைப் போட்டு அவற்றைப் பின்னுக்குத் தள்ளியிருப்பதற்கு நாங்கள் வருந்துகிறோம்.

உலகளவில் கடலில் நெகிழி மாசுபாட்டின் மிகப்பெரிய பங்களிப்பாளர்களாக கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளை மையமாக்கிக் காரணமாக்குவதன் மூலம் தீங்கு விளைவிக்கும் கதையாடலை எங்கள் அறிக்கைச் சொல்லியிருக்கிறது. உலகின் ஒரு பிராந்தியத்தில் மட்டும் மிகக் குறுகிய கவனம் செலுத்தியதன் மூலம், கடல் நெகிழி மாசுகளின் நெருக்கடிக்கு யார் காரணம் என்பது பற்றிய ஒரு தவறான தகவலை நாங்கள் பரப்பியிருக்கிறோம். இது நெகிழிக் குப்பையில் வளர்ந்த நாடுகளின் பெரும்பங்கை ஒப்புக்கொள்ளத் தவறிவிட்டது. கடலில் கசியும் குப்பைகளைக் குறைப்பதில் மட்டுமே கவனம் செலுத்தியதன் மூலம், பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கான மேற்கத்திய நாடுகளின் பங்களிப்பு மற்றும் பொறுப்பு ஆகியவற்றுடன் கழிவுகளை உற்பத்தி செய்தல், அவற்றை இந்தநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல், மேலும் இவற்றுடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளக் குற்றம், சமத்துவம், சமூக அநீதி மற்றும் சூழல் அநீதிகளின் முக்கிய அம்சங்களை நாங்கள் கவனிக்கத் தவறிவிட்டோம்.

‘ஸ்டெம்மிங் தி டைட்’ அறிக்கையில், நெகிழியை எரிக்கும் நடைமுறையின் உண்மையான உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் விளைவுகளைப் புறக்கணித்து, கடல் நெகிழி மாசுபாட்டின் நெருக்கடிக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வாக அவற்றை எரிப்பதை நாங்கள் தவறாகப் பரிந்துரைத்துள்ளோம். மேலும், கார்பன் சமநிலை, சுழற்சிப் பொருளாதாரத்தை (Circular Economy) நோக்கிய ஒரு பெரிய நகர்வின் ஒரு பகுதியாகப் புதிய நெகிழிக்கான தேவையைக் குறைப்பதற்குப் பதிலாக, எரிப்பு மற்றும் ‘கழிவிலிருந்து ஆற்றல்’ போன்ற தொழில்நுட்பங்களைப் பரிந்துரைத்ததன் மூலம்  நெகிழியின் தேவை எவ்வாறு தொடர்ந்து அதிகரிக்கிறது என்பதில் நாங்கள் கவனம் செலுத்தவில்லை. எரித்தல் மற்றும் கழிவிலிருந்து ஆற்றல் போன்றவை பிளாஸ்டிக் குப்பைகளை ஒழிக்கும் நடவடிக்கைகளுக்கு முரணானவை,

இந்த அறிக்கையால் ஏற்பட்ட சேதத்திற்கு நாங்கள் உண்மையாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். ஸ்டெம்மிங் தி டைட் அறிக்கையை அது வெளியிடப்பட்ட அனைத்துத் தளங்களிலிருந்தும் நீக்கி நாங்கள் இரத்து செய்கிறோம்.

சரியான செயல்பாடுகள் இல்லையென்றால் நல்ல நோக்கங்கள் கூட சேதத்தைத்தான் உருவாக்கும் என்பதை ‘ஸ்டெம்மிங் தி டைட்’ அறிக்கை எங்களுக்குக் காட்டியுள்ளது. ‘நாங்கள் என்ன செய்கிறோம்’ என்பதைப் போலவே‘ நாங்கள் எப்படி வேலை செய்கிறோம்’ என்பது முக்கியம் என்ற கொள்கையின் அடிப்படையில், நாங்கள் உட்கார்ந்து, பிரச்சினைகளுக்கு நெருக்கமானவர்களிடம் சரியான நடவடிக்கைகள் பற்றிக் கேட்கவும் கற்றுக்கொள்ளவும் விரும்புகிறோம் .‘ஸ்டெமிங் தி டைட்’ வெளியானதைத் தொடர்ந்து மதிப்புமிக்க கருத்துக்களையும் பொருத்தமான விமர்சனங்களையும் ஒழுங்கமைத்து வழங்கிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களையும் நாங்கள் தொடர்ந்து சந்திப்போம்.” என்று தனது அறிக்கைக்கு மன்னிப்புக் கோரும் ஓஷன் கன்சர்வன்சியின் கடிதம் இவ்வாறு குறிப்பிடுகிறது.

இந்த ஓஷன் கன்சர்வன்சி நிறுவனமானது மிக அதிக நெகிழிக்குப்பைகளை உருவாக்கும் பெப்சி, கொக்கோகோலா, நெஸ்லோ, புராக்டர் அண்ட் கேம்பிள் போன்ற பல்வேறு முதன்மைச் சூழல் குற்றவாளிகளைப் பங்குதாரர்களாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பகிரங்க மன்னிப்பைத் தொடர்ந்து பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து நெகிழியை எரிப்பதற்கு எதிராகவும் நெகிழியைத் தடைசெய்யவும் உலகளாவிய அளவில் செயல்படும் GAIA மற்றும் BFFP அமைப்புகள் ஓஷன் கன்சர்வன்சியுடன் இணைந்து அடுத்தகட்ட நகர்வுகள் குறித்துத் திட்டமிட்டு வருவதாக GAIA இன் அறிக்கை தெரிவிக்கிறது.

மேலோட்டமாக இந்த விஷயம் ஒரு சாதாரணமான அறிக்கை போன்று தெரிந்தாலும் இந்த ஏழாண்டு காலத்தில் அரசுகளுக்குத் தவறான தீர்வுகளை வழிகாட்டியதன் மூலம் பிரச்சினையை முழுக்க முழுக்க மடைமாற்றிப் பெரும் நாசத்தை விளைவித்திருக்கிறது ஓஷன் கன்சர்வன்சி. இதிலிருந்து கற்றுக்கொள்வதற்குத் தமிழகத்துக்கும் ஏராளம் பாடங்கள் இருக்கின்றன. குறிப்பாக நெகிழிக் குப்பைகளை எரிக்கும் எரிவுலைகள் அமைப்பதை நெகிழி மாசுபாட்டுக்கானத் தீர்வுகளாக முன்னிறுத்தி தமிழகம் நடைபோடத் தொடங்கியிருக்கிறது. பெருநிறுவனங்கள் மற்றும் அவற்றின் கைப்பாவையான வளர்ந்த நாடுகளின் இப்படியான திசை திருப்பும் சூழல் விரோதத்திட்டங்களில் சிக்காமல் விரைவில் விழித்துக் கொள்வது தமிழக அரசுக்கு எதிர்காலத்தில் சங்கடமான விரும்பத்தகாத விளைவுகளை எதிர்கொள்வதைத் தடுக்க உதவும்.

விழித்துக்கொள்ளுமா தமிழக அரசு?

  • ஜீயோ டாமின்

[email protected]

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments