நவீனமாகும் தமிழ்நாடு வனப்படை நடவடிக்கைகள்; 52 கோடியில் 3 ஆண்டுகளுக்குத் திட்டம்

தமிழ்நாடு அரசு வனத்துறையின், வனப்படையினை 2022 முதல் 2025 வரையிலான மூன்று ஆண்டு காலத்திற்குள் நவீனப்படுத்தும் திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு வனத்துறையின் வனப்படையை நவீன தொழில்நுட்பங்கள், திறன் மேம்பாட்டுத்திட்டங்கள் மற்றும் மனித வள மேலாண்மை நடைமுறைகளில்  சிறப்பான உத்திகளை கையாண்டு மூன்றாண்டு காலத்திற்குள் 2022 முதல் 2025 வரை 52.83 கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்த  28.12.2022 அன்று தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

G.O-Modernization of forest force

இது தொடர்பாக வனத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் “தமிழ்நாடு வனப்படையினை நவீனமயமாக்கும் திட்டமானது, மனித வள மேலாண்மை உட்பட ஆறு கூறுகளை உள்ளடக்கியுள்ளது. ரூ.8.55 கோடி செலவில் கள வனப்பணியாளர்களுக்கான பயிற்சித் திட்டங்கள், தமிழ்நாடு வனப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி மற்றும் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் மேலும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள சிறந்த நடைமுறைகளை வெளிப்படுத்துவதற்காக வனப் பணியாளர்களுக்கு சிறப்புப் பயிற்சியும் முதல் கூறில் அளிக்கப்படும்.

வனத்துறையின் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்த ரூ. 40 லட்சம் செலவு செய்யப்படும். இதில்,  காட்டுயிர்களின் சிறந்த மேலாண்மைக்காக கண்காணிப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக செயற்கை நுண்ணறிவு மையத்தை உருவாக்குதல்,  புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு வனக்குற்றக் கட்டுப்பாட்டுப் பணியகத்தில் சைபர் செல் அமைத்தல் மற்றும் டிஜிட்டல் வயர்லெஸ் நெட்வொர்க் தகவல் தொடர்புகளை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் இரண்டாம் கூறில் மேற்கொள்ளப்படும்.

வனத்துறையை நவீன ஆயுதங்களுடன் மேம்படுத்துதல்,  வனவிலங்கு பாதுகாப்புக்கான நவீன ஆயுதத் தேவைகள் குறித்து ஆலோசனை வழங்க ஒரு நிபுணர் குழுவை அமைத்தல், மனித வனவிலங்கு மோதலை நிருவகிப்பதற்கான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைத்தல் மேலும்  சிறந்த கண்காணிப்பிணை மேற்கொள்வதற்காக ஆளில்லா வான்வழி வாகனங்கள் பயன்படுத்துதல் ஆகிய பணிகள் மூன்றாம் கூறில் மேற்கொள்ளப்படும்.

நான்காம் கூறின் கீழ், ஐந்து இடங்களில் உயர் தொழில்நுட்ப வன நாற்றங்கால்களை அமைத்தல். மேம்பட்ட வனத் தீ கட்டுப்பாடு மற்றும் மீட்புக் கருவிகளை வழங்குதல்.

தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுடன் சென்னையில் அமைந்துள்ள மேம்பட்ட வனவிலங்கு பாதுகாப்பு நிறுவனம் (AIWC- Advance Institute of Wildlife Conservation) சம்பந்தப்பட்ட கூட்டு ஆராய்ச்சிப் பணிகளை ஊக்குவித்தல் மற்றும் தமிழ்நாடு வனத்துறை திட்டங்களுக்கு உலகளாவிய அங்கீகாரம் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

நவீன கால வனவியல் நடைமுறைகளுக்கு வரவிருக்கும் ஆண்டுகளில் வன பாரம்பரியத்தைப் பாதுகாக்க தொலைநோக்குடன் கூடிய உத்திகள் தேவைப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளில் வன மேலாண்மை நடைமுறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காலநிலை மாற்றம் காரணமாக நவீன காலத்தின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் பல புதிய தொழில்நுட்பங்களை  பயன்படுத்தி நிலையான காடு வளர்ப்பிற்கு தற்போது முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலே குறிப்பிட்டுள்ள கூறுகளின் அடிப்படையில் வனத்துறையின் வனப்படையினை நவீனமயமாக்கல் மேற்கொள்ளப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments