தமிழ்நாடு வனத்துறையில் வனவிலங்கு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக
23 கால்நடை மருத்துவப் பணியாளர் பணியிடங்கள் உருவாக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
வனவிலங்குகள் பராமரிப்பிற்கென அவற்றுக்குச் சீரிய பாதுகாப்பு மற்றும் மருத்துவ சேவைகளை வழங்கும் பொருட்டு, 8 உதவி கால்நடை மருத்துவர், 6 கால்நடை உதவியாளர் மற்றும் 9 கால்நடை உதவியாளர் பணியிடங்கள் உட்பட மொத்தம் 23 கால்நடை மருத்துவப் பணியிடங்களை உருவாக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய பராமரிப்பு மையங்களுக்கு உதவுவதுடன், தற்போதுள்ள பராமரிப்பு மையங்களுக்கு சிறந்த மருத்துவ சேவைகளை வழங்க இயலும் என வனத்துறை தெரிவித்துள்ளது.
G.O.Ms.No.49,வனத்துறையில் பதினொன்று உதவி கால்நடை மருத்துவர் பணியிடங்கள் மட்டுமே தற்போது வரை இருந்து வந்தது. ஒரே ஆணையில் இது போன்று அதிக எண்ணிக்கையில், 23 கால்நடை மருத்துவப் பணியாளர் பதவிகளை உருவாக்கியுள்ளது தமிழ்நாடு அரசு.
இது தொடர்பாக வெளியான செய்திக் குறிப்பில், ”வனவிலங்குகளை பாதுகாக்கும் பொருட்டு அவற்றுக்கான பராமரிப்பு மற்றும் மருத்துவ வசதிகளை வழங்குவதில் தமிழக அரசு முன்னோடியாக விளங்குகிறது. இவ்வரசு வனவிலங்குகளின் பாதுகாப்பிற்காக நவீன பாதுகாப்புத் திட்டங்களை உருவாக்க எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கோயம்புத்தூர் மாவட்டம் சாடிவயல் பகுதியில் புதிய யானைகள் பாதுகாப்பு மையம் ஒன்றினை அமைக்க உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் பெத்திக்குட்டை பகுதியில் புதிதாக யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்கப்பட உள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் பாதுகாப்பு மையம் மற்றும் ஆனைமலை புலிகள் பாதுகாப்பு மையத்தில் உள்ள யானைகள் பாதுகாப்பு மையங்கள் மேம்படுத்தப் பட்டுள்ளன. மீட்கப்பட்ட மற்றும் உடல் நலிவுற்ற யானைகள் திருச்சியில் உள்ள எம்.ஆர்.பாளையம் மையத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.” எனக் கூறப்பட்டுள்ளது.
.