நம்மில் பலர் இச்சொற்றொடரைக் கடந்து வந்திருக்கக் கூடும். மறைந்த வேளாண் அறிஞர் நம்மாழ்வார் பயன்படுத்திய சொற்றொடர் இது. இயற்கை உழவர்கள் முதல் இன்றைய இளைஞர்கள் வரை முகநூல் பதிவுகளிலும் இயற்கை உழவர் மற்றும் உணவுத் திருவிழாக்களிலும் நம்மாழ்வாரின் ஓவியத்தின் கீழ் இந்த வாசகத்தை பயன்படுத்துவதைப் பார்த்திருக்கலாம். விதைகளைப் பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள் கூட இந்தச் சொற்றொடரைப் பயன்படுத்தும் சூழலில் விதைகளின் வீரியத்தை அறிந்த பலர் இந்த வார்த்தைகளின் வீரியத்தை அறிந்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. உயிர்காக்கும் உணவினை வழங்கும் விதைகள் காத்தல் பொருளாக அல்லாமல் அழிக்கும் பொருளான ஆயுதமாக மாறியது எப்படி. அதற்கு நாம் விதைகளின் வரலாற்றைக் கற்க வேண்டும்.
விதையும்ஆதிமனிதனும்:
காடுகளிலும் மலைகளிலும் சுற்றித் திரிந்து வேட்டையாடியும், காய்கனி கிழங்கு போன்றவற்றை அறுவடை செய்தும் பசியாறிய ஆதிமனிதன், தான் அறுவடை செய்தது போக எஞ்சிய தானியங்கள் சிதறி நிலத்தில் விழுந்து மீண்டும் வளர்ந்து வருவதைக் காண்கிறான். பின்னர் தன் கையிருப்பில் உள்ள தானியங்கள் தண்ணீர் பட்டு முளைவிடுவதைக் கண்டவுடன் இவைதான் பயிருக்கான ஆதாரங்கள் என்ற முடிவுக்கு வருகிறான். விதைகளில் இருந்து தான் பயிர்கள் முளைத்து செழித்து வளர்ந்து பலன் தருகின்றன என்ற உண்மையை அறிந்து கொண்ட கணம் முதல் விதைகளைத் தேடி சேமிக்கத் தொடங்கினான். அப்படி சேமித்த விதைகளை ஆங்காங்கே மண்ணில் புதைத்து வைத்துத் தண்ணீர்விட்டு அவை வளர்ந்து பலன் தரும் பொழுது அறுவடை செய்து உண்டு வந்தான். பின்னர் மலைகளில் இருந்து கீழ் இறங்கி வந்து சமதளத்தில் தன் சௌகரியங்களுக்கு ஏற்ப உழுது விதைத்து அறுக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுப்பிடித்தான். அது உழவுக்கலை என அறியப்பட்டது. ஆனால் உழுது விதைத்த அனைத்து விதைகளும் ஒரே சமயத்தில் முளைத்து விடவில்லை. ஒவ்வொரு பயிருக்கும் அதன் விதை முளைப்புத்திறனுக்கும் அவசியமான அதன் அதன் தன்மை, தட்பவெப்பநிலை, ஈரப்பதம், ஆயுள்காலம் என்று வெவ்வேறு காரணிகள் இருந்தன. இவற்றை அறிந்து ஒவ்வொரு பயிராகத் தரம் பிரித்து அவற்றின் ஆயுள்காலம், விதை உறக்ககாலம், பயிரிட உகந்த காலநிலை, அதன் இணைப்பயிர்கள் எதிர்ப்பயிர்கள், பூச்சித்தாக்கம், நோய்த்தாக்கம் போன்றவற்றை அலசி ஆராய்ந்து அனுபவப்பட்டு அட்டவணைபடுத்தும் முன் பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டது. ஆதிமனிதன் அதற்குள் பட்டம் பார்த்துப் பயிர்செய்யும் வேளாண் குடி சமூகமாக நாகரிக வளர்ச்சி அடைந்திருந்தான். நாகரிகம் மட்டும் வளரவில்லை அதனோடு சேர்ந்து விதைகளும் வளர்ச்சி அடைந்திருந்தன. விதைகளை மனிதன் அதன் சுவை, ஊட்டம், வளர்ச்சி, தோற்றம், நிலத்தின் தன்மை, நீரின் தன்மை போன்ற வெவ்வேறு புறக்காரணிகளால் அளந்து பிரித்துப் பெயரிட்டு வைத்திருந்தான். உதாரணமாக அரிசி கருப்பு நிறத்தில் உள்ளதால் கருப்புகவுணி என்றும், முடக்குவாதத்தைத் தடுப்பதால் முடக்கற்றான் கீரை என்றும் பல்வேறு வகையான உணவுப்பொருட்களுக்கும் பல இலட்சம் ரகங்களுக்கும் பழந்தமிழர் பெயரிட்டு வளர்த்து பாதுகாத்து வந்தனர். இவற்றை ஆதிமனிதர்களின் அறிவியல் வளர்ச்சியாகத் தான் பார்க்கவேண்டும். இந்தியாவில் அரைநூற்றாண்டு முன்புவரை 1,10,000 நெல்ரகங்கள் இருந்ததாக சூழலியலாலர் Debal Deb கூறுகிறார். ஆனால் இன்று உள்ளதோ 6000 க்கும் குறைவு அதிலும் தமிழ்நாட்டில் 200க்கும் குறைவுதான். நாம் அதிகம் நுகரும் அரிசிக்கே இந்நிலை என்றால் இன்ன பிற காய்கறிகள், கிழங்குகள், பழங்கள், பூக்கள், கீரைகள், தானியங்கள், பருப்புகள், எண்ணை வித்துக்கள் போன்றவற்றின் நிலை குறித்து நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள். இவையெல்லாம் காணாமல் போனது பெரு நிறுவனங்களின் சூழ்ச்சியால் மட்டும் அல்ல விதைகளைக் காக்க மறந்த நமது அறியாமையாலும் தான். நாகரிக வளர்ச்சியின் ஊடாக எப்படி விதைகளும் பரந்து விரிந்து வளர்ந்தது என்று பார்த்தோம். ஆனால் இவை இயற்கையால் மட்டுமே சாத்தியப்பட்டுவிடவில்லை. மனிதனின் உழைப்பும் அறிவும் பல நூற்றாண்டு பொறுமையும் சேர்ந்தே விதைகளின் பரிணாம வளர்ச்சிக்கும் பெருக்கத்திற்கும் வழிகோலின. எந்தவிதை எந்தக் குடும்பத்தைச் சேர்ந்தது, எவை சுவையில் நல்லது, எவை நுண்ணூட்டச் சத்துக்கள் நிறைந்தது என்று ஆராய்ந்து அறிந்து இயற்கையின் துணைக்கொண்டு பல்வேறு மரபு ரகங்களைக் கலப்பின முறையில் உருவாக்கிப் பெருக்கினர். இதனால் விளைச்சலும் சுவையும் மணமும் சத்துக்களும் பன்மடங்கு கூடின. இதன் காரணமாகவே பண்டைய நாகரிகங்கள் பல போர்களையும் காலனிய ஆதிக்கங்களையும் சந்திக்க நேர்ந்தது.
விதைகளும் அரசுகளின் தோற்றமும்
வேளாண்மையின் மகத்துவத்தால் அளப்பரிய விளைச்சலைக் கண்ட ஆதி உழவர்களின் மீது மற்ற இனக்குழுக்களின் கவனம் திரும்பியது. கற்கண்டைக் கட்டெறும்பு மொய்ப்பது போல் கூடுதல் விளைச்சலைக் கண்ட மற்ற இனக்குழுக்கள் போரிட்டு விளைச்சலைக் கொண்டு செல்ல வந்தன. இவற்றில் இருந்து தம்மையும் தம் விளைச்சலையும் காத்துக்கொள்ளவே வேளாண் சமூகங்கள் ஒன்று கூடி இனக்குழு கலாச்சாரத்தில் இருந்து அரசாட்சிக் காலத்திற்கு மாறின. தங்களுக்குளே அரசையும் அரசனையும் (சிற்றரசர்கள்) தேர்ந்தெடுத்து கோட்டை கொத்தலங்களை நிர்மாணித்து நில வரையரை செய்து தம் விளைச்சலையும் விதைகளையும் பாதுகாத்து வந்தனர். [கோட்டை என்ற சொல்லே விதை சேமிப்பில் இருந்துதான் வந்தது. உழவர்கள் அந்நாளில் விதைகளை நீண்ட காலம் சேமிப்பில் வைக்க விதைகளைச் சுற்றி மண்ணால் குழைத்துப் பூசி உள்ளே எறும்போ பூச்சியோ எதுவும் நுழைய வழியில்லாமல் அடைத்துவிடுவர். அதற்கு கோட்டை கட்டுதல் என்று பெயர்.] கதிர் முற்றிய வயலில் எலிகள் படையெடுப்பது போல் இச்சிற்றரசுகளின் மீது வேற்றுநாட்டவர் படையெடுத்து வரத் தொடங்கினர். அப்படிப் போரிட்டு வென்றவர்கள் நிலத்தையும் விளைச்சலையும் உடைமையாக்கிக் கொண்டதோடு தோற்றவர்களைத் தங்கள் அடிமைகளாக்கிக் கொண்டனர். பின்னர் தாங்கள் உழைப்பதை நிறுத்திக்கொண்டு அடிமைகளைக் கொண்டே நிலத்தை உழுது விதைத்து அறுத்து உண்டு சுகபோகமாக வாழ்ந்து வந்தனர். உழைப்பை நிறுத்திவிட்ட கூட்டம் நன்றாக உண்டு களித்ததன் விளைவாக உடல் தினவெடுத்து மீண்டும் மீண்டும் போரிடுவதை வழக்கமாக்கிக் கொண்டது. இதன் காரணமாகவே பல இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் உடமைகளையும் உயிரையும் இழக்க நேரிட்டது. எவற்றை இழப்பினும் தங்கள் உயிராதாரமான விதைகளைக் காக்க வேண்டும் என்ற உயர்ந்த அறிவு அவர்களிடம் இருந்ததால் தான் கடவுளுக்கும் மேலாக விதைகளைப் போற்றிக் கோயில் கலசங்களில் அவற்றைப் பாதுகாத்தனர். அனைத்தையும் இழப்பினும் மீண்டும் முதலில் இருந்து தொடங்கிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையை விதைகள் அவர்களுக்குக் கொடுத்தது. ஆனால் அதற்குள் உணவுக்காகத் தொடங்கிய போர் பல பரிணாமங்களை அடைந்து மன்னர்களின் நாடு பிடிக்கும் வேட்கையாக மாறி விட்டிருந்தது. பேராசை கொண்ட மனிதர்கள் போரையே தொழிலாய் ஏற்றுப் பல பேரரசுகளை உருவாக்கியிருந்தனர். வரலாற்றில் பெரிதும் புகழ்பெற்ற ரோமாபுரிப் பேரரசு முதல் சோழப் பேரரசு வரை அனைத்தும் ஆசையால் விளைந்ததே அன்றி அவசியத்தால் அல்ல. ஆனால் இந்தப் பேரரசர்கள் காலத்திலும் விதைகளின் மகிமை போற்றிப் பாதுகாக்கப்பட்டது என்னவோ உண்மைதான். அவர்களின் கடல் கடந்த வணிகத்தினால் தான் நாம் இன்று விரும்பி உண்ணும் தக்காளி, உருளை, வெங்காயம், பூண்டு, கேரட், பீன்ஸ், மிளகாய், கோதுமை போன்ற இன்னும் பல உணவுகள் வெளிநாட்டில் இருந்து இங்கு கொண்டு வரப்பட்டன. இங்கிருந்து அரிசி, வாழை, மிளகு, ஏலம் போன்ற பல்வேறு உணவுப் பொருட்களும் உலகம் முழுவதும் சென்று சேர்ந்தன.
விதைகளும்காலனியஆதிக்கமும்
இவ்வாறு உலகம் முழுவதும் சென்று சேர்ந்த விதைகள் உணவுப் பன்மயத்தைக் கொண்டு சேர்த்ததோடல்லாமல் வளமையின் ருசியை வானரக் கூட்டத்தின் நாவில் தடவி வந்தது. அந்தச் சுவை தான் ஐரோப்பியர்களைக் கப்பலேற்றி இங்கு இழுத்து வந்தது. மிளகு ஏலம் முதலான உணவின் சுவையூட்டிகளுக்கும் மற்ற இந்தியப் பண்டங்களுக்கும் அன்று ஐரோப்பாவில் பெரும் கிராக்கி இருந்தது. எந்த விலை கொடுத்தும் அவற்றைப் பெற பல ஐரோப்பியர்கள் தயாராய் இருந்தனர். (சொந்த உழைப்பில் ஈட்டி இருந்தால் செல்வத்தின் அருமை தெரிந்திருக்கும். எங்கு கொள்ளையடித்ததோ!) இவற்றை நேரடியாக இந்தியாவில் இருந்து தாங்களே வாங்கி விற்றால் பெரும் இலாபம் ஈட்டலாம் என்று அங்கிருந்து கிளம்பிய சில வணிகர்களால் தான் வரலாறே மாறிப்போனது. வணிகம் செய்ய வந்த கூட்டம் இந்தியாவின் அளப்பரிய வளங்களைக் கண்டவுடன் சூரையாடும் தம் இயற்பிற்குத் திரும்பியது. அதற்கு ஏற்றார் போல் இங்கு பகை பாராட்டிய பேரரசுகளும் அதற்கும் கீழே புரையோடிப் போயிருந்த சாதிய அமைப்பும் அவர்களுக்குத் தோதாய் போய்விட்டது. பின்னர் என்ன அதே பழைய கதைதான் போரும் நாடுபிடிப்பும் அடிமைத்தனமும் சுரண்டலும் சுகபோக வாழ்வும் (வெள்ளையர்களுக்கு!) தான். ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதுபோல் உழைக்கும் மக்களின் நிலை மென்மேலும் சரிவுரவே செய்தது. விதைகளைக் கண்டுபிடித்து வரலாற்றைத் தொடங்கிவைத்த அம்மக்கள் சில காலத்திலேயே அடிமைகளாய் மாறிப் போனார்கள். அன்று அடிமையானவர்கள் இன்று வரை மீளவில்லை. அதனால் தானோ என்னவோ தாய்க்குப் பின் தன் இரத்தத்தை உணவாக்கி உயிர் தந்து கொண்டிருக்கும் உழவர் கூட்டம் இன்றும் சமூகத்தால் இழிநிலையிலேயே வைக்கப்பட்டுள்ளது. விதை எவ்வளவு விந்தையானது பாருங்கள் நாகரிக வளர்ச்சிக்கும் காரணமாக இருந்தது பின்னர் அடிமைத் தனத்தின் நீட்சிக்கும் காரணமாக அமைந்து விட்டது.
விதைகள் எப்படி ஆயுதமாகின?
அடுத்த மாத இதழில் பார்க்கலாம்.
விதைகளே பேராயுதம்! – யாருக்கு?
அகிலன்பாலகுரு
சென்ற இதழின் தொடர்ச்சி…
விதைகளும்நவீனஅடிமைத்தனமும்
ஐரோப்பியர்கள் இங்கு வருவதற்கு முன்பும் கூட உழவர்களின் வாழ்வு அவலம் நிறைந்ததாய் இருந்தாலும் அவர்கள் வந்தபின் அது பேரவலம் ஆகிவிட்டது. காலனிய ஆதிக்கத்திற்கு முன்வரை வேளாண் உற்பத்தி என்பது பெருமளவு தேவை சார்ந்ததாகவே இருந்தது. உழவர்கள் தங்கள் சொந்தத் தேவைக்காகவும் வேளாண் சாராத தொழிலில் ஈடுபட்டவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் உணவுகளையே பயிர் செய்து வந்தனர். தேவைக்கு மிகுதியான உபரியைச் சேமித்து வைத்து உணவில்லாத காலங்களில் பயன்படுத்தி வந்தனர். இப்படித் தற்சார்பை அடிப்படையாகக் கொண்டு உழவு செய்து வந்த உழவர்களின் மீது அதிகப்படியான வரிகளை விதித்து அவர்களைக் கடன் வலையில் தள்ளித் தற்சார்பு வேளாண்மையில் இருந்து அவர்களைச் சந்தை வேளாண்மைக்கு மடை மாற்றம் செய்தனர். வெள்ளையர்களின் வரிவிதிப்புமுறை என்பது கண்மூடித் தனமானது. நிலத்தில் உழுதாலும் உழாவிட்டாலும் விளைந்தாலும் விளையாவிட்டாலும் கப்பம் கட்டியே தீரவேண்டும். இச்சூழலில் வரிகட்டுவதற்காகப் பணமுதலைகளிடம் கடன்வாங்கிய உழவர்கள் அந்தக் கடனிற்கு வட்டி கட்டவும் வெள்ளையர்களுக்கு வரிகட்டவும் உணவுப் பயிரை விடுத்து வணிகப் பயிர்களான பருத்தி, தேயிலை போன்றவற்றிற்கு மாறினர். இதனால் இத்தனை ஆண்டுகளாக அவர்கள் கடைப்பிடித்து வந்த தற்சார்புச் சங்கிலி உடைப்படத் தொடங்கியது. விதைக்கும், இடுபொருளுக்கும், விற்பனைக்கும் சந்தையை எதிர்பார்த்து நிற்கும் நிலை ஏற்பட்டது. இந்த மாற்றங்கள் எல்லாம் தொடங்கியது 19 ம் நூற்றாண்டில் தான். வேளாண்மையின் வீழ்ச்சி இதன் பின்னரே ஆரம்பமானது. வரலாறு நெடுகிலும் மக்கள் போரினாலும், வறட்சியினாலும், வராது வந்த பெரு வெள்ளத்தினாலுமே பஞ்சத்தைச் சந்தித்திருப்பர். ஆனால் ஏற்றுமதியாலும் வணிகத்தாலும் பஞ்சத்தைக் கண்டது அதுவே முதல் முறை. பசிக்காகவும் பிழைப்புக்காகவும் கொள்ளை அடித்த காலம் மாறி, இங்கு பலர் பசியால் இறந்து கொண்டிருப்பதையும் கண்டு கொள்ளாமல் தங்கள் வசதிக்காகவும், சுகபோகங்களுக்காகவும் ஒரு கூட்டம் விளைந்தவற்றை எல்லாம் சுருட்டிக் கப்பலில் ஏற்றிக் கொண்டு இருந்தது. இவ்வளவும் செய்துவிட்டுப் பஞ்சத்திற்கு அவர்கள் கூறிய காரணம் பெருகிவரும் மக்கள்தொகைக்கும் மாறிவரும் காலநிலைக்கும் ஏற்ப நம் உற்பத்தி முறைகளை மாற்றிகொள்ளாததுதான். கழனியே பார்த்திராத கூட்டம் உழவு செய்வது எப்படி என்று வேளாண் தொல்குடிகளுக்கு பாடம் நடத்தியது. இரசாயன உரங்களும், வீரிய விதைகளும், உழவு இயந்திரங்களும் பூச்சிக்கொல்லி ‘மருந்து’களும் இப்படிதான் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் முழுவதுமாக இங்கு வந்து சேர்ந்தது. இதற்கு வேறொரு காரணமும் உண்டு.
விதை ஆயுதமான கதை
கால் நூற்றாண்டு இடைவெளிக்குள் தொடர்ச்சியாக இரண்டு உலகப் போர்களைச் சந்தித்த மனிதச் சமூகம் சற்றே அயர்ந்துபோய் இருந்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் மக்களும் அரசுகளும் சிறிது சிந்திக்கத் தொடங்கினர். போரினால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பார்த்தப்பின்பு மக்கள் சிறிது நிலை குலைந்துதான் போனார்கள். வன்முறை வெறியாட்டங்களின் உச்சம் வளங்களை அழித்ததோடு அல்லாமல் மனிதவாழ்வையே புரட்டிப் போட்டு விட்டது. போரினைக் கைவிட மக்களும் அரசுகளும் எத்தனித்தாலும் போரினால் கொழுத்த இலாபம் அடைந்த முதலாளி வர்க்கம் அவற்றை இழக்க விரும்பவில்லை. முதலாளித்துவம் ஒரு ருசிகண்ட பூனை. ஆயுதம் விற்று இலாபம் ஈட்டியவர்கள் அதைவிட இலாபமான ஓர் பொருளைத் தேடினர். ஒருசில அரசுகளும் போராளிக் குழுக்களும் மட்டுமே நுகரும் ஆயுதங்களைவிட பலகோடி மனிதர்களும் விலங்குகளும் நுகரும் உணவையும் அதற்கு ஆதாரமான விதைகளையும் கட்டுப்படுத்த முடியும் என்றால் அது கணக்கில் அடங்கா இலாபம் தரும் என்று கணித்தனர். ஆயுதங்களுக்காகத் தயாரிக்கப்பட்ட வெடி உப்புகள் இரசாயன உரங்களாகப் பரிமாணம் அடைந்தன. போர்ச் சக்கரங்களை சுழலவைத்த கச்சா எண்ணெய்கள் ஏர்ச் சக்கரங்களுக்கு எரிபொருளாயின. வியட்நாமில் போடப்பட்ட இரசாயன குண்டுகள் பூச்சிக்கொல்லி ‘மருந்து’களாகப் புது வடிவம் பெற்றன. ஆய்வகங்களில் உருப்பெற்ற ஐஆர் 8ம்ஐஆர் 20ம் அணுகுண்டுகளாய் மண்ணில் புதைந்தன. பச்சைப் புரட்சியின் பெயரால் பெரும் வன்முறையே இங்கு நிகழ்த்தப்பட்டது. இதை வந்தனாசிவா அவர்கள் இன்னும் தெளிவாக ஆதாரங்களுடன் The Violence of the Green Revolution என்னும் தன் புத்தகத்தில் விளக்கியுள்ளார். வேளாண்மையில் தற்சார்பை அறுக்க வேண்டும் என்றால் அதை விதைகளில் இருந்து தொடங்க வேண்டும் என்று முதலாளித்துவச் சமூகத்திற்கு நன்றாகத் தெரிந்திருந்தது. ஏற்கனவே வணிகப் பயிர்களைச் சாகுபடி செய்து அதன் விதை முதல் விற்பனை வரை அனைத்திற்கும் முதலாளித்துவச் சந்தையை சார்ந்திருந்த உழவர்களை உணவுப் பயிர்களுக்கும் தங்களையே சார்ந்திருக்கும்படி செய்ய அவர்கள் பயன்படுத்தியது தான் “பச்சைபுரட்சி” (Green Revolution) என்னும்பச்சைபொய். பஞ்சம்தான்பச்சைபுரட்சிக்கானதேவையைஉருவாக்கியதுஎன்றுவாதிடுபவர்கள்அதெப்படிஒரேசமயத்தில் (1960’s & 1970’s) பச்சைபுரட்சிக்கானதேவைஇந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து, பாகிஸ்தான், இலங்கை, சீனா போன்ற 40க்கும் மேற்பட்ட நாடுகளில் குறிப்பாகக் கிழக்கத்திய நாடுகளில் ஏற்பட்டதென்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதிலும் குறிப்பாக நெல் மற்றும் கோதுமையில் தான் ‘புரட்சி’ நடைபெற்றது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். இந்தப் புரட்சிக்காக அரும்பாடுபட்ட விஞ்ஞானிகளைக் கொண்ட சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையம் போன்றவற்றின் ஆராய்ச்சிப் பணிகளுக்கு யார் நிதியுதவி அளித்தார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். விதைகளே பேராயுதம் என்பதை முதலில் கண்டுணர்ந்தது முதலாளி வர்க்கம்தான்.
பச்சைப் புரட்சியின் மூலம் உயர் விளைச்சல் (?) தரும் நெல்ரகங்களை உழவர்களின் கைகளில் தினித்தார்கள். பின்னர் அவை வளர்வதற்கு இரசாயன உரங்களைப் போடச் சொன்னார்கள். உரங்களின் வீரியத்தால் உடனே பச்சைக் கட்டி வளர்ந்த பயிர்களைத் தாக்கப் பூச்சிகள் படையெடுத்தன. பூச்சியைக் கொல்லப் பூச்சிக் கொல்லி மருந்துகளைத் தெளிக்கச் சொன்னார்கள். விரைவாக அறுவடை செய்ய இயந்திரத்தைக் கொடுத்தார்கள். கனரக இயந்திரங்கள் சென்று வந்ததால் மண் எளிதாக இறுகிவிட்டது. மண்ணை உழுவதற்குதான் ஏற்கனவே ட்ராக்டர் இருக்கிறதே. சரி, இரசாயன உப்புகளால் நிலம் அதிகம் தண்ணீர் கேட்கிறதே அதற்கு? ஆழ்துளைக் கிணறு தோண்டி விட்டால் போகிறது. இப்படி முடிவறியா ஓர் இருட்டுச் சுரங்கத்தில் உழவர்களை முதலாளித்துவம் தள்ளிவிட்டது. நம்மாழ்வார் தான் கூறுவார், “ட்ராக்டர் வித்தவனும், இரசாயன உரம் வித்தவனும், பூச்சிக்கொல்லி வித்தவனும், பம்ப்செட் வித்தவனும், ட்ராக்டருக்கு டீசல் வித்தவனும் எல்லாரும் கோடீஸ்வரன் ஆயிட்டான் அத வாங்குன நம்ம விவசாயி மட்டும் தெருக் கோடியில நிற்கிறார்” என்று. இதைவிட எளிமையாக முதலாளித்துவத்தின் கபட நாடகத்தை யாராலும் வெளிக்கொணர முடியாது.
விதை வணிகம் செய்யும் நிறுவனங்கள் பொதுவாக மூன்று வகையான விதைகளை விற்பனை செய்கின்றன. அவை உயர் விளைச்சல் ரகங்கள் (High yielding varieties), கலப்பின ரகங்கள் (Hybrid varieties), மரபணு மாற்றப்பட்ட விதைகள் (GMO varieties). இதில்
1)உயர் விளைச்சல் ரகங்கள் என்பது அதிகம் இரசாயன உரங்களைக் கேட்கின்ற எளிதில் பூச்சி மற்றும் நோய்த் தாக்கத்திற்கு ஆளாகின்றன ரகங்களாக உள்ளதால் உழவர்களின் உற்பத்திச் செலவு கூடுகின்றது. இதன் விதைகளை உழவர்களே மீண்டும் உற்பத்தி செய்து கொள்ள முடியும் என்றாலும் அடுத்தடுத்த தலைமுறை விதைகள் தரம் குறைந்தவையாக உள்ளன.
2) கலப்பின ரகங்கள் இயற்கையான முறையில் உற்பத்தி செய்யப்படுவதுதான் என்றாலும் அவை ஆய்வகங்களில் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இரண்டு வெவ்வேறு ரகங்களை ஒன்று சேர்ப்பதன் மூலம் கிடைக்கப் பெறுகிறது. இவற்றிற்கு நிறுவனங்கள் காப்புரிமை பெற்று விடுவதால் இவற்றை எளிதாக மற்ற நிறுவனங்களோ உழவர்களோ மறு உற்பத்தி செய்ய இயலாது. மேலும் இவற்றின் மூலம் கிடைக்கும் அடுத்த தலைமுறை விதைகள் தரம் குறைந்தவையாக உள்ளதால் மீண்டும் மீண்டும் விதைக்காக நிறுவனங்களை நம்பி உள்ள சூழலே நிலவுகிறது.
3) மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் என்பது இயற்கையான பயிர்களின் மரபணுவில் வேறு பயிர்கள் அல்லது உயிரினங்களின் மரபணுவைச் செயற்கை முறையில் சேர்ப்பது அல்லது திரிப்பது. இதற்குப் பல வழிமுறைகள் உண்டு. GMO குறித்து மட்டுமே தனியாக நீண்ட கட்டுரை எழுதலாம். என்னதான் இந்த விதை வணிகம் கோடிகளைக் கொட்டித் தந்தாலும் அவை நிறுவனங்களின் இலாப வேட்கையைத் தணிக்கவில்லை. எவ்வளவுதான் முயன்றாலும் விதைகளை முழுவதுமாக அவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியவில்லை. கட்டுப்பாடின்றிப் பரவுவது தானே விதைகளின் இயல்பு. அந்த இயல்பைத் தான் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது முதலாளி வர்க்கம். தாங்கள் காப்புரிமை பெற்ற விதைகளை உழவர்கள் வாங்க வேண்டும் என்று அவசியமில்லை அவர்கள் பயன்படுத்தும் விதைகளில் தம் விதைகளின் மரபணு கலந்துவிட்டாலே போதும், ஒன்றும் அறியா உழவர்களை மிரட்டிக் கப்பம் கட்டச் சொல்ல முடியும். இதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டது தான் “மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்”.(பார்க்க: Seed Giants vs US Farmers report by Centre for Food Safety and Save Our Seeds campaign groups.) GMO என்பது உற்பத்தியைப் பெருக்கி பசியைத் தீர்க்க தான் என்று நீங்கள் நம்பிக் கொண்டு இருந்தால் உங்களைப் போன்ற அப்பாவி யாரும் இல்லை.
இன்று உலகின் மூன்றில் இரண்டு பங்கு விதை வணிகத்தைக் கையில் வைத்திருப்பது வெறும் 4 பெரு நிறுவனங்கள் தான். இயற்கையில் விளைந்து உருவான விதைகளைப் பல்லாயிரம் ஆண்டுகளாக உழவர்கள் போற்றிப் பாதுகாத்து சில நூறாக இருந்தவற்றைப் பல இலட்சம் ரகங்களாகப் பெருக்கி உள்ளனர். பல்லாயிரம் ஆண்டுகளாக உழவர்கள் மேம்படுத்திய விதைகளை எடுத்து அறிவியல் தொழில் நுட்பங்களின் பெயரால் மாசுபடுத்தி வணிகமாக்கியதோடு அல்லாமல் காப்புரிமை பெற இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. அப்படிக் காப்புரிமை பெறுவதாக இருந்தாலும் நிறுவனங்கள் தான் விதைகளைப் பாதுகாத்துத் தந்த பலகோடி உழவர்களுக்கு ராயல்டி தரவேண்டும். இதைக்கூட கேள்வி கேட்காத, தடுத்து நிறுத்தாத ஓர் சமூகத்தை எவ்வாறு அறிவார்ந்த சமூகம் என்று அழைப்பது. வரலாற்றில் ஓர் மூடத்தனமான நாகரிகம் எதுவென்று கேட்டால் தயக்கமின்றிக் கூறுவேன் இந்த உலகமயமாக்கல் கால நாகரிகம்தான் என்று. ஏனெனில் வரலாற்றில் எத்தனையோ போர்கள் நடந்திருந்தாலும் அவையெல்லாம் இயற்கை தந்த இப்பூவுலகை ஆள்வதற்கான கனவில் நடைபெற்றன. ஆனால் இன்றோ அழிவுகாலம் கூப்பிடும் தூரத்தில் என்று தெரிந்தும் ஒரு சிறு கூட்டம் தன் ஆசைகளுக்குப் பூமியை இரையாக்குவதைத் தடுக்காமல் அதுதான் வளர்ச்சி என்று நாமும் ஒத்தூதுகிறோமே, நம் அறிவீனத்தை என்னவென்று சொல்வது. உயிர்காக்கும் உணவிற்கு ஆதாரமான விதைகளை யாரும் உரிமை கொண்டாட முடியாது. விதை என்பது பொதுவுடமை.
விதைகளேபேர்அரண்:
அறமற்ற இவ்வணிகச் செயல்பாடுகளைத் தடுக்க வேண்டிய அரசுகள் தலையாட்டி பொம்மைகளாய் மாறி விட்டபொழுது, நீதியை நிலைநாட்ட வேண்டிய நீதிமன்றங்கள் கண்களை மூடிக்கொண்டும் கைகளைத் திறந்து கொண்டும் தீர்ப்புகளை வழங்கி வரும்போது போராட்டமே ஒரே தீர்வு என்ற முடிவில் நம்மாழ்வார் போன்ற பல விவசாய ஆர்வலர்கள் கையில் எடுத்ததுதான் “விதைகளே பேராயுதம்” என்னும் முழக்கம். ஆனால் நாம் யாரையும் அழிப்பதற்கு விதைகளை ஆயுதமாய் ஏந்தவில்லை, மாறாக அழிவையே அறமாக ஏற்றிருக்கும் முதலாளித்துவத்திற்கு எதிராக நம்மைத் தற்காத்துக் கொள்ளவே முயற்சிக்கிறோம். தற்காப்பிற்குப் பயன்படுவது கேடயமே ஒழிய ஆயுதமில்லை. ஆயுதத்தால் என்றும் அமைதியை நிலை நாட்ட முடியாது. முதலாளித்துவத்தின் வெற்றியே அவர்கள் எண்ணத்தை நம் வார்த்தைகளில் (வாழ்க்கையில்) திணிப்பது தான். சரி ஒரு வார்த்தை என்ன அவ்வளவு பெரிய பிரச்சனையா? என்றால், ஆம். அது பெரிய பிரச்சினை தான். வீரம் என்ற சொல்லுக்கு உரிய பொருள் தெரியாத ஒரு தலைமுறை வீரம் வெட்டருவாளிலும், வேட்டி மடிப்பிலும், முறுக்கிய மீசையிலும் தான் உள்ளதாக நம்பிச் சுற்றி வருகிறது. மேடைகளில் அரசியல் தலைவர்கள் ஏந்தும் ‘வீரவாளு’க்கு இணையானது தான் விதைகளே பேராயுதம் என்னும் சொல்லாட்சி. இவை கொள்கைப் பிறழ்வுகளையும், சித்தாந்தத் தெளிவின்மையும் கொண்ட ஒரு தலைமுறை உருவாக வழி வகுத்து விடும். தற்சாற்பு என்னும் அரண் எழுப்பி விதைகளையும் உழவையும் காக்கும் நம் அருஞ் செயலைப் பிரதிபலிக்கும் சொல்லாடலைக் கைக்கொள்வோம். அதுவே நாம் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லும் பேரறிவு.
விதைகள் பேராயுதம் அல்ல பேர் அரண்.
முற்றும்
- அகிலன் பாலகுரு
ஐயா, உண்மையை உரக்க உரைத்ததற்கு நன்றி.
யாருமே கருத்துக்களைப் பதிவு செய்யவில்லை. இதில் இருந்தே தெரிகிறது நம் மக்களின் விழிப்புணர்வு…. ஐயா. நம்மாழ்வார் போல ஆயிரம் பேர் வந்தாலும் நம் மக்களை காப்பாற்ற முடியாது….