துலிப் மலர்களின் கதைகள்

கவிதா முரளிதரன்

“கென்யாவைப் பொறுத்தவரையில் சுற்றுசூழல் அழிவு ஒன்று நேருமென்றால் அதில் முதலில் பாதிக்கப்படப் போகிறவர்கள் பெண்களே. அவர்கள்தான் மணிக்கணக்கில் தண்ணீர் தேடி நடக்கிறார்கள், விறகுகளை எடுக்கிறார்கள், குடும்பங்களுக்கு உணவு வழங்குகிறார்கள்”

– வாங்காரி மாத்தாய்.

நோபல் பரிசு பெற்ற சுற்றுச்சூழல் போராளி வாங்காரி மாத்தாய் சொன்னது, கென்யாவைச் சேர்ந்த பெண்கள் பற்றி மட்டுமல்ல, வளர்ந்து வரும் நாடுகளில் பெரும்பாலான பெண்களின் நிலை இதுதான். சுற்றுச்சூழல் பேரழிவின் முகத்தில் முதலில் பலியிடப்படுகிறவர்கள் பெண்கள்தான். எனவேதான் அவர்கள் போராடுகிறார்கள். கடந்த பத்தாண்டுகளில் பெண்கள் முன்னின்று நடத்தும் சூழல் போராட்டங்கள் உலக அளவில் பல நடந்திருக்கின்றன. நடந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் இப்படி பெண்கள் தலைமையேற்று நடத்தும் சூழல் போராட்டங்கள் பற்றிய ஆய்வை செய்திருக்கும் அமெரிக்க சமூகவியலாளர் செலின் கிராஸ் இப்படிச் சொல்கிறார்: ‘‘உலக அளவில் மிக மோசமாக சூழல் மாசுகளை ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் ஏழை மக்கள் அதிகம் வாழும் பகுதிகளிலேயே நிறுவப்படுகின்றன. இதில் ஒரு சமமற்றதன்மை நிச்சயம் நிலவுகிறது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது இந்த பகுதிகளைச் சேர்ந்த பெண்கள். இதனாலேயே இன, கலாச்சார, வர்க்க ரீதியான பாகுபாடுகளை கடந்து அந்தந்த பகுதிகளில் நடக்கும் சூழல் பிரச்னைகளுக்கு எதிரான போராட்டங்களில் தலைமையேற்று நடத்துகிறார்கள்.” பெண்கள் தலைமையேற்று நடத்தும் சூழல் பிரச்னைகளுக்கு எதிரான போராட்டங்களில் பொதுவான ஒரு கூறு இருக்கிறது. பெரும்பாலும் அமைதியின் வழி நின்று போராடுகிறார்கள். அவர்களது வாழ்க்கையும் வாழ்வாதாரங்களும் அழிக்கப்படுவதற்கு எதிராக வாழ்க்கையின் வளமான கூறுகளை முன்வைத்துப் போராடு கிறார்கள். அதனால்தான் இங்கிலாந்தில் அணு ஆயுதங்களை வைத்திருந்த கிரீன்ஹாம் காமன் விமானப்படை தளத்திற்கு எதிரான பெண்கள் அமைத்த அமைதி முகாம் 19 ஆண்டுகள் நீடித்தது. பெண்கள் முன்னின்று நடத்திய கூடங்குளம் அணுவுலைக்கு எதிரான போராட்டமும் சில ஆண்டுகளுக்கு நீடித்தது. மூன்று நாட்கள் இரவும் பகலும் கண் விழித்து மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுவதை தடுக்க எல்லா பக்கங்களிலிருந்தும் மரங்களை தழுவி நின்ற 27 பெண்களுக்கு தலைமையேற்று போராடியவர் கௌரா தேவி. சிப்கோ இயக்கத்தின் முக்கியமான போராளிகளில் ஒருவர். பனிப்போர் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் Women Strike for Peace என்கிற அமைப்பு சுமார் 50,000 பெண்களை திரட்டி அமெரிக்காவெங்கும் அணு ஆயுதங்களுக்கு எதிராக அமைதிப் பேரணி நடத்தினார்கள். வாஷிங்டன் நினைவகத்தில் மட்டும் சுமார் 1500 பெண்கள் பேரணியாகச் சென்றதை வெள்ளை மாளிகையின் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்தவர் அதிபர் கென்னடி. முறத்தால் புலியை விரட்டிய தமிழ்ப்பெண் போல போபாலில் பேரழிவை ஏற்படுத்திய டௌ கெமிக்கல்ஸ் நிறுவனத்துக்கு எதிராக

வேறு எந்த ஆயுதத்தையும் அல்ல துடைப்பத்தை கையிலெடுத்தவர்கள் ரஷீதா பீ மற்றும் சம்பா தேவி சுக்லா. சுற்றுச்சூழலுக்கான கோல்ட்மேன் விருது பெற்றவர்கள் இந்தப் பெண்கள். கலிபோர்னியாவில் எரிவாயு நிறுவனம் ஒன்று ஏற்படுத்திய குடிநீர் மாசுக்கு எதிராக உயிர்ப்பான போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் எரின் பிரோகோவிச். அவரைப் போலதான் செலின் ஹார்ப்பும். வட அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுச் சூழல் போராளி. 79 வயது செலின் ஹார்ப் போராடியது வட அமெரிக்காவில் வலிமையாக கோலோச்சிய எண்ணை நிறுவனங்களுக்கு எதிராக. அல்பெர்டா முதல் டெக்ஸாஸ் வரை பதியப்பட்ட எண்ணை குழாய்க்கு எதிரானது அவருடைய போராட்டம். ஹார்ப் போன்ற போராட்ட தலைமைகள் உருவாவதன் பின்னணியில் சூழல் அநீதி என்பது இன, வர்க்க அநீதியும்கூட என்கிற உண்மை வெளிப்படுவதாக சொல்கிறார் கிராஸ். அமெரிக்காவில் உள்ள ரோட் ஐலாண்ட் பகுதியில்  fracking  (நிலத்தை உடைத்து) மூலம் அமையவிருக்கும் மின் நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் கிறிஸ்துவ பெண் பாதிரியார்கள். அவர்கள் ஒன்றும் பெரிதாக செய்துவிடவில்லை, அந்த நிலத்தின் மீது துலிப் மலர்களை நட்டார்கள்.“பூக்களை நடுங்கள், மின்நிலையங்கள் வேண்டாம்” என்பதுதான் அவர்களுடைய எளிமையான கோஷம். துலிப் பூக்களை நட்டதற்காக கைதுசெய்யப்பட்டார்கள் அவர்கள். கதிராமங்கலம் தொடங்கி
கலிபோர்னியாவரை துலிப் பூக்களின் வாசத்தை மட்டுமே பரப்பவேண்டும் என்பதுதான் இந்த எல்லா பெண்களின் எளிய கோரிக்கையும், விருப்பமும். அழிவை நோக்கி வாழ்க்கையை நகர்த்தும் அணுவுலைகளுக்கும், எண்ணை குழாய்களுக்கும், தொழிற்சாலைகளுக்கு எதிராக இவர்கள் துலிப் பூக்களையே ஆயுதங்களாக எடுக்கிறார்கள். எல்லாப் பெண்களுக்கும் பின்னால் வலிமையான கதை இருக்கிறது, எழுதப் படாத வரலாறு இருக்கிறது. இந்த கதைகளை தெரிந்து கொள்வதென்பது உலக சுற்றுச்சூழல் போராட்டங்களின் வரலாறுகளையும் தெரிந்து கொள்வது. இந்த நூற்றாண்டின் மகத்தான சூழல் போராட்டங்களை முன்னின்று நடத்திய பெண்கள், அவர்கள் சொல்லும் பாடங்களை கொஞ்சம் மனம் திறந்து கேட்போம்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments