எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்!

 

 

 

2050 ஆம் ஆண்டின் ஏப்ரல் 21 ஆம் நாள், இரவு பதினோரு மணி.

மேஜையில் வெற்றுக் காகிதங்களுடனும் கையில் பேனாவுடனும் இனம்புரியாத உணர்வுகளுடன் அமர்ந்திருக்கிறேன். 2020 தொடங்கிக் கடந்த 30 வருடங்களின் கொந்தளிப்பான நினைவுகள் எனக்குள் என்னன்னவோ செய்துகொண்டிருக்கின்றன.

நாளை புவிநாள்.

ஆறாம் பேரழிவிற்கு முன்னான ‘ஆந்திரோபோசீன்’ காலகட்டத்தின் பிற்பகுதியிலேயே புவிநாள் அறிமுகமானதெனினும் அப்போது அது பெரிதாய் எங்கும் கவனம் பெறவில்லை. ஆனால், தொடர்ந்து நீடித்த காலநிலை பேரழிவுகள் மனிதர்கள் கோலோச்சிய ஆந்திரோபோசீன் காலகட்டத்தை முடித்து வைத்தபின் தற்போது எஞ்சியிருக்கும் சில இலட்சம் மனிதர்களுக்கு இந்நாள்  தமது பிள்ளைகளின் பிறந்தநாளை விட முக்கியத்துவம் வாய்ந்ததாகியிருக்கிறது.

எனினும் இது எங்களுக்கு கொண்டாட்டத்திற்கான நாளல்ல. சேப்பியன்ஸின் தவறான நடவடிக்கைகளாலும் பேராசையாலும் ஏற்பட்ட விளைவுகளை நாங்கள் நினைவுகூரும் நாள். அதை எம் பிள்ளைகளுக்கும் நினைவுபடுத்தும் நாள். 2020ல் தொடங்கி 2030 ஆம் ஆண்டில் உச்சம்பெற்ற, அதற்குமுன்பு சேப்பியன்ஸ் எப்போதும் கண்டிராத பேரழிவுகளும் அவற்றைத் தொடர்ந்து நடந்த பெரும் அரசியல் சமூகப் புரட்சிகளின் சுவடுகளும் எம் ஒவ்வொருவருக்குள்ளும் ஆழ்ந்த வடுவாக நீடித்திருக்கின்றன.

உலகையே புரட்டிப்போட்டுவிட்டது போன்ற மாற்றங்கள்! அத்தனை எளிதாய் மறந்துவிட முடியுமா என்ன?

அப்போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். 2020 ஆம் ஆண்டு வைரஸ் தொற்றில் தொடங்கி அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் என்னென்னெவெல்லாம் நடந்து முடிந்துவிட்டது? வைரஸ் தொற்றுத் தொடங்கியபோது அறிவிக்கப்பட்ட ஊரடங்கும் விடுமுறையும் தந்த மகிழ்ச்சி இன்னும் நினைவிருக்கிறது. ஆனால், அதுதான் கடைசியாக நாம் மகிழ்ந்த கணம் என்று எவரும் கனவிலும் கூட நினைக்கவில்லை. எத்தனை கொடூரங்கள். கடந்த முப்பது ஆண்டுகளின் நினைவுகள் மட்டும் எம் சிந்தையிலிருந்தும் வரலாற்றிலிருந்தும் அழிந்து போய்விட்டால் எத்தனை நன்றாக இருக்கும்?

இது எதையுமே பார்க்காமல் பெருந்தொற்றில் இறந்த பல லட்சம்பேர் நிச்சயமாய் பாக்கியவான்கள்தான்.

2019 ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கியிருந்த கொரோனா தொற்று தன் கோரத்தாண்டவத்தை முடிப்பதற்குள் 2021 ஆம் ஆண்டு தொடங்கியிருந்தது. தொடர்ந்து அதிகரித்த வெப்பம், வறட்சி, தாறுமாறானப் பருவமழை மற்றும் பூச்சிகளின் படையெடுப்பால் ஏற்பட்டப் பெரும் பஞ்சம், வறண்ட ஆறுகள், வீழ்ந்த நிலத்தடிநீர், கடலில் மூழ்கிய நகரங்கள், வெள்ளம், இடைவிடாதச் சூறாவளிகள், காட்டுத்தீ, வெப்பக் கதிர்வீச்சு என ஒன்றன்பின் ஒன்றாகப் படையெடுத்து வந்த இயற்கைப் பேரிடர்கள், அதுகாறும் நாட்டாமை செய்துவந்த எம் நாகரீகத்தை மீண்டும் நாங்கள் எக்காலத்திலும் நிமிர்ந்து நின்றிடாதபடி எங்கள் நம்பிக்கையோடு சேர்த்துத் துடைத்தெறிந்துவிட்டது.

நெருக்கடி உச்சம் பெறத்தொடங்கியது 2024 ஆம் ஆண்டு முதலாய் எல்லா நாடுகளும் அடுத்தடுத்துக் காலநிலை அவசர நிலையை அறிவித்தன.  தொடர்ந்த சூறாவளிகள் மற்றும் வெள்ளம் போன்றவை வானிலை ஆய்வுக் கட்டமைப்புகளையும் தகவல் தொடர்புகளையும்கூட முழுமையாக முடக்கிப் போட்டுவிட்டன. ஆபத்து கருதி மின்னிலையங்கள் தம் உற்பத்தியை நிறுத்த எம் இரவுகள் நரகமாய்க் கழிந்தன.

காலநிலைச் சீற்றம் உச்சகட்டம் அடைய உலகின் எந்த மூலையும் அதிலிருந்துத் தப்ப முடியவில்லை. நிச்சயமற்ற எதிர்காலத்தால் இளைஞர்கள் திருமணத்தைத் தவிர்த்தனர். திருமணமானவர்கள் குழந்தைகள் பெற்றுக்கொள்ள மறுத்தனர். எந்நேரமும் ஏதேனுமொரு விதத்தில் கொல்லப்படலாம் என்ற பயத்திலேயே தினமும் பல்லாயிரம்பேர் மன அழுத்தத்தாலும் தம்மையே மாய்த்துக்கொண்டும் மடிந்து போயினர். எஞ்சியவர்கள் பேரிடர்களாலும் தொடர்ந்த தொற்று நோய்களாலும் கடும் உணவுப் பற்றாக்குறையிலும் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களைப் புதைப்பதற்கோ இல்லை அழுது அரற்றுவதற்கோ கூட எம்மிடம் வலுவில்லை.

தொழில்கள் முடங்கியது. பெரும் பொருளாதார மந்தம். எங்கும் ஏற்பட்டத் தீவிரக் காலநிலைப் பேரழிவுகளால் அரசுகள் ஸ்தம்பித்து வலுவிழந்தன. இராணுவங்களும் போர்த்தளவாடங்களும் பொருளற்றதாகின. அரசுகளின் கஜானாக்கள் காலியாக ஊதியம் கொடுக்க முடியாத நிலையில் அரசு ஊழியர்கள் பணிபுரிய மறுத்தனர். யாரும் யாரையும் அதிகாரம் செய்யவோ இல்லைக் கட்டுப்படுத்தவோ முடியவில்லை. ஆங்காங்கே வன்முறைகள் நிகழ்ந்தாலும் பெரும் நிச்சயமற்றச் சூழலில் மானிட சமூகம் ஒன்றுபட்டு அதை எதிர்கொள முயன்றது.

எனினும் கூர்மையான வர்க்க முரண்பாடுகளும் இல்லாமையும் இயலாமையும் அடித்தட்டு மக்களிடையேப் பெரும் ஆவேசத்தையும் கோபத்தையும் உருவாக்கியிருந்தன. தம்மைக் கட்டுப்படுத்தும் அதிகாரங்களை அவர்கள் உடைத்தெறியத் தொடங்கினர். ஆங்காங்கே சிறியதும் பெரியதுமான வன்முறைச்சம்பவங்களும் புரட்சிகளும் நிகழ்ந்தன. அவற்றில் சில வெற்றிகரமாக(!) அடக்கப்பட்டன. தீவிரக் காலநிலைப் பிறழ்வு சமூக ஏற்றத்தாழ்வுகளை இன்னும் கூர்மையாக்கப் பெரும் வன்முறைகள் அரங்கேறின. பல இடங்களில் உயர்வகுப்பினோரும் அதிகாரம் படைத்தோரும் கொல்லப்பட்டனர். பிழைப்பதற்காகக் கிடைத்த குறைந்தபட்ச வாய்ப்புகளையும் பறித்துக்கொள்ள வலியோர் முயன்றனர்.

பெரும் வணிக நிறுவனங்களும் வானியல் ஆய்வு நிறுவனங்ளும் சேர்ந்து பணம் படைத்தவர்களையும் அதிகாரம் படைத்தவரக்ளையும் 2028 ஆம் ஆண்டுக்குள் செவ்வாய்க்கு அனுப்பிட தொழிற்நுட்ப வாய்ப்புகளை ஆராய்ந்தபடி மண்டையைக் கசக்கிக்கொண்டிருந்தனர். கோடிகளில் பணத்தைக்கொட்டிக் காத்திருந்த சில ஆயிரம்பேர்களுக்கு 2029 ஆம் ஆண்டின் இறுதியில் அந்த வாய்ப்பு கை கூடியது. தொழிற்நுட்ப வல்லுநர்கள் உட்படப் பல்வேறுத் துறைகளைச் சார்ந்த ஆயிரத்து ஐநூறு ஊழியர்களைச் சுமந்தபடி மொத்தம் பத்தாயிரம் பயணிகளுடன் 600 விண்கலங்கள் செவ்வாய்க்குச் செல்வதாகத் தீர்மானமாகியிருந்தது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சில நிமிடங்களில் ஏவப்படுவதற்குத் தயாராக இருந்த 223 விண்கலங்களை மக்கள் போராட்டக் குழுவினர் ஏவுகணைகள் மூலம் தகர்த்தனர். எஞ்சியப் பயணிகளின் பதட்டத்தினாலும் அழுத்தத்தாலும் திட்டமிட்ட நேரத்துக்கு முன்பே புறப்பட்ட மேலும் 114 விண்கலங்கள் சில நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனானத் தொடர்பை இழந்தன. போராட்டக்காரர்களுக்குப் பயந்து கட்டுப்பாட்டு அறையின் ஊழியர்கள் அங்கிருந்துத் தப்பியோடினர்.

எங்கும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. தொடர்ந்த காலநிலை மாற்றப் பேரழிவுகளை மட்டுப்படுத்தும் பொருட்டு ஏறத்தாள அனைத்துத் தொழிற்சாலைகளும் மூடப்பட்டன.   விவசாயம் தவிர்த்த எந்தத் தொழில்களும் இல்லை. எனினும் விழைவதற்கு முன்பே பயிர்கள் கொள்ளை போயின. நாடுகளின் எல்லைகள் தகர்ந்தன, ஜிடிபி என்ற வார்த்தைப் பொருளற்றுப் போனது. பணம் வெறும் காகிதமாகியது. அதற்கு எம்மதிப்பும் இல்லை. அதிகாரம் செலுத்தியவர்கள் ஒழிந்துபோயினர் இல்லை ஒழிக்கப்பட்டனர்.

பலகோடி மக்களின் அகோர மரணமும் அதிகார பீடங்களின் வீழ்ச்சியும் 2030 ஆம் ஆண்டுக்குப் பின்னர் படிப்படியாகச் சமூகக் கொந்தளிப்பை ஓரளவுக்கு சாந்தப்படுத்தின. எனினும் காலநிலை மாற்றத்தின் கோரத்தாண்டவம் அத்தனை எளிதாய் அடங்கிவிடவில்லை. காலநிலை அகதிகளாக வெளியேறிய மக்கள் ஏற்கெனவே வெறிச்சோடியிருந்த நாடாளுமன்றங்கள் உட்பட அரசுக் கட்டிடங்களைக் கைப்பற்றிக் குடியேறினர். கொஞ்சம் கொஞ்சமாக அமைதி திரும்பியது.

ஆம்! அமைதி, இந்த அமைதி நிசப்த்த்தால் ஏற்பட்ட அமைதி. சிரிப்பு மட்டுமல்ல அழுகையும்கூட வறண்டுபோனதால் ஏற்பட்ட அமைதி. முப்பது ஆண்டுகள் எப்படிக் கடந்தது என்றுத் தெரியவில்லை. 20 வயதில் தொடங்கிய பிழைத்திருப்பதற்கான ஓட்டம். அத்தனை நண்பர்களையும் உறவுகளையும் இழந்து ஒற்றை மனிதனாய் ஓடியிருக்கிறேன். என்னைப் போன்றே அங்குமிங்குமாய் ஓடிக்கொண்டிருந்த எந்த அறிமுகமுமற்றப் பல மனிதர்களைப் பார்த்த மாத்திரத்திலேயே கட்டித் தழுவி தொண்டை வற்றுமளவுக்கு உடைந்து அழுதிருக்கிறேன். வாழ்வதற்கான எந்த அவகாசமுமின்றி இதோ ஐம்பது வயதின் நின்றுகொண்டிருக்கிறேன்.

இப்போது பேரழிவின் இறுதியில் எஞ்சிய நாங்கள் கடல் விழுங்கியதுபோக மீத நிலப்பரப்பில் ஆங்காங்கே சிதறி வாழ்ந்து வருகின்றோம். கைவிடப்பட்ட அணுமின் நிலையங்களின் கதிரியக்கத்தால் கடலின் மேலிருக்கும் நிலப்பகுதிகளிலும் பெரும்பகுதி நாங்கள் நுழையக்கூடாத இருண்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருக்கிறன. நாடுகளின் எல்லைகள் முற்றிலுமாய் தகர்ந்து போயிருக்கின்றன. எங்களுக்கு இப்போது அரசுகள் இல்லை. இராணுவம் இல்லை. போர் இல்லை. அழிவுகளின் சாட்சிகளாய் வாழும் பெரியவர்கள் நடைபிணங்கள்போலத் திரிந்தாலும் எங்கள் பிள்ளைகள் இந்த வாழ்வுக்கு நன்கு பக்குவப்பட்டிருக்கின்றனர். நாங்கள் வாழ்ந்த வசந்தகால உலகத்தை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லையெனினும் தாம் வாழும் உலகத்தின் எஞ்சியிருக்கும் உயிர்ப்பை ஆழ்ந்து  அனுபவிக்கக் கற்றுக்கொண்டிருக்கின்றனர்.

உற்பத்தித் தொழில்களின் முடக்கத்தால் கார்பன் சமநிலை எட்டப்பட்டிருந்தாலும் ஏற்கெனவே வழிமண்டலத்தில் உமிழப்பட்ட பசுமை இல்ல வாயுக்களின் விழைவுகள் எங்களை விடாது துரத்திக்கொண்டேயிருக்கின்றன. பருவமழை என்பதே இல்லாது போய்விட்டது. எப்போது வெயிலடிக்கும் எப்போது புயலோ மழையோ வருமென்று எவரும் கணிக்க முடிவதில்லை. எனினும் இச்சூழலில் வாழ நாங்கள் கற்றுக்கொண்டிருக்கிறோம். பிழைத்திருக்க ஓடிக்கொண்டிருப்பதே வாழ்க்கையும் வாடிக்கையுமாகிவிட்டது.

கடுமையானச் சூழல்களைத் தாக்குப்பிடித்து வளரும் ஒரு சில குறிப்பிட்டப் பயிர்களைக் கண்டறிந்து சிறிய அளவில் சமூகமாக விவசாயம் செய்கிறோம். கிடைக்கும் மிகச்சிறிய விளைச்சலை சமமாக எங்களுக்குள் பகிர்ந்துகொள்கிறோம். உணவு உற்பத்திப் போக வாழ்வுக்கு அடிப்படையான பேரிடர் மேலாண்மை, மருத்துவம், கல்வி, வீட்டுப் பராமரிப்புப் பணிகள், ஆடை உற்பத்தி,  போன்ற சில துறைகள் மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டிருக்கின்றன.

வங்கிகள் இல்லை, வணிக நிறுவனங்கள் இல்லை, விளம்பரங்கள் இல்லை, பெருவாரியானப் பகுதிகளில் மின்சாரம் இல்லை. அத்தியாவசியத் தேவைகளுக்கான சிறிய மருத்துவமனைகள் போன்ற இடங்களில் மட்டும் சூரிய மின் தகடுகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. கைவிடப்பட்ட அனல் மின் நிலைய வளாகங்களை காய்கறித் தோட்டங்களாக்கி அவற்றின் கட்டிடங்களை பேரழிவின் சாட்சியான அருங்காட்சியகமாக்கியிருக்கிறோம்.

வாழிடச்சுருக்கம் மற்றும் இயற்கைப் பேரிடர்களால் துருவம் முதல் இயமயம்வரை காட்டுயிர்கள் பெரும்பாலும் அற்றுப்போய்விட்டன. பவளப்பாறைகள் முற்றிலும் அழிந்துவிடப் பெரும்பாலானக் கடலுயிர்களும் அழிந்துபோயின. இப்போது எங்கள் வீடுகளில் மட்டுமல்ல காடுகளிலும் ஏன் ஆழ்கடலிலும்கூட நிசப்தம்தான்.

பல ஆண்டுகள் தொடர்ந்த நெருப்புக்கு இரையாகிப்போன மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இப்போதுதான் பசுமை திருமபத் தொடங்கியிருக்கிறது. பெருமரங்கள் முற்றிலுமாய் பட்டுப்போயின. எனினும் இனி அங்கு எப்போதும் தேயிலையும் யூக்காலிபிட்டசும் முளைவிடப் போவதில்லை. கடற்கரைகளில் கடல்வளத்தை அள்ளிக் கரையில்கொட்டிய இராட்சத மீன்பிடிக் கப்பல்கள் ஆழ்கடலில் அமிழ்த்தப்பட்டு கடலுயிர்களின் உறைவிடமாக மாற்றிவிட்டிருக்கிறோம். எனினும் பழைய வசந்த காலங்கள் இனி உயிர்களுக்கு எப்போதும் இல்லை. எங்கள் பிள்ளைகள் கிழக்குக்கடற்கரையில் முட்டையிட ஏதேனும் ஒரு ஒற்றை ஆமை வந்துவிடாதா என்றுத் தவம் கிடக்கின்றனர்.

எங்கள் சமூகங்களில் மிகக்கடுமையான சூழல் கட்டுப்பாடுகளைக் கைக்கொள்கிறோம். இங்கு இயற்கை வளங்களை மீழ்புதுப்பிக்க இயலாத அளவுக்கான பாதிப்பு ஏற்படுத்த எவருக்கும் உரிமையில்லை. எங்கள் ஒவ்வொரு தனிநபரும் கார்பன் சமநிலையைப் பேணுவதில் கவனமாக இருக்கிறோம். இங்கு மிகை உற்பத்தியோ பதுக்கலோ இல்லை. மக்கள் சமூகமாக அருகருகே வசிப்பதால் வாகனப் போக்குவரத்துக்கானத் தேவைகள் இப்போது இல்லை. மருத்துவத் தேவைகளுக்கு மட்டும் சூரிய மின்சாரத்தால் இயங்கு இலகுரக வண்டிகளை பயன்படுத்துகிறோம். நாங்கள் முன்புபோல விதவிதாமாய் உண்பதில்லை. எனினும் இங்கு எவரும் பசியால் வாடவில்லை, அனைத்து வளங்களும் அனைவருக்குமாய் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. பெரும் மானிட அழிவுக்குப்பின்னர் தம் வாழ்க்கைத் துணையைத் தேடிக்கொள்வதற்கான வாய்ப்புகள் மிகவும் சுருங்கிய நிலையில் அதிகரித்த கலப்புத் திருமணங்கள் இனம் மற்றும் சாதியை அர்த்தமற்றதாக்கியிருக்கின்றன.

வாழ்க்கை மிகக் கடினமானதாகவே இருந்தாலும் எல்லாரும் அவரவருடைய அடிப்படைத் தேவைகளுக்கு மட்டுமே உழைக்கிறோம். இங்கு யாரும் யாருடைய உழைப்பையும் சுரண்டுவதில்லை. ஆந்திரோபோசீன் காலகட்டம் பூமி தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ள இயலாத மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. புவியில் புதிதாக உருவாக்கப்பட்ட நெகிழி முதல் பல்வேறு வகையான நச்சு வேதிப்பொருட்கள் நீரிலும் நிலத்திலுமாய் எங்களைத் துரத்திக்கொண்டே இருக்கின்றன. அதற்கான விலையை எம் பிள்ளைகளும் அவர்களின் பிள்ளைகளும் இன்னும் சில தலைமுறைகள் கடந்தும் கொடுப்பார்கள் என்றேத் தோன்றுகிறது.

ஒரு காட்டுயிர் எப்படி நெருப்பைக் கண்டு அஞ்சி நடுங்குமோ அதுபோன்று எம் பிள்ளைகள் இயற்கையைக் கண்டு அஞ்சி நடுங்குகிறார்கள். நாங்கள் செய்த தவறை அவர்கள் இனி எப்போதும் செய்யத் துணிய மாட்டார்கள். எங்கள் கடந்த காலத் தவறான நடவடிக்கைகளுக்காக தண்டிக்கப்படும் எங்கள் பிள்ளைகள் என்றேனும் ஒருநாள் மன்னிக்கப்படலாம். அதுவரையிலும் அதற்குப் பின்னும் எப்போதும் இனி அவரகள் தம் சூழலை மாற்ற முற்படமாட்டார்கள்.

மணி 12:30, புவிநாள் விடிந்திருக்கிறது.

எங்களுக்கு நம்பிக்கையிருக்கிறது. எம்மைச் சுற்றியிருக்கும் கைவிடப்பட்ட நிலங்களில் எங்கள் கண்களுக்கெட்டா எங்கோ ஒரு மூலையில் ஒரு ஒற்றை ஜோடியேனும் யானையும் புலியும் எங்களைப் போன்றேப் பிழைத்திருக்கின்றன. என்றேனும் ஒருநாள் எம் காடுகள் அவைகளுக்குப் புகலிடமாகும் தகுதிபெறும்போது மீண்டும் அவை ஆங்கேக் குடியமரும். மீண்டும் வசந்தம் திரும்பும். எங்கள் காதுகளில் குருவிகளின் சத்தத்தை மீண்டும் கேட்போம். எங்கள் பிள்ளைகள் மயில்களின் நடனத்தைப் பார்ப்பார்கள். எம் கடற்கரைகளுக்கு ஆமைகள் திரும்பும். எங்கள் மேற்குமலைகளின் உச்சியில் கருமந்திகள் குரலெழுப்பும்.  சூரியக் கதிர்களுக்குமுன் விரிந்துநிற்கும் மலர்களில் தேனெடுக்க வண்டுகள் மீண்டுவரும். அற்றுப்போனதாய் நாங்கள் எண்ணிக்கொண்டிருந்த எறும்புகள் மீண்டெழுந்து எம் மரத்துப்போன தோலில் கிச்சுக்கிச்சு மூட்டும். அன்று நாங்கள் மீண்டும் உயிர் பெற்றெழுவோம்.

அப்போது எங்கள் காற்று சுவாசிக்க உகந்ததாய் மாறியிருக்கும். எங்கள் மண்ணில் புதைக்கப்பட்ட நெகிழிப்பைகள் முழுதுமாய் மட்கிப்போயிருக்கும். எங்கள் கடலில் கசியவிடப்பட்டக் கதிரியக்கம் மெல்லத் தணிந்திருக்கும். அன்று…

எங்கும் நிசப்தம். ஆழ்ந்த துக்கம் தொண்டையை அடைக்கிறது. கண்களிலிருந்து வெந்நீர் கொட்டுகிறது. கதறி அழவேண்டும் போலிருக்கிறது. அழுதுவிடுவேனோ என்று என்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள எண்ணுகையில் திடீரென ஒரு ஆம்புலன்ஸ் சைரன் சத்தம் காதைப் பிளந்தது. வெடுக்கெனப் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தேன். ஜன்னல் வழியே வாகனங்களின் சத்தம் காதைப் பிழந்தது. வாகனங்களுக்கு அப்பால் எண்ணூர் அனல் மின் நிலையத்தின் புகைபோக்கிகள் கரும்புகையைக் கக்கியபடி கம்பீரமாய் நின்றுகொண்டிருக்கின்றன.

ஜீயோ டாமின்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments