‘பிழைத்தல் அல்ல; வாழ்தல்’ புத்தக விமர்சனம்

Top view green forest with globe earth. Sustainable Environment concept. Carbon reduction emissions target. Green energy is eco-friendly. Save Earth or World Earth Day Concept. Environmental Care

பிழைத்தல் அல்ல; வாழ்தல் என்ற புத்தகத் தொகுப்பு, வெவ்வேறு தலைப்புகளால் ஆன பத்து புத்தகங்களை உள்ளடக்கியது. திரு.ம.ஜியோடாமின் அவர்கள் எழுதியிருக்கும் இந்த பத்து புத்தகங்களுமே தனித்துவமானது. வாழ்தல் என்பதன் மீதான பொருளை உங்கள் மனதில் விரிவடையச் செய்வதில் இந்த புத்தகங்கள் தனித்து நிற்கிறது. ஏற்கனவே சூழலியல் நூல்களை வாசித்தவர்களுக்கும், எழுதியவர்களுக்கும் கூட இந்த புத்தகங்களில் நிச்சயம் புதிய செய்திகள் இருக்கும். புதிதாக சூழலியல் பற்றி வாசிப்பவர்களுக்கும், இந்த புத்தகங்கள், புற உலகின் மீதான புதிய வெளிச்சத்தைக் காட்டும்.

  1. உயிர்வலை :

உயிரினங்களுக்கு இடையே இருக்கும் பிணைப்பைப் பல்வேறு விதமான உதாரணங்களுடன் விளக்கியிருக்கிறார். இந்த பிணைப்பு அறுபடும்போது என்ன பாதிப்புகளை உண்டாக்கும் என்ற விளக்கம், வாசிப்பவர்களுக்கு பல்லுயிர்ச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. சாலமன் மீன்களின் வாழ்க்கைப் பயணமும், அதை ஒட்டிய சூழலியலும் ஆச்சர்யமூட்டுகின்றன. சவானா காடுகளில் தாவரங்களின் சுழற்சியும், அதைச் சார்ந்த உயிரினங்களின் வாழ்வியலும் எளிதில் புரிந்து கொள்ள உதவுகிறது. மரங்கள் நட்டு வளர்க்கும்போது என்ன மாதிரியான விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிற விளக்கமும் அருமை.

  1. நாமும் நம் உறவினர்களும் :

புவியின் உயிரின வரலாறு எந்தெந்த கால கட்டங்களில் எப்படியெல்லாம் மாற்றம் அடைந்தன, அழிவைச் சந்தித்தன என்று சுருக்கமாக ஒரே புத்தகத்தில் கொடுத்துவிட்டார். இன்றைய ஹோமோ சேப்பியன்ஸ் மனித இனம் எவ்வாறு பரிணாம வளர்ச்சி பெற்று இந்த நிலையை அடைந்தது என்ற தகவல்களையும் கொடுத்திருக்கிறார். இயற்கை தேர்ந்தெடுப்பு பற்றிய உதாரணங்கள் மிகவும் அருமை. உருமறை தோற்றம் கொண்ட எலிகள் எவ்வாறு தப்பித் பிழைத்தன என்பதன் மூலம், இயற்கை தேர்ந்தெடுப்பு எவ்வாறு நிகழ்கிறது என்பதை அருமையாக விளக்கியிருக்கிறார்.

  1. ஏற்றத் தாழ்வுகளின் கதை :

இந்த புத்தகத்தில் என்னை மிகவும் கவர்ந்தது, பள்ளி மாணவர்களும் எளிதாக புரிந்து கொள்ளும்படி எழுதப்பட்ட உதாரணங்கள்தான். அந்த உதாரணங்களின் மூலமாக, ஒரு நிறுவனத்தின், லாபம் என்பது தொழிலாளர்களின் கூடுதல் உழைப்பே என்பதை மார்க்ஸின் கோட்பாடுகளின் வழியாக அருமையாக விளக்கியிருக்கிறார். பொது உடைமை சமூகம், எப்படி பண்டமாற்று முறைக்குள் வந்தது, பிறகு எப்படி நிலப்பிரபுத்துவம் உருவானது என மனித இனத்தில் நிகழ்ந்த மாற்றங்களை வரிசையாக அடுக்கியிருக்கிறார்.

  1. பற்றி எரியும் பூமி :

புவி வெப்பமாதல் எதனால் நடைபெறுகிறது, அதனால் நிகழப்போகும் மாற்றங்கள் என்ன என்பதே இந்த நூல். கடல் மட்டம் உயரும் என்பது மட்டுமே பலரும் அறிந்த ஒன்று. ஆனால், இந்த நூலின் மூலமாக, என்னென்ன மாற்றங்கள் நிகழும், அதன் பாதிப்புகள் எவ்வளவு தீவிரமாக இருக்கும் என்ற விளக்கங்களோடு கொடுத்திருக்கிறார். எப்போதெல்லாம் குறுகிய காலகட்டத்தில், மிகப்பெரிய காலநிலை மாற்றம் நிகழ்ந்ததோ அப்போதெல்லாம் புவி முற்றொழிப்பை சந்தித்ததை விளக்கியிருக்கிறார்.

  1. பூமிக்கு நெருப்பு வைத்தவர்கள் :

பொருள் உற்பத்தியும், கூடுதல் நுகர்வும் எவ்வாறு தொடர்புடையன என்பதை வழக்கம் போல உதாரணங்களோடு விளக்கியிருக்கிறார். கூடுதல் பொருள் உற்பத்தி எவ்வாறு கார்பன் உமிழவற்கு காரணம் என்பதும், பெரு நிறுவனங்களும் முதலாளிகளும் இதில் எப்படி பயனுறுகிறார்கள் என்பதும் பேனா மற்றும் பல்பின் துணை கொண்டு புரியவைக்கிறார். ஆனால், இந்த நூலில் இருக்கும் ஒரு ஆச்சர்யம் பெரு நிறுவனங்கள் திட்டமிட்டே பழுதாகும் பொருட்களை உற்பத்தி செய்வதன் பின்னால் இருக்கும் அரசியல் தான்.

  1. பச்சை வியாபாரம் :

பெரு நிறுவனங்கள் தங்களைப் பசுமைப் போராளிகளாக, புவியைக் காக்க வந்தவர்களாக காட்டிக்கொள்ள என்னென்னெ ஒட்டு வேலைகளை செய்வார்கள் என்பதைப் பேசுகிறது இந்த நூல். இது மாதிரியான பல்வேறு நடவடிக்கைகள் மூலமாக தங்களை முன்னிறுத்தும் நிறுவனங்களை “பச்சை பாசாங்கு” என்கிறார். மேலும் இது அவர்களின் வியாபாரத்தை அதிகரிக்கும் உத்தியாக மட்டுமே உதவும் என்பதையும் எளிமையாக விளக்கியிருக்கிறார். அவை, இந்த பச்சை வியாபாரம் பேரழிவுகள் தொடரவே வழிவகுக்கும் என்பதை உணர்த்துகிறது.

  1. எந்திரன் :

சூழல் நீதி என்பது மனிதர்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று பேசுகிற நூல் இது. மனிதனை இயற்கையின் ஒரு அங்கமாக பார்க்கிறார் ஆசிரியர். மனித இனம் வளர்ச்சியடைந்த பிறகுதான் சூழலியல் இப்படி மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது என்பதை அவர் அறியாமலில்லை. இருப்பினும், பெரு முதலாளிகளையும், வெகு ஜன மக்களையும் பிரித்துப் பார்த்து, யாரால் இயற்கைக்கு தீங்கு, அதன் பாதிப்பு ஏன் சாமானியர் தலையில் விழுகிறது என்பதன் அடிப்படையிலேயே மனிதர்கள் அடிமைகளாக இருக்கத் தேவையில்லை என்பதையும், உழைப்புச் சுரண்டலை புனிதப்படுத்துவது அவசியமற்றது என்பதையும் வலியுறுத்துகிறார்.

  1. விளக்கைச் சுற்றும் விட்டில் பூச்சிகள் :

நுகர்வுக் கலாச்சாரம் நம்மை அறியாமலேயே நம்மை எப்படி விட்டில் பூச்சிகளாக மாற்றி வைத்திருக்கிறது என்பதை விளக்கும் இந்த நூல், மனிதனின் உளவியல், சந்தை பொருளாதாரத்தால் எப்படி மாற்றி அமைக்கப்பட்டது என விவரிக்கிறது. அடையாளாச் சின்னங்களால் ஈர்க்கப்படும் மனிதர்கள், தங்கள் தேவைகளைத் தாண்டி எவ்வாறு பொருட்களை நுகர்கிறார்கள், அதற்காக செய்யப்படும் விளம்பரங்களும் அதில் கையாளப்படும் உத்திகளும் என விரிவாக பேசுகிற இந்த நூல், இந்த நுகர்வுக் கலாச்சாரத்தில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகளையும் அவசியத்தையும் பேசுகிறது.

  1. குறைவே நிறைவு :

மனிதர்கள் நுகரும் எல்லாப் பொருட்களுமே ஏதோ ஒரு வகையில் இயற்கையில் இருந்தே பெறப்படுகிறது என்பதாலும், அப்பொருட்கள் பயன்பாட்டுக்குப் பிறகு சூழலைக் கெடுக்கும் என்பதாலும் எந்த ஒரு பொருளையும் அதன் அவசியம் உணர்ந்து நுகரச் செய்வதற்கான வழிமுறைகளையும், குறைவாக நுகர்வதன் அவசியத்தையும் பேசுகிறது இந்த நூல். நுகரப்படும் பொருட்களை மறுபரிசீலனை செய்யவும், புறக்கணிக்கவும் தேவையான வழிமுறைகளை வழங்குகிறார் ஆசிரியர். நுகரப்பட்ட பொருட்களை மறு பயன்பாட்டுக்கு ஏற்றவாறு மாற்றி அமைப்பதும், மறு சுழற்சி செய்வதும் என ஏராளமான வழிமுறைகளை அறிமுகப்படுத்துகிற இந்த நூல், குறைவான நுகர்வின் மூலம் மகிழ்வான வாழ்வைச் சாத்தியமாக்கும் நம்பிக்கையை அளிக்கிறது.

  1. வளங்குன்றா வளர்ச்சி அல்ல; தேவை மட்டுறு வளர்ச்சி :

ஆசிரியர் ஒரு கனவு காண்கிறார். அவருடைய கனவில் இந்த உலகம் எப்படி இருக்கலாம் என விவரிக்கிறார். அது ஒரு அற்புதமான உலகம். முந்தைய ஒன்பது புத்தகங்களிலும் இருந்து பிழியப்பட்ட சாறு போல இருக்கிறது இந்தக் கனவு. மட்டுறு வளர்ச்சி அவசியம் என வலியுறுத்துகிறார். “மட்டுறு வளர்ச்சி; இது மாற்றுப் பாதையிலான வளர்ச்சி அல்ல. மாறாக, வளர்ச்சி எனும் நோய் நீக்கும் மருந்து” என்ற விளக்கத்தையும் தருகிறார். உதாரணமாக, புதைபடிவ எரிபொருட்களை கைவிட்டு, புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறுவது மட்டும் தீர்வு அன்று. மாறாக மின் தேவையை குறைக்காமல் சூழலை அழிவில் இருந்து காக்க முடியாது என்கிறார்.

இந்த பத்து நூல்களும் ஒரு புதிய வெளிச்சத்துக்கான வழியைக் காட்டுகின்றன. உயிர்பன்மையத்தை பாதிக்காத எல்லோருக்குமான மகிழ்ச்சியான வாழ்விற்கு வழிகாட்டுகிறது. இந்த பத்து நூல்களும் எல்லோருக்குமானது. பெரு நிறுவனங்களின் முதலாளிகள் தொடங்கி தொழிலாளர்கள் வரை, முதல்வர் முதல் குடிமக்கள் வரை எல்லோரும் வாசிக்கவே வேண்டியது. மாற்றங்களுக்கான விதைகளை இப்போதும் தவறவிட்டால், நாளைய தலைமுறை சந்திக்கப்போகும் இன்னல்களுக்கு யார் பொறுப்பு ?

– பா. சதீஷ் முத்து கோபால்

இப்புத்தகங்களைப் பெற: https://www.kaalanilaipathippagam.com/

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments