எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிய வேளாண்மை நிதிநிலை அறிக்கை – பூவுலகின் நண்பர்கள்

 

தமிழ்நாட்டில் வேளாண் குடிமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள்  கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் வேளாண் துறைக்கென தனியாக நிதிநிலை அறிக்கைத் தாக்கல் செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி. பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தாலும்  இயற்கை வேளாண்மை குறித்த அறிவிப்புகளை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறோம்.

 

முக்கியமான அறிவிப்புகள்:

  • கோயம்புத்தூரில் உள்ள வளங்குன்றா வேளாண்மைக்கான துறை ‘நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம்’ என பெயர் மாற்றம் செய்து, நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மைக்கான ஆராய்ச்சி மையம் உருவாக்கி இயற்கை வேளாண்மை தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளை வலுப்படுத்த ரூ.3 கோடி.
  • மண் வளத்தை பாதுகாத்து, ஆரோக்கியமான உணவை மக்களுக்கு வழங்குவதற்காக இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டம் ரூ.33.03 கோடியில் செயல்படுத்தப்படும்.
  • பாரம்பரிய நெல் வகைகளைத் திரட்டி, பாதுகாத்து, விதை உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு விநியோகம் செய்யும் வகையில், நெல் ஜெயராமன் அவர்களின் மரபுசார் நெல் இரகங்கள் பாதுகாப்பு இயக்கம்.
  • நமது மாநில மரமான பனை மரத்தை நம்பி உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த, பனை தொடர்பான பல்வேறு தொழில்களை ஊக்குவிக்க, ரூ.3 கோடியில் பனை மேம்பாட்டுத் திட்டம். தேவையில்லாமல் பனை மரத்தினை வெட்டும் நடைமுறை நெறிமுறைப்படுத்தப்படும்.
  • காவேரி டெல்டா வேளாண் பெருமக்கள் மற்றும் வேளாண் தொழிலாளர்களின் வாழ்வு வளமாக, திருச்சி-நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இடையேயான பகுதியை வேளாண் தொழிற்சாலைகளுக்கான பெருந்தடமாக (Agro Industrial Corridor) அறிவிக்கை.
  • வேளாண்மைத் துறையில் இயற்கை வேளாண்மைக்கென்று தனிப் பிரிவு ஒன்று உருவாக்கப்படும்.

 

மேற்கண்ட இந்த அறிவிப்புகள் அனைத்தும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இந்த அறிவிப்புகள் அனைத்தும் நம்மாழ்வார், நெல் ஜெயராமன் ஆகியோரில் பல்லாண்டுகள் உழைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் இயற்கை வேளாண்மை மேற்கொண்டு வரும் விவசாயிகளுக்கு புதிய ஊக்கத்தையும் அளிக்குமென நம்புகிறோம்.

தமிழ்நாட்டில் கூடுதலாக 11.75 இலட்சம் ஹெக்டர் பயிரிடச் செய்து, தற்போதுள்ள நிகர சாகுபடிப் பரப்பான 60 விழுக்காடு என்பதை 75 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற அறிவிப்பு வரவேற்கத்தகுந்தது மட்டுமில்லாமல் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றும் என்றாலும் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களின் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதையும் கருத்தில் கொண்டு பயிரிடும் பரப்பை அதிகரிக்க வேண்டும் எனக் கோருகிறோம். மேலும் அதிக தண்ணீர் தேவைப்படாத பயிர்களை ஊக்குவிக்க வேண்டும்.

 

 

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments