பாகிஸ்தான் வெள்ளம்! பாடம் கற்குமா இந்தியா?

அண்மையில் பாகிஸ்தானில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தால் 1200-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். 4000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கிட்டத்தட்ட 10 இலட்சத்திற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. ஏறத்தாழ 3.3 கோடி மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இது பாகிஸ்தானின் மக்கள்தொகையில் 13% ஆகும். 7-ல் ஒரு பாகிஸ்தானியர்கள் பாதிப்படைந்துள்ளனர் என அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

ஆண்டின் சராசரி மழையை, 65- 75% பருவ மழை மூலம் பாகிஸ்தான் பெறுகிறது. ஆனால், இந்த ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் வரை பெய்த மழையின் அளவு சராசரி அளவை விட 190% அதிகம். பொதுவாக பலுசிஸ்தான் மற்றும் சிந்து பகுதிகள் குறைவான மழைபொழிவை சந்திக்கும் மாகாணங்களாகும். ஆனால், ஜூன் முதல் ஆகஸ்ட் வரை   பலுசிஸ்தான் மாகாணத்தில் 430%, சிந்து மாகாணத்தில் 460% அதிகமான மழை பெய்துள்ளது. இன்னும் பருவமழைக்காலம் முடியாத சூழலில் நாட்டின் பல்வேறு நகரங்களில் பாதிப்பு இரட்டிப்பாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானின் பருவமழைகாற்று இரண்டு திசைகளில் பயணிக்கும். தென்மேற்கு காற்று  வங்கக்கடலில் இருந்து இமய மலை அடிவாரத்தின் வழியாக பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூர், ஜெலம் போன்ற வடக்கு பகுதிகளுக்கு மழைப்பொழிவைத் தருகின்றது. பெரும்பாலான பருவமழை இப்பகுதியில் தான் பொழிகின்றது.  தென்மேற்குக் காற்று அரபிக் கடல் வழியாக பாகிஸ்தானின் தென்கிழக்குப் பகுதிகளில் மழைப்பொழிவை ஏற்படுத்தும். இப்பருவத்தில்  குறைவான மழைபொழிவு தான் கிடைக்கும். ஆனால், இந்த ஆண்டு அதிகமான மழை பெய்துள்ளது. இதற்குக் காரணம் லா-நினா எனும் காலநிலை அமைப்பு என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக பசுபிக் பெருங்கடலில் நிலைப்பெற்றுள்ள இந்த காலநிலை அமைப்பு இதற்கு முன் இப்படி தொடர்ச்சியாக இருந்ததில்லை எனக் கூறுகின்றனர். இதே லா-நினா காலநிலை அமைப்பு தான் 2010-ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்திற்கும் காரணம் என்கிறார் பாகிஸ்தானின் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவரான முகமது பாஹிம்.

ஐரோப்பாவில் வீசிய வெப்ப அலைகள், பாகிஸ்தானில் வழக்கத்திற்கு அதிகமான மழைப்போழிவிர்க்கு காரணம் என்கிறார் உதவி பேராசிரியரான வாஹித் உல்லாஹ். ஏனெனில் 2003 மற்றும் 2010-ல் பாகிஸ்தானில் அதிக அளவில் வெள்ளம் ஏற்படும் போது ஐரோப்பாவில் வெப்ப அலைகளின் தாக்கம் அதிகமாக இருந்தது என்று அவர் கூறியுள்ளார்.

தட்பவெப்பநிலை உயர்வும் இந்த ஆண்டு பருவ மழை அதிகமாக பெய்யக் காரணமாக உள்ளது. காற்றில் வெப்பம் அதிகமாக இருந்தால் அவை அதிகமான ஈரத்தை வைத்துக்கொள்ளும். இது அதிகமான மழைப் பொழிவிற்கும், வெள்ளம் ஏற்படக் காரணமாகவும் விளங்குகிறது. இந்த ஆண்டு தெற்காசிய பகுதிகள் வழக்கத்திற்கு அதிகமான மழைப்பொழிவை சந்திக்க நேரிடும் என ஜெர்மானிய ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஒரு ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த ஆய்வில்  1 ͦC அளவிற்கு உலகம் வெப்பமடைந்தால், அது பருவமழையின் அளவை 5% அளவிற்கு அதிகமாக்கும் எனக் கூறியுள்ளது. பாகிஸ்தானில் 2010-ம் ஆண்டில் இருந்து சராசரியாக ஆண்டிற்கு 0.18 ͦC அளவிற்கு தட்பவெப்பநிலை உயர்ந்துள்ளது. தட்ப வெப்ப உயர்வால் காலநிலை சுழற்சி மாற்றம் (climate cycle) மற்றும் பசுபிக் கடலின் காற்றின் திசையில் மாற்றம் ஆகியவை பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளத்திற்கு கூடுதல் காரணாமாக உள்ளது.  அதிகரிக்கும் உலக வெப்பமயமாதலால் காலநிலை அமைப்பான ENSO (El Nino- Southern Oscillation) எவ்வாறு செயல்படுகிறது என்பதை கணிக்க முடியவில்லை என்கிறார் வானிலை ஆய்வாளாரான ஸ்காட் டான்கன்.

இது குறித்து ஐ.நாவின் பொது செயலர் குட்ரோஸ் கூறியதாவது ,

“தெற்காசிய பகுதிகள் தீவிர காலநிலை பாதிப்புகள் நிகழும் பகுதிகளாகும். பிற பகுதிகளை காட்டிலும் இங்கு 15 மடங்கு அதிகமாக மக்கள்  இறப்பதற்க்கு வாய்ப்புள்ளது. காலநிலை பாதிப்பால் இந்த உலகம் பாதிப்படைவதை நாம் கண்மூடி பார்த்துக்கொண்டு இருப்பதை நிறுத்திக்கொள்வோம்.  இன்று பாகிஸ்தான், நாளை உங்கள் நாடாக இருக்கக்கூடும்” என்று எச்சரித்துள்ளார்.

“காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள மாபெரும் மனித பேரவலம்” என்கிறார் பாகிஸ்தானின் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சர் ஷெர்ரி ரஹ்மான். உலகளவில் 1 விழுக்காட்டிற்கும் குறைவான உலக பசுமை இல்ல வாயுக்களை மட்டுமே பாகிஸ்தான் வெளியேற்றுகின்றது. ஆனால், காலநிலை மாற்றத்தால் பாதிப்புக்குள்ளாகும் நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களில் இருக்கிறது. 2010-ம் ஆண்டில் இருந்தே பாகிஸ்தான் தொடர்ச்சியாக வெள்ளம், வெப்ப அலை, காட்டுத்தீ போன்ற பேரிடர்களை சந்தித்துக்கொண்டு இருக்கிறது. தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் நூறாண்டிற்கு ஒரு முறை ஏற்படும் வெள்ளம் எனவும், இந்த பேரிடர்களால் ஆண்டுதோறும் பாதிப்படைவதால் அவை மக்களின் வாழ்வில் இயல்பாகி விட்டதாகவும் பாகிஸ்தானின் காலநிலை ஆய்வாளரான முனைவர்.பாஹாத் சயீத் தெரிவிக்கின்றார்.

பாகிஸ்தானின் தெற்கு, தென்மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகள், குறிப்பாக உணவு பயிர்கள், பருத்தி விளையும் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என்றும், அதை எதிர்கொள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து உணவு இறக்குமதி செய்யப்போவதாகவும் அந்நாட்டு நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். பருத்தி விளையும் பகுதியில் 45%நிலப்பரப்பு பாதிக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டின் ஜவுளித் தொழில் மற்றும் பருத்தி ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இப்பேரிடலிருந்து மீள 5-10 ஆண்டுகள் ஆகும் என்றும், வரக்கூடிய மாதங்களில் மேலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் இன்னும் மோசமான நிலைக்கு நாடு தள்ளப்படும் என்கிறது பாகிஸ்தான் அரசு. உலகளவில் கார்பன் உமிழ்வில் குறைவான பங்களிப்பைக் கொண்டுள்ள நாடாக இருந்தாலும் பாகிஸ்தான் கடுமையான காலநிலை நிகழ்வுகளை சந்தித்துள்ளது, மேற்கு உலகநாடுகள் செய்த தவறுகளுக்கு பாகிஸ்தான், இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகள்தான் அதிக விலையைக் கொடுக்க வேண்டியுள்ளது.

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள இந்த வெள்ளப்பெருக்கு நமக்கு குறிப்பாக தமிழ் நாட்டிற்கு அபாய ஒலியாகவே பார்க்க வேண்டும். ஏனெனில் வழக்கத்திற்கு அதிகமான மழைப்பொழிவையும், மழை நாட்களையும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நாம் சந்தித்து வருகின்றோம். இன்னும் பருவ மழைக்காலம் தொடங்காத நிலையில், பாகிஸ்தானில் அதிக மழைப்பொழிவிற்க்கு காரணமாக இருந்த அனைத்துக் காரணிகளும் இங்கும் பொருந்தும். உலகின் பிற பகுதிகளில் ஏற்பட்ட மழைப்பொழிவை எடுத்துப் பார்த்தால் தட்பவெப்பநிலை உயர்வு மிக முக்கியக் காரணியாக இருந்துள்ளது. இந்த ஆண்டு தமிழ் நாட்டில் அதிக அளவிலான மழை பெய்ய வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளதை நாம் நிராகரிக்க முடியாது. இதை உணர்ந்து அரசு தக்க நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்க வேண்டும். மக்களும் தங்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

Reference:

  1. https://www.pik-potsdam.de/en/news/latest-news/climate-change-is-making-indian-monsoon-seasons-more-chaotic
  2. https://www.washingtonpost.com/climate-environment/2022/08/31/monsoon-pakistan-flooding-explainer/
  3. https://www.theguardian.com/environment/2022/aug/29/monster-monsoon-why-the-floods-in-pakistan-are-so-devastating
  4. https://www.bbc.com/news/world-asia-62722117
  • லோகேஷ் பார்த்திபன்

[email protected]

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments