கோக் பெப்ஸி நிறுவனங்களிடம் இருந்து தாமிரபரணியைக் காக்க

96 வயது முதியவர் நடத்திய நெடிய போராட்டம்!

சந்தியா ரவிசங்கர்

குறிப்பு: தாமிரபரணி போராளி நயினார் குலசேகரன் கடந்த ஜூலை மாதம் காலமானார். அவரது நினைவைப் போற்றும் வகையில் ஸ்குரால் இணையத்தளத்தில் வெளியான அவர் குறித்த இந்த கட்டுரையை பூவுலகு மொழிபெயர்த்து உரிய அனுமதியுடன் பிரசுரிக்கிறது. நீங்க நயினார்

குலசேகரன் தாத்தாவோட புத்தகத்த வாசிச்சிருக்கீங்களா?

திருநெல்வேலி தூத்துக்குடி பகுதியில் இந்த நிருபர் சந்தித்த அனைத்து விவசாயிகளும், வழக்கறிஞர்களும் அவரிடம் கேட்ட முதல் கேள்வி இது தான். ”நீங்க அவர சந்திக்கனும்” என்றார் வழக்கறிஞர் டி ஏ பிரபாகரன். கடந்த டிசம்பர் மாதம்  சென்னை உயர்நீதிமன்றம், கொககோலா, பெப்சி ஆகிய நிறுவனங்களுக்கு தாமிரபரணியிலிருந்து தண்ணீர் திறப்பதற்கு மாநில நிர்வாகத்திற்கு
இடைக்காலத் தடை விதித்திருந்தது. இந்த நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்குவதால் தாமிரபரணியை நம்பி வாழும் மக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை என பிரபாகரன் நீதிமன்றத்தில் மனுவளித்திருந்தார். எனினும் மார்ச் மாதம் அதே உயர்நீதிமன்றம், குளிர்பான ஆலைகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சிறிய அளவிலான தண்ணீரை மட்டுமே பயன் படுத்துவதாக கூறி அந்த தடையை விலக்கியது. தாமிரபரணி திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி வழியாக பாய்ந்து அங்கு வாழும் மக்களுக்கும்
வளரும் பயிர்களுக்கும் வாழ்வளித்து வருகிறது. தாமிரபரணி அந்த பகுதியின் வாழ்வாதாரம் என்றால் தாத்தா என்று எல்லோராலும் அழைக்கப்படும் அய்யா குலசேகரன் அதன் ஆஸ்தான பாதுகாவலர். ஏரிகளும் குளங்களும் ஒரு பக்கம் வற்றும் வேளையில் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் தருவதை எதிர்த்து பல ஆண்டுகளாக போராட்டகளை முன்னெடுத்து வருகிறார். யாரிடமும் தாத்தாவின் தொடர்பு எண் இல்லை ஆனால், தூத்துக்குடியின் ஸ்ரீவைகுண்டம், கரம்பூர் பகுதி விவசாயிகள், அவர் வாழும் நட்டாத்தி கிராமம் அருகில் தான் உள்ளது என்றனர். “நட்டாத்திக்கு போங்க அவரு கண்டிப்பா வீட்டுலதான் இருப்பாரு” என்றார் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த விவசாயி கந்த சிவ சுப்பு. “அங்க போய் நயினார் குலசேகரன்னு கேளுங்க. அங்க எல்லாருக்கும் அவர தெரியும் ஆனா அதுக்கு முன்ன அவரோட புத்தகத்த வாசியுங்க” என்றார். சுப்பு சிரித்துக்கொண்டே குலசேகரனின் 2010ஆம் ஆண்டில் வெளிவந்த தாமிரபணி நதியும் விவசாயிகளின் உரிமையும் என்ற புத்தகத்தின் தூசி படிந்த பிரதியை கொடுத்தார். “ உங்களுக்கு தாமிரபரணி பற்றி தெரியவேண்டிய எல்லாமே இதுல இருக்கு. விவசாயிகளுக்கு இந்த புத்தகம் தான் பைபிள்” என்றார். விவசாயி சுப்பு சொன்னது போலவே நட்டாத்தி கிராமத்தில் இருந்த அனைவருக்கும் தாத்தாவின் வீடு தெரிந்திருந்தது. அந்த 96 வயது முதியவர், தன்னுடைய சிறிய வீட்டினுள் நைந்த கட்டிலில் நிமிர்ந்து உட்கார்ந்திருந்தார். சென்னையிலிருந்து தன்னை யாரோ நேர்காணல் செய்ய வரப்போவதை முன்னமே அறிந்தவர் போல ஒரு புன்னகை செய்தார். “என் பெயர் நட்டாத்தி எஸ் நயினார் குலசேகரன்” என்று துவங்கியவர், ‘‘நான் முதல்ல சொல்லிடறேன், அப்பறம் நீங்க கேள்வி கேளுங்க” என்றார் ஒரு மெல்லிய சிரிப்புடன். தாமிரபரணி ஆறு, அதன் கிளை நதிகள், பொதிகை மலையில் அதன் தொடக்கம் மற்றும் அது திருநெல்வேலி தூத்துக்குடி வழியாக 80000 ஏக்கர் நெல், வாழை மற்றும் தென்னை பயிர்களை உயிரூட்டி செல்லும் 120 கிமீ பாதை ஆகியவற்றை பற்றிய களஞ்சியம் குலசேகரன். இந்த பகுதிக்கே உரிய பயிர் காலங்களை அவர் விளக்கினார். ஏப்ரல் முதல் ஜுன் மாதம் வரை முன் கார் பயிர்களும், ஜூன் முதல் செப்டம்பர் வரை கார் பயிர்களும், அக்டோபர் முதல் மார்ச் வரை பிசான பயிர்களும் வளரும் பகுதியாக இது இருக்கிறது என்றார். தாமிரபரணி எங்கள் தாய். அதுதான் எங்களுக்கு வாழ்வாதாரம்” என்றார் பெருமூச்சுடன். “இந்த பிரச்சனை ஆரம்பிச்சு 30 வருஷமாச்சு. இதுக்கு முழுசா இந்த மாநில அரசையோ தொழிற்சாலைகளையோ குறை சொல்லிட முடியாது”. விவசாயிகள் பணத்திற்கும் அதிக மகசூலுக்கும் ஆசைப்பட்டு நெற்பயிரை விட்டுவிட்டு வாழை பயிரிட துவங்கிய போது தான் பிரச்சனை ஆரம்பித்ததாக சொல்கிறார் குலசேகரன். மேலும் 1970ஆம் ஆண்டு தொழிற்சாலைகளை ஊக்கப்படுத்தும் நோக்கில் மாநில அரசும் தூத்துக்குடி பகுதியில் இருந்த ஆலைகளுக்கு ஒரு நாளைக்கு 20 மில்லியன் கேலன் தண்ணீர் திறந்து விடத் துவங்கியது. இந்த மாற்றங்களால் நதிநீரில் பற்றாக்குறை ஏற்பட்டு இப்போது கோடைக்கால பயிரிடலே நடப்பதில்லை. “கார் பயிரே இப்போ இல்லை. முன் கார் பயிரும் அழிஞ்சுட்டு வருது. இப்போதைக்கு ஒரு பயிர் மட்டும் தான் செஞ்சுட்டு இருக்கோம்” என்றார். தாமிரபரணி ஆறால் நிரம்பும் ஏரி, குளம், குட்டைகளின் எண்ணிக்கையை தன்னால் சரியாக கூற முடியும் என்கிறார் குலசேகரன். ஏனென்றால் அந்த இரண்டு மாவட்டங்களின் நீள அகலத்தை விவசாயிகளின் உரிமை காக்கும் பல போராட்டங்களுக்காக 50 ஆண்டுகள் நடந்தே கடந்துள்ளார் அவர். இந்த போராட்டங்கள் அனைத்தும் அவர் தொடங்கிய தாமிரபரணி நதிநீர் பேரவை சார்பில் நடத்தப்பட்டவை. எனினும், கொகோ கோலா, பெப்சி ஆகிய நிறுவனங்கள் இந்த பிரச்னையின் சிறிய பகுதி தான் என்கிறார் குலசேகரன். அவர்களுக்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவு திருநெல்வேலி சிப்காட்டிற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தினசரி 9.75 லட்சம் லிட்டரின் ஒரு பகுதி தான். அரசாங்கம் இந்த தொழிற்சாலைகளை வளர்த்து அதன் மூலம் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க நினைக்கிறது. இது ”மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குன மாதிரி” என்கிறார் குலசேகரன். இது இப்போது இருக்கும் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழித்து வரும் நடவடிக்கை என்றும் கூறுகிறார். குலசேகரன் வழக்கத்திற்கு மாறான ஒரு வாழ்கையை வாழ்ந்து வந்துள்ளார். “ நான் விவசாயியுமில்லை இன்று வரை என் பெயரில் எந்த நிலமும் இல்லை” என்றார் பெருமையுடன். ஆங்கிலேயர் காலத்தில் நட்டாத்தி கிராமத்தில் பிறந்த குலசேகரன், 8 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு பின் சுதந்திர போராட்டத்தில் குதித்தார். ஒரு முறை மகாத்மா காந்தி சிறை சென்ற போது, நட்டாத்தியில் ஒரு மாணவர் பேரணியை முன்நின்று நடத்தினார். இந்திய தேசிய காங்கிரசிலும் இருந்தார். 1945இல் காங்கிரசிலிருந்து விலகி ஜெயபிரகாஷ் நாராயணின் சோசலிச இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இரண்டு வருடத்திற்கு பிறகு அதில் அதிருப்தியுற்று விலகி மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். குலசேகரனின் முக்கிய வருமானம் வீடுவீடாக செய்தித்தாள் போட்டதில் தான் கிடைத்தது. ” காலைல 4 மணிக்கு சைக்கிள் எடுத்துட்டு 9 கிமீ தொலைவுல ரயில்வே ஸ்டேஷனுக்கு போவேன். அங்க வர முதல் வண்டியில 17 காபி தினமலரும், இரண்டு காபி ஹிண்டுவும் வரும். அத என் சைக்கிள்ல எடுத்துட்டு வந்து எங்க ஊர்ல சந்தாதாரர்கள் வீட்டுல போடுவேன்”. அந்த பகுதியில் தினமலர் வாடிக்கை யாளர்களை அதிகப்படுதியதால், தினமலர் நிறுவனர் ராமசுப்பையருக்கும் குலசேகரனுக்கும் ஒரு நெருங்கிய நட்பு உருவானது. ராமசுப்பையர் இறந்து 30 வருடங்களுக்கு மேலாகியும் இன்றும் அந்த நட்பின் காரணமாக குலசேகரனுக்கு மாதம் 1000 ரூபாய் ஒய்வூதியம் வழங்கப்படுகிறது. 13 வருடங்கள் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த பிறகு மீண்டும் காமராஜர் காலத்தில் காங்கிரசில் இணைந்தார் குலசேகரன். காமராஜருடனும் நெருங்கிய நட்புகொண்டிருந்தார் குலசேகரன். 1977 தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஸ்ரீவைகுண்டம் வேட்பாளராக நிறுத்தப் பட்டார் குலசேகரன். ஆனால் அப்போது இருந்த எம்.ஜி.ஆர். அலையில் தோற்றுப்போனார். அது எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த ஆண்டு. குலசேகரனும் அ.தி.மு.க.

வேட்பாளரிடம் தான் தோற்றுப்போனார். ”எம்.ஜி.ஆருக்கு அப்போ அவ்ளோ மோகம்” என்றார் சிரித்துக்கொண்டே. கட்டிலின் மேல் தொங்கிக்கொண்டிருந்த தன் மனைவி வெள்ளையம்மாளின் படத்தை வாஞ்சையுடன் பார்த்து சிரிக்கிறார். “அவ இறந்த பிறகு தான் நான் அரசியல் வேண்டாம்ன்னு முடிவெடுத்தேன். அவ ஒரு அற்புதமான மனைவி. நான் ஒவ்வொரு முறை போராட்டத்துக்கு போறேன்னு சொல்லும் போதும், வேற கட்சியில சேர போறேன்னு சொல்லும் போதும் சிரிச்சுகிட்டே போயிட்டு வாங்கன்னு சொல்லுவா” என்று நினைவு கூர்கிறார். இப்போது குலசேகரனால் எங்கும் செல்ல முடிவதில்லை. “ எனக்கு வயசாகிடுச்சு, நியாபக மறதி வேற வந்திருச்சு” என்று சிரித்தார். ஆனால் தாமிரபரணி தொடர்பான விஷயங்களில் மட்டும் இந்த 96 வயது இளைஞரின் மூளை சிறப்பாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. தாமிரபரணி தண்ணீரை பயன்படுத்தும் தொழிற்சாலைகள் பிரச்னையின் ஒரு பகுதிதான் என்றும், ஏரி, குளங்கள் பல வருடங்களாக, சில ஒரு நூற்றாண்டாக, தூர்வாரப்படாமல் இருப்பதே முக்கிய காரணம் என்கிறார். “இதனால் இந்த ஏரி குளங்களில் தண்ணீர் தங்குவதில்லை” என்றார். குலசேகரன் இந்த தொழிற்சாலைகளுக்கும் தொழில் வளர்ச்சிக்கும் எதிரி இல்லை. ஆனால் இந்த ஆலைகள் நதிநீருக்கு பதில் கடல் நீரை பயன்படுத்த வேண்டும் என்கிறார். “ ஒரு கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைச்சு அந்த தண்ணியை பயன்படுத்திகிட்டு தாமிரபரணிய விட்டுட்டாங்கன்னா நல்லா இருக்கும்” என்றார்.

தமிழில்: அர்ச்சனா நன்றி: ஸ்குரால் இணையதளம்.

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments