அத்தியாயம் 1: முரண்கள் – ஓர் அறிமுகம்
மனித இனம் வேளாண்மைக்காக முதல் விதையை மண்ணில் ஊன்றியதில் இருந்தே மனித சமூகத்துக்கும் இயற்கைக்கும் இடையிலான முரண் (Contradiction) வலுக்கத் துவங்கிவிட்டது. வேளாண்மை அளவிற்கு அதற்கு முன்னர் மனிதனின் எந்த செயல்பாடும் இயற்கையை பெரிய அளவில் மாற்றி அமைத்ததில்லை. காரணம், புவியியல் பூகோள காரணிகள் போன்ற பல காரணிகளின் வழி போய்க்கொண்டு இருந்த இயற்கையின் பாதையை, மனித சமூகம் தனது உற்பத்திக்காக வளைத்தது. இது தவறு இல்லை. இயற்கையை வளைக்கும் மனித உழைப்பினால் தான் நாம் உயிர்வாழ முடியும். உதாரணமாக, உழவு செய்வதற்கு மனிதர்கள் காட்டை அழிக்க வேண்டி இருந்தது. ஆறுகளின் ஓட்டத்தை தடுத்து பாசனத்திற்கு திருப்ப வேண்டியிருந்தது. (இது இன்றைய பெரும் அணைகளை பற்றியதல்ல. சிந்துநதி நாகரிக காலத்தில் இருந்தே சிறு சிறு அணைகள், குளங்கள், ஏரிகள் போன்றவை பாசனத்திற்கு கட்டப்பட்டன.)
அதே நேரம் இயற்கையை மொத்தமாக அழித்துவிட்டும் மனித சமூகத்தால் பிழைத்திருக்க முடியாது. இயற்கை வேண்டும்; அந்த இயற்கையை சிறிது வளைக்க வேண்டும், அது தவிர்க்க முடியாதது. உற்பத்தி என்பதே அடிப்படையில் மனிதருக்கும் இயற்கைக்கும் இடையிலான தொடர்பு தான். அந்த தொடர்பில் முரண் இருக்கும். இருந்தே ஆகவேண்டும். இது தான் மனிதருக்கும் இயற்கைக்கும் இடையில் உற்பத்தியின் விளைவால் நிகழ்ந்து கொண்டிருக்கும் அடிப்படை முரண், ‘மானுட-இயற்கை’ (Human-Nature) முரண்.
ஆனால், சமீப காலம் வரையில் இந்த முரணின் மீது போதிய ஆய்வுகள் செய்யப்படவில்லை. முரண்களின் மூலம் உலகைப் புரிந்துகொள்ளும் மார்க்சிய அடிப்படை கொண்ட அறிஞர்கள், குழுக்கள், கட்சிகள் கூட மனிதருக்கும் இயற்கைக்குமான இந்த முரணை ஒதுக்கியே வந்துள்ளனர் அல்லது மிகவும் அரிதாக விவாதித்துள்ளனர். காரணம் மனித சமூகத்தில் இந்த முரண் மட்டும் இல்லை. உலகமே முரண்களால் நிறைந்தது என்கிறது மார்ச்சிய தத்துவம். அதில் சில முரண்கள் அவ்வப்போது முதன்மை முரண்களாக (Principal Contradiction) மாறும். அப்படி முதன்மை முரணாக மாறிய ஒன்றின் விளைவுகள் சமூகத்தின் அனைத்து தளத்திலும் எதிரொலிக்கும். மார்க்சியர்களைப் பொறுத்த வரை உற்பத்தியின் பலனை பிரித்துக் கொள்வதில் வர்க்கங்களுக்கு இடையில் உருவான முரணே முதன்மை முரண் என்று பல ஆண்டுகளாக கூறியிருக்கின்றனர். ஆனால், 20 மற்றும் 21ஆம் நூற்றாண்டில் ‘மானுட-இயற்கை’ முரண், முதன்மை முரணாக மாறிக்கொண்டு இருக்கிறது என்று ஒரு தரப்பினர் இன்று கூறுகின்றனர். ஜேம்ஸ் O’ கார்னர் என்கிற மார்க்சிய அறிஞர் இதனை ‘முதலாளித்துவத்தின் இரண்டாம் முரண்’ என்று வரையறுக்கிறார். இதனை சிலர் மறுக்கவும் செய்கின்றனர்.
நடந்து கொண்டிருக்கும் காலநிலை மாற்றங்கள், புவியின் வெப்பமயமாதல், சூழல் சீர்கேடுகள், காற்று, நீர், நிலம் என எங்கெங்கும் சூழ்ந்துள்ள மாசு, உலகப்பெரும் நோய்கள், அழிந்து கொண்டிருக்கும் பிற உயிரினங்கள் போன்றவை ‘மானுட-இயற்கை’ முரணானது ஒற்றை முதன்மை முரணாக இல்லாமல் போனாலும் கூட, முதன்மை முரண்களுள் ஒன்றாக மாறி வருவதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த கருத்தாக்கத்தின் உண்மைத் தன்மையை புரிந்துகொள்ள நாம் முரண்களைப் பற்றி புரிந்து கொள்ளுதல் வேண்டும்.
மேலுள்ள பத்திகளை வாசிக்கும் போதே பல கேள்விகள் நம் மனதில் எழுந்திருக்கும். முரண் என்றால் என்ன? முதன்மை முரண் என்றால் என்ன? முதலாளித்துவத்தில் உள்ள முரண்கள் என்னென்ன? அவற்றுள் முதன்மை முரண் எது? ‘தற்போது ‘மானுட-இயற்கை’ முரண் முதன்மை முரணாக மாறுவதாகக் கூறப்படும் கோட்பாட்டில் எந்த அளவு உண்மை உள்ளது? இது போன்ற பல கேள்விகளுக்கு நாம் இந்த தொடரில் விடை காணப் போகிறோம்.
அதற்கான ஒரு துவக்கமாக இந்த தொடர் அமையும். முரண்களின் அடிப்படையில் இருந்து துவங்கி, முதலாளித்துவ யுகமான இந்த காலகட்டத்தில் மானுட-இயற்கை முரண் எந்த நிலையில் இருக்கிறது, இதனால் விளையப் போகிறவை என்னென்ன போன்றவற்றை தொடர்ந்து விவாதிக்கலாம். முதலில் முரணின் அடிப்படையை இந்த அத்தியாயத்தில் புரிந்து கொள்ளலாம்.
முரண்கள் சூழ் உலகு:
முரண்களின் அடிப்படை என்பது ‘தத்துவத்தில்’ இருந்தே பிறக்கிறது. தத்துவம் இரண்டு கோட்பாடுகளின் பார்வையில் முரணை அணுகுகிறது.
ஒன்று அரிஸ்டாட்டிலின் தர்க்க (Aristotelian Logic) கருத்துருவாக்கம். இது முரண்கள் எதிர் தன்மயதானவை என்றும் ஒன்று இருக்கும் போது இன்னொன்று இருக்காது என்றும் கூறுகிறது. இந்த கூற்று, அடிப்படையில், ஒன்று உண்மை என்றால் இன்னொன்று பொய் என்னும் தர்க்கத்தில் வரும். உதாரணமாக இரவும் பகலும் எடுத்துக்கொள்வோம். தற்போது இரவு என்று கூறினால், அது பகல் இல்லை என்ற பொருளை சேர்த்தே புரிந்து கொள்ளலாம். தர்க்கத்தின் தளத்தில் இந்த கருத்துருவாக்கத்திற்கு இருக்கும் பயன் எதார்த்த தளங்களில் பெரிதாய் இருப்பதில்லை. அதாவது உலகையோ சமூகத்தையோ புரிந்து கொள்வதில் இதன் பயன் மிகவும் சொற்பமே.
இன்னொரு கருத்துருவாக்கம் இயங்கியல் தத்துவத்தின் (Dialectic) அடிப்படையில் எழுந்தது. ஒரு அமைப்பிலோ, இயக்கத்திலோ, நிகழ்விலோ, பொருளிலோ இரண்டு எதிர்த் தன்மை கொண்ட கூறுகள் அல்லது எதிர் தன்மை கொண்ட விசைகள் ஒரே நேரத்தில் முட்டிக்கொண்டு இருப்பதை இந்த இரண்டாம் கருத்துருவாக்கம் குறிக்கிறது. உதாரணத்திற்கு நமது அன்றாட வாழ்வை எடுத்துக்கொள்ளலாம். தினமும் கையில் இருக்கும் 24 மணி நேரத்தை வேலைக்கும் குடும்பத்திற்கும் இடையில் பிரித்துக் கொடுப்பதில் ஒரு முரண் நிலவுகிறது. இந்த முரணில் இரண்டுமே முக்கியம் தான். வேலைக்குச் சென்றால் தான் குடும்பத்திற்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய பொருள் இருக்கும். அதுவே, அதிக நேரத்தை வேலையிலேயே செலவிட்டுவிட்டால், குடும்பத்தின் தன்மை மாறிப்போகும். இந்த இரண்டும் மோதிக்கொண்டு ஒன்றை ஒன்று அழித்துவிடாத வண்ணம் ஒரு சமநிலையை (Equilibrium) எட்டுகிறது.
இந்த முரணில் ஒன்றின் அளவு அதிகமானாலும் கூட அது நெருக்கடியில் (Crisis) போய் முடியும். சமநிலையில் உள்ள வேலை-குடும்பம் முரணில் திடீரென ஒரு சமயத்தில் வேலைப்பழு கூடுகிறது, அல்லது வேறு ஒரு ஊருக்கு சென்று வேலை பார்க்க வேண்டியுள்ளது, அல்லது குடும்பத்தில் குழந்தை பிறக்கிறது போன்ற நிகழ்வுகள் நாம் பார்த்த முரணின் ஒரு பக்கத்தின் வலுவை அதிகரித்து நெருக்கடி நிலையை உருவாக்கும்.
இந்த நெருக்கடியை முறியடிக்க நாம் அந்த முரணின் தன்மையில் எது அதிகமாகி உள்ளது, எதனை மாற்றியமைக்க முடியும், புதிதாக எதுவும் செய்ய முடியுமா போன்ற முயற்சிகள் எடுக்கும்போது, முரண் மீண்டும் சமநிலையை அடையலாம். தாம் செல்லும் ஊருக்கே குடும்பத்தையும் அழைத்து செல்லலாம், குழந்தையை பார்த்துக் கொள்ள ஆட்களை நியமிக்கலாம், அல்லது குழந்தையை பார்த்துக்கொள்ள வருமானத்தோடு கூடிய விடுப்பு எடுக்கலாம். இது போன்ற முயற்சிகள், சமநிலை தவறிக்கொண்டு இருக்கும் முரணை மீண்டும் கட்டுக்குள் கொண்டு வரும்.
அதுவே எதுவும் செய்ய முடியாத சூழலில், முரணின் தன்மையால் நிகழ்ந்த நெருக்கடிநிலை முற்றி அது மொத்த அமைப்பையும், நிகழ்வையும், இயக்கத்தையும் அடியோடு பெயர்த்து எறியும்; மாற்றி அமைக்கும் (Revolutionary Change). இந்த அடியோடு நிகழ்ந்த மாற்றம் அடுத்த கட்டத்திற்கு செல்லும்போது, வேறொரு கட்டுக்குள் உள்ள முரணை அடிப்படையாய் வைத்து மீண்டும் ஒரு சமநிலையை உருவாக்கும். இப்படி தான் முரண்களினால் ஒரு அமைப்பின் சமநிலையும், அதே அமைப்பின் மாற்றமும் நிகழ்கிறது என இயங்கியல் தத்துவக் கருத்துருவாக்கம் கூறுகிறது.
இயற்கையில் முரண்கள்:
இது போன்ற முரண்கள் பிரபஞ்சம் முழுதும் இருக்கிறது என்கிறது இயங்கியல் தத்துவம். இது மிகவும் புகழ்பெற்ற எடுத்துக்காட்டு. ஒரு அணுக்கருவில் இருக்கும் இரண்டு எதிர் விசைகளை பார்ப்பது. ஒரு அணுக்கருவில் நேர் அயனி கொண்ட நிறைய ப்ரோட்டான்கள் அருகருகே இருக்கும். பொதுவாக ஒரு நேர் அயனி இன்னொரு நேர் அயனியை விலக்கித் தள்ளும். ஆனால், அணுக்கருவில் இருக்கும் ‘பலமான அணுவிசை’ (Strong Nuclear Force) அந்த விலக்கும் விசைக்கு எதிராக ப்ரோட்டான்கள் நியூட்ரான்களை அருகருகே நெருக்கி அணுக்கருவை இறுக்கமாக பிணைத்துள்ளது. ஒரு குறிப்பிட்ட அளவிலான ப்ரோட்டான்களும் நியூட்ரான்களும் இருக்கும் வரை இந்த சமநிலை நிலைத்திருக்கிறது.
இதில் ஒருபக்க முரணை அதிகரிக்க ஒரே ஒரு நியூட்ரானை அணுக்கருவை நோக்கி செலுத்தினால், இந்த சமநிலை நெருக்கடி நிலைக்குச் சென்று, அதனை சமாளிக்க முடியாமல் அந்த அணுக்கரு அணுவெடிப்பாக (Nuclear Fission) வெடித்துச் சிதறுகிறது.
வெடித்து சிதறிய பின்பு அடுத்த சமநிலை கொண்ட ஒரு அணுவாக அது மாறும். அதன் கருவும் அதே ‘நேர்அயனி விலக்குவிசை’ மற்றும் ‘பலமான அணுவிசைக்கு’ இடையிலான முரணில் தான் நிலைபெறுகிறது. அணுவின் கருவில் இருக்கும் முரண் இது! உதாரணமாக யுரேனியம் அணுக்கரு வெடித்து சிதறினால் அது யுரேனியத்தை விட சிறிய அணுக்களான பாரீயம் மற்றும் கிரிப்டான் அணுக்களாக மாறும். இதன் அணுக்கருவிலும் அதே ‘நேர்அயனி விலக்குவிசை’ மற்றும் ‘பலமான அணுவிசைக்கு’ இடையிலான முரண் இருக்கும்.
சூரியக்குடும்ப அமைப்பில் சூரியனின் ஈர்ப்பிற்கும் கிரகங்களின் இயக்கத்திற்கும் இடையில் முரண் இருக்கிறது. இதுபோல கூறிக்கொண்டே போகலாம். இப்படி பிரபஞ்சம் முழுவதும் முரண்கள் இருக்கும் தன்மையை லெனின் ‘Universality of Contradiction’ என்கிறார். அதாவது எங்கெங்கும் முரண்கள் இருக்கின்றன என்கிறார். இதற்கு சில எதிர்வாதமும் இருக்கிறது. இயற்கையில் சிலவற்றில் முரண் எல்லாம் இருப்பதில்லை என்று சில விதிவிலக்குகள் வைக்கப்படுகின்றன. இவை சொற்பமானவை என்பதாலும் இயற்கையில் உள்ள முரண்களின் மீது நாம் அவ்வளவாக கவனம் செலுத்தப் போவதில்லை என்பதாலும் இதற்கு மேல் இந்த தத்துவார்த்த விவாதத்திற்குள் செல்ல வேண்டாம்.
நாம் கவனிக்க வேண்டியது மேற்சொன்னது போல இயற்கையில் மட்டும் இன்றி சமூக-அரசியல் அமைப்புகளிலும் முரண்கள் இருக்கின்றன என்பதைத் தான். இந்த முரண்கள் தான் சமநிலையான அமைப்புகளையும் தருகின்றன. அதனை வரலாறு காணாத அளவிற்கு மாற்றியும் அமைக்கின்றன.
சமூக அமைப்புகளில் முரண்கள்:
சமூக அமைப்புகளுக்குள் உள்ள முரண்கள் சிறிது வித்தியாசமானவை. உதாரணமாக குடும்ப அமைப்பின் தோற்றத்தின் போது அதற்குள் வரும் இரு வேறு பாலினத்திற்கு இடையில் பெரும் முரண்கள் இருந்திருக்கும். இன்றும் இருக்கிறது. ஆனால் இந்த முரண்கள் பல்லாண்டு காலமாக பல்வேறு செயல்பாடுகளின் மூலம் (அடக்குமுறை, பண்பாட்டு மதிப்புகள், ஏமாற்று வேலை என எப்படிப்பட்ட செயல்பாடாகவும் இருக்கலாம்) ஒரு சமநிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்றும் இந்த முரணை கட்டுக்குள் வைக்க இந்த சமூகமானது பண்பாடு, கௌரவம், ஒழுக்கம் போன்ற மதிப்புகள், கற்பு, சட்டங்கள், குடும்பம் என்ற அமைப்பிற்கு கொடுக்கப்பட்டுள்ள புனித இடம் போன்று பல கருவிகளுடன் போராடுகிறது. என்ன மாதிரியான வரலாற்று உருவாக்கம் இந்த முரண்களை கட்டுக்குள் வைக்க உதவியது என்பதைத் தோழர் ஏங்கெல்ஸ் அவரது “குடும்பம், அரசு, தனிச்சொத்து ஆகியவற்றின் தோற்றம்” என்னும் நூலில் மிகவும் விரிவாக பேசியிருக்கிறார்.
ஆனால், இன்றைய தேதியில் எதிர்முனையில் இருக்கும் இன்னொரு முரணில் சமூகநீதி, சுதந்திரம், சுயமரியாதை போன்றவை அதன் எதிர்பக்க முரண்விசையின் அளவைக் கூட்டிக்கொண்டே போகிறது. இதனால் குடும்பம் என்ற சமூக அமைப்பு இன்று நெருக்கடிநிலைக்குச் சென்று கொண்டிருப்பதையும், புதுமையான அழகான குடும்பங்களின் உருவாக்கத்தையும் பார்க்கிறோம்.
இயற்கையில் இருக்கும் முரண்களுக்கும், மனித சமூகத்தின் அரசியல்-சமூக அமைப்புகளில் உள்ள முரண்களுக்கும் வேறுபாடு என்னவென்றால், இயற்கையில் உள்ள முரணில் இரண்டு பக்க அளவும் உண்மையிலேயே சமமாக இருக்கும் போது தான் சமநிலையை அது எட்டும். ஆனால் சமூக அமைப்புகளில் இந்த சமநிலை வன்முறை மூலமாக, அடிமைத்தனம், அடக்குமுறை போன்ற செயல்பாடுகளின் மூலமாகவும் கொண்டுவரப்படும். இதனால் தான் ஆண்டான்-அடிமை சமூகம், நிலவுடைமைச் சமூகம் போன்ற சமத்துவமற்ற சமூக அமைப்புகள் எல்லாம் வரலாற்றில் இருந்திருக்கிறது. ஆனால், இது போன்ற செயல்பாடுகளால் அந்த முரணின் தன்மையும் அளவும் கூடிக்கொண்டே செல்கிறது. ஒரு சமயத்தில் அது ‘புரட்சியாக’ வெடிக்கிறது என்கின்றனர் மார்க்சியர்கள். இவ்வாறு வரிசையாக உருவான சமூக அமைப்புகளையும், அதன் முதன்மை முரண்களின் தன்மையையும் வைத்து மொத்த வரலாற்றையும் தோழர் மார்க்ஸ் ஆறு பிரிவுகளாக பிரிக்கிறார் (காண்க படம்). இதனைத் தான் ‘வரலாற்று பொருள்முதல்வாதம்’ (Historical Materialism) என்கிறார்.
இவ்வாறு இயற்கை மற்றும் சமூக பிரபஞ்சத்தில் பல இயக்கங்கள் இந்த முரணின் அடிப்படையில் நிகழ்கிறது என்பது இயங்கியல் தத்துவ கோட்பாட்டின் அடிப்படை. முரண்களின் அடிப்படையில் சமூகத்தைப் பார்ப்பது பல புதிய புரிதல்களை நமக்கு கொடுக்கும். ஒவ்வொரு அமைப்பிலும் உள்ள முரண்களை நாம் சிந்தித்தால் ஆச்சர்யமான பார்வை ஒன்று நமக்குக் கிடைக்கும். மார்ச்சியத்தைப் புரிந்துகொள்வதற்கான அடிப்படை இந்த முரண்களை புரிந்துகொள்வதும், முரண்களாக உலகை பார்க்கப் பழகுவதும் தான்.
இந்த கட்டுரை முரண்களைப் பற்றிய ஒரு அறிமுகத்தை போதுமான அளவு வழங்கியுள்ளது. இதனை அடிப்படையாக வைத்து எழுந்த வரலாற்று பொருள்முதல் வாதம் பற்றியும், அதில் முதலாளித்துவத்தின் உருவாக்கம் பற்றியும், இந்த வரலாற்றில் பல்வேறு பிரிவுகள் இருந்த முதன்மை முரண் பற்றியும் இந்த தொடரின் அடுத்த கட்டுரையில் காண்போம். அவை முதலாளித்துவத்தில் வலுத்து வரும் ‘மானுட-இயற்கை’ முரணைப் பற்றி புரிந்து கொள்ள நமக்கு உதவும்.
- த. ஹரி பாரதி
ஆய்வு மாணவர்,
ஐதராபாத் பல்கலைக்கழகம்.
குறிப்புகள்:
[1] Engels, F. (1942). The Origin of Family, Private Property and the State. New York: International Publishers.
[2] Harvey, D. (2014). Seventeen Contradictions and the End of Capitalism. Profile Books.
[3] Mao, Z. (1966). On Contradictions. In Four Essays on Philosophy (pp. 23-78). Foreign Language Press.