சுவ்ரத் ராஜ் நேர்காணல்

‘அணுசக்தி வழங்கல் குழும உறுப்பினர் அடையாளம் பாசாங்கானது. அதில் சேர்வதில் எந்த பெருமையுமில்லை’

கேள்வி: உங்கள் ஆய்வுத் துறை என்ன? தற்போது என்ன ஆய்வு செய்துகொண்டிருக்கிறீர்கள்?

சுவ்ரத் ராஜ்: நான் ஒரு கோட்பாட்டியல் இயற்பியலாளன். அடிப்படை ஆராய்ச்சிக்கான டாடா நிறுவனத்தின் பகுதியான கோட்பாட்டு அறிவியல்களுக்கான சர்வதேச மையத்தில் குவாண்டம் புவியீர்ப்பு பற்றி ஆராய்ந்து வருகிறேன். நான் அணுவியல் பிரச்சனைகள் குறித்து சிந்திப்பதிலும் எழுவதிலுமும் ஈடுபட்டு வருகிறேன். நான் அமைதி மற்றும் அணு ஆயுதத் தவிர்ப்புக்கான கூட்டமைப்பில் (Coalition for Nuclear disarmament & Peace) உறுப்பினராகவும் இருக்கிறேன்.

நீங்கள் பகுதி நேரமாக ஒரு மத்திய அரசு நிறுவனத்தோடு பணிபுரிந்தாலும், பொக்ரானில் நடத்தப்பட்ட அணுகுண்டு சோதனை குறித்தும் இந்தியாவில் எந்த யோசனையுமின்றி அணு ஆற்றல் பரவலாக்கப்படுவதைப் பற்றியும் விமர்சிக்கிறீர்கள். இந்தியா மின்சாரம் தயாரிக்க தனக்குப் பொருத்த மில்லாத முறைகளை பின்பற்றுவதாக ஏன் நினைக்கிறீர்கள்?

முதலாவதாக ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தி விடுகிறேன். நான் இங்கே சொல்லும் எல்லா வற்றையும் எனது நிறுவனத்தின் சார்பாக சொல்ல வில்லை. இரண்டாவது, பொக்ரான் சோதனை நடந்தபோது நான் படித்துக் கொண்டிருந்தேன். இந்த விவகாரத்தோடு எனக்கு ஈடுபாடு ஏற்பட்டது, இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம் கையப்பமானபோதுதான். அப்போதுதான் நான் முதல்முறையாக இப்பிரச்சனை குறித்து மேலும் கவனமாக சிந்திக்கத் தொடங்கனேன். இந்தியாவின் மின் பற்றாக்குறை பிரச் சனைக்கான தீர்வாக அணுசக்தி முன் வைக்கப்படுவதாலேயே அது குறித்து அதிகம் பேசப்படுகிறது என நினைக்கிறேன். ஆனால் புள்ளிவிவரங்களை எடுத்துப் பார்த்தால், அதிலும் இந்த அணு உலைகளும் கடந்த பத்து – பதினோரு வருடங்களில் பெருமளவில் அணு உலைகளை இறக்குமதி செய்யும் திட்டங்களும், இந்த பிரச்சனைக்கு எந்த வகையிலும் தீர்வல்ல என்பது புரியும். வெறுமனே பொருளாதார அடிப்படையில் பார்த்தாலும், இந்த உலைகள் மின் பற்றாக்குறை பிரச்சனையைத் தீர்க்கப் போவதில்லை. ஏனென்றால் அவை உற்பத்தி செய்யும் மின்சாரம் மிகக் குறைவானது என்பதோடு, அதற்காகும் செலவும் மிக அதிகமாகும். அது மட்டுமில்லாமல் இந்த உலைகளை வாங்குவதில் அரசு உருவாக்கும் சட்ட கட்டமைப்புகளைப் பார்த்தால், அணுக் கடப்பாடு சட்டமானது நியாயமற்ற ஒன்றாகும். ஆனால் இந்த உலைகள் ஆற்றல் பிரச்சனையை தீர்க்கப் போவதில்லை. புள்ளி விவரங்களைப் பார்க்கையில் நமக்கு இது தெளிவாகவே தெரிகிறது.

இந்தியா 1950களில் வகுத்த மூலத் திட்டத் தின்படி பின்தங்கியிருந்தாலும்கூட, சீராக உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கனநீர் உலைகளை பின்தொடர்ந்து கொண்டிருந்தது. இந்தியா தனது பணம் முழுக்க உள்ளூரில் தயாரிக்கப்பட்ட உலைகளில் போட்டிருந் தால் இப்போது சென்று கொண்டிருப்பதை விட ஒரு நல்ல தீர்வை நோக்கி சென்றிருக்கும் என்று நினைக் கிறீர்களா?

அப்படி நினைக்கவில்லை. மூன்று கட்ட திட்டத்தின்படி, முதல் கட்டத்தில் கனநீர் உலைகள் இயற்கையான யுரேனியத்தைப் பயன்படுத்தி ப்ளூட்டோனியத்தை உருவாக்கும். இரண்டாம் கட்டத்தில் அதைப் பயன்படுத்து வோம். மூன்றாவது கட்டம் தோரியம் உலைகளை அமைப்பது. 1950களில் இது ஒரு லட்சியப் பூர்வமான திட்டமாக இருந்தது. ஆனால் அந்தத் திட்டம் வேலை செய்யவில்லையென்பது தெளிவாகி விட்டது. இத்திட்டம், பல பல பத்தாண்டுகளுக்கு தாமதப்படுத்தப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் ஈனுலைகள் திறனற்றவை, ஆபத்தானவை என்று தெளிவான தோடு மறுசுழற்சியிலும் பிரச்சனைகள் இருப்பதால் மூன்று கட்ட திட்டத்தில் அடிப் படையான பிரச்சனைகள் இருப்பதும் அவை தீர்க்கப்படாததும் தெளிவானது. தோரியம் உலை மிகக் கடுமையான தொழில் நுட்ப பிரச்சனைகளைக் கொண்டது. மற்ற பெரும்பாலான எரிபொருள்களைப் பொறுத்த வரை சில வேதியியல் செயல்முறைகளின் மூலம் எரிபொருளைப் பிரித்தெடுப்போம். ஆனால், அணுசக்தியும் உலைகளும் வித்தியாசமானவை. ஏனென்றால் எரிபொருளைப் பிரித்தெடுக்க நாம் ஒரு ஓரகத் தனிமத்தைப் பிரித்தெடுக்கவேண்டும். ஒரு இயற்பியல் பிரித்தெடுத்தல் செயல்முறையால் நமக்கு எரிபொருள் கிடைக்கிறது. தோரியம் உலைகள் ரொம்பவும் வித்தியாச மானவை. காரணம், தோரியம் பிளவுறக்கூடிய பொருளல்ல. ஆகவே ஒருவகையில் அந்த உலைகள், மரபான உலைகளைவிட ஒரு அடி முன்னிருக்கின்றன. பிளவுறும் தன்மையில்லாத அதன் எரிபொருளை பிளவுறத்தக்கதாக பண்பு மாற்றம் செய்யவேண்டும். இதற்கான தொழில்நுட்பம் மிகக் கடினமானது. நாம் தோரியம் அணுப்பிணைவு குறித்தெல்லாம் ஆராய்ச்சி செய்யவேண்டும். இப்படியிருக்கையில், ஒரு எதிர்கால தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு நமது அணுசக்திக் கொள்கையை உருவாக்க முடியாது. அந்த ஆராய்ச்சித் திட்டத்தில் பெரியளவுக்கு பணம் முதலீடு செய்தும் மேம்பாடு ஏதுமில்லை. நாட்டின் மின் உற்பத்தியில் 3 சதவீதமே பங்களிப்புச் செய்யும் அணுசக்தி அவ்வளவு நல்ல தீர்வல்ல இதனால்தான் நினைக்கிறேன்.

அணுசக்தித் திட்டம் தொடங்கப்பட்டபோது 1980ற்குள் 20,000மெகாவாட் என சொல்லப்பட்டது, பின் 1980வாக்கில், 2000வது ஆண்டுக்குள் 22,000 மெகா வாட் என்று சொன்னார்கள். பின்னர் வருடத்திற்கு 500 மெ.வா. புதிதாக சேர்க்கப்படும் என்று ஆனது. ஆனால், 2000வது ஆண்டுவரை மிக குறைந்த அளவில் மட்டுமே அணுசக்தித் துறையில் சாதிக்க முடிந்தது. அரசின் அணுசக்தித் துறை உறுதியளிப்பதற்கும் சாதிப்பதற்கும் இடையே பெரிய இடைவெளி இருக்கிறது. இதை அணுசக்தித் துறையின் செயல்திறனோடு தொடர்புபடுத்துவீர்களா அல்லது நிதிக் குறைபாடு, பொக்ரான் சோதனை நடத்தியதால் கிடைக்காத தொழில்நுட்ப வாய்ப்புகள் போன்றவை காரணமா?

இந்த கணிப்புகளில் ஒரு நேர்மையும் இல்லை. நீங்கள் சொன்னதுமாதிரி, மூன்றடுக்குத் திட்டத்தில் முதலில் பாபாவுக்கு சில கணிப்புகள் இருந்தன. பின்னர் சாராபாய் ஏற்கனவே அந்த திட்டம் மோசமாக செயல்பட்டுள்ளதை சுட்டிக் காட்டிவிட்டார். ஆனால் பிரச்சனையென்று எனக்குத் தோன்றுவது பொறுப்பின்மையும் நேர்மையின்மையும்தான். அனில் கடோட்கர் அடுத்த ஆறு வருடங்களுக்கு வருடத்திற்கு 1000 மெவா மின்சாரம் அணுசக்தி மூலம் உற்பத்தி செய்யப்படுமெனச் சொல்வதைப் பார்க்கலாம். அவர் அடுத்த 20 வருடங்களுக்கான கணிப்பை முன்வைக்கவில்லை. அவர் தனது சொந்தப் பணிக் காலத்திற்கான ஒரு கணிப்பை சொல்கிறார். பின் 12 வருடங்கள் கழித்து, அவர்கள் அந்தளவு செயல்திறன் கூட்டியிருப்ப தில்லை என்பதைக் காண்கிறோம். அல்லது அரசாங்கமே அப்படிச் சொல்கிறது. மன்மோகன் அரசு அதைச் சொன்னது. உண்மையில், இந்த கணிப்புகளை யாராவது தொடர்ந்து கவனிப்பதே கஷ்டம். இந்தப் புள்ளிவிவரங்களை மேலும் மேலும் பார்க்கப் பார்க்க நான் அதில் நம்பிக்கை இழக்கிறேன். இந்த அணு ஒப்பந்தம் கையெழுத்தானபோது அவர்கள் 2050க்குள் 650 கிகா வாட் என்றார்கள். எனது நண்பர் ரமணா அதில் அடிப்படைக் கணிதப் பிழையன்றிருப்பதை சுட்டிக்காட்டினார். ஏதோ சில புள்ளிவிவரங்களை உருவாக்கு கிறார்கள். அதில் சில தவறுகள் இருந்தால், யாருக்குக் கவலை?

அணுசக்தித் திட்டம் கிட்டத்தட்ட கடந்த 60 ஆண்டுகளாக இருந்துவருகிறது இருந்தும் ஏன் இந்தியாவால் தனது முதல் ஈனுலையை செயல்படுத்த முடியவில்லை. அதைப் பற்றி 2000லிருந்து பேசிக்கொண்டிருந்தாலும் அதைத் தொடங்கமுடியவில்லை. ப்ளூட்டோனியம் இல்லாததாலா, இல்லை நீர்ம சோடியத் தொழில் நுட்பத்தை திறன்பட கையாளமுடியாததாலா, எது உண்மையான காரணம்?

ஈனுலைகளைப் பிடித்துக்கொண்டு தொங்கிக் கொண்டிருக்கும் மிகச் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பல நாடுகள் ஒரு – சுழற்சிப் பயன்பாட்டு உலைகளுக்காக ஈனுலைகளை கைவிட்டுவிட்டன. இந்தியாவின் அணுசக்தி கொள்கை, ஒரு – சுழற்சி பயன்பாட்டைவிட மூடப்பட்ட வளையச் சுழற்சியைப் பயன்படுத்துவதுதான் (Closed fuel cycle). ஈனுலைகளின் கருத்தாக்கமே மேலும் மேலும் அதிக எரிபொருளை உருவாக்குவதுதான். எரிபொருளை ஒரு முறை பயன்படுத்திவிட்டு, பயன்படுத்தப்பட்ட எரிபொருளை வெளியேற்றும் முறையிலிருந்து அடிப்படையில் மாறுபட்ட தொழில்நுட்பம் இது. இந்தத் தொழில்நுட்பத்தை சர்வதேச அளவில் யாரும் ஆராய்வதில்லை. எனவே இந்த உலைகளைக் கட்டுவது கடினமாக இருப்பதில் ஆச்சரியமில்லை. சற்றுத் தொலைவிலிருந்து நோக்கினால், இந்தியா தன்னந்தனியாக செய்துகொண்டிருக்கும் ஒரு தொழில்நுட்பம் இது எனும்போது இவ்வளவு காலம் எடுப்பது ஆச்சரியமாக இருக்காது. இதுவே தோரியம் விஷயத்திலும் நடக்கலாம். தோரியம் தொழில் நுட்பம் ஏன் வளர்ச்சியடையவில்லை என்று நீங்கள் கேட்டால், அத்தொழில்நுட்பத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் பெரும் முதலீடு செய்யாவிட்டால் அது நடக்காது. இந்தியா இதை செய்யவில்லை. இந்தியாவால் செய்ய முடியாமலும் போகலாம். எனவே அது நடக்காமலே போகலாம். இதே கேள்வியை அணுக் கரு பிணைவு குறித்தும் நீங்கள் கேட்கலாம். ஏன் அணுக்கரு பிணைவு தொழில்நுட்பம் வளரவில்லை? இந்த தொழில் நுட்பத்தில் அப்படியரு கால வரையறையை நிர்ணயிக்கமுடியாது. அவை வளரலாம் அல்லாமலும் போகலாம்.

ஈனுலைகளைத் தொடங்கி அதை நிறுத்திவிட்ட வேறு நாடுகள் எவை?

ஈணுலைத் தொழில்நுட்பத்தில் இந்தியா உலகத்தின் முன்னோடிகளில் ஒன்று என்றே நினைக்கிறேன். ரஷ்யாவில் கொஞ்சம் இந்த உலைகள் இருந்தன. குறிப்பிட்ட காலகட்டத்தில் ஐரோப்பிய தேசங்களும் இதைச் செய்ய முயன்றன. ஃப்ரான்ஸின் சூப்பர் ஃபீனிக்ஸ் உலை போல. அதில் எக்கச்சக்க பணத்தைக் கொட்டியபிறகு, மிகச் செலவுபிடிப்பதாக தெரியவந்தவுடன் மூடிவிட்டனர். ஈனுலை குறித்த இன்னொரு விஷயம் யுரேனியப் பிரச்சனை. அணுசக்தி வளர ஆரம்பித்த காலகட்டத்தில் அணுசக்தி பெரு மளவில் பயன்படுமென்றும் மின்சாரம் சொல்ல முடியாத அளவுக்கு மலிவாகும் என்றும் அதனால் உலகத்தில் யுரேனியம் தீர்ந்து போய் நாம் ஒரு புதிய எரிபொருளை உருவாக்க வேண்டியிருக்குமென்றும் எண்ணினார்கள். ஆனால், அணுசக்தி விவகாரத்தில் அப்படி நடக்கவில்லை. அதிலிருந்து கிடைக்கும் மின்சாரம் மலிவாகவில்லை. சொல்லப் போனால், கவனிக்க வேண்டிய அளவுக்கு விலை அதிகமாகியிருக்கிறது. மேலும், பாது காப்புப் பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளன. இரண்டாவதாக, யுரேனிய உற்பத்தி எளிதாக போதுமான அளவு நடக்கிறது.

கசகிஸ்தானில் புதிய இருப்புகள் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன.

உலகம் முழுவதும் யுரேனியம் இருப்பது கண்டுபிடிக்கப்படுவது நடந்துகொண்டு இருக்கிறது. யுரேனிய உற்பத்தி எளிதாக, தேவைக்கேற்ப நடப்பதே ஈனுலை பெரிதாக எடுத்துக் கொள்ளப்படாததற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாகும்.

தாரிணி பத்மநாபன், கோ.சுந்தர்ராஜன் தமிழில்:வெற்றி

தொடர்ச்சி அடுத்த இதழில்…

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments