காற்று (மாசுபாடு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1981 மற்றும் நீர் (மாசுபாடு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1974 ஆகிய இரண்டு முக்கியமான சட்டங்களில் மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிக்கின்ற வகையில் ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான அமைச்சகம் சில திருத்தங்களை முன்வைத்து வரைவு சட்டத்திருத்தங்களை அரசிதழில் வெளியிட்டுள்ளது.
நீர் மற்றும் காற்று மாசுபாடைத் தடுப்பது, கட்டுப்படுத்துவது மற்றும் குறைப்பது தொடர்பான முக்கியமான விதிகளை மேற்கூறிய சட்டங்கள் கொண்டுள்ளன. இச்சட்டங்களின்கீழ் ஒரு தொழிற்சாலையை நிறுவுவதற்கான இசைவாணையையும் (Consent to Establish- CTE), இயக்குவதற்கான இசைவாணையையும் (Consent to Operate- CTO) மாநில மாசு கட்டுப்பாடு வாரியங்கள் வழங்கி வருகின்றன. மேலும் இந்த இசைவாணைகளை புதுப்பிப்பது (Renew), ரத்து செய்வது (Cancellation), மறுப்பது (Refusal) போன்ற நடவடிக்கைகளையும் மாநில அரசின்கீழ் இயங்கும் மாசு கட்டுப்பாடு வாரியம் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஜூலை 19ஆம் தேதி ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான அமைச்சகம் சில வரைவு அறிவிக்கைகளை வெளியிட்டு அதன்மீது 60 நாட்களுக்குள் பொதுமக்களின் கருத்துகளைக் கோரியுள்ளது. இவையனைத்தும் தொழிற் நடவடிக்கைகளை எளிதாக்குவது, தொழிற்சாலைகளின் சுமையைக் குறைப்பது என்பதை உள்நோக்கமாகக் கொண்டது என வரைவு அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த வரைவில் உள்ள பாதிப்புகளை கீழ்கண்ட வகையில புரிந்துக் கொள்ளலாம் :
i) எந்த ஒரு தொழிற்சாலையும், கட்டுமானமும் செயல்படுத்துவதற்கு முன்பாக ஒன்றிய அரசிடமும், மாநில அரசிடமும் முன் அனுமதி பெற வேண்டும். ஒன்றிய அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் மூலமும், மாநில அரசுகள் காற்று (மாசுபாடு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1981 மற்றும் நீர் (மாசுபாடு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1974 ஆகிய இரண்டு சட்டங்கள் மூலமும் முன் அனுமதி வழங்குகின்றன. இந்த நடைமுறையை மாற்றி ஒன்றிய அரசே, மாநில அரசின் அனுமதியை வழங்கும் என புதிய சட்ட வரைவு கூறுகிறது.
அதாவது, சுற்றுச்சூழல் அனுமதிகோரி சுற்றுச்சூழல் அனுமதி தேவைப்படும் அனைத்து தொழிற் நடவடிக்கைகளுக்கும் ஆலையை நிறுவுவதற்கான இசைவாணையை (Consent to Establish- CTE) தனியாகப் பெறுவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு நிறுவனம் தொழிற்சாலை தொடங்க நினைத்தால் ஒன்றிய அரசின்கீழ் இயங்கும் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவுக்கோ (Expert Appraisal Committee), மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்துக்கோ (State Environment Impact Assessment Authority) விண்ணப்பிக்கும். இவ்வமைப்புகள் அவ்விண்ணப்பத்தை மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு (State Pollution Control Board) அனுப்பிக் கருத்து கோரும்.
மாநில மாசு கட்டுப்பாடு வாரியம் 30 நாட்களுக்குள் தனது கருத்தையும் இசைவாணையில் இடம்பெற வேண்டிய நிபந்தனைகளையும் வழங்கும். இந்த நிபந்தனைகள் அனைத்தும் தொழிற் நடவடிக்கையைத் தொடங்கும் நிறுவனத்திற்கு வழங்கப்படும் சுற்றுச்சூழல் அனுமதியில் இடம்பெறும். இந்த நிபந்தனைகளுக்கான கட்டணத்தை மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு அந்த நிறுவனம் செலுத்திய பின்னரே சுற்றுச்சூழல் அனுமதி செயல்பாட்டுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அதிகாரத்தைப் பறிக்கும் செயல்பாடாகும்.
இந்த நடைமுறை முற்றிலும் எதிர்க்கப்பட வேண்டியதாகும். ஒன்றிய மற்றும் மாநில அளவிலான சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுக்கள்(EAC) பல்வேறு திட்டங்களுக்குத் தீவிர பரிசீலனை நடத்தாமல் மேம்போக்காக குறுகிய காலத்தில் சுற்றுச்சூழல் அனுமதிகளை வழங்கி வருகின்றன. பல வழக்குகளில் நீதிமன்றங்களும் பசுமைத் தீர்ப்பாயங்களுமே இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன. இப்படியான சூழலில் ஒன்றிய அரசையோ, நீதிமன்றங்களையோ, தீர்ப்பாயங்களையோ அணுகி சட்டவிரோதத் திட்டங்களை நிறுத்துவது பொதுமக்களுக்கு மிகவும் கடினமான செயல்பாடாகிறது.
எடுத்துக்காட்டிற்கு, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் எல்லைக்குள் உரிய சுற்றுச்சூழல் அனுமதியின்றி சன் பார்மா நிறுவனம் பல ஆண்டுகளாக மருந்து உற்பத்தி ஆலையை நடத்தி வருகிறது. அண்மையில் தங்களது ஆலையின் அமைவிடம் பறவைகள் சரணாலய எல்லைக்குள் இருக்கிறது என்பதைத் தெரிவிக்காமலே தங்களது ஆலை விரிவாக்கத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை அந்த நிறுவனம் ஒன்றிய அரசிடமிருந்து பெற்றுவிட்டது. பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்ட பின்னரும்கூட சர்ச்சைக்குரிய அந்த சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்யாமல் நிறுத்தி வைத்து (Kept in Abeyance) மட்டுமே ஒன்றிய அரசு உத்தரவிட்டது. சுற்றுச்சூழல் அனுமதிக்கே இப்படி அலட்சியம் காட்டும் ஒன்றிய அரசு இசைவாணைகளை மறுப்பதிலும், ரத்து செய்வதிலும் அலட்சியம் காட்டினால் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரிக்கும். எனவே மாசு கட்டுப்பாடு வாரியம் வழங்கும் நிறுவுவதற்கான இசைவாணையை(CTE) சுற்றுச்சூழல் அனுமதியுடன் இணைக்கும் முடிவு மிகவும் ஆபத்தானது.
ii) காற்று (மாசுபாடு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1981 மற்றும் நீர் (மாசுபாடு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1974 ஆகிய சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இரண்டு வரைவு அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம் இவ்விரண்டு சட்டங்களிலும் வெள்ளை நிற வகைப்பாடு கொண்ட தொழிற் நடவடிக்கைகள் (White Category Industries) அனைத்திற்கும் நிறுவுவதற்கான இசைவாணை (Consent to Establish- CTE) பெறுவதிலிருந்து முற்றிலும் விலக்களிக்கப்பட்டுள்ளது. தங்களது செயல்பாடுகள் தொடர்பாக நிறுவனங்களே சுய சான்றழிப்பு வழங்கினால் மட்டும் போதுமானது என்கிறது ஒன்றிய அரசின் அறிவிக்கை.
iii) மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவைரைத் (Chairman) தேர்தெடுக்கும் உரிமையைப் பறிக்கும் வகையில் மற்றுமொரு சட்ட வரைவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவில் மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகளை ஒன்றிய அரசு வகுத்துள்ளது. இதன்படி, தலைவரைத் தேர்ந்தெடுக்க குழு ஒன்று அமைக்கப்படும் எனவும் அக்குழுவில் மாநில சுற்றுச்சூழல் துறை செயலாளர், மாநில மனித வளத்துறை செயலாளர், மாநில அரசால் நியமிக்கப்படும் ஒரு நிபுணர் ஆகியோருடன் ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் நியமிக்கப்படும் இணை செயலாளர் பதவிக்குக் குறையாத ஒரு அதிகாரி இடம்பெறுவார் எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2019ல் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர் செயலர் பொறுப்பிற்கான பணிநியமன விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை நீர்த்துப்போகச்செய்யும் வகையில் மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் ஒன்றிய அரசு அதிகாரி இடம்பெறுவது மாநில அரசின் அதிகாரங்களில் தலையிடுவதாகும்.
iv) சூழல் சார்ந்த அனைத்து அனுமதிகளையும் ஒருங்கினைக்கும் சட்டவரைவையும் வெளியிட்டுள்ளது ஒன்றிய அரசு. 2014ம் ஆண்டு மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு பெறுப்பேற்றவுடன் டி.எஸ்.ஆர்.சுப்பரமணியன் தலைமையில் இந்திய சுற்றுச்சூழல் சட்டங்களை வர்த்தக வளர்ச்சிற்கு ஏற்ற வகையில் மாற்றக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழு, தற்போது உள்ள பல சுற்றுச்சூழல் அதிகார மையங்களை ஒருங்கிணைத்து ஒரே அதிகார அமைப்பாக உருவாக்க வேண்டும் என பரிந்துரை செய்யதது. இந்த குழுவின் பரிந்துரை நாடாளுமன்றக் குழுவால் நிராகரிக்கப்பட்டது. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு இக்குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது.
தற்போது, வெளியாகியுள்ள வரைவில் இப்படியான அமைப்பை உருவாக்க விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இதன்படி ஒன்றிய அரசாங்கம் தொழிற்சாலைகளுக்கான இசைவாணைகளுக்கு ஒரே போலான கட்டணத்தை நிர்ணயம் செய்தல், தொழிற்சாலையை நிறுவுவதற்கான இசைவாணை, இயக்குவதற்கான இசைவாணை மற்றும் அதற்கான புதுப்பிப்பு, இசைவாணையை மறுப்பது மற்றும் ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கான தனித்தனி வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
இந்த வழிகாட்டுதல்களின் கீழான செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுக்கள் மாநில அரசின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக, மாநில அளவில் இவ்வழிகாட்டுதல்களைக் கண்காணிக்கும் குழுவில் சுற்றுச்சூழல் துறையின் செயலாளர் தலைவராகவும், மாநில மாசு கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலாளர் மற்றும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மண்டல இயக்குனர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். ஒன்றிய அரசு அதிகாரி இக்குழுவில் இடம்பெறுவது அவசியமற்ற ஒன்று.
பா.ஜ.க. அரசு ஆட்சிக் காலத்தில், தொடர்ந்து பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக சுற்றுச்சூழல் விதிகளை நீர்த்துப் போகச்செய்யும் சட்டங்களும் திருத்தங்களும் கொண்டு வரப்படுகின்றன. வனப் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்து பழங்குடிகளின் உரிமையை ஏற்கெனவே பறித்துள்ளது. வனப் பகுதியில கனிமங்களை வெட்டி எடுக்க சட்டத் திருத்தங்களை செய்துள்ளது. அதோடு பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களில் விதிமீறலுக்கான சிறைத்தண்டனையை ஒன்றிய அரசு நீக்கிவிட்டது.
தற்போது மாசு ஏற்படுத்தும் ஆலைகளை மாநில அரசே கட்டுப்படுத்த உதவும் சட்டங்களில் மாநிலங்களின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையில் திருத்தங்களைக் கொண்டு வருவது கூட்டாட்சித் தத்துவத்திற்கு முற்றிலும் எதிரானதாகும். இதனைக் கருத்தில்கொண்டு ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள வரைவு அறிவிக்கைகளை நாம் எதிர்க்க வேண்டியுள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு இந்த வரைவு அறிவிக்கைகளை எதிர்க்க வேண்டுமென தமிழ்நாடு அரசையும் தமிழ்நாட்டின் கட்சிகள், அமைப்புகள், இயக்கங்களை பூவுலகின் நண்பர்கள் சார்பில் வலியுறுத்துகிறோம்.
கீழ்கண்ட கோரிக்கைகளை முன்வைக்கிறோம்:
- தமிழ்நாடு அரசு இந்த சட்ட வரைவுகளை எதிர்த்து ஒன்றிய அரசிடம் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும்.
- அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள் இந்த சட்ட வரைவுகளை எதித்து கருத்துக்களைப் பதிவு செய்யக் கோருகிறோம்
- சமூக அமைப்புகள், தனி நபர்களும் தங்கள் கருத்துகளை பதிவு செய்யக் கோருகிறோம்.
கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் 19.09.2024.
கருத்துகளை அனுப்ப வேண்டிய முகவரி : Secretary, Ministry of Environment, Forest and
Climate Change, Indira ParyavaranBhawan, JorBagh Road, Aliganj, New Delhi-110003 or electronically at email address: [email protected] or [email protected].
அறிவிக்கைகள்:
- https://egazette.gov.in/(S(zndxowvh33fjzzzqkqodidof))/ViewPDF.aspx
- https://egazette.gov.in/(S(zndxowvh33fjzzzqkqodidof))/ViewPDF.aspx
- https://egazette.gov.in/(S(zndxowvh33fjzzzqkqodidof))/ViewPDF.aspx
- https://egazette.gov.in/(S(zndxowvh33fjzzzqkqodidof))/ViewPDF.aspx
- https://egazette.gov.in/(S(zndxowvh33fjzzzqkqodidof))/ViewPDF.aspx
- https://egazette.gov.in/(S(zndxowvh33fjzzzqkqodidof))/ViewPDF.aspx
- https://egazette.gov.in/(S(zndxowvh33fjzzzqkqodidof))/ViewPDF.aspx