நம் பிள்ளைகளின் கூக்குரல்: குழந்தைகள் மீதான காலநிலை நெருக்கடி

climate change
Nicaragua, 2020 © UNICEF/UN0372375/Ocon/AFP-Services

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையின் ஒரு வரியைக்கூட உங்கள் பிள்ளைகள் கண்டிப்பாகப் படித்துவிட வேண்டாம்

‘காலநிலை நெருக்கடி என்பது குழந்தைகளின் (வாழும்) உரிமைகள் மீதான நெருக்கடி’ (The climate crisis is a child rights crisis) என்ற தலைப்பில்  ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (UNICEF) அதிர்சியூட்டும் ஆய்வறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. நம் பிள்ளைகளுக்காக நாம் செய்யும் சேமிப்புகள் – முதலீட்டுப் பத்திரங்கள், அவர்களின் பள்ளி மதிப்பெண் அறிக்கைகள் அல்லது அவர்களின் மருத்துவ அறிக்கையைவிடவும் அதிமுக்கியமான மற்றும் கவனம்கொள்ள வேண்டியதான ‘குழந்தைகளின் காலநிலை அபாயக் குறியீட்டை’ (Childeren’s climate risk index – CCRI) இந்த அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

காலநிலை மாற்றம் குறித்து குழந்தைகளிடம் நாம் எப்படிப் பேசுவது? அவர்களை உளவியல் ரீதியாக காலநிலைப் பேரழிவுகளை எதிர்கொள்ள எப்படித் தயார்படுத்துவது? என்பது போன்ற விவாதங்களும் ஆய்வுகளும் வளர்ந்த நாடுகளில் நடந்து கொண்டிருக்கின்றன. வளர்ந்த நாடுகளின் இராணுவ பலத்தையோ அல்லது பொருளாதாரப் பலத்தையோ அடைய முற்படுவதை மட்டுமே வளர்ச்சியென்று எண்ணிக்கொண்டிருக்கும் நம் தேசத்துக்கு ஒரு பில்லியன் குழந்தைகள் காலநிலைப் பிறழ்வின் அதிதீவிர ஆபத்தில் சிக்கியிருக்கிறார்கள்என்ற செய்தி பொருட்படுத்தத் தேவையில்லாததுதான்இந்த எண்ணிக்கை உலகம் முழுவதும் உள்ள சரிபாதி குழந்தைகளின் எண்ணிக்கைக்குச் சமம். அதோடு இது நாளைய ஆபத்து இல்லை இன்றைய ஆபத்து என்று இந்த அறிக்கை அழுத்தமாகச் சொல்கிறது.

எட்டு துல்லியமான புவியியல் வரைபடங்களுடன் உலகின் எந்தெந்தப் பகுதியில் வாழும் குழந்தைகள் எப்படியானப் பாதிப்புகளுக்கு ஆட்படுவார்கள் என்பதை முன்வைத்திருக்கிறது இந்த ஆய்வு. இதன் இரத்தினச் சுருக்கம் பின்வருமாறு.

 

திடீரென உருவாகித் தொடர்ந்து தீவிரமாகும் ஆபத்துகள்

 1. உலகம் முழுவதும் மூன்றில் ஒரு குழந்தை அதாவது 82 கோடி  குழந்தைகள் வெப்ப அலைகளால் கடுமையாகத் தாக்கப்படும் அபாயத்தில் உள்ளனர். காலநிலைப் பிறழ்வு இன்னும் தீவிரமாகி உலகம் இன்னும் வெப்பமடையும்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
 2. உலகில் ஆறில் ஒரு குழந்தை அதாவது 40 கோடி குழந்தைகள் சூறாவளி தாக்குதலை எதிர்கொள்ளும் அபாயத்தில் இருக்கின்றனர். இவை 4வது 5வது கட்ட அதிதீவிர சூறாவளிகளாக மாறி எண்ணிக்கையில் அதிகரித்து தீவிர மழைப்பொழிவும் உடன் சேரும்போது நிலைமை இன்னும் மோசமடையும்.
 3. உலகில் ஏழு குழந்தைகளில் ஒருவர் அதாவது 33 கோடி  குழந்தைகள் ஆற்றுப்படுகைகளில் ஏற்படப்போகும் பெருவெள்ள அபாயத்தில் இருக்கிறார்கள். உலகின் வெப்பநிலைத் தொடர்ந்து அதிகரிப்பதால் ஏற்படும் அதிகபடியான நீராவியாதலால் மழைப்பொழிவு தொடர்ந்து அதிகரிப்பதும் இன்னொருபுறம் பனிமலைகள் உருகுவதும் நிலமையை இன்னும் தீவிரமாக்கும்.
 4. உலகில் பத்தில் ஒரு குழந்தை அதாவது 24 கோடி குழந்தைகள் தீவிரமான கடலோர வெள்ள அபாயத்திலிருக்கிறார்கள். தீவிரமாகும் புயல்களும் தொடர்ந்து உயரும் கடல் மட்டமும் இந்நிலைமையை மேலும் மோசமாக்கும்.

மெதுவாகத் தொடங்கி தொடர்ந்து தீவிரமாகும் ஆபத்துகள்

 1. உலகில் மூன்றில் ஒரு குழந்தை அதாவது 92 கோடி குழந்தைகள் கடுமையானத் தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொண்டிருக்கிறார்கள். காலநிலைப் பிறழ்வுத் தீவிரமாகி வறட்சியின் தீவிரமும் எண்ணிக்கையும் அதிகரித்தல், மாசுபாடு, நீர்த்தேவையின் அதிகரிப்பு, நீருக்கான போட்டி ஆகியவை அதிகரித்து நீராதாரங்கள் அழியும்போது நிலைமை இன்னும் மோசமாகும்.
 2. உலகில் நான்கில் ஒரு குழந்தை அதாவது 60 கோடி குழந்தைகள் மலேரியா, டெங்கு போன்ற தொற்றுநோய்களால் தாக்கப்படும் அபாயத்தில் இருக்கிறார்கள். உலக வெப்பமயமாதல் கொசுக்கள் மற்றும் நுண்ணுயிரிகளின் பெருக்கத்துக்கு சாதகமாக இருப்பதால் இது தொடர்ந்து இன்னும் அதிகரிக்கும்.

 

சுற்றுச்சூழல் சீரழிவும் சூழல் அழுத்தமும்

 

 1. உலகின் தொண்ணூறு விழுக்காடு அதாவது 200 கோடி குழந்தைகள் 10µg/m3  ஐ விட அதிகமானக் காற்று மாசுபாட்டுக்கு இலக்காகியுள்ளனர். மரபு எரிபொருள் பயன்பாடும் மற்ற மற்ற காற்று மாசுபாட்டு மூலங்களும் கட்டுக்குள் கொண்டுவரப்படாத வரையில் இது மேலும் அதிகரிக்கும்.
 2. உலகில் மூன்றில் ஒரு குழந்தை அதாவது 81.5 கோடி குழந்தைகள் மாசுபட்ட காற்று, நீர், நிலம், உணவின்மூலமாகக் கனவுலோகமான ஈயத்தின் (Lead) பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். பொறுப்பான உற்பத்தி நுகர்வு மற்றும் ஈயப்பொருட்களின் மறுசுழற்சி உறுதி செய்யப்படாததுவரை இது தொடர்ந்து அதிகரிக்கும்.

“இந்த பூமிப் பந்தின் தொடக்கூடாத எல்லைகளை எதிர்கொண்டு நின்று எதிர்த்து உடைத்து மீறிக் கடந்திருக்கிறோம். காலநிலை, பல்லுயிரினங்களின் அழிப்பு, நில – நீர் – காற்று – கடல் மாசுபாடு உள்ளிட்டவை புவியின் இயற்கைக் கட்டமைப்புகளைத் தொடர்ந்து சிதைத்துக்கொண்டிருக்கின்றன. இந்த எல்லைகள் மீறப்பட்டதால் மனிதர்கள் பிழைத்திருப்பதற்கான நுட்பமான இயற்கைச் சமநிலை குலைந்து போயிருக்கிறது. இவற்றின் விளைவுகள் மனித இனத்தைக் குறிப்பாக எளிய இலக்குகளானக் குழந்தைகளை வெகுவாகப் பாதிக்கின்றன.  ஆகவே இப்போது காலநிலை நெருக்கடியானது குழந்தைகள் மீதான நெருக்கடியாகப் பரிணாமம் பெற்றிருக்கிறது” என்கிறது யுனிசெபின் இந்த அறிக்கை.

தொடர்ந்து “துரதிர்ஷ்டவசமாக இவை அனைத்தும் தொடக்கம்தான், ஐ.பி.சி.சியின் அறிக்கையின்படி 2030 க்குள் உமிழ்வைப் பாதியாக்கவும் 2050 க்குள் கார்பன் சமநிலையை எட்டுவதற்குமான குறிக்கோளிலிருந்து பெரும்பாலான நாடுகள் வெகுதொலைவில் இருக்கின்றன. இந்த குறிக்கோளை எட்டுவதற்கான உறுதியான மாற்றங்களை முன்னெடுத்துத் தொடர்வதில்தான் நம் குழந்தைகளின் எதிர்காலம் இருக்கிறது” என்கிறது ஆய்வறிக்கை.

Unicef

பின்வரும் காரணங்களால் குழந்தைகள் பெரியவர்களைவிட அதிகப் பாதிப்புக்கு உள்ளாவர் என்கிறது அறிக்கை.

 • குழந்தைகள் உடலளவில் பலவீனமானவர்கள். அவர்களால் கடும் வறட்சி, வெள்ளம், வெப்ப அலைகள் போன்ற இயற்கைச் சீற்றங்களைத் தாங்கிப் பிழைத்திருக்க இயலாது.
 • குழந்தைகள் உடலியல் ரீதியில் மிகவும் பலவீனமானவர்கள். சூழல் மாசுபாடுகள் குறிப்பாக ஈயம் போன்ற கனவுலோகப் பாதிப்புகள் பெரியவர்களைவிட அதிகமாகக் குழந்தைகளை அதுவும் குறைந்த அளவிலேயே இருந்தாலும்கூடக் கடுமையானப் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
 • டெங்கு, மலேரியா போன்ற காலநிலைப் பிறழ்வினால் உந்தப்படும் நோய்களைத் தாங்கும் திறன் குழந்தைகளுக்கு இயல்பிலேயே பெரியவர்களைவிடக் குறைவானது.
 • வாழ்வின் தொடக்க நிலையில் இருக்கும் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் உதாரணமாக வறட்சியால் ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற பாதிப்புகள் வாழ்நாள் முழுதும் அவர்களுக்குத் தொடர்ந்து பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்.

மேலேக் குறிப்பிடப்பட்ட எட்டு ஆபத்துகளில் ஒரே குழந்தை ஒன்றுக்கும் மேற்பட்ட பாதிப்புகளுக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இதையும் இந்த ஆய்வறிக்கை கணிதவியல் ரீதியில் கணித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. அந்த விபரங்கள் பின்வருமாறு.

 • உலகின் 99 விழுக்காட்டுக்கும் மேற்பட்டக் குழந்தைகள் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு தீவிரக் காலநிலை மாற்ற விளைவை எதிர்கொள்ளவிருக்கிறார்கள்.
 • 220 கோடி குழந்தைகள் குறைந்தபட்சம் ஏதேனும் இரண்டு தீவிரக் காலநிலை விளைவுகளுக்கு உட்படுவார்கள்
 • 170 கோடி குழந்தைகள் குறைந்தபட்சம் ஏதேனும் மூன்று தீவிரக் காலநிலை மாற்ற விளைவுகளை எதிர்கொள்ளவிருக்கிறார்கள்.
 • 85 கோடி குழந்தைகள் குறைந்தபட்சம் ஏதேனும் மூன்று தீவிரக் காலநிலை மாற்ற விளைவுகளை எதிர்கொள்ளவிருக்கிறார்கள்.
 • 33 கோடி குழந்தைகள் குறைந்தபட்சம் ஏதேனும் நான்கு தீவிரக் காலநிலை மாற்ற விளைவுகளை எதிர்கொள்ளவிருக்கிறார்கள்.
 • 8 கோடி குழந்தைகள் குறைந்தபட்சம் ஏதேனும் ஐந்துத் தீவிரக் காலநிலை மாற்ற விளைவுகளை எதிர்கொள்ளவிருக்கிறார்கள்.

மேற்கண்டப் புள்ளிவிபரங்களின்படி ஒரு குழந்தை முன்பு குறிப்பிட்ட எட்டு தீவிரக் காலநிலை விளைவுகளில் ஏதேனும் ஒன்றுக்குக்கூட உட்படாதிருக்கும் வாய்ப்பு வெறும் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவே. இத்தகைய ஆய்வறிக்கை வெளிவருவது இதுவே முதல்முறை எனும் விதத்தில் இது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

இவை வெறும் புள்ளிவிபரங்களோ இல்லை ஜோதிடக் கணிப்புகளோ அல்ல. நம் பிள்ளைகளின் சூனியமான எதிர்காலத்தின் முடிவுரைக்கான குறிப்புகள். நாம் நம் குழந்தைகளுக்கு எண் கணிதம் எழுத்துக் கணிதமெல்லாம் பார்த்து வைத்தப் பெயர்களோ, பள்ளிகளில் தவமிருந்து பெற்றுக் கொடுத்த கல்வியோ இல்லை உயிரை உருக்கிச் சேர்த்து செய்த முதலீடுகளோ நாம் தீட்டியிருக்கும் எந்த எதிர்காலத் திட்டங்களுமோ இந்த முடிவுரைகளை மாற்றும் சக்தியற்றவை. கிரேட்டா தன்பர்க்கால் தொடங்கப்பட்ட Fridays for Future எனப்படும் காலநிலை மாற்றத்துக்கு எதிரான பள்ளிக் குழந்தைகளின் கவன ஈர்ப்புப் போராட்டங்களில் அவர்கள் ஏந்தியிருந்த பதாகைகளில் எல்லாருடைய கவனத்தை ஈர்த்த – இதயத்தை ஊடுருவிய வாசகம் ஒன்று உண்டு. அதில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது: “நீங்கள் வயதாகி இறப்பீர்கள், ஆனால் நாங்களோ காலநிலை மாற்றத்தால் சாகப் போகிறோம்”

இந்த வார்த்தைகளை எந்தப் பெற்றோரால் தாங்கிக்கொள்ள் முடியும்?

எனினும் இது குற்ற உணர்வுகொள்வதற்காகவும் உடைந்துபோவதற்குமான நேரமில்லை. நம் முழு ஆற்றலையும் ஒன்றிணைத்து நம்மாலான அனைத்து முயற்சிகளையும் மிகத்தீவிரமாய் செயவதற்கான தருணம். கருவாகவிருக்கும் – கருவிலிருக்கும் – பள்ளியிலிருக்கும் – விளையாடிக்கொண்டிருக்கும் நம் பிள்ளைகள் வாழ்வதற்காய் கூக்குரலிடுகிறார்கள். இது பொருளாதாரத்துக்கும் சுற்றுச்சூழலுக்குமான போர் அல்ல. வாழ்வுக்கும் சாவுக்குமான போர். போரின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் இறுதி நொடிகள் இதோ கடந்துகொண்டிருக்கின்றன. ஐ.பி.சி.சியின் இறுதி எச்சரிக்கைகளும் கெடுவும் காலாவதியாகிக் கொண்டிருக்கின்றன. ஒட்டுமொத்த மானுட சமூகமும் ஒன்றிணைந்து பேரழிவை எதிர்கொள்ள கைகோர்க்க வேண்டிய தருணமிது.

நம் பிள்ளைகள் மரணத்தின் விளிம்பில் நின்று ஓலமெழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். தம் பெற்றோரின் அவர்களின் பெற்றோரின் தவறுகளுக்காகவோ இயலாமைக்காகவோ அல்லது மவுனத்துக்காகவோ விலைகொடுக்கப் போகிறார்கள். உங்கள் காதுகளுக்கு அவர்களின் கூக்குரலைக் கேட்க முடிந்தால் வாருங்கள் நம்மால் இயன்றதையும் அதற்கு மேலானதையும்கூடச் செய்வோம்.

 – ஜீயோ டாமின்.

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments