வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் செயல்பட்டு வரும் சன் பார்மா ஆலை நிர்வாகம் மீது ஏன் இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை என ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுகாவில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்குள் செயல்பட்டு வரும் சன் பார்மா எனும் மருந்து உற்பத்தி ஆலையானது தனது உற்பத்தித் திறனை 25.5 TPM லிருந்து 134.082 TPM ஆக அதிகரிக்க 2022ஆம் ஆண்டு ஒன்றிய அரசிடமிருந் சுற்றுச்சூழல் அனுமதி பெற்றிருந்தது. இந்த சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்யக்கோரி சென்னையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் எம். ஆர். தியாகராஜன் என்பவர் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் 2022ஆம் ஆண்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இதே மனுதாரரால் ஏற்கெனவே சன் பார்மா மருந்து உற்பத்தி நிறுவனம் உரிய சுற்றுச்சூழல் அனுமதியின்றி வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்குள் செயல்பட்டு வருவதாக தொடரப்பட்ட மனு மீது 29.09.2022 அன்று பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியிருந்தது. அதில் 1994 முதல் 2006வரை ஆலையில் நடந்த விரிவாக்கப் பணிகளுக்கு EIA NOTIFICATION 1994ன் கீழ் சுற்றுச்சூழல் அனுமதி பெறாததால் விரிவாக்கம் செய்தது சட்டவிரோதம் எனவும் ஆலை செயல்பாட்டால் உண்டான சேதம் குறித்து மாசு கட்டுப்பாடு வாரியம் உரிய ஆய்வு செய்து முழுமையான இழப்பீட்டை சன் பார்மாவிடம் இருந்து பெற வேண்டும் எனவும் அந்தத் தொகையை வைத்து பறவைகள் சரணாலயத்தைப் பாதுகாக்க செயல் திட்டம் உருவாக்க வேண்டும் எனவும் இடைக்கால நிவாரணமாக ரூ.10 கோடி அபராதம் செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஆலையின் விரிவாக்கத்துக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட மனு மீது 10.04.2023 அன்று தீர்ப்பாயத்தில் நடந்த விசாரணையின்போது “ விதிமீறல்கள் தெரிந்தும் ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான அமைச்சகம் அனுமதியை ரத்து செய்வது, திரும்பப் பெறுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பதால் ஒரு திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கிய பின்னர் விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டால் ஒன்றிய அரசால் என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம்” எனக் கூறிய தீர்ப்பாயம், சுற்றுச்சூழல் அனுமதியின் நிபந்தனைகளை மீறியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? நடவடிக்கை எடுப்பதற்கான கால அவகாசம் என்ன? வேறு ஏதாவது திட்டங்களில் இதுபோல் சுற்றுச்சூழல் அனுமதி ரத்து, திரும்பப் பெறுவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான அமைச்சகம் விரிவான பதிலறிக்கை தாக்கல் வேண்டும் என உத்தரவிட்டது.
ஆனால், ஒன்றிய அரசு சன் பார்மா ஆலை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தான தகவல்களை தனது பதில் மனுவில் தாக்கல் செய்யவில்லை. கடந்த 11.10.2023 அன்று இவ்வழக்கின் விசாரணை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்திய நாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வில் மீண்டும் நடந்தது.
அன்று வழங்கப்பட்ட உத்தரவில், “ஆலைக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி இந்த தீர்ப்பாயம் செல்லாது என்று தீர்ப்பளித்தவுடன், ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆலையின் விரிவாக்கத்திற்கு வழங்கிய அனுமதியை மறுபரிசீலனை செய்து ஆலை நிர்வாகம்மீது தகுந்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்” என தன் அதிருப்தியை தீர்ப்பாயம் வெளிப்படுத்தியது.
மேலும், ஆலை விரிவாக்கத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை நிறுத்தி வைக்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன? இந்த சுற்றுச்சூழல் அனுமதி செல்லுபடியாகுமா? ஒன்றிய அரசு இந்த சுற்றுச்சூழல் நிறுத்தி வைக்கவோ, திரும்பப்பெறவோ மறு ஆய்வுக்கு உட்படுத்துமா? என்பது குறித்து ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்ட தீர்ப்பாயம் வழக்கு விசாரணையை 20.11.2023க்கு ஒத்தி வைத்தது.
- சதீஷ் லெட்சுமணன்