சென்னை – பெங்களூர் விரைவுச்சாலை. பாதிக்கப்படப்போகும் 10 ஆயிரம் மரங்கள். மார்ச் மாதம் கருத்துக் கேட்புக் கூட்டம் அறிவிப்பு..

 

சென்னை பெங்களூர் இடையே புதிய விரைவுச்சாலை அமைப்பதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் வருகிற மார்ச் 13 மற்றும் 16 தேதிகளில் ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் நடைபெறும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை- பெங்களூர் இடையிலான பயண நேரத்தை வெகுவாக குறைக்கும் விதத்தில், புதிதாக நான்கு வழி விரைவுச்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இந்த சாலையானது, சென்னையின் எல்லைப்பகுதியாக இருக்கும் திருவள்ளூர் மாவட்டம் திருபாண்டியூரில் தொடங்கி கிழக்கு பெங்களூரில் முடிகிறது. மொத்தம் 262கிலோமீட்டர் தூரமுள்ள இந்த விரைவுச்சாலையை 13ஆயிரத்து 500கோடியில் அமைக்க தேசிய நெடுச்சாலைத்துறை ஆணையம் திட்டமிட்டுள்ளது.
மொத்தம் மூன்று கட்டமாக இத்திட்டத்தை செயல்படுத்த நெடுஞ்சாலைத்துறை ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்தின் முதல் கட்டத்தில் ஒரு லட்சம் மரங்களும்ம், இரண்டாம் கட்டத்தில் 24ஆயிரத்து 800 மரங்களும், மூன்றாம் கட்டத்தில் 10ஆயிரத்து 450மரங்களும் என மொத்தமாக ஒரு லட்சத்து 35ஆயிரத்து 250மரங்கள் பாதிக்கப்படும் என திட்ட சாத்தியக்கூறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.மேலும் இந்த சாலையை அமைப்பதற்கு 69ஹெக்டேர் வனப்பகுதி நிலத்தை பயன்படுத்தப் போவதாகவும் கூறப்பட்டிருந்தது.

தற்போது இத்திட்டத்தின் மூன்றாம் கட்ட பணிகளுக்கான வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்றாம் கட்டத்தின் 106கிலோமீட்டர் தூரத்தில் பெரும்பாலான பகுதிகள் தமிழக எல்லைக்குள் வருகிறது. இந்த மூன்றாம் கட்டத்தில் மட்டும் 1085.15 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. இந்த பகுதியில் மட்டும் மொத்தம் 9,468 மரங்களும் 7486 தோட்டக்கலை மரங்கள்/பயிர்கள்/புதர்கள் பாதிக்கப்படும் எனவும் சித்தூரில் 6, வேலூரில் 2, காஞ்சிபுரத்தில் 16, ராணிப்பேட்டையில் 5 என மொத்தமாக 29 நீர்நிலைகள் பாதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 5.42ஹெக்டேர் வனப்பகுதியை நிலத்தை பயன்படுத்தப் போவதாகவும் நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது.

இத்திட்டத்திற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் வரும் மார்ச் 13 ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் பஞ்சாயத்து யூனியன் பள்ளியிலும், மார்ச் 16ஆம் தேதி வேலூர் மாவட்டம் சோமநாதபுரம் பஞ்சாயது யூனியன் பள்ளியிலும் நடைபெறும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.

– பிரபாகரன்.வீ

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments