மருத்துவக் கழிவுகள் கொட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய தமிழக அரசு பரிசீலனை.

விதிகளுக்குப் புறம்பாக மருத்துவக் கழிவுகளை தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் கொட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறைபடுத்துவது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருவதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தென்காசி, ஆனைமலை, பொள்ளாச்சி, நாமக்கல் ஆகிய இடங்களில் சட்டத்திற்குப் புறம்பாக கேரளாவிலிருந்து லாரிகளில் எடுத்து வரப்பட்ட கழிவுகள் கொட்டப்பட்டன. இச்சம்பவங்கள் தொடர்பாக பல்வேறு நாளிதழ்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016, மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகள் 2016 ஆகியவற்றின்கீழ் மருத்துவ மற்றும் பிற திடக்கழிவுகளை அங்கீகரிக்கப்பட்ட கழிவு மேலாண்மை நிலையங்களைத் தவிர பிற இடங்களில் கொட்டுவது சட்டவிரோத நடவடிக்கையாகும். தமிழ்நாட்டில் நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், வயநாடு, ஆகிய மாவட்டங்களும் எல்லைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாகவே கேரளாவிலிருந்து காலாவதியான மருந்துகள், கெட்டுப்போன இறைச்சிகள், இறைச்சிக் கழிவுகள், பயன்படுத்தப்பட்ட மருத்துவ உபகரணங்கள், மின்சாதனக் கழிவுகள், திட, திரவ உயிரிக் கழிவுகள், விவசாயக் கழிவுகள் போன்றவை கனரக வாகனங்களில் எடுத்து வரப்பட்டு தமிழக மாவட்டங்களில் கொட்டப்படுகின்றன.

2018ஆம் ஆண்டு நவம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் அப்போதைய ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தின் தென்காசி அருகேயுள்ள புளியரை சோதனைச்சாவடியில் காவல்துறை நடத்திய வாகனத் தணிக்கையின்போது மருத்துவக் கழிவுகளை ஏற்றிவந்த 29 லாரிகள் நிறுத்தப்பட்டு கேரளாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டன. திருநெல்வேலியிலிருந்து தென்காசி மாவட்டம் தனியாக பிரிந்த பின்னர் மருத்துவக் கழிவுகள் ஏற்றிவந்தது தொடர்பாக மட்டும் 9 முதல் தகவல் அறிக்கைகள், 45 Petty வழக்குகள் பதியப்பட்டு இதுவரை ரூ. 2,28,000 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று ஆனைமலை, தேனி ஆகிய இடங்களிலும் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படும் சம்பவங்கள் தொடர்ந்த நிலையில் தென்மண்டல் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஏற்கெனவே விசாரித்து வந்த வழக்கில் தமிழ்நாடு, கேரள மாநிலங்களின் தலைமைச் செயலாளரையும், தமிழ்நாட்டில் நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், வயநாடு, ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்களையும் ஒரு தரப்பாகச் சேர்த்து அனைவரையும் பதில்மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் 14.02.2023 அன்று தமிழ்நாட்டின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் பி.செந்தில்குமார் பசுமைத் தீர்ப்பாயத்தில் ஒரு விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார். அதில் “ தமிழ் நாட்டில் சட்டவிரோதமாக மருத்துவக் கழிவுகளைத் தொடர்ச்சியாகக் கொட்டுவதால் ஏற்படும் அச்சுறுத்தல் மிகவும் ஆபத்தானது மற்றும் கடுமையான சுகாதார அபாய சூழ்நிலையை ஏற்படுத்துகிறது என தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்புச் சட்டம் 1982ஐ பொதுமக்கள் நலன்கருதி அறிவியல் பூர்வமாக மேலாண்மை செய்யப்படாக மருத்துவக் கழிவுகளை தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் சட்டவிரோதமாகக் கொட்டுபவர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி விரிவுபடுத்தலாம் என்ற கருத்தைத் தெரிவித்துள்ளார். தலைமை வழக்கறிஞரின் இக்கருத்து தொடர்பாக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது: எனக் கூறப்பட்டுள்ளது.

மருத்துவக் கழிவுகளின் சட்டவிரோத மேலாண்மை மிகப்பெரும் சூழல் மற்றும் சுகாதார நெருக்கடியாக மாறியுள்ள நிலையில் மருத்துவக் கழிவுகளை விதிகளுக்குப் புறம்பாக நீர்நிலைகள், புறம்போக்கு இடங்களிலும் கொட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்தோரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலரான புகழ்வேந்தன்.

இதுமட்டுமின்றி மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  06.07.2016 தேதியிட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அரசாணை எண்.179 வாயிலாக மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்ட 9 பேர் கொண்ட மாவட்ட அளவிலான மருத்துவக் கழிவுகள் மேலாண்மை கண்காணிப்புக் குழுவை அரசு உருவாக்கியுள்ளது. இந்த அரசாணையில் 09.02.2023 அன்று திருத்தம் செய்து மாவட்ட கண்காணிப்பாளர், கால்நடை மற்றும் மீன்வளத்துறை, கூடுதல் இயக்குனர், பஞ்சாயத்து, மாநகராட்சி ஆணையர், வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோரும் மருத்துவக் கழிவுகள் மேலாண்மை கண்காணிப்புக் குழுவில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

-சதீஷ் லெட்சுமணன்

Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Maalvidiwon
Maalvidiwon
1 year ago

கொட்டப்படும் மருத்துவ கழிவுகளை அனுப்பும் நிறுவனங்களையும் கண்காணித்து தண்டனைக்கு உள்ளாக்கும் வகையில் சட்ட விதிகள் அமைத்திட வேண்டும்