சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் வேடந்தாங்கலுக்குள் சன் பார்மா இயங்குகிறதா? பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி

சன் பார்மா தொழிற்சாலை சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்குள் இயங்கி வருகிறதா? என்பது குறித்து தெளிவுபடுத்த ஒன்றிய அரசிற்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு.

செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சன் பார்மா எனும் மருந்து உற்பத்தி ஆலையானது ஒன்றிய சுற்றுச்சூழல் துறையின் சுற்றுச்சூழல் அனுமதியின்றி செயல்பட்டு வருவதாகவும் இவ்வளவு ஆண்டுகளாக இந்த ஆலையை செயல்பட அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மருந்து ஆலையால் நீர்நிலைகளுக்கு மாசு ஏற்பட்டுள்ளதால் வேடந்தாங்கல் ஏரியை பராமரிக்க நிரந்தரமாக நிபுணர் குழுவை ஏற்படுத்த வேண்டும். மருந்து ஆலையால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு உரிய இழப்பீட்டை பெற வேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் எம் ஆர் தியாகராஜன் என்பவர் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் 2020ம் ஆண்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

மனுதாரரின் குற்றச்சாட்டின்படி மருந்து ஆலை உரிய அனுமதி பெறாமல் இயங்கி வருகிறதா என்பதையும் ஆலையை சுற்றியுள்ள நீர்நிலைகளுக்கு மாசு ஏற்பட்டு உள்ளதா என்பதையும் உரிய சட்டங்களின்படி விரிவாக்கம் செய்யப்படுகிறதா என்பது குறித்தும் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு வனத்துறை, மத்திய சுற்றுச்சூழல் துறையின் தென் மண்டல பிரிவு அதிகாரி ஆகியோர் கொண்ட நிபுணர் குழுவை நியமித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவின் பேரில் நிபுணர் குழுவானது தனது அறிக்கையினையும் தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்திருந்தது.

இம்மனுவானது தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு 25.05.2022 அன்று விசாரணைக்கு வந்தபோது நிபுணர் குழு அளித்த அறிக்கை பரிசீலிக்கப்பட்டது. 01.04.2007 முதல் 02.01.2020 வரையிலான காலத்தில் ஆலையானது மாசு கட்டுப்பாடு வாரிய இசைவாணையுடன் செயல்பட்டதா என்பது குறித்தும் 1994ம் ஆண்டிற்கு பின்னர் இந்த ஆலையில் புதிய பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதால் அதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை ஆலை நிறுவனம் பெற்றிருந்தா என்பது குறித்தும் அறிக்கையில் தெளிவான தகவல்கள் இல்லை என்பதால்
இதுகுறித்து விரிவான அறிக்கையை தமிழ்நாடு மாசு கட்டுப்பாசு வாரியம் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

அதே நேரத்தில் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமலே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்குள் சன் பார்மா மருந்து உற்பத்தி ஆலை  இயங்கி வருகிறதா என்பது பற்றி ஒன்றிய அரசின் வனத்துறை தெளிவுபடுத்த வேண்டும் என உத்தரவிட்ட தீர்ப்பாயம் வழக்கை அடுத்தகட்ட விசாரணைக்காக ஜூலை 11ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

-செய்திப் பிரிவு

sun pharma
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments