தேசிய குற்றப்பதிவு ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு இந்திய அளவில் குற்றங்களின் எண்ணிக்கை, அதற்கு முந்தைய ஆண்டை விட 28% அதிகரித்துள்ளது. அதே 2020 ஆண்டில் சூழலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கும் வகையில் 78.1% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட குற்ற சம்பவங்களை தவிர்த்துப்பார்த்தால் சூழலியல் குற்றங்களின் கீழ் பதிவு செய்யப்பட வழக்குகள் அதிக எண்ணிக்கையில் அதிகரித்துள்ளன. இவ்வறிக்கையில் இந்திய வனச் சட்டம், வனப் பாதுகாப்பு சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், நீர் மற்றும் காற்று பாதுகாப்பு சட்டம், காட்டுயிர் பாதுகாப்பு சட்டம், சிகரெட் மற்றும் புகையிலை சட்டம், ஒலி மாசு சட்டம், தேசிய பசுமை தீர்ப்பாய சட்டம் இவற்றின் கீழ் பதிவு செய்யப்படும் குற்றங்கள் சூழலியல் குற்றங்களின் கீழ் கணக்கிடப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு, இந்தியாவில் சூழலியல் குற்றங்களின் கீழ் 61,767 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இது 2019 ஆன் ஆண்டை விட 78.1% அதிகமாகும்.
இதில் தமிழ்நாட்டிற்கு என்ன பெருமை தெரியுமா? கடந்தாண்டு மட்டும் சூழலியல் சட்டங்களின் கீழ் 42,756 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது 2019 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டதை விட மூன்று மடங்கு அதிகமாகும். தமிழ்நாட்டிற்கு அடுத்து ராஜஸ்தானில் சுமார் 9,543 வழக்குகள், அடுத்ததாக உத்தர பிரதேசத்தில் 2,981 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சூழலியல் சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்படும் ஐந்து வழக்குகளில் நான்கு சிகரெட்டு மற்றும் புகையிலைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுகின்றன. இந்த சட்டத்தின் கீழ் மட்டும் 49,710 வழக்குகள் நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் பதிவு செய்யப்பட சூழலியல் குற்ற வழக்குகளில் இது 80.5%.
இரண்டாவது இடத்தை பிடிப்பது “ஒலி மாசு” சட்டம், இந்த சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டவை சுமார் 11.8% வழக்குகள் ஆகும். 2,287 வழக்குகள் இந்திய வனச் சட்டம் மற்றும் வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளன. உத்தரபிரதேசத்தில் மட்டும் 1,317 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் காட்டுயிர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 672 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழ் நாட்டில் மொத்தம் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 42,756. இதில் சிகரெட் மற்றும் புகையிலைச் சட்டத்தின் கீழ் மட்டும் 42,731 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 3 வழக்குகள் இந்திய வனச் சட்டம் மற்றும் வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழும், 3 வழக்குகள் காட்டுயிர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழும், 19 வழக்குகள் ஒலி மாசு சட்டத்தின் கீழும் பதி செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் சூழலியல் சட்டத்தை அரசு முழுமையாக பயன்படுத்துவது கிடையாது என்பதை தெளிவாகச் சொல்ல முடியும். அப்படி பயன்படுத்தப்பட்டிருந்தால் இன்னமும் நம்முடைய நகரங்கள் காற்று மாசால் தத்தளிக்காது, நம்முடைய ஆறுகள் சாக்கடையாக ஓடாது. சூழலியல் சட்டங்களை முழுமையாக பயன்படுத்த பொது மக்களைத் தயார்படுத்த வேண்டும்.
-
கோ.சுந்தர்ராஜன்