எண்ணெய்க்காக கருகும் காட்டு மனிதன்

அவள் கண்கள் என்னையே பார்த்துக் கொண்டிருக்கின்றன. அவள் குழந்தை அவளை இறுக்கி அணைத்தபடி தாங்கொண்ணா சூட்டிலும் துயில் கொண்டிருக்கிறது. குழந்தைக்கு தொடர்ந்து ஐந்து ஆறு வருடங்கள்வரை தாய்ப்பால் கொடுக்கும் தாயாயிற்றே. இந்நேரத்தில் மட்டும் எப்படி அவள் குழந்தையைவிட்டு பிரிந்திருக்க வேண்டுமென்று நான் எதிர்பார்க்க முடியும். ஏறக்குறைய ஒரு பதின்வயது குமரியின் உயரம் அவளுக்கு. அவள் எழுந்து நின்றால் சரியாய் சொல்லிவிடலாம். ஆனால் இப்போது வேண்டாம். அவள் ஓய்வெடுக் கட்டும். இரவு முழுவதும் ஓடிய அசதியில் கிடக்கிறாள். ஆனால் இன்னும் அவள் என்னையே குறிப்பாய் என் கண்களையே உற்றுப்பார்த்துக் கொண்டிருக் கிறாள். அவள் ஒருவேளை அவளைப்போல உணர்வுள்ளவளாய் என்னை எண்ணக்கூடும். அவள் எனக்குள் என் கண்களுக்குள் ஏதோ ஒரு சலனத்தை எதிர்பார்க்கிறாள் போலும். ஆனால் என் சொந்த இனத்தையே இப்படிப் பலமுறை பார்த்து மரத்துவிட்டிருந்த என் கண்களில் அவளுக்குப் புதிதாய்ச் சொல்ல எதுவும் செய்தியில்லை. என் வலது கையின் பெருவிரல் அலைபேசியின் தொடுதிரையை கீழிருந்து மேலாய் உந்தித்தள்ள என் பார்வையிலிருந்து மின்னலாய் மறைகிறாள் அவள். ஆனால் பார்வையிலிருந்து மட்டும்தான். அவள் தனி ஒருத்தி அல்ல. கூட்டம் கூட்டமாய்த் திரியும் அவள் உறவினர்களும் அவளுக்கு அருகிலேயே இங்கும் அங்குமாய் ஓடி ஓடி இறுதியில் சாய்ந்திருக்கவேண்டும். அவள் பெயர் “உராங்க் ஊத்தான்”. அதற்கு “காட்டு மனிதன்”  (Man of the forest)   என்பது பொருள்.

மனிதன் என்ற சொல் அவளை இழிவு படுத்துவதோ என்று நான் எண்ணுவதுண்டு. ஏனெனில் குழந்தை வளர்ப்பில் அவளது அக்கறை அத்தனை அற்புதமானது. பெரும்பாலும் மரங்களிலேயே இருக்கும் அவள் தனக்கும் தன் குழந்தைக்கும் தூங்குவதற்காய் மரத்தின் இலைகளையும் கிளைகளையும் கொண்டு மரங்களின்மீது தினமும் புதிதாய் ஒரு படுக்கை செய்வாள். மனிதனின் முன்னோர்களான வாலில்லா குரங்கு வகைகளில் இவள் மிகவும் தொன்மையானவள். ஆம், தொன்மை என்றால் சுமார் 15 மில்லியன் ஆண்டுகள். பழையதைத் தொலைத்து புதுமையைப் புகுத்த கங்கணம்கட்டி உழைக்கும் நாகரீக மனித சமூகம், மரங்களில் வாழும் உலகின் மிகப்பெரிய பாலூட்டி இனமான, 15,000 வகையான பூக்கும் தாவரங்களின் வீடான இவள் வாழிடத்தில் புகுந்து தீ வைத்திருப்பதில் வியப்பில்லைதான். மழைகாலங்களில் பெரிய இலைகளை குடைகளாக்கி கையில்பிடித்தவாறு உராங் ஊத்தான்கள் நிற்கும் அழகே தனி. சுமத்திரா (சுமத்திரா உராங்க் ஊத்தான்) மற்றும் போர்னியா (போர்னிய உராங்க் ஊத்தன்) காடுகளில் வாழும் இவை உலகின் வேறு எங்கும் காணக்கிடைக்காத ஓரிட வாழ்விகள். ஏழு ஆண்டுகள்வரை தம் குழந்தைக்கு காட்டில் வாழ்வதற்கான சகல வித்தைகளையும் கற்றுக்கொடுத்து பராமரிக்கும் பெண் உராங்க் ஊத்தாங்கள் அவற்றை ஆளாக்கிய பின்பே அடுத்து தம் துணையை நெருங்க அனுமதிக்கின்றன. ஒரே ஒரு குட்டியை ஈனுவதும் அடுத்த இனப் பெருக்கத்துக்கு அதிக காலம் எடுத்துக் கொள்வதும் அவற்றின் எண்ணிக் கையை இயற்கையிலேயே கட்டுக்குள் வைத்திருந்தது. ஆனால் அது சென்ற நூற்றாண்டோடு முடிந்துபோனது. தன்னைக் கொன்று தன் குழந்தையை கடத்திச் சென்று சில ஆயிரம் டாலர்களுக்கு சந்தையில் விற்பார்கள் என்றோ, தன் மண்டையோட்டை மலிவுவிலையில் விற்று மருந்துசெய்யும் காலம் ஒன்று வரும் என்றோ, அல்லது தன் வாழிடமான அடர்ந்த கானகம் தீக்கிரையாக்கப்பட்டு தானும் தன் குழந்தையும் இரவு முழுவதும் ஓடியும் தப்பிப்பிழைக்க வழியின்றி கட்டிப்பிடித்தவாறே கருகிச் சாவோம் எனவோ தன் இனமே அருகிப்போகும் நிலை வருமென்றோ அவள் கனவிலும் நினைத்திருக்க மாட்டாள்.

மீண்டும் ஒரு முறை என் மனக்கண்ணில் வந்து நிற்கிறாள் அவள். அப்போதுதான் குளித்துவிட்டு வந்திருந்தேன். நான் பயன் படுத்திய சோப்பின் வாசம் அவளுக்குப் பிடிக்கவில்லை போலும். இதுவரை அப்பாவியாய் என்னைப் பார்த்துக் கொண்டிருந்த அவள் கண்களில் இப்போது கடும் கோபமும் இயலாமையும் தெரிகின்றன. அந்த சோப்பின் மூலப் பொருள்தானே அவள் வாழ்வை நிர்மூலமாக்கியிருந்தது. சோப்பு, டிடர்ஜண்ட், லிப்ஸ்டிக் தொடங்கி நாய்க்குப்போடும் உணவுவரை தயாரிக்க பாமாயில் வேண்டும். காருக்கு பயோடீசல் வேண்டும். பயோ டீசலுக்கு பாமாயில் வேண்டும். பாமாயில் போன்ற ஒரு மலிவான தாவர எண்ணையை மூலப் பொருளாய்க் கொண்டு தொழில் நடத்துவது எத்தனை இலாபகரமானது. ஆனால் எங்கே நட்டு வளர்ப்பது அந்த பாமாயிலுக்கான செம்பனைத் தோட்டங்களை? மொட்டை மாடியிலா? இல்லைக் கொல்லைப்புறத்திலா? மொத்த உலகுக்கும் தீனிபோட வேண்டிய பயிராயிற்றே! இதை வளர்க்க இப்புவியின் பெரும்பகுதி வேண்டும் போலத் தெரிகிறதே! இருக்கவே இருக்கிறது தென் கிழக் காசியாவின் நுரையீரலான போர் னியாவின் வெப்பமண்டல மழைக் காடுகள். தீயிட்டுக் கொளுத்துங்கள் அந்த கன்னிக் காடுகளை! ஆனால் பணமாகக் கூடிய வெட்டுமரங்களை முடிந்தமட்டும் வெட்டிவிட்டு கொளுத்துங்கள். நெருப்பு கொழுந்துவிட்டு எரியட்டும். புகை மேகமாகி பணம் மழையாய் பொழியட்டும். வளரட்டும் தேசம். இப்படித்தான் தொடங்கியது அந்த பேரழிவு. இந்தோனேஷியாவில் 1985ஆம் ஆண்டு 600000 ஹெக்டேர்களாக இருந்த செம்பனைத் தோட்டங்கள் 2007ஆம் ஆண்டில் 6 மில்லியன் ஹெக்டேருக்கும் அதிகமாய் விரிந்திருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது. வெட்டுமரங்களுக்காக வெட்டப் படும் மழைக்காடுகள் செம்பனைத் தோட்டங்களாகின்றன. கன்னிக்காட்டை குறுக்கும் நெடுக்குமாய் டிராக்டர்கள் பிளந்து சாலையமைக்க காடு தீவாகிப் போகிறது. தீக்கிரையான காடுகளில் தப்பிப் பிழைத்த உயிர்கள் சீனத்துச் சந்தைகளின் விற்பனை மேடைகளில் செத்துக் கிடக்கின்றன. காடுகள் கரன்சி யாகிக் கொண்டிருக்கின்றன. பரந்து விரிந்த செம்பனைத் தோட்டங்களில் எஞ்சியப் பறவைகளும் பாலூட்டிகளும் பட்டினியால் சாகின்றன.

ஆனால் இந்த வளர்ச்சிக்கு விலை கொடுப்பது உராங்க் ஊத்தாங்களோ, அல்லது வெப்ப மண்டல மழைக் காடு களின் அரிய பொக்கிஷங் களான காட்டுயிர்களோ அல்லது அந்த காடுகளின் இரத்தமும் சதையுமான தொல்குடிகளோ மட்டுமன்று. ஏனெனில் பூனைக்குட்டி வெளி யேறி இப்போது வீதியுலா வந்து விட்டது. தென்கிழக்கு ஆசிய நாடுகள் மீது அடர்ந்த மேகமாய் பரவிக் கிடக்கிறது புகை. நகரங்களில் பரவியிருக்கும் மூச்சுத் திணற வைக்கும் புகை பார்ப்பதற்கு நம் ஊர் போகிப் பண்டிகையை நினைவு படுத்துகிறது. ஆனால் நம் ஊர்ப் பண்டிகை வருடத்தில் ஒரு நாள்தானே. இங்கு இந்தப் பண்டிகை தொடங்கி பல மாதங்களுக்கும் மேலாகிறது. உலகிலேயே சுத்தமான நாடாக இருந்துவிட்டால் காற்றுக்கும் புகைக்கும் வேலி போடமுடியுமா என்ன? வருடத்துக்கு 65 லட்சம் உயிர்களைக் காவு வாங்கும் வளிமாசுக்கு சிங்கப் பூரும் தப்பவில்லை.

இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்னாம் என எந்த நாட்டையும் விட்டு வைக்கவில்லை புகைமேகம். பள்ளிகள் மூடப் பட்டுள்ளன. சுற்றுலாத்தலங்கள் வெறிச் சோடியுள்ளன. மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். விமானங்கள் தரைதெரியாது வானில் தவிக்கின்றன. இந்தோனேஷியாவில் மட்டும் 5 லட்சம் மக்கள் சுவாசக்கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். காற்று மாசுபாட்டு அளவு (Pollutant Standard Index) 100அலகுக்கு மேலே இருந்தால் உடல்நலக்கேடு எனவும் 300 அலகுக்கு மேல் இருந்தால் அபாயகரமானது எனவும் இருக்க இந்தோனேஷியாவில் 2000 அலகுக்குமேலே ஏறிக் கொண்டிருக்கிறது அளவீடு. அண்டை நாடுகள் ஒன்றையன்று வசைபாடிக் கொண்டிருக்கின்றன. உலகின் மிகப்பெரிய கண்டமான ஆசியாவின் பெரும் நிலப்பரப்பில் வாழும் பல்வேறு நாடுகளைச் சார்ந்த பல கோடி மக்கள் ஒரே நேரத்தில் தங்கள் கண்களைக் கசக்கிக் கொள்கின்றனர். கோடானுகோடி கண்களின் சலனம் அவள் சாவுக்கு அஞ்சலி செலுத்துவது போலத் தோன்றினாலும் இயற்கை அவளுக்கு இன்னும் நீதி வழங்கவில்லை. இப்போதும் அவள் கண்கள் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் சோப்பின் நறுமணத்தைத் தாண்டி ஏதோ ஒரு கருகும் வாசம் பரவுகிறது. அந்த சோப்பின் உறையில் “Made up of vegetable oil” என்று எழுதப்பட்டிருக்கிறது. பாமாயிலுக்காக கருகிய அவள் சொல்கிறாள் “இல்லை இல்லை அது காட்டு மனிதனின் இரத்தம் அன்று” 2020 ஆம் ஆண்டுக்குள் தனது 20மில்லியன் டன் பாமாயில் உற்பத்தியை 40 மில்லியன் டன்னாக உயர்த்தும் இலட்சியத்துடன் இந்தோனேஷியா பயணித்துக் கொண்டிருக்கிறது. கருவாடு விற்ற காசு நாறுமா என்ன?

ஜீயோ டாமின்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments