மாலை நேரங்களில் உங்கள் வீட்டு மொட்டை மாடியில் நின்று கொண்டிருக்கும்போது வெளவால் போன்ற ஒரு பறவை சர்ரென்று உங்கள் தலைக்கு மேல் பறந்து செல்வதை பார்த்துள்ளீர்களா? முதலில் பார்க்கும்போது அதை வெளவால் என்றே நான் நினைத்துக் கொண்டேன். ஆனால் பிறகுதான் தெரிந்தது அது ஒரு பறவை என்று. ஆம் அதுதான் தகைவிலான் குருவி. அதன் உடல் அவ்வளவு பளபளப்பாக இருக்கும். மேல்சிறகுத் தொகுதி பளபளப்பான அடர் நீலநிறமும் செம்பழுப்புக் கழுத்தும் வெண்ணிற அடிப்பகுதியும் கொண்டு பிளவுண்ட வாலும் உடையது; பறக்கும்போது அடிப்பகுதியை நோக்கினால் வாலில் கொடிபோன்று வெண் புள்ளிகள் தென்படும். பருவகாலத்தை நமக்கு உணர்த்தும் பறவைகளில் இதுவும் ஒன்று. இதை மழைக் குருவி என்றே சொல்லலாம். ஆமாம் தமிழகத்தின் மதுரை உட்பட ஏனைய பகுதிகளுக்கு மழைக்காலத்திற்கு முந்தியே இக்குருவிகள் வரத்துவங்குகின்றன. இதன் வலசை அதிகமாக இருந்தால் அந்த ஆண்டு மழை அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தாம்பாடி, தகைவிலாங்குருவி, தரையில்லாக்குருவி என்று பல பெயர்கள் இதுக்கு இருக்கு. ஆம் இந்த பறவை மிக அரிதாகவே தரையிறங்கும், சளைக்காமல் பறந்து கொண்டே நமக்கு சுறுசுறுப்பை கற்றுத் தருவதால் இதற்கு தரையில்லாக்குருவி என்ற பெயர் பொருந்தும். இதை படம் பிடிப்பது அவ்வளவு சுலபம் அல்ல. தொடர்ந்து கண்காணித்தால் மட்டுமே படம் எடுக்க முடியும். இவரு உட்காரவே மட்டாரான்னு கோவமே வரும். நாணல் கதிர்கள் நிறைந்த ஏரிகள், வயல்கள் ஆகிய இடங்களில் அங்கும் இங்குமாக வேகமாகப் பறந்தபடியே பூச்சிகளைப் பிடித்து உண்ணும். சில நேரங்களில் மின்சார கம்பிகளில் வரிசை யாக அமர்ந்து இவை அசெம்பிளி நடத்துவதும் உண்டு. நீங்க சாலையோர சிக்னலில் நிற்கும்போது லாவகமாக ரோட்டில் உள்ள பூச்சுகளை சர்ரென்று பிடித்துச் செல்லும். இது ஆங்கிலத்தில் Barn Swallow – Hirundorustica என்ற தகைவிலான் இமயமலைத் தொடரில் இனப் பெருக்கம் செய்யும் கிழக்குத் தகைவிலான் உட் பிரிவாகும். Hirundorusticatytleri என்ற டைட்லர் தகைவிலான் வங்காளம், அசாம் ஆகிய இடங் களிலும் காணப்படும். ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் வரத்தொடங்கும் தகைவிலான் ஏப்ரல் அல்லது மே மாதத்தில்தான் தம் இனப்பெருக்க உறைவிடங்களான இமயமலைத் தொடருக்கு வலசை போகும். இதன் கூடு அவ்வளவு அழகாக இருக்கும். ஆம் எங்கிருந்தோ களிமண்ணைக் கொண்டு வந்து கொஞ்சம் கொஞ்சமாக அதை ஒட்ட வைத்து உலகின் எந்த ஒரு கட்டிடக் கலைஞனும் கட்ட முடியாத விதத்தில் அதை அங்கே நேர்த்தியாக அமைத்து வைத்திருக்கும்.தகைவிலான் கூட்டின் உட்புறத்தை நீங்கள் பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள்.
அதின் குஞ்சுகள் மிகவும் சொகுசாக வாழ கூட்டின் உட்புறத்தை மிருதுவான பஞ்சாலும், பறவைகளின் வெகு மெல்லிய இறக்கை முடியாலும் அது பாங்குற பதித்து வைத்திருக்கும். சொல்லப் போனால் அது ஒரு வெல்வட் கம்பளம் விரித்த அழகான படுக்கையைப் போலிருக்கும். சுவரோடு ஒட்டியிருக்கும் அதின் களிமண் கூட்டை நமது கரங்களால் அத்தனை எளிதாக பெயர்த்து எடுக்க முடியாது. அதை அகற்ற வேண்டுமானால் ஒரு கடப்பாரையைத்தான் பயன்படுத்த வேண்டும். அத்தனை உறுதியாக அது இருக்கும். அந்தச் சிறிய தகைவிலான் குருவிக்கு அத்தனை வலிமை யான, அழகான கூட்டைக்கட்டி வாழ இயற்கை அப்படி ஒரு ஞானத்தை கொடுத் துள்ளது. விவசாய நிலத்தில் இவற்றை விவசாய நண்பர்கள் என்றே சொல்லலாம். ஆம் விவசாய நிலத்தில் உள்ள பூச்சிகளை மிக அழகாக பிடித்து தின்னும். ஆனால் விவசாய நிலத்தில் பூச்சிக்கொல்லி போடுவதால் இதற்கு உணவு கிடைக்காமல் போகிறது. மனிதன் கற்காலத்தில் வேட்டை யாடி உண்டான். விவசாயம், தெரியாத நிலையது. அந்த கற்காலப் பழக்கம் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும், அந்த வேட்டைக் குரூரம் மனிதனிடம் அழிந்தபாடில்லை. சில கிராமத்து சிறார்கள் ஒண்டி வில்லோடு மரம், செடி, வேலி, மின்கம்பி எனப் பார்த்துக் கொண்டே செல்கின்றனர். இந்த மழைக் குருவியைஅடித்து வறுத்து சாப்பிடத்தான். அவர்களை அழைத்து இந்த பறவை பற்றி அவர்களுக்கு விளக்கிச் சொன்னேன்.
‘இந்த பறவைகள் பேர் என்ன? உங் களுக்குத் தெரியுமா?
‘இல்லை. இவை எங்கிருந்து வருதுன்னு தெரியுமா?’
இதுக்குப் பேர் மழை குருவி. சைபிரியா, ரஷ்யாவுக்கு மேற்கோடியிலிருந்தும் இமய மலையிலிருந்தும் வருதுங்க. திரும்பவும் மார்ச் மாசத்துக்கு அப்புறம் போயிடும். மழை குருவிகள் இருப்பதினாலேயே நீங் கெல்லாம் கொசுக்கடி இல்லாம இருக்கீங்க. ஒரு நாளைக்கு ஏகப்பட்ட கொசுக்களை சாப்பிடும். வெளி நாட்டிலிருந்து வந்த விருந்தாளிகளைப் பிடிச்சு சாப்பிடலாமா? நீங்கல்லா இலை, தழையா கட்டியிருக்கீங்க? உண்ண எவ்வளவோ இருக்குது. இதப்போய் சாப்பிடலாமா? எவ்வளவு அழகாக இருக்கு பாருங்க. நூத்துக்கணக்கான மழை குருவிக ஒன்று சேர்ந்து உங்கள துரத்தித்துரத்தி கொத் துனா என்ன பண்ணுவீங்க.? உங்க நயவஞ் கத்தை குருவிககிட்ட ஏன் காட்டறீங்க? இனிமே இந்தக் குருவிகளக் கொல்லக்கூடாது. நீங்க அதுகளுக்கு எதாவது பண்ணறீங்களா? ஒன்றுமே செய்யாதபோது, உங்களுக்கு இந்த மழை குருவிக உதவியா இருக்கு. இதுவா நீங்க காட்டற நன்றிக்கடன்?’ என்று சொன்னேன்.
அந்த சிறார்கள் கண்களில் தண்ணிரே வந்து விட்டது. ‘மன்னிச்சிடுங்க இனி இது மாதிரி செய்யமாட்டோம்’ என்று சொல்லி விட்டு சென்றனர்.
‘கூண்டுப்பறவைக வேணுமா? ஒண்டிவில் வேணுமா? கடைகல்ல கிடைக்கும். ஆனால் நீங்க திருந்துனா, வியாபாரிக விற்கமாட்டாங்க, உங்கள நீங்க நேசிக்கிறீங்க. அதுபோல மற்ற உயிரி களையும் நேசிச்சுப் பழகுங்க.’
என்ன தகைவிலான் குருவியின் அருமை இப்போது உங்களுக்கு புரிகிறதா?
‘ஆற்றல்’ பிரவீன்குமார்