கவிதை

வாயிலிருந்து வயிறு வரை நேராகக் கிழித்துக் கொண்டு இந்த மழையை

ஒரே மூச்சில் மடக்மடக்கென குடித்துக் கொண்டிருக்கிறது எனது தாத்தனின் நிலம்

இப்படி ரத்தக் காயங்களோடு கோரமாய் தாகம் தீர்த்துக் கொள்ளும் நிலத்தின்

உக்கிரத்தை இடையில் புகுந்து தொந்தரவு செய்யவில்லை தாத்தா

பல வருடங்கள் கழித்து

மூன்று நாட்களுக்கு முன் விதைத்த

சோளத்தட்டைகளுக்காக

இந்த மழையை விட்டுவிடக்கூடாதென

நினைத்து

தன் பங்குக்கு தன்னையும் கீறி

கறிகரை உடையுமளவுக்கு தன்னுள்

இந்த மழையைத் தேக்குகிறார் தாத்தா

படிந்திறுகிப் போன வெக்கையைக் கூட தணிக்காமல் இன்றைய மழையும்

சிறிது நேரத்திலேயே ஓய்ந்துபோனது

உடல்களுக்குள் நிரப்பிய

மழைத் துளிகளை தாத்தனும் நிலமும் ஒவ்வொன்றாக எண்ணி மண்ணிருளில்

‘ஒரு வாய் வாங்கிக்க’ என்று

சோள விதைகளுக்கு சிந்தாமல் ஊட்டிக் கொண்டே போகின்றனர்

இடையிடையே தங்கள் வாயிலும் மழையைப் போட்டுக் கொள்கின்றனர்

துளிகள் தீர்ந்துபோக

நிலம் மேல்வந்து

கீறலுக்கு தையல் போடத் தொடங்குகின்றனர் தாத்தனும்

நிலமும் திரும்பவும் பெருத்த மழைக்கான சொட்டுகள் வைக்கின்றன….!

முத்துராசா குமார்

இதையும் படிங்க.!