மரம் வளர்க்கும் மாணவர்கள்: ஊக்கம் அளிக்கும் பேராசிரியர் !

இப்பொழுதெல்லாம் எல்லா நிகழ்ச்சிகளிலும் மரக்கன்றுகளை பரிசாக அளித்தல் என்பது வாடிக் கையாகிவிட்டது. பல்வேறு சமூக அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், வீட்டு குடியிருப்புகள் தொடங்கி கல்யாணம் வரை விருந் தினர்களுக்கு அன்பளிப்பாக மரக் கன்றுகள் வழங்கப்படுகின்றன. ஆனால், அவ்வாறு வழங்கப் படுகின்ற மரக்கன்றுகளில் எத்தனை மரக்கன்றுகள் முறையாக நடப் பட்டு பாதுகாக்கப்படுகின்றன என்பது கேள்விக்குறியாக உள்ளது. அன்பளிப்பாக மரக்கன்றுகள் வாங்கிவரும் பாதி வழியிலேயே குப்பைத் தொட்டிகளில் எறியப் படும் அவலங்களும் நிகழ்கின்றன. ஆனால், பள்ளிக் குழந்தைகளை வைத்து மரக்கன்றுகளை வளர்த்து அவை தமிழகத்தின் பல பகுதிகளில் பாதுகாப்பாக நடும்வரை உடனிருந்து எல்லா வேலைகளையும் கவனிக்கிறார், சென்னை லயோலா கல்லூரியின் (LIBA) தொழில் நிர்வாகத் துறை இயக்குனர் அழகுப்பெருமாள். மரங்களின் மீதான இவரது ஆர்வம் எங்கிருந்து தொடங்கியது என்பதை அவரே கூறுகிறார். “2008ஆம் ஆண்டில் தலித் பெண்கள் தொழில் முனை வதற்கு என்னென்ன தடைகள் ஏற்படுகின்றன என்பதைப் பற்றி ஆய்வுசெய்வதற்காக தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு பயணம் செய்தேன். அப்படி பயணம் செய்யும்போதெல்லாம் விவசாய நிலங்களெல்லாம் வீட்டுமனைகளாக மாறி வருவதை கவனித்தேன். அங்குள்ள குடும்பங்களை கவனித்தால் விவசாயத்தை கைவிட்டு வேறு வேலைகளை செய்கின்றனர். இருக்கின்ற நிலங்களை தரிசு நிலங்களாக போட்டுள்ளார்கள். வீட்டு மனைகளாக விற்கும்போது கொஞ்சம் சேமித்து வைத்துக் கொள்ளலாம் என்கிற எண்ணம் தோன்றுகிறது. இதே நிலைமை நீடித்தால் நம்முடைய வளங்கள் எல்லாம் போய்விடும் என்பதை உணர்ந்தேன். அதனால்தான் மாணவர் களை ஒன்றுதிரட்டி மரம் வளர்ப்பதன் நன்மை களை என்னால் முடிந்த அளவுக்கு பரப்பி வருகிறேன்.” என்கிறார் அழகுப் பெருமாள். இதற்காக அவர் உருவாக்கிய அரசு சாரா அமைப்புதான் IIIBFT (Indo-International Initiative for Billions of Fruit Trees) . அதாவது, குறிப்பாக பழங்கள் தரும் மரக்கன்றுகளை நடுவது நம் நாட்டின் உணவுத்தேவையை ஓரளவு பூர்த்தி செய்வதற்கான ஒன்றாக இருக்கும். பாதாம் மரம், மாமரம், பலா மரம், சப்போட்டா மரம் போன்ற மரக்கன்றுகளை மாணவர்களை வைத்து வளர்க்கச் செய்கிறார். ஏன் மாணவர் களை வைத்து இந்த மரக்கன்றுகளை வளர்க்க வேண்டும் என்ற கேள்வியை அவரிடம் முன்வைத்தபோது, “மரக்கன்றுகளை குறிப்பிட்ட அளவு நாமே வளர்த்து விடலாம். ஆனால், இது ஒரு சமுதாயத்திற்கான உந்துதல். அதை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்தால்தான் அவர்கள் வளரும்பொழுதே மரங்களின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்வார்கள்.”, என்று கூறுகிறார். இதுவரை 25க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 25,000 மரக்கன்றுகள் மாணவர்கள் கையால் பராமரிக்கப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளது.

முதலில், லயோலா கல்லூரி மாணவர்களை வைத்தே 2,000 மரக்கன்றுகளை பாலிதீன் பைகளில் வைத்து வளர்த்திருக்கிறார். பிறகு, பள்ளி மாணவர்களை மரக்கன்றுகளை வளர்க்க ஊக்கம் கொடுத்திருக்கிறார். மரக்கன்றுகள் வழங்கும் ஒரு விழாவில் அப்போதைய சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி அவரது நோக்கத்தைப் புரிந்துகொண்டு மாநகராட்சி பள்ளிகளில் செயல்படுத்துவதற்கும் ஊக்குவித்தார். “மரக்கன்றுகள் பாதியளவு வளர்ந்த பிறகு ‘ட்ரீ பேங்க்’ அமைப்பை சேர்ந்த முல்லைவனம் என்பவரிடம் ஒப்படைப்போம். எனக்குத் தெரிந்து மரக்கன்றுகளை பாதுகாப்பாக நடுவதில் அவர் மிகவும் பொறுப்பானவர். சிலர், நம்மிடம் மரக்கன்றுகளை வாங்கிக்கொண்டு என்ன செய் தார்கள் என்பதே தெரியாமல் போய்விடும். அவர் வைகை நதி, மேட்டூர் அணை ஆகிய பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டுவிடுவார். அவரிடம் அதற்கான தன்னார்வலர்கள் உள்ளனர். அதனால், நான் மரக்கன்றுகளை அவரிடம்தான் ஒப்படைப்பேன்.”, என தனக்கு துணைபுரிந்த முல்லை வனம் பற்றி கூறினார். பள்ளிகளிலேயே மரக்கன்றுகளை வளர்ப்பதில் பல சிக்கல்கள் இருக்கும். சில பள்ளிகளில் தண்ணீர் பிரச்சனை, மரக்கன்றுகளை வைப்பதற் கான இடப் பற்றாக்குறை ஆகியவை முக்கியமான பிரச்சனைகள். அதனால், நன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் சில பள்ளிகள் பின்வாங்கும் சம்பவங்களும் நடந்துள்ளன. எரு மண், மரக் கன்றுகள் வளர்ப்பதற்கான பாலித்தீன் பைகள், போக்குவரத்து செலவு போன்றவைகளும் இவருக்கு இருக்கின்றன. மிமிமிஙிதிஜி-க்கு சில தனியார் நிறுவனங்களும் நிதியுதவி செய்துள்ளன.

IIIBFT சார்பாக‘நம் மாழ்வார் விருது’ முதன் முறையாக முல்லை வனத் திற்கு வழங்கப்பட்டது. அது மட்டுமின்றி 2013-ஆம் ஆண்டில் இயற்கை விவசாயி நம்மாழ்வார் IIIBFT யின் செயல்பாடுகளை பார்வை யிட்டுள்ளார். மரம் நடுதலில் உள்ள சில உத்திகளையும் நம்மாழ்வார் தனக்கு சொல்லித் தந்ததாக நினைவுகளை மீட்டுக் கொள்கிறார் அழகுப் பெருமாள். நம்மாழ்வார் பெயரில் விருது வழங்குவதை தனக்குக் கிடைத்த பெருமை எனவும் கூறுகிறார். லயோலா கல்லூரிக்கு அருகிலுள்ள ஸெயிண்ட் ஜோசப் பள்ளிக்கு சென்றோம். அங்குள்ள மாணவர்கள் தாங்கள் சாப்பிட்ட பழங்களின் விதைகளை வகுப்புகளில் காயவைத்து காலை, மாலை இருவேளைகளிலும் தண்ணீர் ஊற்றி மரக்கன்றுகளை வளர்க்கின்றனர். “இயற்கையோட எப்பொழுதும் ஒரு தொடர்பு வைத்திருப்பதுதான் நம்முடைய மரபு. செடி, கொடிகள் எல்லாம் நம்மை மாதிரி பாதுகாக்க வேண்டியவை. அவற்றுக்கும் உயிர் உள்ளது. இந்த மரங்கள் எல்லாம் எங்கேயோ வளரப்போகுது. யாரோ பயன்பெற போறாங்க. அதற்கு நம்முடைய சின்ன பங்கு இது. நம்ம மாணவர்களை வழிநடத்துனோம்னா மாணவர்கள் பின்பற்றிக் கொள்வார்கள்.”, என இந்த பள்ளியின் தாளாளர் பெலின் ஜெஸி மாணவர்களை வழிநடத்துகிறார்.

மாணவர்களைப் பொறுத்தவரை விடுமுறை நாட்களிலும் வந்து மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுவார்கள். அதன் அருகில் குப்பைகள் இருந்தால் அகற்றுவார்கள். இருவேளையும், அதனை பார்வையிடுவார்கள். “அவர்களுடைய படிப்புக்கும் இடையூறு ஏற்படாத வகையில் உடற்பயிற்சி வகுப்பு, இடைவேளை நேரம், மாலையில் சிறிது நேரங்களில் மரக்கன்றுகளை பராமரிக்கும் வேலைகளை மாணவர்களை செய்ய சொல்வோம். மாணவர்களை பொறுத்தவரை இதில் அவர்களை வற்புறுத்துவது கிடையாது, அவர்களுக்கே ஆர்வம் அதிகம். களைகளை அப்புறப்படுத்துவார்கள். களை எது? செடி எது? என்பது அவர்களுக்கு தெரியும். இலையை பார்த்தவுடன் அவர்கள் எந்த மரம் என்பதையும் சொல்லிவிடுவார்கள்.”, என மாணவர்களை இயற்கையை நோக்கி செயல்படுத்தும் ஆசிரியர் சகாயராஜ் கூறுகிறார். “மரம் வளர்த்தால்தான் மழை பெய்யும். நம்முடைய சுற்றுச்சூழலுக்கு இதனால் என்னென்ன பயன்கள் என்பதை சொல்லித் தருவாங்க. நாங்க இந்த பள்ளியை விட்டுப் போனாலும் அடிக்கடி வந்து இந்த கன்றுகளை பார்த்துக் கொள்வோம். வீட்டிலும் தொட்டிகளில் சிறிய சிறிய செடிகளை வளர்க்கிறோம். பாதாம் மரம், நாவல் மரம் இவற்றையெல்லாம் நாங்கள் எங்களில் பள்ளிகளில் வளர்க்கிறோம். இயற்கை மீது ஆர்வம் இதனால் எங்களுக்கு நிறைய ஆர்வம் வருகிறது.”, என மாணவர்கள் கூட்டாக தெரிவிக்கின்றனர். சிறிய மரக்கன்றுகளை ஒரு தனியாளே சிரத்தை எடுத்து குறிப்பிட்ட அளவு வளர்த்து விடலாம் என்றாலும் மாணவர்கள் கையில் இயற்கையை நோக்கி அவர்களை மடைமாற்றி விடுவதற்கு இத்தகைய வழிகாட்டுதல்கள் அவசியமாகின்றன. பள்ளி மாணவர்களுக்கு மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் போது நாளடைவில் அவர்கள் ஒரு வீடு கட்டும்போது ஒரு மரத்தை வெட்டுவதற்கு கூட நிச்சயம் யோசிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

நந்தினி

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments