திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் கிராமத்தில் 21.06.2026 அன்று (St Peter & Paul Sea Food Exports Private Limited) என்ற தனியார் கடல் உணவுகளை பதப்படுத்தும் தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது.
இவ்விபத்தால் அத்தொழிற்சாலையில் பணியாற்றிய 80 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி 10 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைப் பூவுலகின் நண்பர்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். ஒடிஷா, அஸ்ஸாம், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்த புலம்பெயர் தொழிலாளர்களே இவ்விபத்தில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிழைப்புக்காகத் தமிழ் நாடு வந்த இப்புலம்பெயர் தொழிலாளர்களின் உயிர்கள் முழுக்க முழுக்க ஆலை நிர்வாகம் மற்றும் சில அரசுத் துறைகளின் மன்னிக்க முடியாத அலட்சியத்தால் பறிபோயிருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த ஆலை விபத்து தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அரசு ஒரு குழுவை நியமித்துள்ளது. மேலும் தமிழ் நாடு முழுவதும் அபாயகரமான தொழிற்சாலைகளை ஆய்வு செய்யவும் தமிழ் நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார் என்கிற செய்தி வரவேற்கத்தக்கது.
TNLA No.06-Hon'ble Labour Welfare and Skill Development Minister Assembly 110 Speech -Ammonia gas accident at st peter paul-Date 22.06.2026அரசு அமைத்துள்ள குழுவில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இயக்குநர் (Directorate of Industrial Safety and Health – DISH), பொது சுகாதாரத் துறை இயக்குநர், மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் – செயலர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆனால், தொடர்ந்து தமிழ் நாட்டில் நிகழும் ஆலை விபத்துகளைக் கருத்தில் கொண்டு உடனடியாக தமிழ் நாடு தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தை அரசு மறுசீரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
முதலில் இந்த ஆலை விபத்துக்கு முக்கியக் காரணமே உரிய பயிற்சி இல்லாத ஊழியர்களை பணியில் அமர்த்தியது, விபத்து காலங்களில் என்ன செய்ய வேண்டும் என்கிற பயிற்சியை ஊழியர்களுக்கு வழங்காதது, விபத்து குறித்த எச்சரிக்கை அமைப்புகள் இல்லாதது, ஊழியர்களுக்கான தங்குமிடங்களை ஆலைக்குள்ளாகவே அமைத்தது உள்ளிட்டவைதான்.
இந்த விபத்தும்கூட திடீரென கெடுவாய்ப்பாக நடந்த ஒரு விபத்து இல்லை. தொடர்ந்து பலமுறை இந்த ஆலையில் அம்மோனியா கசிவு நிகழ்வது குறித்து ஊழியர்கள் புகாரளித்தும் அதுகுறித்து ஆலை நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருந்த காரணத்தாலே 10 உயிர்கள் பறிபோயுள்ளன.
தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககமானது தனது பணியினை உரிய முறையில் நேர்மையாக மேற்கொண்டிருந்தால் இவ்விபத்து நேராமல் தடுத்திருக்கலாம். ஆனால், லஞ்சம் புரையோடிப்போன நிர்வாகத் திறனில்லாத, காலாவதியான ஒரு அமைப்பாகவே இந்த DISH தொடர்வது வேதனைக்குரியது.
தொழிலாளர்களின் பணியிடப் பாதுகாப்பை உறுதி செய்வது, தொழிலகப் பெரும் விபத்து மற்றும் ஆபத்துகளைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட 17 வகையான சட்டங்களை அமலாக்கும் பொறுப்பை DISH கொண்டுள்ளது. மேலும் தொழிற்சாலைகளை அவற்றின் இடர் அடிப்படையில் மூன்று வகையாகப் பிரித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதிக அபாயகரமான தொழிற்சாலைகள் ஆண்டிற்கு ஒரு முறையும், நடுத்தர அபாயகரமான தொழிற்சாலைகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையும், குறைந்த அபாயகரமான தொழிற்சாலைகள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையும் ஆய்வு செய்யப்படுகின்றன.
வணிகம் செய்வதை எளிதாக்குகிறோம் என்கிற பெயரில் கணினி வழியில் ஆய்வு செய்யப்பட வேண்டிய ஆலைகள் ஆய்வாளர்களுக்கு ஒதுக்கப்படுவதும் ஆய்வுகளுக்கான கால இடைவெளி அதிகமிருப்பதும் பெரும் விபத்துகளுக்கு வித்திடுகிறது. இந்த ஆய்வுகளின் அறிக்கைகள் ஒன்றுகூட பொதுத்தளத்தில் கிடையாது. ஆகவே வெளிப்படைத்தன்மை துளியும் இல்லாத ஒரு கட்டமைப்பை இந்த DISH கொண்டிருப்பதால் அது லஞ்சம் வாங்குவதற்கு வசதியான அமைப்பாக இருக்கிறது.
2020ஆம் ஆண்டு ஒன்றிய அரசானது அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் மத்திய ஆய்வு அமைப்பு(Central Inspection System – CIS) ஒன்றை நிறுவ வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த அமைப்பின் வாயிலாக தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் – DISH, மாநில மாசு கட்டுப்பாடு வாரியம் SPCB, தொழிலாளர் ஆணையரகம், கொதிகலன்கள் இயக்குனரகம் ஆகிய நான்கு துறைகளின் கீழான சட்டங்களை அமலாக்குவதற்கான ஆய்வுகளை ஒருங்கிணைத்திருக்க வேண்டும். அதற்கான இணையதளத்தில் இந்நான்கு துறைகளின் கீழான ஆய்வுகள் நடத்தப்படும் தேதி, ஆலையின் பெயர், ஆய்வு நடத்தும் அதிகாரியின் பெயர், ஆய்வின் நிலை ஆகியவற்றை வெளிப்படையாகப் பதிவிட வேண்டும்.
ஒன்றிய அரசின் இந்த உத்தரவின் அடிப்படையில் 14.10.2020 அன்று தமிழ் நாடு தொழில்துறை தமிழ் நாட்டிற்கான TNCIS உருவாக்குவதற்கும் மாநில அளவிலான குழு (State–level Inspection Group) ஒன்றையும் ஏற்படுத்தி உத்தரவிட்டிருந்தது. தொழில் முதலீடுகளை ஈர்க்கும் TN Guidance அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையத்தில் TNCIS குறித்த அறிவிப்பும் அத்தளத்திற்கான இணைப்பும் உள்ளது. ஆனால், அத்தளம் முடங்கிப் போயுள்ளது. அதில் எந்தத் தரவுகளும் இல்லை. இதன் நோக்கமே பொதுமக்கள் ஆலைகள் மீதான ஆய்வுகள் குறித்து அறிந்து கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான். இதன்மூலம் ஒரு ஆலையின் விதிமீறல் கண்டறியப்பட்டாலும் லஞ்சம் பெற்றுக்கொண்டு அதை அனுமதிக்கும் வகையில் ஆய்வறிக்கைகளைத் தயாரிப்பது எளிதாகிறது.
உத்தரபிரதேசம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்கள் கூட இந்த Central Inspection System அமைப்பை நிறுவி செயல்படுத்தி வருகின்றன. அதில் ஆலைகளில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் விபரங்கள் குறித்து அனைவராலும் பார்க்க முடிகிறது.
மேலும் ஆலைகளுக்கான அனுமதிகள் எப்படிப் பெறுவது, எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட தகவல்கள், விளக்கங்களைக் கூட DISH தளத்தில் பார்க்க முடியவில்லை. இதன் காரணமாக DISH அதிகாரிகள் கைகாட்டும் புரோக்கர்களையோ, முகமைகளையோ அணுகினால் மட்டுமே அனுமதிகளைப் பெற முடியும் என்கிற நிலை உள்ளது.
தமிழ்நாட்டில், 31.03.2025 வரை தொழிற்சாலைகள் சட்டம், 1948-இன்கீழ் 52,614 தொழிற்சாலைகள் பதிவு செய்யப்பட்டு, அத்தொழிற்சாலைகளில் 27,04,468 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். 2024-2025-ஆம் ஆண்டில் 2,540 புதிய தொழிற்சாலைகள் இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்போது DISH பின்பற்றி வரும் நடைமுறைகளை மேம்படுத்தி மறுசீரமைக்காவிட்டால் பெரும் விபத்துகள் தொடர்ந்து நடைபெறும் அபாயங்கள் அதிகம்.
ஆகவே கீழ்காணும் கோரிக்கைகளை அரசுக்கு முன்வைக்கிறோம்.
- தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் கடந்த 10 ஆண்டு கால நடவடிக்கைகளை தணிக்கைக்கு உட்படுத்தவும் DISH -ஐ மறுசீரமைப்பதற்கான பரிந்துரைகளை வழங்கவும் உயர்மட்டக் குழு ஒன்றை அமைக்க வேண்டும்.
- தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், மாநில மாசு கட்டுப்பாடு வாரியம், தொழிலாளர் ஆணையரகம், கொதிகலன்கள் இயக்குனரகம் ஆகிய நான்கு துறைகள் மேற்கொள்ளும் அனைத்து ஆய்வுகளையும் அனைவரும் பார்க்கக்கூடிய வகையில் Central Inspection Systemஐ உருவாக்க வேண்டும்.
- இத்துறைகள் வழங்கும் அனைத்து அனுமதிகளையும் பார்க்கக்கூடிய வகையில் TNCIS தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- DISH தொடர்பான அனைத்துப் பணிகளும், ஆய்வுகளும், அனுமதிகளும் உரிய விதிகளின்படி டிஜிட்டல் முறையில் நடைபெற வேண்டும்.
- தொழில் முனைவோர்கள் தங்களுக்கான அனுமதிகளை நேரடியாக சட்டமுறைப்படி பெறுவதற்கு ஏதுவாக இடைத்தரகர்கள், முகமைகள் ஒழிக்கப்பட வேண்டும்.
- ஏற்கெனவே லஞ்சப் புகார் உள்ள அதிகாரிகளை DISHன் முக்கியப் பொறுப்புகளிலிருந்து மாற்ற வேண்டும்.
- DISH உள்ளிட்ட இந்நான்கு துறைகள் மேற்கொள்ளும் ஆய்வுகளை வீடியோவாகப் பதிவு செய்ய வேண்டும்.
- ஆய்வுகள் மேற்கொள்ளும்போது Geo Location பதிவைக் கட்டாயமாக்க வேண்டும்.
- தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தையும், கொதிகலன்கள் இயக்குனரகத்தையும் IAS அதிகாரி ஒருவரின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வர வேண்டும்.
- பெருகிவரும் வெப்பம் உள்ளிட்ட தீவிர வானிலை நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு ஆய்வு முறைகள் மற்றும் அனுமதி, நிபந்தனைகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.
