புவி வெப்பமடைதலில் ராணுவத்தின் பங்கு

இராணுவம் என்று வந்துவிட்டால் உலகநாடுகள் அனைத்திற்கும் கிட்டத்தட்ட ஒரே மனநிலைதான். அனைத்து நாடுகளும் தனக்குப் போட்டி அல்லது எதிரி என நினைக்கும் நாடுகள், அவர்களின் இராணுவத்திற்குச் செய்யும் அளவிற்கு இணையாக அல்லது அதைவிட அதிகமாகத் தாங்களும் செய்ய வேண்டும் என்று கடன் வாங்கியாவது செய்கின்றன.

ஆனால், அந்தப் போட்டியை நாட்டு மக்களின் கல்விக்கு, சுகாதாரத்திற்குச் செலவழிப்பது போன்றவற்றிற்குச் செய்வதில்லை. இதற்கு பெரிய காரணமொன்றுமில்லை. அது அடித்தட்டு மக்களுக்கானது அவ்வளவுதான். ஆனால், இராணுவம் அப்படியல்ல. அது அதிகார வர்க்கத்திற்கானது. உலகிலுள்ள ராணுவங்கள் அதிக ஆற்றல் வளங்களை பயன்படுத்துவது உலக வெப்பமயமாதலுக்கு முக்கியக் காரணியாக உள்ளது. ஆனால், எந்த நாடும் அதைக் குறைக்கவும் கட்டுப்படுத்தவும் முயற்சிகளை மேற்கொள்வதில்லை. 2020ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 2 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் ராணுவத்திற்காகச் செலவிட்டுள்ளது அந்நாடு. நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் ராணுவத்திற்குச் செலவு செய்யும் தொகையை முந்தைய ஆண்டை விட அதிகப்படுத்திக் கொண்டே உள்ளன.  இதன் அர்த்தம் வருடா வருடம் அது பயன்படுத்தும் ஆற்றலும் அதன் மூலம் வெளிப்படும் கார்பனும் அதிகரித்துக் கொண்டே உள்ளது என்பதாகும்.

உலகளவில் கார்பன் வெளியீட்டில் அமெரிக்க ராணுவம் மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது 2001 – 2017வரை  அமெரிக்கா ராணுவம் 1.2 பில்லியன் மெட்ரிக் டன் அளவு பசுமை இல்ல வாயுவை வெளிப்படுத்தி இருக்கிறது. இது 25.7 கோடி கார்கள் ஒரு ஆண்டில் வெளியிடும் பசுமை இல்ல வாயுவின் அளவிற்குச் சமமாகும். அமெரிக்க ராணுவத்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ராணுவத் தளவாடங்கள் நிறுவப்பட்ட இடங்கள் மிக அதிகமாக சூழல் பாதிப்படைந்துள்ளது. ஏனெனில், அங்கு நச்சு வேதிப்பொருட்கள், பெர்க்குளரேட் மற்றும் ஜெட் எரிபொருளின் பகுதி பொருட்கள் ஆகியவை மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. அமெரிக்க ராணுவம் 41 லட்சம் டன் பசுங்குடில் வாயுவை 2020ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் வெப்பம் மற்றும் மின்சாரத் தேவைக்காக பயன்படுத்தபடும்  ஆற்றல் மூலங்களிலிருந்த வெளியேறும் பசுங்குடில் வாயுக்களின் அளவு 10 லட்சம் டன்தான். அப்படியெனில், அதைவிட நான்கு மடங்கு அதிகமாக அமெரிக்க ராணுவம் பசுங்குடில் வாயுக்களை வெளியிட்டுள்ளது.

அமெரிக்கப் பாதுகாப்புத்துறை, அந்நாட்டின் மிகப்பெரிய ஆற்றல் பயன்பாட்டாளர் மட்டுமல்ல; உலகிலேயே மிகப்பெரிய பெட்ரோலிய பயன்பாட்டாளரும், மிகப்பெரிய பசுங்குடில் வாயு வெளியிட்டாளரும்கூட.  2022ல் மட்டும் அமெரிக்கப் பாதுகாப்புதுறை கிட்டத்தட்ட 8.23 கோடி பேரல் எரிபொருளை நுகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பின்லாந்தின் ஒட்டுமொத்த எண்ணெய் நுகர்வைவிட அதிகம். 2017ல் மட்டும் அமெரிக்க விமானப்படை 4.9 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான எரிபொருளை வாங்கியுள்ளது.

இப்படியாக எரிபொருள் நுகர்வு மற்றும் பசுங்குடில் வாயு உமிழ்வில் அமெரிக்க ராணுவம், உலகின் பல நாடுகளைவிட மிகமிக அதிகமாக உள்ளது. அப்படியெனில் உலக வெப்பமயமாதலில் இதன் பங்கு நாம் நினைப்பதை விடவும் மிக அதிகம். அமெரிக்க ராணுவம் மட்டும் அமெரிக்காவிற்காக வேலை செய்யவில்லை என்பதையும் நாம் நினைவுபடுத்திக் கொள்ள  வேண்டும். வளைகுடா நாடுகளில் நடக்கும் போர்களில் ஏதோ ஒரு வகையில் அமெரிக்கா காரணமாக உள்ளது. அதனாலேயே நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தப் போர்களுக்கு நிதியுதவி, ஆயுத உதவி போன்றவற்றைச் செய்கிறது.

பல நாடுகளின் ராணுவங்கள் அமெரிக்க ராணுவத்தின் ஒரு பிரிவு போலவே செயல்படுகின்றன. இது வளைகுடா நாடுகள் மட்டுமல்ல உலகம் முழுவதுமே நடைபெற்று வருகிறது.அப்படியெனில் அவற்றின் எரிபொருள் நுகர்வு,அந்த இராணுவம் வெளிப்படுத்தும் பசுங்குடில் வாயு மற்றும் அதன் செயல்பாடுகளால் தொடர்ந்து அழியும் காடுகள் என இவற்றையும் சேர்த்தால் அமெரிக்க ராணுவத்தின் பசுங்குடில் வாயு உமிழ்வின் அளவு கற்பனை செய்து பார்க்க முடியாத உயரத்திலிருக்கும். எனவே அமெரிக்கா தன் சுயலாபத்திற்காகவும், அதிகாரப் போதைக்காகவும், தான் உலகை நிர்ணயிக்கும் சக்தி என்பதை நிரூபிப்பதற்காகவும் நடத்தும் போர்களை நிறுத்திக் கொள்ள  வேண்டும். இது அமெரிக்காவினால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு மட்டுமல்ல இந்த ஒட்டுமொத்த உலகிற்கும் நல்லது.

ஏனெனில், உலக வெப்பமயமாதலும் காலநிலை மாற்றமும் கீழைநாடுகளை மட்டுமே பாதிக்கும் என நினைத்து வந்த நிலையிலிருந்து மேலை நாடுகளுக்கு தற்பொழுது நடைபெற்று வரும் நிகழ்வுகளின் தீவிரம் புரிந்துள்ளது. அமெரிக்காவில் தொடர்ந்து ஏற்படும் சூறாவளித் தாக்குதலின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  வெப்ப அலைகளின் தாக்கம் அதிகரித்துள்ளது. .இதனால் அமெரிக்க மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர், இறக்கின்றனர். இதற்கு முன்பிருந்த அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் புவி வெப்பமடைதல்  என்பது பொய் எனவும் அப்படி ஒன்றும் இல்லை எனவும் கூறினார். ஆனால்,  தற்போதைய அதிபர் ஜோ பைடன் காலநிலை மாற்றமும் புவி வெப்பமயமாதலும் உண்மைதான் என்றும் அதை மாற்ற முயற்சிப்பேன் என்றும் கூறியது 2021ல் நடந்த தேர்தலில் முக்கிய விவாதப்பொருள்ளக இருந்தது.

வெறும் கண்துடைப்பிற்காக இல்லாமல் .அமெரிக்க அரசு தன் உறுதிப்பாட்டை செயல்பாடுகளிலும் காட்ட  வேண்டும். அதன் பங்காளிகளான ஐரோப்பாவும் முன்பு எப்பொழுதும் பார்க்காத வெப்ப அலை, தொடர் காட்டுத்தீ அதனால் ஏற்படும் உயிரிழப்பு போன்றவற்றால் பாதிப்பிற்குள்ளாகி வருகிறது.

ஐரோப்பிய நாடுகள் வரலாற்று ரீதியிலும் தற்போதும் அதிக கார்பன் உமிழும் நாடுகளாகத் தொடர்கின்றன. அவ்ற்றின் தொழிற்சாலைகள் மட்டுமல்ல இராணுவமும் மிகப்பெரிய அளவு கார்பனை வெளியிடுபவையாகவே  உள்ள  நிலையில் பாரிஸ் உடன்படிக்கை உட்பட்ட பல உடன்படிக்கையின் படி அவை காலநிலை மாற்றத்திலிருந்துத் தங்களை பாதுகாத்துக் கொள்ள கீழை நாடுகளுக்குத் தருவதாகக் கூறிய நிதியை தரவில்லை. தருவதாக கூறிய நிதியே மிகவும் குறைவு, பற்றாக்குறையுடையது என்பதையெல்லாம் தாண்டித் தரவே மறுக்கின்றன என்பதே நிதர்சனமான உண்மை.

ஆனால், தொடர்ச்சியாக இராணுவத்திற்கு மட்டும் தடையில்லாமல் பெரும்  நிதியை அளித்து  வருவது இந்த உலகை அழிவுப்பாதைக்கு மட்டும் எடுத்துச் செல்லும்  என்பதை  நாடுகள் உணர வேண்டும். அதை உணர்ந்து பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உதவிகளைச் செய்து தங்களின் செயல்பாட்டால் பாதிப்புக்குள்ளான மற்றும் உள்ளாகிக்கொண்டிருக்கும் நாடுகளைப் பாதுகாக்க  வேண்டும். இராணுவச் செலவுகளை அனைத்து நாடுகளும் குறைக்க  வேண்டும். அடுத்த வேலை உணவிற்கு அல்லல்படும் பல லட்சம் மக்களைக் கொண்ட இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் அணு ஆயுதத்தை வைத்திருந்து என்ன பயன் என்பதை உணர்ந்து ஆயுதங்களுக்குச் செலவழிப்பதை விட்டு ஆக்கப்பூர்வமான வேலைகளைச் செய்ய  வேண்டும்.

2022-23 காலகட்டத்தில் ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் இராணுவச் செலவிற்காக 5.25 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் மொத்த பட்ஜெட்டே 39. 45 லட்சம் கோடிதான். இந்தியா பல கோடி மக்கள் வறுமையில் சிக்கித் தவிக்கும் ஒரு நாடு. இங்கே பெரும்பாலான மக்களுக்கு இன்னும் அடிப்படை தேவைகள்கூடப் பூர்த்தி செய்யப்படவில்லை. சரியான சுகாதார வசதி இல்லாமல் பல லட்சம் மக்கள் கொரோனா காலத்தில் இறந்ததை நம் கண் முன்னே நாம் பார்த்தோம். பலகோடி சிறுவர்கள் கல்வி கற்பதற்கான வாய்ப்பில்லாமல் எதிர்காலம் கேள்விக்குள்ளான நிலையில் உள்ளனர். ஊட்டச்சத்துக் குறைபாட்டால் இந்தியாவில் பெண்களும் குழந்தைகளும் இரத்தசோகையினால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என           5 ஆவது தேசிய குடும்ப நல ஆய்வு (NFHS-5) கூறுகிறது.

2022 ஆம் ஆண்டில் உலகளாவிய பசி குறியீட்டில் (GHI) இந்தியா 107 வது இடத்திற்கு சரிந்துள்ளது, 2021 இல் 101 வது இடத்திலிருந்து கீழே இறங்கியுள்ளது. GHI குறியீட்டை கன்சர்ன் வேர்ல்டுவைடு மற்றும் வெல்ட் ஹங்கர் ஹில்ஃப் (Concern Worldwide and Welt Hunger Hilfe) இணைந்து வெளியிடுகிறது. மக்கள் பட்டினியில் இப்படி தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் இராணுவத்திற்கு அதிகமாகச் செலவு செய்வது என்பது எப்படி நியாயமாக முடியும்.

இராணுவத்திற்கான ஆற்றல் பயன்பாடு மற்றும் அதனால் வெளியிடப்படும் கார்பன் உமிழ்வு அனைத்தும் இராணுவ விமானங்கள், போர்க்கப்பல்கள் மற்றும் இராணுவ வாகனங்கள் மற்றும் ஆயுதங்களின் பயன்பாடு ஆகியவற்றை கொண்டே கணக்கிடப்படுகின்றன. ஆனால், ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்வதற்கும் அதை இடப்பெயர்வு செய்வதற்கும் ஆற்றல் தேவைப்படுகிறது அதன் காரணமாகவும் கார்பன் வெளியேறுகிறது என்பதை நாம் கவனிக்க  வேண்டும். மேலும் இராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் ஆகியவை பிற தொழிற்சாலைகளை விட அதிகளவு மாசை ஏற்படுத்துவதாக உள்ளன. 2019ல் உலகின் மிகப்பெரிய 25 ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் 361 பில்லியன் அமெரிக்க டாலருக்கு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளன. இது 2018 ஆம் ஆண்டை விட 8.5% அதிகம்.

இராணுவ விமானங்கள் உயரத்தில் பறக்கும் பொழுது கார்பன்-டை-ஆக்சைடு மட்டுமல்லாமல் NOx போன்ற பல நச்சு வாயுக்களை வெளிப்படுத்துகின்றன. பயணிகள் விமானத்தைவிட இராணுவ விமானம் உயரமாகப் பறக்கிறது. அதாவது, பயணிகள் விமானம் 23,715 அடி உயரத்தில் பறந்தால் , ராணுவ விமானங்கள் 53,583 அடி அதாவது சாதாரண விமானத்தை விட இரண்டு மடங்கு உயரமாகப் பறக்கிறது. அப்படிப் பறக்கும் பொழுது அதிக எரிபொருளை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். விமானப் போக்குவரத்து உலக வெப்பமயமாதலுக்கு 3.5% காரணமாகிறது . ஆனால், அதில் 8% முதல் 15% அளவு இராணுவ விமானப் போக்குவரத்தால் நடைபெறுகிறது. உலகில் இராணுவம் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் மற்றும் அவற்றிற்குப் பயிற்சி அளிக்கப்படும் நிலப்பரப்பளவு 1% முதல் 6% ஆக உள்ளது இது உலகின் பல நாடுகளின் பரப்பளவை விட மிக மிக அதிகம்.

பெரும்பாலும் சாதாரண மனித செயல்பாடு இல்லாத காட்டுப்பகுதியிலோ,மலைப்பிரதேசத்திலோ, கடற்கரைப் பரப்பிலோ இருக்கும் ராணுவப் பகுதிகள்  சூழல் பாதிப்புகளை அப்பகுதியில் ஏற்படுத்தும்.  இது போன்ற ராணுவ பயன்பாட்டால் ஸ்காட்லாந்து, அலாஸ்கா, கென்யா, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் காட்டுத்தீ பற்றி பல்லாயிரம் ஏக்கர் காடுகள் அழிந்துள்ளது.

பசுங்குடில் வாயி உமிழ்வில் கழிவு மேலாண்மையின் பங்கு 3% ஆகும்.   இராணுவ நடவடிக்கைகளில் உண்டாகும் கழிவை மறுசுழற்சி செய்வதற்கு ஆற்றல் தேவைப்படுகிறது. இதனாலும் உமிழ்வு அதிகரிக்கிறது. பல இடங்களில் ராணுவ நடவடிக்கைகளில் வெளியாகும் கழிவுகள் அப்புறப்படுத்தப்படாத காரணத்தால் நிலமும், நீரும் மாசடைகிறது.  கழிவுகள் எரிக்கப்படுவதால் காற்று மாசடைகிறது.

ஆனி லியொனார்ட் தனது “பொருள்களின் கதை( Story of Stuff)” என்ற புத்தகத்தில் போரைப்பற்றி இவ்வாறு கூறியுள்ளார்.  “போதிய பணம் இல்லை எனக் காரணம்கூறி மிக முக்கியமான பொதுமக்கள் சேவைகளைத் துண்டித்த அல்லது நம்முடைய பொருளாதாரத்தை முறைப்படுத்தப்பட்ட வளர்ச்சி நிலைக்கும் மாற்றுவதற்கான நிதி உதவியை மறுத்த நம்முடைய தலைவர்களை இதுவரை அனுமதித்தது போதும். பணம் உள்ளது; மிக அதிகமாகவே உள்ளது. ஆனால், அது உலகம் முழுவதும் உள்ள போர்களில் வீணாக்கப்படுகிறது. நம்முடைய விழுமியங்களோடு பொருந்தும் வகையில் நம்முடைய அரசின் செலவிடுதல் இருக்க  வேண்டும் என்பதை உறுதி செய்வது குடிமக்களாகிய நம்முடைய உரிமையும் பொறுப்பும் ஆகும். பள்ளிகளையும் மக்கள் நல மருத்துவமனைகளையும் இதர முக்கிய சமூகத் தேவைகளையும் துண்டித்துவிட்டுப் போருக்கு நிதியுதவி செய்வது எனக்குப் பொருத்தமானதாக தோன்றவில்லை. உங்களுக்கும் அவ்வாறே தோன்றும் என நான் நம்புகிறேன்” இவ்வாறாக இந்த உலகில் சுற்றுச்சூழலைக் காத்து மேம்பட்ட எதிர்காலத்தை உருவாக்க ராணுவங்களைக் கலைப்பதே முதன்மையான காரியம் என்கிறார் ஆனி லியோனார்ட்.

Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
devi
devi
1 year ago

good article .