ட்ராஜன் குதிரையும் கேரளத்து வாத்தும்! – ஃப்ளூ வைரஸ்கள் எனும் 85 வருட மர்மம்!”விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் வைரஸ்களை விவாதிப்பது போல நான் சளிக்காய்ச்சல் (Influenza) வைரஸ்கள் குறித்து விவாதிக்கப் போவதில்லை. காரணம், அவை முக்கியமற்றவை என்பதால் அல்ல.மாறாக அவை மிகப் பெரிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதீத சிக்கலானவை, 1918-1919ல் ஏற்பட்ட சளிக்காய்ச்சல் தொற்றால் 50 மில்லியன் மக்கள் இறந்துபோனார்கள். ஆனால் அது வைரஸ்தான் என்று கண்டறிய அப்போது போதுமான அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டிருக்கவில்லை. அதன்பிறகு பல்வேறு முறை இந்த வைரஸ்கள் மனிதச்சமூகத்தின் மீது படையெடுத்துவிட்டன. 1957ல் 2 மில்லியன் பேர் இந்தக் காய்ச்சல் வைரஸால் இறந்தார்கள். 1968ல் ஹாங்காங்கில் ஏற்பட்ட காய்ச்சல் வைரஸ் தொற்றால் ஒரு மில்லியன் மக்கள் இறந்தார்கள். பன்றிகள், குதிரைகள்,பூனைகள் பறவைகள் என வெவ்வேறு ரக உயிரினங்களையும் இந்த இன்ஃபுளுவன்சா வைரஸ்கள் வெவ்வேறு பரிமாணங்களில் பாதிக்கத் தொடங்கின. உயிரினங்களைத் தாக்கும் மர்மமான நுண்ணுயிரி இது என்பது வரை 1950களின் இறுதியில் ஆய்வாளர்கள் அனுமானித்திருந்தார்கள். கிட்டத்தட்ட 85 வருடங்கள் கழித்து 2005ல்தான் முதன்முதலில் சளிக்காய்ச்சல் வைரஸ்களை அடையாளப்படுத்தத் தொடங்கினார்கள். மனிதர்களில் வருடாந்திரமாகச் சர்வதேச அளவில் 3 மில்லியன் பேர் இந்த காய்ச்சல் வைரஸால் பாதிக்கப்படுகிறார்கள், குறைந்தபட்சம் 250,000 பேர் மரணிக்கிறார்கள். எப்படிக் கூட்டிக்கழித்துப் பார்த்தாலும் ஜூனோசஸ்களுக்கு அடுத்து மனித இனம் சந்திக்கும் அடுத்த மிகப்பெரும் பயங்கரமாக இந்த இன்ஃபுளுவன்சா வைரஸ்கள் இருக்கின்றன.இன்னும் சொல்லப்போனால் உலகத்தின் ஊழிக்காலமாக இவை இருக்கும்”

ஃப்ளூ வைரஸ் எனப்படும் காய்ச்சல் வைரஸ் வகைகள் குறித்துத் தனது ’ஸ்பில் ஓவர்’ புத்தகத்தில் மேலே சொன்னபடி விவரிக்கிறார் அறிவியல் எழுத்தாளர் டேவிட் குவாமென்.

உலகம் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியைக் கண்டுபிடித்துவிட்டதாக நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த அதே சமயம் இந்தியாவின் ராஜஸ்தான், கேரளா, ஒடிசா, மத்தியப்பிரதேசம், இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து வேறு விதமான விநோதப் புகார்கள் வரத் தொடங்கியிருந்தன.

காகங்கள், பண்ணைகளில் இருந்த வாத்துகள், கோழிகள், வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த பறவைகள் எனக் கொத்துக் கொத்தாகப் பறவைகள்  இறந்து கொண்டிருந்தன.   புகார்களை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் ராஜஸ்தான்,மத்தியப்பிரதேசம் மற்றும் கேரளாவில் பறவைகளைத் தாக்கும் H5N8 வகை ஃப்ளூ வைரஸும்(Bird flu) இமாச்சலப் பிரதேசத்தில் இறந்த பறவைகளில் H5N1 ரக வைரஸும் (Bird flu) பரவியிருந்தது உறுதிசெய்யப்பட்டது. இறுதியாக 30 ஜனவரி 2021 அன்று மத்திய மீன்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத்துறை வெளியிட்ட பறவைகள் இறப்புப் புள்ளிவிவரத்தை வெளியிட்டது.

மாநிலம் வாத்துகள்/கோழிகள் காகங்கள்/வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த பறவைகள்/காட்டுப்பறவைகள்
ராஜஸ்தான் 67 6528
குஜராத் 238 590
கேரளா 25864
ஹரியானா 210000
மத்திய பிரதேசம் 12 4437
இமாச்சலப் பிரதேசம் 5394
சட்டீஸ்கர் 53 485
பஞ்சாப் 49936 88
உத்திரபிரதேசம் கோழிகள் மற்றும் காகங்கள் சேர்த்து 912  
டெல்லி 542
உத்திரகாண்ட் 7
மகாராஷ்டிரா 17590 1648
ஜம்மூ மற்றும் காஷ்மீர் 4

தொற்று மேலும் பரவாமல் இருக்கத் தற்போது மத்திய அரசு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் வைரஸ் கண்டறியும் புதிய பரிசோதனைக் கூடம் ஒன்றை அரசு நிறுவ இருக்கிறது. கேரள அரசு பாதிக்கப்பட்ட 1,200 வேளாண் விவசாயக் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு அறிவித்துள்ளது. ஆனால், கொரோனா தொற்று பரவியதிலிருந்து ஒரு பக்கம் வேளாண் விற்பனைகள் சரிவடையத் தொடங்கியதால் கேரள விவசாயிகள் தங்களுக்கு இந்த நஷ்ட ஈடு போதாது என்று குரல் கொடுத்து வருகிறார்கள்.

 

பறவைக்காய்ச்சலின் தடயங்கள்:

இந்தியாவுக்கு இந்தப்  பறவைக்காய்ச்சல் புகார்கள் புதிதல்ல. 2006-2015 காலகட்டத்தில் மட்டும் H5N1 ரக வைரஸ்களின் தாக்கம் மத்தியக் கால்நடைப் பராமரிப்புத் துறையால் 25 முறைப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 2014ம் வருடம் கேரளாவில் தற்போது போலவே வாத்துகளில் பறவைக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டதில் 15000க்கும் மேற்பட்ட வாத்துகள் இறந்தன. 2006 தொடங்கி பன்னிரெண்டு வருடகாலப் புள்ளிவிவர அறிக்கையின்படி பறவைக் காய்ச்சல் அறிகுறிகள் காரணமாக இந்தியாவில் 83.49 லட்சம் பறவைகள் கொல்லப்பட்டிருக்கின்றன. வேளாண் விவசாயிகளுக்கு 26.37 கோடி வரை நஷ்டஈடு வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இன்றுவரை இந்த வகை வைரஸ்களை எதிர்கொள்வது சர்வதேசச் சவாலாகவே இருந்து வருகிறது.

1961ல் தென் ஆப்பிரிக்காவில் டேர்ன் (Terns) எனப்படும் கடற்பறவை வகைகள் மர்மமான முறையில் இறக்கத் தொடங்கின. அவை கோடைக்காலங்களில் தெற்கு நோக்கிப் பயணிக்கக் கூடியவை.அதனால் ஆஸ்திரேலியாவிலிருந்து பறவைகளுக்குத் தொற்றுநோய் பரவியிருக்கலாம் எனச் சொல்லப்பட்டது. அடுத்த சிலகாலங்களிலேயே ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் அதிக எண்ணிக்கையிலான கடற்பறவைச் சடலங்கள் கிடைத்தன. தொற்று எங்கிருந்து தொடங்கியிருக்கும்  எனக் கண்டறியக் கிளம்பிய ஆய்வாளர்கள் ராபர்ட் வெப்ஸ்டர் மற்றும் வில்லியம் க்ரேம் லேவர் குயின்ஸ்லேண்ட் கடற்கரையின் பவளப்பாறைகளில் இருந்த ஷியர்வாட்டர் (Shearwater) ரகப் பறவைகளில் இந்தப் பறவைக்காய்ச்சல் வைரஸ்கள் தேக்கமடைந்திருப்பதைக் கண்டறிந்தார்கள். அவை H5N3 வகை. இந்த H5 ரகம் பறவைகளில் மட்டுமே தென்படும் என்பதால் பறவைக் காய்ச்சல்கள் மனிதர்களுக்குப் பரவாது என்றார்கள் ஆய்வாளர்கள்.

ஆனால் 1997ல் ஹாங்காங்கின் 3 வயதுச் சிறுவன் ஒருவனின் தீடீர் மரணம் காய்ச்சல் வைரஸ்கள் குறித்தான ஆய்வின் போக்கையே மாற்றியது. இறந்த சிறுவனின் மூச்சுக் குழாய் பரிசோதனையில் வைரஸ் தடயங்கள் கிடைத்தன. ஹாங்காங்கின் சோதனைக் கூடங்களால் அது எந்த வகை வைரஸ் எனக் கண்டறிய முடியவில்லை. அதைப் பரிசோதிக்க டென்மார்க்கிலிருந்து வந்த ஆய்வாளர் ஒருவர் அவை H5 ரக வைரஸ்கள் என்றார். H1,H2, H3 ரகங்கள்தான் மனிதர்களில் தென்படும் H5 ரகம் பறவைகளில் மட்டுமே தென்படுவது,அதனால் அவரது சோதனை முடிவு தவறு என்றார்கள் உள்ளூர் ஆய்வாளர்கள். ’பறவையில் மட்டுமே பரவும் வைரஸ்கள் மனித உடலிலா? வாய்ப்பே இல்லை!’ என விக்கித்துப் போனார்கள் பிற சர்வதேச ஆய்வாளர்கள். அதற்குள் மேலும் சிலர் அதே அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்கள். அவை H5N1 ரக வைரஸ்கள் என உறுதிப்படுத்தப்பட்டது. சீனாவின் வாத்துகளில் 1996ல் பரவிய பறவைக்காய்ச்சலின் நீட்சியாக அந்தச் சிறுவனுக்குத் தொற்று ஏற்பட்டிருந்தது. இதையடுத்து அவசர அவசரமாக நடவடிக்கை மேற்கொண்ட ஹாங்காங் நகர நிர்வாகம் 1.5 மில்லியன் பறவைகளைக் கொன்று குவித்தது. பறவைக்காய்ச்சல் பாதிக்கப்பட்ட பறவைகளைத் தொடுவதால் அல்லது அதன் எச்சங்களைத் தொடுவதால் அது மனிதர்களுக்குப் பரவுகிறது என்று பின்னர் கண்டறியப்பட்டது.

’அதிர்ஷ்டவசமாக இதுவரை அவை மனிதர்களில் இருந்து மனிதர்களுக்குத் தொற்றவில்லை. ஆனால் இந்த காய்ச்சல் வைரஸ்கள் நம்பத்தகுந்தவை அல்ல, எதிர்காலத்தில் எதுவும் நிகழலாம். இதே H5N1 ரகம் மனிதர்களில் இருந்து மனிதர்களுக்குப் பரவினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை’ என முன்னெச்சரிகை விடுக்கிறார் ராபர்ட் வெப்ஸ்டர்.

”வாத்துகள்தான் ட்ராஜன் குதிரைகள்!”

கிரேக்க புராணக்கதையில் ட்ராய் நகருக்கு கடல்வழியாக ட்ராஜன் என்னும் மாபெரும் பொம்மைக் குதிரைக் கொண்டு வரப்பட்ட கதையுண்டு. இந்த ட்ராஜன் குதிரை போன்றதுதான் பறவைக்காய்ச்சல் வைரஸ் பாதிக்கப்பட்ட வாத்து. ட்ராய் நகரத்து மக்கள் தங்கள் கடற்கரைக்கு வந்த அந்தக் குதிரையை வியப்புடன் அணுகினார்கள். அது வந்த சமயம் ட்ராய் நகரத்தில் கொடிய நோய்த் தொற்று ஒன்றும் பரவத் தொடங்கியிருந்தது. அதனால் அதைக் கண்டு மக்கள் பயந்தார்கள். பல நாட்கள் அது ட்ராய் நகரின் கடற்கரையோரமே நின்றிருந்தது. அது ஏன் அங்கே கடற்கரையில் நிற்கிறது என்று அந்த மக்கள் யோசித்து முடிப்பதற்குள் ஒரு நாள் நள்ளிரவில் அந்தக் குதிரையிலிருந்து பல்லாயிரக்கணக்கான போர்வீரர்கள் வெளியேறி இரவோடு இரவாக ட்ராய் நகரத்தைக் கைப்பற்றியிருப்பார்கள். அதுபோலதான் இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவிய நிலையில் அதன் இயல்பைக் கண்டுபிடிப்பதற்குள் அந்த வாத்து மற்றும் பாதிக்கப்பட்ட மனிதர் என இருவருரையுமே அது துவம்சம் செய்திருக்கும்.

’வைரஸ் பாதிக்கப்பட்ட எவ்வித அறிகுறிகளும் தொடக்கத்தில் வாத்துகளில் தெரியாது, ஃப்ளூ வைரஸ்களில் இருக்கும் புரதங்களான ஹீமோக்ளூட்டனின் (H) மற்றும் நியூரமினிடேஸ்(N) அதிவேகமாகத் தன் இயல்பை மாற்றிக் கொள்ளும் தன்மையுடையது.மொத்தம் 16 ஹீமோக்ளூட்டனின் புரதங்கள் மற்றும் 9  நியூரமினிடேஸ் புரத வகைகள் உள்ளன. ஆக (16*9) =144 விதமான சேர்க்கைகளில் இந்த வைரஸ்கள் உருவாகின்றன. ஒவ்வொரு சேர்க்கைக்கும் ஒரு இயல்பு இருக்கிறது. உதாரணமாக 2009ல் பறவைகளில் இருந்து பன்றிகள் வழியாக மனிதர்களுக்குத் தொற்றியவை H1N1 பன்றிக்காய்ச்சல் (Swineflu) வைரஸ்கள். அவை பறவைக் காய்ச்சல் வைரஸ்கள் போல இல்லாமல் மனிதர்களில் இருந்து மனிதர்களுக்குப் பரவும் இயல்புடையதாக இருந்தன.காய்ச்சல் வைரஸ்களுக்கு எதிரான தீர்வு கண்டுபிடிப்பதுச் சவாலாக இருப்பதும் இது போன்றக் காரணங்களால்தான்” என்கிறார் ஆய்வாளர் வெப்ஸ்டர்.

2021ம் ஆண்டுக்கான இந்திய நிதிநிலை அறிக்கையில் சுகாதாரத்துக்கான நிதி ஒதுக்கீட்டை 137 சதவிகிதமாக அதிகரித்துள்ளது அரசு. இது கொரோனா நோய் பரவல் ஏற்படுத்திய தாக்கம். மேலும் இனிவரும் காலங்களில் தொற்றுநோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த தேசிய தொற்றுநோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் பொதுச்சுகாதாரப் பரிசோதனைக் கூடங்களை மத்திய அரசு அமைக்க இருக்கிறது.  இது வரவேற்கத்தக்கதுதான் என்றாலும் முரணாக சுற்றுச்சூழல் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் 230 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், கொரோனாவும் பறவைக்காய்ச்சலையும் வெறும் சுகாதாரப் பிரச்னையாக மட்டுமே அணுகுவது பகுத்தறிவின்மை. இவை நாம் உண்டாக்கிய சூழலியல் சமன்பாட்டின்மையால் ஏற்பட்டவை என்கிற கசப்பான உண்மையை ஏற்றுக்கொண்டு அதற்கான தீர்வுகளை அணுகும் வரை வைரஸ்களிடமிருந்து மனிதர்களுக்கு விடுதலை இல்லை என்பதே நிதர்சனம்.

ஐஷ்வர்யா

 

இதையும் படிங்க.!