காட்டின் பொருள் தேடிய அரச குடும்ப வாரிசு

நீலகிரி காட்டுப்பகுதியில் மரங்கள் வெட்டப் படுவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தபோது, அந்த வழக்கு இந்திய சுற்றுச்சூழல் சட்டவியலில் ஒரு சரித்திரம் படைக்கும் என்பதை கோதவர்மன் திருமல்பாடு அறிந்திருக்க வாய்ப்பில்லை. கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பிரபலமான நிலாம்பூர் கோவிலகம் பகுதியில் அரச குடும்பத்தில் பிறந்தவர் கோதவர்மன் திருமல்பாடு. இந்தியா சுதந்திரம் பெற்றபோது இன்றைய தமிழகம், கேரளா, கர்நாடகம் மாநிலங்களை தழுவி ஆயிரக் கணக்கான ஹெக்டேர் நிலம் நிலாம்பூர் கோவிலகம் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்பகுதிகளை அன்று ஆட்சி செய்த மன வதன் ராஜா, அந்த பரந்த நிலப்பகுதியை தமது குடும்பத்தால் நிர்வகிக்க இயலாது என்று கூறி அன்றைய மெட்ராஸ் மாகாணத்திடம் ஒப்படைக்க முன் வந்தார். 1949ம் ஆண்டில் அரசு அந்த நிலத்தை கையகப் படுத்தியது. கேரள மாநிலம் உரு வாக்கப்பட்டபின் அந்த பரந்த நிலப்பகுதி தமிழ்நாடு மற்றும் கேரள மாநில எல்லைக்குள் இருந்தது. 1995ம் ஆண்டில் கூடலூர் வழியே பயணம் செய்தபோது, முன்பொரு காலத்தில் அவரது குடும் பத்தி னருக்கு சொந்தமாக இருந்த காட்டு நிலத்தில் பெருமளவிலான மரங்கள் வெட்டப்படுவதை கண்டு கோதவர்மன் மனம் வருந்தினார். அவரது நண்பரும், வழக்கறிஞருமான ஏ.எஸ். நம்பியாரிடம் இது குறித்து விவாதித்தார். உச்சநீதிமன்றத்தில் நீதிப்பேராணை (சிவில்) வழக்கு எண்: 202/1995 பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜே.எஸ்.வர்மா மற்றும் பி.என்.கிர்பால் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வரும்போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. அதில் முதன்மை யானது: இந்திய காடுகள் சட்டம் 1927ம் ஆண்டி லேயே இயற்றப்பட்டிந்தபோதிலும், காடு என்பதற்கான சட்டபூர்வமான வரையறை அன்றுவரை இல்லை என்பதே! மேலும் மரம் சார்ந்த தொழில்களுக்காக எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் நாடு முழுவதிலு முள்ள காடுகள் அழிக்கப்படுவதையும் உச்சநீதி மன்றம் கண்டுகொண்டது. இதையடுத்து, நாட்டிலுள்ள அனைத்து மாநில அரசுகளும் இந்த வழக்கில் இணைக்கப்பட்டன. மேலும் நீலகிரி மலைப்பகுதியை பாதுகாப்பதற்காக தொடரப் பட்ட இவ்வழக்கு, இந்தியா முழுமைக்குமாக விரிவு செய்யப்பட்டது.

மரங்கள் வெட்டப்பட்டு காடுகள் அழிக்கப் படுவதை தடுக்க உச்சநீதிமன்றம் தீர்மானித்தது. காடு என்ற சொல்லுக்கான சட்டபூர்வமான வரையறை நிர்ணயிக்கப்படும்வரை அகராதியில் இருக்கும் பொருளை பயன்படுத்த தீர்மானிக்கப் பட்டது. நாடு முழுவதிலும் உள்ள அனைத்து காட்டுப் பகுதிகளிலும் மரங்களை வெட்ட தடை விதிக்கப்பட்டது. இதனால் மரம் சார்ந்த பல்வேறு தொழில்களோடு, காட்டுப்பகுதிக்குள் நடைபெற்று வந்த கனிமச் சுரங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டன. ஏறக்குறைய காட்டின் பாதுகாவலராக உச்சநீதி மன்றம் நடந்துகொள்ளத் தொடங்கியது. காட்டுப் பகுதிகளை மேலாண்மை செய்வதற்காக உச்சநீதி மன்றம் பல்வேறு நிபுணர் குழுக்களை அமைத்தது. காட்டுப்பகுதிகளுக்குள் தொழில் தொடங்கு வதற்காக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெறும் அனைத்து தொழில் திட்டங்களும், கோதவர்மன் திருமல்பாடு தொடர்ந்த வழக்கில், இடைமனு பதிவுசெய்து, உச்சநீதிமன்றத்தின் அனுமதியை பெற்ற பின்னரே தொழிலை தொடங்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இவ்வாறாக கோதவர்மன் திருமல்பாடு தொடர்ந்த வழக்கில் அந்த வழக்கிற்கு நேரடியாக தொடர்பில்லாத, சுமார் 800 இடைமனுக்கள் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டன. இவ்வாறாக காட்டுப் பகுதியை கட்டுப்பாடில்லாமல் அழிக்கும் போக்கை ஓரளவு கட்டுப்படுத்த முயற்சி நடைபெற்றது. இந்தியாவில் உள்ள காடுகளை பாது காக்க உச்சநீதிமன்றம் மேற்கொண்ட முயற்சிகளை மத்திய அரசோ, மாநில அரசுகளோ ரசித்ததாக தெரிய வில்லை. அரசுகளுக்கு உரிமை யான கொள்கை வகுக்கும் பணியை, நீதிமன்றம் எடுத்துக்கொண்டதாக விமரி சனங்கள் எழுந்தன. ஆனால் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு, காடு என்ற சொல்லுக்கான வரையறையை தீர் மானிக்குமாறு மத்திய அரசுக்கும், அனைத்து மாநில அரசுகளுக்கும் இட்ட உத்தரவு இன்றுவரை நிறைவேற்றப்பட வில்லை. காடு என்ற சொல்லுக்கான சட்டப்பூர்வமான நிர்ணயம் விரைவில் உறுதி செய்யப்படும் என்று மத்திய சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான முன்னாள் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் அண்மையில் அறிவித்தார். ஆனால் காடு என்ற சொல்லின் பொருள் புரியாமலே மத்தியிலும், மாநிலங்களிலும் வனத் துறைகள் இயங்குகின்றன. டாடா குழுமத்தின் ஏஜென்ட்டாக செயல் பட்ட நீரா ராடியா போன்றவர்கள் ஆதிக்கத்தில்தான் மத்திய சுற்றுச் சூழல் வனத்துறை அமைச்சகமே செயல் படுவதாக தோன்றுகிறது. இதில் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களின் பங்கும் குறைத்து மதிப்பிடத்தக்கதல்ல. கோதவர்மன் திருமல்பாடு தொடர்ந்த வழக்கினால் பாதிக்கப்பட்ட சிலர், வழக்கை திரும்பப் பெறுவதற்காக அவருக்கு லஞ்சம் அளிக்க முன் வந்தனர். அப்போது அவர் கூறினார்: “பணத்தோடு நான்கு பேர் மட்டும் வாருங்கள். எனது கைத்துப்பாக்கியில் ஐந்து குண்டுகள் நிரப்பலாம். பணத்தோடு வரும் நான்கு பேரையும் சுட்டுக் கொல்வேன். பிறகு நீங்கள் கொண்டுவந்த பணத்தில் வைத்து எனது உடலை தகனம் செய்யுமாறு என் மனைவிக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு நானும் அதே துப்பாக்கியில் மீதமுள்ள ஒரு குண்டு மூலம் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்வேன்.” இவ்வாறு கூறிய, கோதவர்மன் திருமல்பாடு கடந்த 2016, ஜூன் மாதம் முதல் தேதியன்று, தனது 86வது வயதில் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். வழக்கு தொடுப்பதன் மூலம் அவர் பாதுகாக்க விரும்பிய நிலாம்பூர் கோவிலகம் பகுதியில் இருந்த மரங்களை காப்பாற்ற முடியவில்லை என்பதே உண்மை. காடுகளை காப்பாற்றும் அவரது கனவுகள் நனவாகுமா என்பதை பொறுத் திருந்துதான் பார்க்க வேண்டும்.

அஞ்சலி

இதையும் படிங்க.!