துருக்கி நிலநடுக்கம்

நாம் இருக்கும் இந்த நிலப்பரப்பு நிலையானதாக இருக்கிறது. ஆனால், நம் நிலப்பரப்பிற்கு கீழுள்ள பகுதி நிலையற்ற தன்மையுடையது. பல கண்டத்தட்டுகளால் உருவானதுதான் இந்நிலப்பரப்பு. கண்டத்தட்டுகளை ஏழு பெரும் கண்டத்தட்டுகளாகவும், எட்டு சிறிய கண்டத்தட்டுகளாகவும் அறிவியல் சமூகம் பிரித்து வைத்துள்ளது. இந்த கண்டத்தட்டுகள் எப்போதும் நகர்ந்துக்கொண்டே இருக்கும். நம் இந்தியத்தட்டும் வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது.

பொதுவாக நிலநடுக்கங்கள் இரு இடங்களில் உருவாகும். கண்டத்தட்டுகள் சேரும் இடங்களிலும் (inter-plate earthquakes), கண்டத்தட்டுகளின் உள்ளும் உருவாகும் (intra-plate earthquakes). அதிக எண்ணிக்கையிலான நிலநடுக்கங்கள், அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய நிலநடுக்கங்கள், சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் அனைத்தும் கண்டத்தட்டுகள் சேரும் (inter-plate earthquakes) இடத்தில் உருவாகும். பூமியில் அதிக அளவான நிலநடுக்கங்கள் ஏற்படும் இடங்கள் பல உள்ளன. அதில் ஒன்றுதான் துருக்கி.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கண்டத்தட்டுகள் மோதும்போது நிலநடுக்க அலைகள் (Seismic waves) உருவாகும். இந்த நிலநடுக்க அலைகளின் தீவிரத்தை பொருத்துத்தான் நிலநடுக்கத்தின் பாதிப்பு அமையும். நிலநடுக்கத்தை ரிக்டர் அளவுகோலில் அளவிடுவர். ரிக்டர் அளவுகோல் 1 முதல் 10 வரை இருக்கும். ரிக்டர் அளவு 5-க்கும் மேலாக ஏற்படும் நிலநடுக்கம் சக்தி வாய்ந்தவை ஆகும். இவைதான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் நிலநடுக்கங்கள் ஆகும். நம்மிடம் உள்ள தரவுகளின் அடிப்படையில் மனிதன் சந்தித்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 1960-ம் ஆண்டு சிலி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆகும். இது ரிக்டர் அளவில் 9.5 ஆக பதிவானது. இந்திய நிலப்பரப்பிற்கு நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிக அளவான பாதிப்பை ஏற்படுத்தியது 2004-ம் ஆண்டு சுமத்திரா தீவு பகுதிகளில் ரிக்டர் 9 அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உண்டான சுனாமி ஆகும்.

பிப்ரவரி மாதத்தில் துருக்கி- சிரியா பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குக் காரணம், துருக்கி- சிரியா எல்லைப் பகுதிகள் ‘அனடோலியன் கண்டத்தட்டில்’ (Anatolian Plate) உள்ளது. இந்த அனடோலியன் கண்டத்தட்டு எனும் சிறிய கண்டத்தட்டு,  ஆப்ரிக்க கண்டத்தட்டு, அரேபியன் கண்டத்தட்டு மற்றும் ஐரோப்பிய கண்டத்தட்டுகள் ஆகிய மூன்று பெரும் கண்டத்தட்டுகள் சூழ்ந்துள்ளன. இதில் ஆப்ரிக்க கண்டத்தட்டு ஐரோப்பா தட்டை நோக்கி வடகிழக்கு திசையில் நகர்ந்துக் கொண்டே இருக்கும். அதேபோல் அரேபியன் கண்டத்தட்டும் வடக்கு திசை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது. இந்த மூன்று கண்டத்தட்டுக்கிடையில் அனடோலியன் எனும் சிறிய கண்டத்தட்டு உள்ளது. கண்டத்தட்டுக்கள் தொடர்ந்து நகர்ந்துக் கொண்டிருப்பதால் இந்த பகுதியில் அதிக எண்ணிக்கையிலான நில அதிர்வலைகள் தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.  இந்த அதிர்வலைகள் பல சமயங்களில் நிலநடுக்கங்களாக மாறும். இதனால்தான் துருக்கி பகுதியில் அதிக எண்ணிக்கையிலான நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

இமய மலைத்தொடர், பசுபிக் கடல் தட்டின் முனைகள் (Pacific plate boundaries), அமெரிக்காவில் உள்ள சான் அன்ட்ரியாஸ்  பகுதி போன்ற இடங்கள் அதிக எண்ணிக்கையிலான மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்தும் நிலநடுக்கங்கள் ஏற்படும் இடங்களாகும். பொதுவாக, நிலநடுக்கங்களை, ஒரு புயலை கணிப்பது போன்று எப்போது உருவாகும், எந்த இடத்தில் மையம் கொண்டுள்ளது, எந்த வேகத்தில் வரும் என்பதைக் கணிக்க முடியாது. ஆனால், பிப்ரவரி மாதத்தில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைப் பற்றி முன்பே நெதர்லாந்து ஆய்வாளரான ப்ரான்க் ஹூகர்பீட்ஸ் (Frank Hoogerbeets) கணித்திருந்தார். துருக்கியில் அவர் கணித்தது போலவே நிலநடுக்கத்தின் அளவும் இருந்தது. மேலும் பில்லிபைன்ஸ், ஆப்கானிஸ்தான் பகுதியிலும் அவர் கணித்தவாறு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

நிலநடுக்கங்களை கணிக்க கருவிகள் இல்லாதபோது, அவர் மட்டும் எப்படி கணித்தார் எனும் கேள்வி எழ, அதற்கான விளக்கத்தைக்  கொடுத்தார். அதில் வானிலை அமைப்பைப் பொறுத்து நிலநடுக்க அதிர்வலைகளை கணித்ததாகக் கூறியிருந்தார். பிப்ரவரி 4 அன்று, சூரியன், வெள்ளி மற்றும் வியாழன் ஒரே கோட்டில் இணைந்ததாகவும், பிப்ரவரி 5 அன்று சூரியன், புதன் மற்றும் சனி ஆகியவை ஒரே நேர்கோட்டில் இணைந்ததாகவும், பிப்ரவரி 6 அன்று சூரியன், நிலா மற்றும் பூமி ஒரே நேர்கோட்டில் இணையும் போது பூமியில் நில அதிர்வலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் கணித்து கூறியிருந்தார். 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கரிபியன் நாடான ஹைதி (Haiti) பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்டபோது, இது போன்ற  நிகழ்வுகள் கிரங்கங்களுக்குள்ளே ஏற்பட்டது என்பதால் தற்போதைய சூழலிலும் நிலநடுக்கம் ஏற்படலாம் என்று தன் கணிப்பிற்கு விளக்கம் அளித்திருந்தார்.

ப்ரான்க் கூறிய கூற்றுப் படி பார்த்தால், கிரகங்கள் நேர்க்கோட்டில் இணைவது அதிசய நிகழ்வுகள் கிடையாது. நாம் இத்தனை ஆண்டுகாலம் பார்க்கும் அமாவாசை, பௌர்ணமி ஆகியவை சூரியன், நிலா, பூமி ஆகிய மூன்றும் நேர்கோட்டில் சேரக் கூடியதனால் ஏற்படுபவை. அப்படியென்றால் கிரகணங்கள் ஏற்படும் போதெல்லாம் நமக்கு நிலநடுக்கங்கள் ஏற்பட வேண்டும். அப்படி ஏதும் நிகழவில்லை. ப்ரான்க் ஹூகேர்பீட்ஸ் கூறிய கூற்று இதுவரை அறிவியல் பூர்வமாய் நிரூபிக்கப்படவில்லை. எந்த கூற்று யார் கூறினாலும், அறிவியல் பூர்வமாய் நிரூபிக்கப்பட்டதை மட்டும் நாம் நம்ப வேண்டும். ப்ரான்க் கூறியதைக் கேட்டு உலகம் முழுவதும் பலர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இந்தியாவிலும் பலர் அச்சப்பட்டனர். காரணம் நிலநடுக்கம் இந்தியாவிலும் வரும் என அவர் கணித்திருந்தார்.

இந்தியாவில் நிலநடுக்கம் என்பது இயல்பாக ஏற்படக் கூடியதுதான். முன்பு கூறியது போல, இந்தியக் கண்டத்தட்டு ஆசிய கண்டத்தட்டில் மோதுவதால் இமயமலைப் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படும். தென்னிந்தியாவைப் பொறுத்தவரை நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்பு மிகக் குறைவு. இங்கு ஏற்படும் நிலநடுக்கங்கள் அனைத்தும் கண்டத்தட்டினுள் ஏற்படுபவை. எனவே நிலநடுக்கங்கள் குறித்த அச்சத்தை நாம் தவிர்க்கலாம்.

Reference

  1. https://www.cnn.com/2023/02/07/middleeast/earthquake-turkey-syria-why-deadly-intl/index.html
  2. https://www.vox.com/energy-and-environment/2017/9/21/16339522/earthquakes-turkey-syria-explained-science
  3. Seismic Activity of the Earth, the Cosmological Vectorial Potential And Method of a Short-term Earthquakes Forecasting- Baurov Yu. A., Baurov A.Yu., Baurov A.Yu. (jr.), Spitalnaya A.A., Abramyan A.A., Solodovnikov V.A.  Closed joint stock Company Research Institute of Cosmic Physics, 141070, Moscow region, Korolev, Pionerskaya,
  4. Text book of Physical Geology by Charles C. Plummer
  5. https://twitter.com/hogrbe/status/1622473107318398977?cxt=HHwWgoCztbysl4QtAAAA
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments