ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டிலிருந்து தனியார் ஆலைகளுக்கு தண்ணீர் வழங்கலாமா?

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண் டத்தில் உள்ள அணைக் கட்டானது பொதிகை மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி நதியின் கடைமடையில் உள்ள கடைசி அணைக்கட்டு. இதிலிருந்து வடகால், தென்கால் என இரண்டு கால்வாய்கள் பிரிந்து அந்த மாவட்டத்தின் ஒட்டுமொத்த குடிநீர் தேவையினையும் பாசனத் தேவையினையும் பூர்த்தி செய்து வருகிறது. வடகால்-தென்கால் பாசன வாய்க்கால்கள் மூலமாக 25ஆயிரத்து 867 ஏக்கரில் முப்போக விவசாயம் நடைபெற்று வருகிறது. இதனை நம்பி பலஆயிரக்கணக்கான விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்கள்
வாழ்ந்து வருகின்றனர். ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு மற்றும் தாமிரபரணியின் மருதூர் அணைக்கட்டு பாசனத்திலுள்ள விவசாய நிலங்களில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ‘’கார், அட்வான்ஸ் கார், பிசானம்‘’ என மூன்றுபோக நெற்பயிர் சாகுபடி முறை தவறாமல் நடைபெற்று வந்தது. இதனால் விவசாயிகள் வளமோடு வாழ்ந்து வந்தனர். ஆனால் சமீப காலங்களில் நிலைமை மாறியிருக்கிறது. இந்த ஆண்டும் வழக்கம்போல் பருவமழை எதிர்பார்த்த அளவில் இல்லை. இந்த ஆண்டு தூத்துக்குடி மக்கள் குடிநீருக்காக நடத்திய

போராட்டங்கள் வழக்கத்தை விட அதிகம். இப்படி பாசனத்திற்கும் குடிநீர் தேவைக்குமே தண்ணீர் கிடைக்காத நிலையில் தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் துறையினர் ஸ்ரீவைகுண்டம் அணையின் உட்பகுதியில் இருந்து 20எம்.ஜி.டி. திட்டத்தின் மூலமாக 21 தொழிற்சாலைகளுக்கு நாள்தோறும் 9கோடியே 20லட்சம் லிட்டர்(20மில்லியன் காலன்) தண்ணீரை எடுத்து கடந்த சில ஆண்டுகளாக கொடுத்து வருகின்றனர். தமிழக அரசு ஒரு ஒரு லிட்டர் தண்ணீரை ரூ 10க்கு வழங்கி வரும் அதே வேளையில் 9கோடியே 20லட்சம் லிட்டர் தண்ணீரை லிட்டருக்கு ஒரு பைசா விலையில் வழங்கி வந்துள்ளது. இந்த திட்டத்தினால் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி பாசனத்தில் மொத்தமுள்ள 46ஆயிரத்து 107ஏக்கர் நிலங்களுக்கு போதுமான தண்ணீர் இல்லை. இதனால் முப்போக நெல் விளைச்சலானது, தற்போது ஒருபோக நெல் விளைச்சலாக மாறிப்போனதுடன் அதுவும் நடப்பதே அரிதாகி விட்டது. இதன்காரணமாக பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் சொந்த மண்ணிலேயே வேலைவாய்ப்பு இல்லாமல் பரிதவித்து வருகின்றனர். இதில் அதிகமாக தண்ணீர் வழங்கப்படும் ஆலைகள் ஸ்பிக், ஸ்டெர்லைட் மற்றும் தாரங்கதாரா ஆகியனவாகும். இந்த ஆலைகள் அனைத்துமே கடந்த பல ஆண்டுகளாக அந்த மாவட்டத்தில் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தி மக்களை புற்றுநோய்க்கு தள்ளிக் கொண்டு வருகிறது. மேலும் தற்போது நிலவி வரும் கடுமையான வறட்சியால் தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து உவர்ப்புத்தன்மை மிகுந்து காணப்படுகிறது. இதனால் சுகாதாரமான குடிநீர் கிடைக்காத மக்கள் உவர்ப்புத்தன்மை கொண்ட நிலத்தடி நீரை குடிக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது பரிதாபத்திற் குரியதாகும். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்கள் கடந்த ஜனவரி மாதம் 7ம் தேதி மாவட்டத்திலுள்ள தொழிற்சாலைகளுக்கு தினமும் 9கோடி லிட்டர் (20மில்லியன் காலன்) தண்ணீர் வழங்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் வாய்மொழியாக அறிவித்துள்ளார். ஆனால் இன்றுவரை அதிகாரப்பூர்வமான தடை உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. இதனால் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திலுள்ள சில அதிகாரிகளின் துணையோடு தொழிற் சாலைகளுக்கு தேவையான தண்ணீர் தினமும் தவறாமல் வழங்கப்பட்டு வருகிறது. ஸ்ரீவைகுண்டம் அணையின் உட்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். இதனால் அணையின் உள்ளே குடிநீர் திட்டங்கள் எதையும் துவங்கவேண்டுமெனில் தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடம் அனுமதி பெறவேண்டும் என்பது விதிமுறையாகும். இந்த விதிமுறையின்படி தமிழக அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அரசாணை எண் 18 நாள் 07.03.2008ல் பிறப்பித்துள்ளது. அந்த அராசணையின்படி அணைக்கட்டில் இருந்து குடிநீருக்கான தண்ணீர் எடுப்பதற்கு மட்டுமே தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்திற்கு தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், இந்த ஆணையை மதிக்காமலே தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் தனியார் ஆலைகளுக்கு அணைக்கட்டிலிருந்து தண்ணீரை வழங்கி வந்துள்ளது. இதனைத் தடுக்கக் கோரி தென்மண்டல மத பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு ஒன்று திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகி ஜோயல் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

தமிழக அரசின் வனத்துறை உத்தரவிற்கு எதிராக தனியார் நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டதால் பசுமைத் தீர்ப்பாயம் தனியார் ஆலைகளுக்கு தண்ணீர் வழங்க இடைக்காலத் தடை விதித்து கடந்த மே மாதம் உத்தரவிட்டிருந்தது. ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து தண்ணீர் பெற்று வந்த ஸ்பிக் மற்றும் தாரங்கதாரா நிறுவனங்கள் இந்த இடைக்காலத்தடையை நீக்கக் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் பதில் அளித்த குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் துறை ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டிலிருந்து விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்குப் போக மீதியுள்ள தண்ணீரையே தனியார் ஆலைகளுக்கு வழங்குகிறோம் எனக் கூறியதன் அடிப்படையில் இடைக்காலத் தடையை தீர்ப்பாயம் கடந்த ஜூலை மாதம் நீக்கி உத்தரவிட்டது. ஆனால், இந்தியாவின் “நீராதார துறை’’ (central water commission) தெளிவாக சொல்லியுள்ளது, இந்தியாவில் ஓடும் எந்த நதியிலும் உபரிநீர் கிடையாது என்றும் பிரம்மபுத்திராவில் மட்டும் சிறிது உபரி நீர் இருப்பதாக சொல்லுகிறது அந்த ஆய்வு அறிக்கை. இடைக்காலத் தடை நீக்கப்பட்ட பின்னர் மீண்டும் தனியார் ஆலைகளுக்கு தண்ணீர் வழங்கப்பட்டது. வழக்கின் அடுத்த கட்ட விசாரணையின்போது பதில் மனு அளித்த தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை “ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டிலிருந்து குடிநீர் தேவைக்கு மட்டுமே தண்ணீர் எடுக்க முடியும் அனுமதியின்றி குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் தனியார் ஆலைகளுக்கு தண்ணீர் வழங்கியது தவறு இதுகுறித்து 60 நாட்களில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்“ எனக் கூறியிருந்தது. இதன் மூலம் இத்தனை ஆண்டு களாக முறையான அனுமதியின்றி இந்த தண்ணீர் கொள்ளையை தமிழக அரசின் குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் துறை செய்திருப்பது தெள்ளத் தெளிவாக அம்பலமாகியுள்ளது. இந்த வழக்கின் மீதான தீர்ப்பு வருகிற டிசம்பர் மாதம் வெளிவரவுள்ளது. விவசாயிகளுக்கும் தாமிரபரணி நதிக்கும் நியாயம் கிடைக்கும் வகையில் தீர்ப்பு வரவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது

நிலன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments