- தமிழ்நாட்டின் காற்றாலை & சூரிய ஆற்றல் பற்றிய எதிர்கால கணிப்புகள்
உலகளவில் காலநிலை மாற்றம் ஒரு முக்கிய விவாதமாக உருவெடுத்துள்ள நிலையில் புதைப்படிம ஆற்றல் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுப்பெற்று வருகிறது.
வளிமண்டலத்தில் இருக்கும் கார்பன் வாயுக்களில், 89% கார்பன் வாயுக்கு காரணமாக இருப்பவை புதைப்படிமங்களும் தொழிற்சாலைகளும் தான். அதிலும் குறிப்பாக தொழிற்புரட்சிக்கு பிறகு ஏற்பட்டுள்ள 1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்வில் 0.3 டிகிரிக்கு காரணமாக நிலக்கரியை எரித்ததின் மூலம் வெளியேறிய கார்பன் அளவுகளே உள்ளது. எனவே தான் காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்த வேண்டும் என்றால் நிலக்கரி போன்ற புதைப்படிம ஆற்றல் பயன்பாட்டினை வளர்ந்த & வளரும் நாடுகள் உடனடியாக நிறுத்திவிட்டு புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி நகர வேண்டிய கட்டாயம் உண்டாகியுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் க்ளாஸ்கோவில் நடைபெற்ற காலநிலை மாற்றத்திற்கான Cop-26 மாநாட்டில் கலந்துகொண்டு இதே கருத்துக்களைத் தான் வாக்குறுதிகளாக முன்மொழிந்தார். பிரதமர் மோடி கூறிய பஞ்சாமிர்த வாக்குறுதிகளில் முக்கியமானது, இந்தியா 2030க்குள் தனது 50% மின் உற்பத்தியை புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இருந்து பெறும் என்பது தான். புதைப்படிம ஆற்றல் உற்பத்தி காலநிலை மாற்றமடையக் காரணமாக இருப்பதை போல, காலநிலை மாற்றத்தின் பாதிப்பினால் வரும் காலங்களில் மின் உற்பத்தியும் வெகுவாக பாதிப்படையும் என்று ஆய்வுகள் பலவும் தெரிவிகின்றன.
குறிப்பாக இயற்கையை நம்பி இருக்கும் சூரிய ஆற்றல் மின்சாரம், காற்றாலை மின்சாரம் போன்ற புதுபிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி முறைகள் காலநிலை மாற்றத்தின் காரணமாக பாதிப்புகளை சந்திக்கக் கூடும் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன. காலநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்பட இருக்கும் தீவிர புயல், அதீத மழை, அடிக்கடி உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு நிலை, மேக மூட்டம் போன்றவை காரணமாக அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவின் சூரிய ஆற்றலும் , காற்றின் வேகமும் குறைய நேரிடும் என்று சமீபத்தில் புவி அறிவியலுக்கான அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட ‘’Analysis of future wind and solar potential over India using climate models” என்கிற ஆய்வறிக்கைத் தெரிவிக்கிறது.
பூளோக அடிப்படையில் இந்தியாவை ஆறு மண்டலங்களாக பிரித்து நடத்தப்பட்ட இந்த ஆய்வின் படி அடுத்த சில பத்து ஆண்டுகளில் கங்கைச் சமவெளி மற்றும் தென் இந்தியப் பகுதிகளை தவிர்த்து மீதமுள்ள மற்ற இந்தியப் பகுதிகளில் காற்றின் வேகம் குறையும் என்றும் அதனால் காற்றாலை மின் உற்பத்தி பாதிக்கும் என்று குறிபிடப்பட்டுள்ளது.
காற்றாலை மின்சாரத்தைப் பொறுத்த வரையில் காற்றின் வேகம் 1 m/s அளவு குறைந்தால் கூட அது மின் உற்பத்தியை வெகுவாக குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்கால காலநிலை நிகழ்வுகளை முன்கூட்டியே கண்டறியும் மென்பொருள் தொழில்நுட்பம் (Climate Models) கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் அடுத்த 55 ஆண்டுகளுக்கான காற்றின் வேகம் மற்றும் சூரிய கதிர் ஆற்றல் ஆகியவை கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் ஏற்கனவே 23% மின் உற்பத்தி புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இருந்து கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சூரிய ஆற்றலைப் பொறுத்த வரைக்கும் இந்தியாவின் பெரும்பான்மை பகுதிகளில் காலநிலை மாற்றத்தினால் அடுத்த 50 ஆண்டுகளில் சூரியக் கதிரின் அளவு 10-15 Wm-2 வரை குறையும் எனவும் அதனால் சூரிய ஆற்றல் உற்பத்தி குறையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவும் குறிப்பாக பருவமழைக் காலங்களிலும் அதற்கு பிந்தைய காலங்களிலும் (July to November) பாதிப்பு இருக்கும் என கண்டறியபட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் சூரிய ஆற்றல் பிரகாசமாகவே இருக்கும் என இந்த ஆய்வு மூலம் தெரிய வருகிறது.
அதே போல காற்றின் வேகத்தைப் பொருத்த வரைக்கும் தமிழ்நாட்டில் பாதிப்பு இருக்காது என இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு, கேரளா ஆகிய பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கட்டமைப்புகள் வருங்காலங்களில் பெருகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் நிலத்தில் நிறுவப்படும் காற்றாலை நிலையங்கள் அதிக உற்பத்தி திறனுடன் இயங்கும் எனவும் கடலுக்குள் நிறுவப்படும் (Off shore) காற்றாலை மின் நிலையங்களின் உற்பத்தி குறைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டின் கடல் பகுதியில் 4000 MW அளவிற்கு புதிதாக கொண்டுவரப்பட உள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை இந்த கோணத்திலும் ஆய்வு செய்து பார்த்தல் அவசியமாகிறது. கடலில் அமைக்கப்படும் (Off shore wind) காற்றாலை மின் நிலையங்களினால் மீன் வளமும் மீனவர்கள் வாழ்வாதாரமும் பாதிப்படையுமா என்ற கோணத்தில் சூழலியல் தாக்க மதிப்பீடு செய்யப்பட வேண்டியது எவ்வளவு முக்கியமோ அதே போல வருங்காலங்களில் கடலில் காற்றின் தன்மை எப்படி இருக்கும் என்பதையும் ஆராய்ந்து இந்த நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பதனை இந்த ஆய்வறிக்கை நமக்கு உணர்த்துகிறது.
கடலில் (Off shore wind) காற்றாலைகளை நிறுவுவதை விட நிலத்தில் (On shore wind) அமைப்பது தான் நமது பொருளாதாரத்திற்கு நன்மை பயக்கும். கடலில் காற்றாலை அமைப்பதற்கு அதிக அளவிலான முதலீடுகள் தேவைப்படுகிறது, ஏற்கனவே 1,34,000 கோடி கடனில் இருக்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு இது கூடுதல் நிதிச் சுமையையே ஏற்படுத்தும். கடலில் அமைக்கப்படும் காற்றாலைகளைக் கொண்டு மின்சாரம் தயாரிக்க ஒரு யூனிட்க்கு 9.42 ரூபாய் செலவாவதாக சீனாவின் க்ரீன் ஷோர் எனர்ஜி பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது நிலத்தில் எடுக்கப்படும் காற்றாலை மின்சாரத்தை விட எட்டு – ஒன்பது மடங்கு அதிகமாகும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு புதிதாக நிலத்தில் காற்றாலை மின் நிலையங்கள் அமைப்பதையும் பழைய காற்றாலைகளை புதிய தொழில்நுட்பங்கள் கொண்டு புதுப்பிப்பதன் மூலமும், தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்துள்ள 20,000MW பரந்துப்பட்ட சூரிய ஆற்றல் மின் உற்பத்தியையும், 10,000 MW மின்கல சேமிப்பு கட்டமைப்பு ஆகியவற்றை நடைமுறைப் படுத்துவதன் மூலமே சூழலுக்குப் பாதிப்பில்லாத முறையில் வருங்காலங்களில் தமிழ்நாடு தனது மின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பொறுத்த வரைக்கும் தமிழ்நாடு இந்தியாவிற்கு முன்னோடியாக விளங்குகிறது. தமிழ்நாட்டில் ஏற்கனவே 16,723 MW (49%) அளவிற்கான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உள்கட்டமைப்புகள் இருக்கின்றன. 2016ம் ஆண்டு 1,062 MW ஆக இருந்த தமிழ்நாட்டின் சூரிய ஆற்றல் திறன் 2022ம் ஆண்டு 5690.79 MW ஆக உயர்ந்துள்ளது. காற்றாலை பொறுத்தவரையில் தமிழ்நாடு 9,867 MW திறன் அளவிற்கான கட்டமைப்புகளை வைத்துள்ளது.
49% புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கட்டமைப்புகள் இருக்கின்ற போதிலும் அதிலிருந்து வெறும் 25% மின் உற்பத்தி மட்டுமே நம்மால் பெற முடிகிறது. இதை சரி செய்ய ஏற்கனவே இருக்கும் காற்றாலை நிலையங்களை நவீனப்படுத்துவதோடு இனி அமைக்க இருக்கும் மின் நிலையங்கள் அதிக திறன் உள்ளதாக அமைக்கப்பட வேண்டும் என்பதனையே இந்த ஆய்வறிக்கையும் தெளிவுப்படுத்துகிறது.
- பிரபாகரன் வீரஅரசு
- [email protected]