உலகின் பழமையான மொழிக்கு என்ன விலை?

உலகிலேயே பழமையான மொழி என்ன? மனித இனத்தின் புழக்கத்தில் இருக்கும், இருந்த எந்த மொழியும் இந்தக் கேள்விக்குத் தவறான பதிலே! இயற்கை வரலாற்றின் மிக சமீபத்தில் தோன்றிய ஓர் இனம் உருவாக்கிய மொழியை எப்படி உலகத்தின் பழமையான, தொன்மையான மொழி என்று சொல்ல முடியும்? மனிதன் தோன்றுவதற்கு முன்பு உலகில் மொழிகளே இல்லையா? ஆண் தூக்கணாங்குருவி தன் கூட்டைக் கட்டி முடித்து, பெண் பறவையை பார்க்க வரும்படி சிறகுகளை அடித்துக் கொள்ளும்! பூனை தன் பிள்ளைகளை அழைக்கமட்டும் பிரத்யேகமாக ஒரு குரலை பயன்படுத்தும்! இவையெல்லாம் மொழி என்று சொன்னால் நம்மில் சிலர் ஏற்றுக்கொள்வோம். ஆனால் இதுவும் உலகின் பழமையான மொழி இல்லை. பரிணாம வளர்ச்சியின் தொடக்கத்திற்கு சென்று பார்த்தால், உலகின் பழமையான மொழி என்பது காட்டின் மொழி! மரங்களின் மொழி! Suzanne Simard என்னும் சூழலியல் அறிஞர், மரங்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் என தனது முப்பது ஆண்டு கால ஆராய்ச்சியின் முடிவில் தெரிவித்துள்ளார். அதாவது மரங்கள் பேசும்! நாம் நமது அம்மாவிடம் பேசுவது போல, நம் பிள்ளைகளிடம் பேசுவது போல, நம் தூரத்து சொந்தக்காரரிடம் பேசுவது போல, உறவுமுறை அமைத்து மரங்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும்!

Suzanne அவர்களின் ஆராய்ச்சியின் படி, காட்டின் தரைக்கு அடியில் ஒரு தனி உலகம் இருக்கிறது. மண்ணுக்கு மேல் நாம் பார்க்கக் கூடிய கிளையும் இலையும் மட்டுமல்ல மரம். மண்ணுக்கு அடியில், மண்ணைப் பிணைத்துக் கொண்டு, மண்ணோடும் மண்ணின் வழி தன் சூழலோடும் உறவு பிடிமானம் உடைய பூர்வக் குடிகள் மரங்கள்! மண்ணுக்கு அடியில் இருக்கும் பூஞ்சைப் பிணையம் (fungal network)  தனித்தனி மரங்களின் வேர்களை ஒன்றிணைக்கிறது! அதாவது ஒரு காட்டின் கிழக்கிலிருக்கும் ஒரு மரமும் மேற்கிலிருக்கும் ஒரு மரமும் ஒன்றோடொன்று நேரடியாகவோ மறைமுகமாகவோ உரையாடிக் கொண்டிருக் கின்றன! இந்த இரண்டு மரங்களும் ஒரே வகையைச் சேர்ந்ததாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. சான்றாக, ஒன்று புளிய மரமாகவும் இன்னொன்று பலாமரமாகவும் இருக்கலாம். இது இரண்டு வழி உரையாடல்! புளிய மரம் பலாமரத்திடம் பேசும், அதே சமயம் பலாமரமும் புளியமரத்திடம் பேசும்!

அவை தங்களுக்குள் என்னதான் பேசிக் கொள்ளும் என நமக்கு ஆச்சரியம் எழலாம்! உலகின் ஆகச் சிறந்த தகவல் பரிமாற்றம் அது. அதிகமான சத்துக்களை உட்கொண்ட மரமொன்று சத்துக்குறைந்த வேறொரு மரத்திற்கு, ஊட்டச் சத்து பரிமாறும்! இந்த ஊட்டச் சத்து பரிமாற்றத்தில் முதன்மையானவை- கார்பன், நைட்ரோஜன் மற்றும் ஃபாஸ்பரஸ். இவ்வாறே நீர் பரிமாற்றமும் நிகழும். ஒரு காடு முழு செழிப்பாக இருப்பதற்கு இதுவே பிரதான காரணம். ஊட்டச் சத்து மட்டுமில்லாமல், நோய் எதிர்புச்சத்தையும் ஒரு மரம், இன்னொரு மரத்திற்குப் பரிமாறும். இது நேரடியாக நடக்காவிட்டாலும், நோயை எதிர்கொண்ட மரமொன்று, அருகிலிருக்கும் வேறு மரங்களுக்கு நோய் வரக்கூடியதற்கான முன்னெச்சரிக்கையை தெரிவிப்பதாகவும் நிகழலாம். இதன் மூலம், தகவல் பெற்ற மரம், நோயை எதிர்கொண்டு தடுப்பதற்கு, தன் உடலை தயார்படுத்திக் கொள்ளும்.

இதே போல், ஹார்மோன் மற்றும் மூலக்கூறு பரிமாற்றமும் நிகழும். இது மட்டுமா? ஒவ்வொரு மரமும் பரிமாற்றத்தை நிகழ்த்தும்முன், பெற்றுக்கொள்ளும் மரத்தின் குணாதிசயம் அறிந்தே கொடுக்கிறது! அதாவது, ஒரு மரத்திற்கு தன் குழந்தைக்கும் இன்னொரு மரத்தின் குழந்தைக்கும் வேறுபாடு அறியத்தெரியும்! மேலும், தன் குழந்தைக்கென்றால் சற்றே அதிகமாகவும் வாரி வழங்கும்! அதுமட்டு மில்லாமல், அந்த சிறிய மரக்கன்றுகள் நன்கு வளரவேண்டும் என்பதற்காக தன் வேர்களையும் சுருக்கிக்கொண்டு, அவற்றிற்கு அதிக நிலப் பரப்பை வழங்கும்! நாம் உண்ண வேண்டும் என்பதற்காக நம் அம்மாக்கள் அரைவயிறு உண்டுவிட்டு உறங்குவது போலவே! மேலும் ஒரு மரம் தான் இறக்கும் தருவாயில் உள்ளோம் என்று உணர்ந்துகொண்டால், தன் உடலில் இருக்கும் அனைத்து சத்துக்களையும், தகவல்களையும், மரபுக்கூறு செய்திகளையும், சிறிய மரக் கன்றுகளுக்குத் தந்த பிறகே இறந்துபோகும்! (மறந்து விடாதீர்கள்! மனிதனுக்கு ஆறறிவு!!) எந்த ஒரு மரம், அதிக எண்ணிக்கையிலான மரங்களிடம் தொடர்பு வைத்துள்ளதோ அதை ‘தாய் மரம்’ என்று கூறலாம். அதாவது இது அந்தக் காட்டின் அஸ்திவாரம். பல்லாயிரக்கணக்கான மரங்களின் தாய். உணவு, நீர், பாதுகாப்பு, மரபு பழக்கம் என அனைத்தையும் மொத்தக் காட்டிற்கே வாரிவழங்கும் வள்ளல்! இந்தத் தாய் மரமே அந்தக் காட்டிற்கான ‘Gene Repository (மரபணுக் கிடங்கு)’! இந்த ஒரு மரத்தை வெட்டுவது என்பது மொத்தக் காட்டிற்கும் நிகழ்த்தும் அநீதி. மாபெரும் இனப்படுகொலைக்கு சமம்! உணர்வுப் பரிமாற்றம் காட்டின் சமனையே அழித்துவிடும்! இத்தனை நூற்றாண்டுகளாய், விவசாயம், தொழில் வளர்ச்சி என்ற பெயரில் நாம் அழித்து வருவது வெறும் மரங்களை மட்டுமல்ல, காடுகளை மட்டுமல்ல, பல்லுயிர்க் குடும்பங்களை!

இந்தோனேசியாவில் பனை எண்ணெய் வணிகம், அங்கிருக்கும் மழைக்காடுகளை எரித்து விட்டது பற்றி நாம் அறிந்திருப்போம்! உலகின் அடர்த்தியான நான்கு மழைக்காடுகளில் அதுவும் ஒன்று. இந்த வணிகத்தால் உராங்குட்டான் இனமே அழியும் தருவாயில் உள்ளது. அவை வெகுசொற்பமான அளவிலேயே இப்போது எஞ்சியுள்ளன! குழந்தை போன்றொரு உயிர், தன் உடலெல்லாம் தீக்காயத்தோடு வெந்து கொண்டிருக்கும் போதுதான் நாம் பனை எண்ணெய் பயன்படுத்தப்பட்ட சோப்பு, ஷாம்பூகளில் உல்லாசமாக குளித்தும், அடைக்கப்பட்ட சிப்ஸ்-ஐ நொறித்தும் கொண்டிருக்கிறோம். நாம் வாங்கும் அன்றாட பொருட்களைத் தயாரிக்கும் நிருவனங்களிடம், அதில் பயன்படுத்தப்பட்ட raw materials பற்றிய; தகவலை அறிய நாம் கடமைப்பட்டிருக்கிறோம். மேலும், cookies, chocolates, ice-cream போன்றவற்றை வாங்கித் தருவதற்கு முன் இந்த உராங்குட்டானின் கதியைப் பற்றி சுருக்கமாகவேனும் குழந்தை களுக்கு சொல்லிவைப்போம்! உராங் குட்டானிற்கும் குழந்தைகள் இருந்தன அல்லவா?! இந்தோனேசியாவை சுடுகாடு ஆக்கியது போலொரு பனை எண்ணெய்த் திட்டம் வடகிழக்கு இந்தியாவின் மழைக்காடுகளிலும் வந்திருக்கிறது.

எந்த ஒரு மரம், அதிக எண்ணிக்கையிலான மரங்களிடம் தொடர்பு வைத்துள்ளதோ அதை ‘தாய் மரம்’ என்று கூறலாம். அதாவது இது அந்தக் காட்டின் அஸ்திவாரம். பல்லாயிரக்கணக்கான மரங்களின் தாய். உணவு, நீர், பாதுகாப்பு, மரபு பழக்கம் என அனைத்தையும் மொத்தக் காட்டிற்கே வாரிவழங்கும் வள்ளல்!

1992 இல் இந்திய அரசு ஆறு மாநிலங்களில் பனை வளர்ப்பை, Oil Palm Development Program (OPDP) என்ற திட்டத்தின் மூலம் அறிமுகப் படுத்தியது. அதைத் தொடர்ந்து 2004-05 இல், மேலும் ஆறு வடகிழக்கு மாநிலங்களில் இதை அமல்படுத்தியது. 2011-12 இல் “Oil Palm Area Expansion” (OPAE) என்ற திட்டத்தை அமைத்து, இந்திய அரசு அடுத்த ஐந்து ஆண்டுகளில் மூன்று லட்ச மெட்ரிக் டன் அளவிலான பனை எண்ணெய் தயாரிக்கவேண்டும் என்ற குறிக்கோளையும் அமைத்துக் கொண்டது. இதற்காக முன்னூறு கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டு, அவை பனை வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மானியமாகவும், செயற்கை இடுபொருட்களாகவும் வழங்கப்படுமென்று அறிவிக்கப்பட்டது. (பச்சைப் புரட்சியின்போது வீட்டுக்கு வீடு விவசாயிகளின் கதவைத் தட்டி இலவசமாக உரங்களையும் உயிர்க் கொல்லி களையும் அரசு வழங்கியதை நினைத்துக் கொள்ளவும்!)

மிசோரம் (Mizoram) அரசு அம்மாநிலத்தின் ஒரு லட்சத்து ஆயிரம் ஹெக்டர் பரப்பிலான நிலத்தை பனை வளர்ப்பிற்காக ஒதிக்கியுள்ளது. ஒரு பனைமரம் ஒருநாளுக்கு முன்னூறு லிட்டர் தண்ணீரை உறிஞ்சுமாம். வடகிழக்கு மாநிலங்களின் மிகப்பெரிய பிரச்சனை குடிநீர் பற்றாக்குறை ஆகும். இந்நிலையில் சொந்த மாநில அரசே இப்படி ஒரு விபரீத முடிவை, அதுவும் பல கலந்தாய்வுகளுக்குப்பின் எடுத்துள்ளதென்றால் அந்த பனை எண்ணையில் இருக்கும் வர்த்தகம் தான் என்ன?

அறிவிக்கப்பட்டது. (பச்சைப் புரட்சியின்போது வீட்டுக்கு வீடு விவசாயிகளின் கதவைத் தட்டி இலவசமாக உரங்களையும் உயிர்க் கொல்லி களையும் அரசு வழங்கியதை நினைத்துக் கொள்ளவும்!) மிசோரம் (Mizoram) அரசு அம்மாநிலத்தின் ஒரு லட்சத்து ஆயிரம் ஹெக்டர் பரப்பிலான நிலத்தை பனை வளர்ப்பிற்காக ஒதுக்கியுள்ளது. ஒரு பனைமரம் ஒருநாளுக்கு முன்னூறு லிட்டர் தண்ணீரை உறிஞ்சுமாம். வடகிழக்கு மாநிலங்களின் மிகப்பெரிய பிரச்சனை குடிநீர் பற்றாக்குறை ஆகும். இந்நிலையில் சொந்த மாநில அரசே இப்படி ஒரு விபரீத முடிவை, அதுவும் பல கலந்தாய்வுகளுக்குப்பின் எடுத்துள்ளதென்றால் அந்த பனை எண்ணெயில் இருக்கும் வர்த்தகம் தான் என்ன?

மேலும், அம்மாநிலப் பழங்குடிகளிடத்தில் ‘jhum’ என்ற பயிரிடல் பழக்கம் உள்ளது. ஒரு பகுதியை தங்கள் உணவுத் தேவைக்கேற்ப எரித்துவிட்டு அதில் பயிர் செய்வர். பின் அந்த இடத்தை மீளுருவாக்கத்துக்காக விட்டுவிட்டு, வேறு இடத்திற்கு சென்று பயிர் செய்ய தொடங்குவர். இதில் சூழல் சீர்கேடு நிகழ்கிறதெனவும் பனை சாகுபடியில் காட்டின் பச்சையம் பாதுகாக்கப்படும் எனவும் இந்திய வரலாற்றில் முதல்முறையாக அரசே சூழலியம் பேசியிருக்கிறது! இதற்காக உருவாக்கப்பட்ட திட்டத்தின் பெயர், New Land Use Policy (NLUP). எண்ணெய் குடித்தே எல்லாரும் பசியாறுவார்கள் என்று நினைத்திருக்கும் போல! ஒரு சிறுகூட்டம் தங்கள் அன்றாடத் தேவைக்காக பயிரிடும் உணவுப்பயிருக்கும், பனை எண்ணெய் போன்ற வர்தகப் பொருளுக்கும் வித்தியாசம் இல்லையா என்ன? அதுவும் ஒருலட்சத்து ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் எந்த பழங்குடிகள் அல்லது சிறுவிவசாயிகள் பயிர்செய்தார்கள் என்று தெரியவில்லை! அப்படியே ‘jhum’  பழக்கத்தில் சூழலியல் சீர்கேடு இருந்தாலும், பனை வளர்ப்பு அளவிற்கு அது அவ்வளவு ஆபத்தாக இருக்காதென்றே தோன்றுகிறது.

இந்தோனேசியா போன்ற நாடுகளை எடுத்துக் காட்டியதில், Roundtable on Sustainable Palm Oil (RSPO) என்ற திட்டம் உருவாக்கப்பட்டது. பிறகு, மிசோரம் அரசு மூன்று தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் (MoU) ஏற்படுத்தியுள்ளது! Godrej Oil Palm Ltd., Ruchi Soya Industries Ltd., and Food and Fats and Fertilizers Ltd. என்ற மூன்று நிறுவனங்களும் விவசாயிகளிடமிருந்து பனம்பழங்களை வாங்கி, பின் அவற்றிலிருந்து எண்ணெய் எடுத்து அதை வர்த்தகப்படுத்தும். இந்த எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்டு அந்த நிறுவனங்களுக்கும் அரசுக்கும் வரும் லாபத்தில், நம் காடுகள் புட்டிகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கும்! இன்னும் அருமையான விஷயம் என்னவென்றால் மேலே கூறிய மூன்று தனியார் நிறுவனங்களும் இன்று Roundtable on Sustainable Palm Oil (RSPO)-இல் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஆக, தாங்கள் சுரண்டிக்கொள்ள தங்களிடமே அனுமதி வாங்கிக்கொள்ளும் strict policy தான் இந்த பனை எண்ணெய் வர்த்தகம்!

மேலும், பனை எண்ணெயை உயிரி எரி பொருளாக (biofuel) பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற முட்டாள்தனமான வாதம் இதில் முன்வைக்கப்படுகிறது. உண்மையில், காட்டை அழிப்பதே மிக அதிக அளவிலான கரியமில வாயு வெளியிடும். அதுவுமின்றி நிலபற்றாக்குறையால் உணவுபயிர் செய்யும் இடங்களிலும் பனை சாகுபடி செய்யத் தொடங்கப்படும். அதனால் உணவுப் பற்றாக்குறை ஏற்படும். பிறகு உணவுப்பாதுகாப்பு வழங்குகின்றோம் என்ற பெயரில், BT அரிசி, BT கோதுமை, BT  தக்காளி என அனைத்தையும் ஒரு கூட்டம் ஆதரிக்கும். நாமும் மானுடத்தின் பசியைப் போக்கவந்த அவதாரம்போல் இதற்கு ஜால்ரா தட்டுவோம்! இதற்கு இடையில் கடுமையான பனை சாகுபடிக்காக செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள் என நம் மண்ணில் வாரி இறைக்கப்படும் (ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நிறுவனங்களின் பெயர் களிலேயே இது பல்லிளிக்கிறது!) இந்த பனை எண்ணெய் வர்த்தகத்தால் உண்மையில் ஒரு பயனும் இல்லை. இதனால் நமக்கு ஏற்படக்கூடிய விளைவுகள்,

• பல்லுயிர் அழிப்பு

• கரியமிலவாயு வெளியீடு, இதன் மூலம் புவிவெப்பமயம் அதிகரித்தல்

• நீர் மற்றும் உணவுப்பற்றாக்குறை

• பூர்வக் குடிகளின் உரிமை மீறல்

• காற்று, நீர், மண் மாசுப்பாடு

மிக அவசியமான உணவுத்தேவை இல்லாமல், வெறும் வணிக நோக்கத்திற்காக பெரும் மழைக் காட்டை அழித்து, “ஓர் உயிரை எடுத்து இன்னொரு உயிரை விதைக்கிறோம்” என்று சாக்கு சொல்லிக் கொண்டிருக்கிறோம். இங்கு எல்லாமே தேவை சார்ந்தது தான். எதை அழிக்க வேண்டும் எதை விதைக்க வேண்டும் என்று முடிவெடுப்பதற்கு நாம் யார்? உயிர்ப் பிணைப்பு உடைய காடுகளை நம் soap மற்றும் toothpaste மீகாக அழிப்பதை எதைக் கொண்டு சமன் செய்ய முடியும்? இந்தியாவின் முக்கிய கார்பரேட்கள் ரசாயன உரங்கள் தயாரித்து விட்டு, CSR நிதியில் இயற்கை விவசாயம் கற்றுக்கொடுக்கிறோம் என்று சொல்லிக்கொள்வது போல, அந்தக் காடுகளில் வாழும் பழங்குடிகளுக்கு பனை வளர்ப்பு ஒரு வாழ்வாதாரமாக அமையும் என்றும் ஒரு கூற்று முன்வைக்கப்படுகிறது. இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த நகைச்சுவையாக இதுதான் இருக்கும்! இன்றைய நிலவரப்படி இந்தியாவில் தொழில் பயன்பாட்டிற்காக ஒரு நிறுவனம் 4.38 லட்சத்தில் இருந்து 10.43 லட்சம் வரைக் கொடுத்து, ஒரு ஹெக்டர் காட்டை வாங்கி அழித்துக்கொள்ளலாம். இதை Net Present Value (NPV) என்று கூறுவர். இதுதான் காட்டிற்கான விலை! 2013-இல் இந்த விலை வரம்பை 5.54 லட்சத்திலிரிந்து 50.72 லட்சம் வரை என அதிகரித்துள்ளனர். ஒருவேளை அந்த தொழில் நிறுவனம் தேர்ந்தெடுத்த காடு ecologically sensitive area -களில் ஒன்றாக இருந்தால், இந்த விலையில் இருபது சதவீதம் அதிகமாய் அரசு வசூலிக்கும். அவ்வளவே! அதிலும் இந்தப்பணத்தில் ஒரு சதவீதமாவது அந்தக் காட்டுப்பகுதியின் பூர்வக் குடிகளுக்குப் போய்ச் சேருமா என்பது சந்தேகமே. பழங்குடிகளுக்கு அந்தப்பணத்தை எல்லாம் பிரித்து வழங்குவது நடைமுறையில் சாத்தியம் இல்லை என்று அரசு அறிவித்தே விட்டது! மேலும், இந்தப் பணத்தைக் கொண்டு வேறு இடங்களில் காடு வளர்க்கப்படும் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதியைக் கேட்டால் நமக்கு சிரிப்பு தானே வரும்?

இது போதாதென்று carbon trading வர்த்தகம் இவை எல்லாவற்றிற்குமான கண்துடைப்பாக விளங்குகிறது. kyoto protocol படி, வளர்ந்த நாடுகளில் இருந்து வெளியிடப்படும் கார்பனுக்கு ஒரு வரையறை இருக்கிறது. அந்த வரையறை எட்டப்படும் தருவாயில், வளரும் நாடுகளில் சில Green தொழில்நுட்பங்களை அவை முதலீடு செய்யும். அதை உபயோகித்து, வளரும் நாடு தான் வெளியிடும் கார்பனை குறைத்துக்கொள்ளும். மேலும், வளரும் நாடுகளுக்கு கார்பன் வெளியீடு வரையறை சற்று அதிகமாகவே இருக்கும். இந்த green தொழில்நுட்ப பயன்பாட்டின் மூலம் கார்பன் வெளியீட்டை வளரும் நாட்டு நிறுவனம் அதற்கு விதிக்கப்பட்ட வரையறையை விடக் குறைத்துக் காட்டிக்கொண்டால், மிச்சம் இருக்கும் கார்பனை வெளியிடும் உரிமையை அந்த வளர்ந்த நாட்டின் நிறுவனங்கள் credits ஆக, குறிப்பிட்ட அளவு பணத்தைக் கொடுத்து வாங்கிக்கொள்ளும். கார்பனுக்கு விலை பணம், பணத்திற்கு விலை கார்பன். இந்தப் பரிமாற்றத்தை தான் carbon trading என்று சொல்லுவார்கள். இந்தியா இந்த வர்த்தகத்தில் இரண்டாம் இடத்தை வகிக்கிறது. வளர்ந்த நிறுவனங்கள் கார்பனுக்காக பணத்தைக் கொடுக்கத் தயங்குவதே இல்லை. இதைப் பயன்படுத்தி அவர்கள் அடையும் லாபம் பல மடங்கு அதிகம். எனவே, இதை அவர்கள் ஒரு முதலீடாகவே நினைக்கிறார்கள். நல்லது செய்திருக்கிறோம் என்ற விளம்பரமும் இந்த முதலீட்டால் வரும் லாபத்தின் இலவச இணைப்பு! ஆக, இந்த வர்த்தகம் நம் சூழலின் சீர்கேட்டை குறைப்பது போல தோன்றினாலும், அது கார்பன் வெளியீட்டை பன்மடங்கு அதிகரிக்கவே செய்கிறது.

Green India Mission திட்டத்தின் மூலம், இந்திய அரசு காடு வளர்ப்பிற்காக 48000 கோடி ரூபாயை ஒதுக்குவதாக அறிவித்துள்ளது. மூன்றில் ஒரு பகுதி காடு என்ற குறிக்கோளுடைய இத் திட்டம், பன்னாட்டு நிறுவனங்களை இதில் முதலீடு செய்ய ஊக்குவிக்கிறது. இந்தப் பணத்தைக் கொண்டு அரசு இதுவரை காடு வளர்த்ததெல்லாம் தேக்குமரங்களையும் Eucalyptus மரங்களையும் நட்டு வைத்ததுதான். இந்த மாதிரியான monoculture எப்படி காடாகும்? இதை எந்த உயிரினம் உண்டு வாழும்? அங்கே எந்த பல்லுயிர்ச்சூழல் நிலவும்? மண் தன்மை என்னவாக மாறும்? மொழிகள்?… Commercial forestry என்று சொல்வதுகூட மிகைப்படுத்தல் தான். இதில் Forestry என்பது கொஞ்சம் கூட இல்லை. இது அப்பட்டமான வணிகம்! இங்கு விளையும் தேக்கு போன்ற வணிக பொருட்களை சொந்தம் கொண்டாடும் உரிமை, தெரிந்தோ தெரியாமலோ அந்த பெறுநிருவனங்களுக்கு வந்துவிடுகிறது. இந்த மரம் நடும் செயலுக்காக எந்த நிலத்தை அரசு பயன்படுத்துகிறது? எந்த முதலாளிகளும் தங்களுக்கு சொந்தமான நிலத்தை இதற்காக கொடுப்பதில்லை. பெரும் பாலும், காட்டை விட்டு அகற்றப்படும் பழங் குடிகளின் நிலங்களாகவே அவை இருக்கின்றன. காலம்காலமாக, தமிழக, ஆரிய, போர்ச்சுக்கீசிய, ஆங்கிலேய, இந்திய ராஜாக்களால், தங்கள் நிலத்தில் தாங்களே கொத்தடிமைகளாக வேலை செய்த அனுபவம் அவர்களை இன்றும் விடாமல் துரத்திக் கொண்டே இருக்கிறது!

பெரும்பாலும் இந்த லட்சணத்தில்தான் பெருநிறுவனங்களின் CSR நடவடிக்கைகள் இருக்கின்றன. உண்மையில் இவர்கள், லாப நோக்கம் இல்லாம ஒரு பைசா கூட செலவழிப் பதில்லை. நேரடியாக அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் சலுகைகள் போதாதென்று இலவச விளம்பரமும் கிடைத்து பன்மடங்கு லாபத்தை அளிக்கிறது. தன்னார்வ நிறுவனங்களும் இதைத் தான் நம்பி இருக்கின்றன. பத்மஸ்ரீ விருது பெற்ற, தன்னார்வல நிறுவனம் ஒன்றின் தலைவர் கூட CSR என்பது நன்கொடை என்பதைத் தாண்டி, பெருநிருவனகளுக்கான முதலீடு என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இந்த அதிக லாபத்தை அந்த நிறுவனங்கள் எங்கு சென்று முதலீடு செய்யும் என்று யோசிக்க முடிகிறதா? காடுகள்!மனிதர்களும் இயற்கையில் சேர்ந்தவர்கள் தான் என்ற கருத்துக்கு சென்ற தலைமுறை வரை வாழ்ந்த ஒரே சாட்சி பழங்குடிகள் தான். காட்டிற்குள் சென்று உணவு சேகரித்தல், தேவையான போது மட்டும் வேட்டையாடுதல் என்று ஒரு காட்டுயிர் போலவே அவர்களும் வாழ்ந்துவந்தார்கள். சமவெளி மக்களின் ஆதிக்கத்தால் விவசாயம் திணிக்கப்பட்டனர். நிலங்கள் அபகரிக்கப்பட்டனர். உரிமைகள் மறுக்கப்பட்டனர். அடிமைகள் ஆக்கப்பட்டனர். Monoculture முறையான தேயிலை, காஃபி தோட்டங்களில் காட்டோடு சேர்ந்து யார் அழிந்தார்கள்? என்னவெல்லாம் அழிந்தது? பொழுதுபோக்கு வேட்டைக்காரர்கள் எல்லாம்(!!!) தலைமை தாங்கும் தன்னார்வல நிறுவனத்தின் ‘மனிதரற்ற காடு’ கொள்கையின் அடிப்படையில் கொத்துக்கொத்தாக பழங் குடிகளை வெளியேற்றியதில், கேள்விகேட்க நாதியில்லாமல் காடு சிதிலடைந்து கொண்டிருக்கிறது! ஆனால் காட்டுப் பகுதிக்குள் resort-களுக்கும் garden-களுக்கும் மட்டும் பஞ் சமே இல்லை! உணவுசுழற்சியின் ஒரு பாகமாக மனிதனும் இருந்ததெல்லாம் மண்ணோடு மண்ணாகிவிட்டது! சாப்பாட்டில் வெங்காயம் சேர்க்காததெல்லாம் தனிக்குழு உரிமையென்றால் பழங்குடிகளின் வாழ்வியல் முறையை மாற்றியது தான் இந்த உலகத்தின் ஆகச்சிறந்த உரிமை மீறல்! (நாளி ஆவணப்படம்) இந்தியக் காடுகளின் மதிப்பீடு 115 ட்ரில்லியன் என Indian Institute of Forest Management (IIFM) மற்றும் Forest Survey of India வெளியிட்ட ஒரு ஆய்வு முடிவு சொல்கிறது. இதில் நேரடியான லாபங்களும் மறைமுகமான லாபங்களும் அடங்கும். மறைமுக மான லாபம் எனக் கூறப் படுவது, பருவமழை, நிலத்தடிநீர்த் தேக்கம், ஆறுகள் உற்பத்தி மற்றும் பாதுகாப்பும், மண் பாதுகாப்பு, மகரந்தச் சேர்க்கை போன்றவை ஆகும். இன்னும் சொல்லப் போனால் மறைமுகமான லாபத்திற்கு அளவே கிடையாது. அதை யாராலும் மதிப்பிடவே முடியாது. அத்திரப்பள்ளி அருவிக்கு முன் நின்று கொண்டு உங்களால் அதை விலைமதிப்பீடு செய்ய முடியுமா என்ன? இயற்கையில் பல கூறுகள் இப்படி பிரமிக்க மட்டுமே உள்ளன. இவற்றிற்கு விலையே இல்ல. காடுகளை அதிவிரைவில் அழிக்க பெறுநிருவனங்களுக்கு அரசு எளிய வழிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். இந்த சலுகையெல்லாம் தனியார் பெருநிருவங்களுக்கு மட்டும் தான். (எனது ஆராய்சிக்காக பில்லூர் காட்டுக்குள்ளிருந்து ஒரு பிடி மண் எடுப்பதற்கு அனுமதி வாங்க நான் அலைந்தது எனக்குத் தானே தெரியும்!)காட்டை எல்லாம் அழித்து பணமாக்கி, கிங்ஃபிஷருக்குத் தாரைவார்க்கத் திட்டமிடப்பட்டது போலும்!

DAKOTA Pipeline திட்டத்தை எதிர்த்து, அமெரிக்க பூர்வக்குடித் தலைவர் ஐக்கிய நாடுகள் சபையில் பேசியது நினைவுக்கு வருகிறது,
“பூர்வகுடிகளாகிய நாங்கள், எங்களுக்கு முக்கியமானதாக எண்ணிக்கொள்வது இந்தப் பூமியைத்தான். நாங்கள் இயற்கையை ஒரு மூல தனமாக, ஒரு பயன்பாட்டுப் பொருளாகப் பார்ப்பதில்லை. எங்களைப் பொருத்தவரையில் இயற்கை எங்களைப் போன்றொரு சக உயிரினம். தாவரங்கள், விலங்குகள், நீர், நிலம் அனைத்தும் எங்களுக்கு உறவினர்கள். ஒரு திட்டம் சட்டப்பூர்வமாக செல்லும் என்பதால் மட்டுமே அது ‘சரி’ ஆகிவிடாது”. உண்மையில் காடுகளைப் பாதுகாப்பவர் காட்டில் வசிக்கும் பூர்வகுடிகள்தான். அவர் களின் தன்மையையே மாற்றும் அளவுக்கு நாம் போய் வாழ்வாதாரம் அமைத்துக் குடுக்கிறோம் என்றெல்லாம் நம் பணப் பசிக்காக அவர்களை சாக்கு சொல்ல வேண்டியதில்லை. மத்திய அரசு தற்போது Forest Rights Act(2006)-இல் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் அச்சட்டத்தை நீர்த்துப் போகச் செய்கிறது. இயற்கைக்கும் பூர்வக் குடிகளுக்கும் இழைக்கும் மிகப்பெரிய அநீதி அது. பொருளாதாரம், உரிமைமீறல், வாழ்வாதாரம், உணவுத்தேவை என்பதையெல்லாம் தாண்டி, மரங்கள் பேசும் என்ற ஆராய்ச்சி முடிவு இதை வேறு தளத்திற்கு கொண்டு செல்கிறது. உயிர்களை, மொழிகளை கரன்சியாக்கி உண்ண முடியாது. காட்டழிப்பை எதைக்கொண்டும் சமன்படுத்த முடியவே முடியாது! நம் செவிட்டுக் காதுகளுக்கு எடுத்துச் சொல்லும் நிலையில் இருந்த காட்டுயிர்களான பழங்குடிகளின் மொழியையும் பெறுநிறுவனங்கள் மாற்றியாகி விட்டது! உண்மையில் வாயில்லா ஜீவன் என்று உலகில் ஒன்றுமே இல்லை. நாம் தான் அவற்றின் வாய்களை கெட்டியாகப் பூட்டி வைத்திருக் கிறோம்! அல்லது நம் காதுகளை செவிடாக்கி வைத்திருக்கிறோம்!

நிவேதா

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments