தனியார் மயமாகும் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்கள்

வழக்கறிஞர் மு.வெற்றிச்செல்வன்

வாஜ்பாய் தலைமையிலான “சுதேசிய” பாரதிய ஜனதா அரசு 1999ம் ஆண்டு “இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய்” ஆகிய இயற்கை வளங்களை தனியாருக்கு தாரைவாக்க முடிவு செய்தது. அதே ஆண்டு “ஆய்வுரிமைக்கான புதிய கொள்கை” (New Exploration Licensing Policy) என்னும் கொள்கையையும் அறிமுகம் செய்தது. இந்த கொள்கைப்படி நாடு முழுவதும் சுமார் 46 இடங்களில் இயற்கை எரிவாயு எடுப்பதற்கான அனுமதியை தனியார் நிறுனங்கள் பெற்றன. இதே காலகட்டத்தில் மீத்தேன் குறித்த திட்டத்தையும் முதல் முதலாக அறிமுகம் செய்ததோடு நில்லாமல் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு மேற்கு வங்காளத்தில் மீத்தேன் எடுப்பதற்கான அனுமதியையும் தந்தது பாரதிய ஜனதா அரசு. 2010ம் ஆண்டு இதே நிறுவனத்திற்கு மன்னார்குடியில் மீத்தேன் எடுப்பதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது. உலக வர்த்தக கழகத்தின் தனியார்மய கொள்கையின் ஒரு
பகுதியாக பாரதிய ஜனதா அரசு புதிய கொள்கைகளை அறிமுகம் செய்தது. இதில் இவர்கள் முந்தைய காங்கிரஸ் அரசைவிட வேகமாகச் செயல்பட்டனர். தனியார் மயம் என்பது நிறுவன நலம் சார்ந்தது என்பதை கூற தேவை இல்லை. சமூக நீதி, தொழிலாளர் உரிமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என எதனையும் கண்டுகொள்ளாமல் தனியார் நிறுவனங்களின் லாப நலம் மட்டுமே மையமாக கொண்டு வரப்படும் திட்டங்கள் எப்படி அனைத்து பிரிவு மக்களுக்கும் நன்மை செய்யும் வளர்ச்சி திட்டமாக இருக்க முடியும். 2006ம் ஆண்டு கோதாவரி கிருஷ்னா படுகையில் இயற்கை எரிவாயு எடுப்பதற்கான அனுமதி பெற்ற ரிலையன்ஸ் நிறுவனம் இன்று நாட்டின் பெரும்பகுதி இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதுதான் தனியார் மயம் சாதித்தது! ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களின் நலன்தானா தேச நலன்?

மேலும் பாரதிய ஜனதா அரசின் புதிய கொள்கையின் மூலம் இயற்கை எரிவாயுக்கள் தொடர்பான வர்த்தகத்தில் அந்நிய முதலீடு 100 சதவீதம் அனுமதிக்கப்பட்டது. அது வரை லாபகரமாக இயங்கி வந்த அரசு நிறுவனமான ஒ.என்.ஜி.சி, இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்களை பற்றிய தகவல்களை (தனியார் நிறுவனங்களுக்கு) கொடுக்கும் மையமாக மாறிப்போனது. இதன் தொடர்ச்சியாக 2015ம் ஆண்டு மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு குறைந்தளவிலான நிலத்திற்கான கொள்கையை (Marginal Field Policy) அறிமுகம் செய்தது. இக்கொள்கைப்படி நெடுவாசல், காரைக்கால் உட்பட இந்தியாவெங்கும் சுமார் 61 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டன. முதலாவதாக இந்த இடங்களில் ஒற்றை அனுமதி மூலம் மரபு மற்றும் மரபுசார ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான உரிமை தரப்படும். கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்களை மரபு ஹைட்ரோகார்பன்கள் (Conventional Hydrocarbons) என்றும், நிலக்கரி படுகை மீத்தேன் (Coal Bed Methane), நிலக்கரி சுரங்க மீத்தேன் (Coal Mining Methane), ஷேல் எரிவாயு  (Shale Gas), டைட் எரிவாயு (Tight Gas) போன்ற இயற்கை எரிவாயுக்களை மரபுசாரா ஹைட்ரோகார்பன்கள் (Unconventional
Hydrocarbons) என்றும் வகைப்படுத்துகின்றனர். மேற்கூறிய புதிய கொள்கையின் படி எல்லா விதமான ஹைட்ரோ கார்பன்களையும் ஒரே அனுமதியில் பெறுவதன் மூலம் நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளலாம். நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயுக்களை எடுப்பதற்கான அனுமதியை பிப்ரவரி 2017ல் ஜெம் லேபோர்ட்டிரிஸ் என்னும் தனியார் நிறுவனத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. அதாவது ஜெம் நிறுவனம் நெடுவாசலில், இயற்கை எரிவாயு, மீத்தேன், ஷேல் எரிவாயு, கச்சா எண்ணெய், இன்னும் எது கிடைத்தாலும் எடுப்பதற்கான உரிமையை பெற்றுள்ளனர். மேலும் மோடி அரசின் புதிய கொள்கைப்படி ஹைட்ரோகார்பன் எடுத்து அதற்கு விலை நிர்ணயிக்கும் உரிமையும் நிறுவனங்களுக்கே கொடுக்கப்பட்டுள்ளன. விவசாயி, தான் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய முடியாது. நாடாளுமன்றம் முன்பாக சில விவசாயிகள் நடத்திய நிர்வாணப் போராட்டத்தை இங்கு நினைவு கொள்வோம். பாரத மாதாவிற்கு
ஜெ சொல்லுவோம். ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு தேவையான தொழில்நுட்ப கருவிகளை இறக்குமதி செய்வதற்கு வரிவிலக்கு. மேலும் எண்ணெய் வரியும் கிடையாது இந்த நிறுவனங்களுக்கு. இத்தகைய கொள்கைகள் எப்படி மக்கள் நலம் சார்ந்ததாக இருக்க முடியும். ஹைட்ரோ கார்பன் வியாபாரத்தை விரிவுபடுத்த தமிழகத்தில் பெட்ரோ கெமிக்கல் பொருளாதர மண்டலமும் அமைக்கப்பட உள்ளது. 2006ம் ஆண்டு அன்றைய காங்கிரஸ் அரசு நாடு முழுவதும் பெட்ரோலியம் சார்ந்த தொழிற்சாலைகளை வளர்த்தெடுக்க அந்திய முதலீடுகளை வரவேற்க Policy for Petroleum, Chemicals, Petrochemicals Investment Regions என்னும் கொள்கையை அறிமுகப்படுத்தியது. இக்கொள்கை மூலம் நாடுமுழுவதும் பெட்ரோலிய கெமிக்கல் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும். பெட்ரோல் மற்றும் அதனை சார்ந்த ரசாயனத் தொழிற் சாலைகள், பெட்ரோல் சுத்தகரிப்பு ஆலைகள், பெட்ரோல் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும். மத்திய அரசு இதற்கான நிதியைத் தரும். மாநில அரசு இந்த மண்டலங்களுக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தி மத்திய அரசு கூறுவது போல உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இந்த சிறப்பு பெட்ரோலிய மண்டலங்கள் துறைமுகங்களோடும், விமான நிலையகளோடும் புதிய சாலைகள் மற்றும் ரயில் பாதைகள் மூலம் இணைக்கப்படும். பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும். தேசிய நெடுசாலைகளும், இரயில் நிலைகளும் இதனோடு இணைக்கப்படும். கெயில் எரிவாயு குழாய் திட்டங்கள் மூலம் இந்த சிறப்பு பெட்ரோலிய மண்டங்களில் இருந்து பெட்ரோலிய பொருட்கள், மற்றும் பிற இயற்கை வளங்கள் துறைமுகங்களுக்கு கொண்டு செல்லப்படும். தஞ்சை அரேபிய நாடாக மாறும். அதாவுது எண்ணெய் கிணறுகள் மட்டுமே உள்ள பாலைவன பகுதியாக மாறும்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments