நீங்கள் தாவர உணவுகளை மட்டும் சாப்பிடும் பியூர் வெஜிடேரியனா? வாழ்த்துகள்! அதற்கான முழு உரிமையும், சுதந்திரமும் உங்களுக்கு இருக்கிறது. “தாவர உணவை மட்டுமே சாப்பிடுவது உயர் வானது: விலங்கு உணவை சாப்பிடுவது இழிவானது” என்ற எண்ணம் உங்களிடம் இருக்கிறதா? தாவர உணவுப் பழக்கம் கொண்டவன் நான் என்று பெருமிதம் கொள்கிறீர்களா? தாவர உணவுப் பழக்கமே இயற்கைக்கு இசைவானது என்று கருது கிறீர்களா? வாருங்கள்! நாம் விவாதிப்பதற்கு நிறைய அம்சங்கள் இருக்கின்றன. உணவுப் பழக்கம் என்பது தனிநபர் விருப்பம் சார்ந்தது. அதில் அடுத்தவர் தலையீடு கூடாது. ஆனால் ஒருவரின் உணவுப் பழக்கம் என்பது அவரது சமூக மரியாதையை குறிக்கும் அம்சமாக மாறும்போது விமர்சனங் களை சந்திக்கிறது. குறிப்பாக இந்தியாவில் தாவர உணவு உண்பவர்கள் மிகவும் உயர்ந்தவர்களாக கருதப்படுகிறார்கள். விலங்கு உணவை உண்பவர்களில் ஆடு, கோழி ஆகியவற்றை உண்பவர்கள் உயர்ந்தவர்களாகவும், மாட்டை உண்பவர்கள் தாழ்ந்தவர்களாகவும், பன்றியை உண்பவர்கள் மிகவும் தாழ்ந்தவர்களாகவும் கருதப் படுகிறார்கள். தாவர உணவு உண்பதை சிறப்பிக்கும் கருத்துகள் பல்வேறு தரப்புகளிலிருந்தும் வெளிப் படுகின்றன. மதம், அரசியல், சுற்றுச்சூழல் போன்ற பல்வேறு தரப்பிலிருந்தும் இக்கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த அம்சத்தில் மதம் சார்ந்த கருத்துகளை விவாதிப்பதற்கு இது பொருத்தமான இடமல்ல.
ஆனால் சுற்றுச்சூழல் பார்வையில் தாவர உணவை ஆதரித்து கூறப்படும் கருத்துகளை விவாதத்திற்கு உட்படுத்த விரும்புகிறோம். இத்தரப்பினர் கூறும் வாதங்களை வரிசைப்படுத்துவோம்:
- தாவர உணவு உண்போர் உயிர்க்கொலை புரிவதில்லை.
- தாவர உணவு உண்போர் உயிர்களை சித்திரவதை செய்வதில்லை.
- தாவர உணவுப் பழக்கத்தால் தாவரங்கள் மரணம் அடைவதில்லை.
- தாவர உணவுப் பழக்கத்தால் தாவரங்களின் சில பகுதிகள் மட்டுமே நுகரப் படுகிறது.
- தாவர உணவுப் பழக்கத்தால் எந்த தாவரமும் பூண்டோடு அழிக்கப் படுவதில்லை.
- தாவர உணவுப் பழக்கத்தால் சுற்றுச்சூழல் சமநிலை பாதுகாக்கப்படுகிறது.
- விலங்கு உணவுப் பழக்கத்தால் விலங்குகள் சித்ரவதை செய்யப்படுகின்றன.
- விலங்கு உணவுப் பழக்கத்தால் விலங்குகள் கொலை செய்யப்படுகின்றன.
- விலங்கு உணவுப் பழக்கத்தால் விலங்கினங்கள் முழுமையாக அழிக்கப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்படுகிறது.
- மனிதனின் உடலமைப்பும், சீரண மண்டல அமைப்பும் தாவர உணவுப் பழக்கத்திற்கு உகந்தவையாகவே உள்ளன. தாவர உணவுப் பழக்கமுடையவர்களை நோய்கள் தாக்குவதில்லை. விலங்கு உணவுப் பழக்கம் கொண்டவர்களை பலவிதமான நோய்களும் தாக்குகின்றன.
தாவர உணவுப் பழக்கத்திற்கு ஆதரவாக ஏறத்தாழ உலகம் முழுவதும் கூறப்படும் கருத்துகள் இவைதான்.
***
தொழிற்சாலைகளும், இயந்திரங்களும், இவை உருவாக்கிய கழிவுகளும் இந்தப் பூவுலகில் ஏற்படுத்திய சூழல் சீரழிவைவிட, வேளாண்மை என்ற பெயரில் மனிதர்கள் மேற்கொண்ட செயல்பாட்டால் ஏற்பட்ட சூழல் சீரழிவே அதிகம் என்ற உண்மை பலரை திகைப்பூட்டலாம். ஆனால் அதுதான் உண்மை. வேளாண்மை என்ற பெயரில் உணவுப் பொருட்களை திட்டமிட்டு உற்பத்தி செய்த காலத்திற்கு பின்னர்தான் மனிதன் முழுமையாக தாவர உணவை மட்டுமே உட்கொள்ளும் தேர்வு வாய்ப்பை பெற்றிருக்க முடியும். அதற்கு முந்தைய மனிதர்கள் இயற்கையாக கிடைக்கும் காய்கள், கனிகள், விதைகள், கிழங்குகள் ஆகியவற்றையும் சிறிய விலங்குகள், பறவைகள், மீன்கள் ஆகியவற்றை உட்கொண்டே வாழ்ந்திருக்க வேண்டும். குகை மனிதர்கள் வரைந்த ஓவியங்களில் இதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. காலப்போக்கில் வேட்டையாடத் தொடங்கிய மனிதன், எதிர்த்து வீரியமாக தாக்காத எளிய விலங்குகளான மான், பன்றி, மாடு, ஆடு, குதிரை போன்றவற்றை உண்ணத் தொடங்கியிருக்க வேண்டும். இதற்கிடையில் தின்றது போக மீதியிருந்த ஆடு, மாடு, குதிரை போன்ற விலங்குகளை மனிதன் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கற்றறிந்த பின்னர், அவற்றின் உதவியுடன் விவசாயம் செய்ய தலைப்பட்டிருக்கலாம். வேட்டையாடிய மனிதனை அச்சுறுத்திய இயற்கை அனைத்தும் கடவுளாக உருவாக்கப்பட்டது. பின்னர் செயற்கைத் தெய்வங்கள் உருவாகத் தொடங்கியவுடன் பலவிதமான சடங்குகளும் உயிர்பெற ஆரம்பித்தன. இதன் ஒரு கட்டமாக வேள்விகளும், யாகங்களும் நடத்தப்பட்டன. இந்த சடங்குகளில் “கடவுள்”களுக்கு பலியாக விலங்குகள் கொல்லப்பட்டன. யாகத்தை நடத்திய மனிதர்களே பலியிடப்பட்ட விலங்குகளை தின்று களித்தனர். ரிக் வேதத்திலும், யஜூர் வேதத்திலும் இதற்கு ஏராளமான சான்றுகளை காட்டமுடியும்.
இதற்கிடையே இயல்புத்தன்மை மாற்றி யமைக்கப்பட்ட விலங்குகளின் உதவியுடன், இயற்கையை திருத்தியமைக்கும் விவசாயம் கண்டறியப்பட்டிருக்க வேண்டும். இயற்கையான புவியில் நீர்வளம் மிகுந்த பகுதிகள் பெருமளவில் சமதளமாக இருக்கவில்லை. புல்வெளிகளும், நீர்வளமற்ற பாலை நிலப்பகுதிகளுமே சமதளமாக இருந்திருக்கக் கூடும். பட்டினப்பாலையில் கூறியுள்ளபடி, “காடு கொன்று நாடாக்கி, குளம் தொட்டு வளம் பெருக்கிய” பணியில்தான் விவசாய நிலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு உருவாக்கப்படுமுன் அனைத்து நிலங்களும் காடுகளாகவே இருந்துள்ளன. காடுகள் என்பதை கற்பனை செய்வோம். பலவிதமான தாவரங்கள், பெரிய-சிறிய விலங்குகள், பூச்சிகள், பறவைகள், கண்ணுக்குப் புலப்படாத நுண்ணுயிர்கள் ஆகிய அனைத்தும் சேர்ந்ததே காடு எனப்படும். இவ்வாறான காடுகள் பெருமளவில் மனிதர் களால் எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டன. பின்னர் இவை சமதளமாக்கப்பட்டு வேளாண்மைக்கேற்ற நிலங்களாக மாற்றியமைக்கப்பட்டன. மனிதர் களின் நலன்களுக்காக மாற்றப்பட்ட நிலத்தில் வாழ்ந்த பலவகைத் தாவரங்களும், விலங்குகளும், பறவைகளும் எங்கே போயின அமெரிக்காவில் 1491ம் ஆண்டில் சுமார் 6 கோடி முதல் 10 கோடி வரை காட்டெருமைகள் இருந்ததாகவும், தற்போது சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் காட்டெருமைகள் மட்டுமே இருப்ப தாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவற்றிலும் பெரும்பாலானவை அவற்றின் இயல்புநிலை திரிக்கப்பட்டு வளர்ப்பு விலங்குகளாக மாற்றப் பட்டவை. சுமார் 15 ஆயிரத்திற்கும் குறைவான காட்டெருமைகளே இயல்பான வனவிலங்குகளாக உள்ளன. ஓநாய்கள் எண்ணிக்கை சுமார் 10 இலட்சம் இருந்திருக்கலாம் என்றும் தற்போது சுமார் 10 ஆயிரம் ஓநாய்கள் மட்டுமே அமெரிக்காவில் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதுபோன்ற வனவிலங்குகள் குறித்த சரியான புள்ளி விவரங்கள்கூட இந்தியாவில் இல்லை. நமது இலக்கியங்களில் கூறப்பட்ட பல விலங்குகளையும், பறவைகளையும், தாவரங்களையும்கூட நாம் கற்பனையில் மட்டுமே பார்க்க முடிகிறது. மீதியுள்ள யானைகளைக்கூட அவை அத்துமீறி அட்டகாசம் செய்வதாகக்கூறி மின்சாரம் பாய்ச்சியோ, நஞ்சு செலுத்தியோ, ரயிலில் மோதியோ கொன்று கொண்டிருக்கிறோம்.
வேட்டைச் சமூகத்தை சேர்ந்த மனிதர்கள் கொன்ற விலங்குகளைவிட, விவசாயம் செய்வற்காக கொல்லப்பட்ட விலங்குகளே அதிகம். மரத்தை கடத்தியவர்கள் வெட்டிசாய்த்த மரங்களைவிட, விவசாயத்தின் பேரால் வெட்டிசாய்க்கப்பட்ட மரங்களே அதிகம்.
இயற்கைப் பேரிடர்கள் அழித்த உயிரினங்களை விட, வேளாண்மையின் பெயரால் மனிதர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் சிக்கி பூண்டோடு அழிந்துபோன உயிரினங்கள் மிக அதிகம்.
இந்த மண்ணின் சமநிலைகாத்து வாழ்ந்து வந்த பல உயிரினங்களையும் “இன அழிப்பு” செய்துவிட்டே விவசாயம் நிலை கொண்டது. கண்ணுக்கு புலப்படும் உயிரினங்கள் மட்டுமல்லே: கண்ணுக்கு தெரியாத பல நுண்ணுயிரிகளையும் பூண்டோடு அழித்த செயல்பாடுதான் வேளாண்மை!
யூப்ரடீஸ் மற்றும் டைக்ரீஸ் நதிகளுக்கு இடையே இருந்த வளமான பகுதி மெஸோபோடாமியா என்று வரலாற்றுப் பாடத்தில் படித்திருப்போம். இன்று அமெரிக்கா நடத்திய யுத்தத்தால் ரத்த ஆறு ஓடிய ஈராக் என்ற நாடுதான் அன்றைய மெஸோ போடாமியா. ஒரு காலத்தில் வளம் மிகுந்த பகுதியாக பழத்தோட்டங்கள் நிறைந்த பகுதியாக இருந்த மெஸோ போடாமியா வரண்ட பாலை நிலமாக மாறியதற்கு மிகமுக்கியமான காரணம் விவசாயம். பலவகை உயிரினங்கள் வாழ்ந்த ஒரு நிலப்பகுதி வேளாண்மை என்ற பெயரால் நிர்மூலமாக்கப்பட்டு ஒரே வகையான தாவரம் மட்டுமே வளர்க்கப்படும்போது அந்நிலத்தின் தன்மை மாறுகிறது. அமிலத்தன்மையோ, காரத்தன்மையோ, உப்புத்தன்மையோ மிக அதிக அளவில் ஓரிடத்தில் குவிந்து அந்நிலம் பாலை யாக்கப்படுகிறது. இந்த பேரழிவிலிருந்து சிந்து சமவெளியும் தப்பவில்லை. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ரஷ்யா, வட-தென் அமெரிக்கா, எகிப்து, கனடா என உலகின் பல நாடுகளும் இத்தகைய பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டுள்ளது. இஸ்ரேல், லெபனான், கிரீஸ், சைப்ரஸ், இத்தாலி, சிஸிலி, துனிசியா, ஸ்பெயின் போன்ற நாட்டிலிருந்த மலைகளில் பலவிதமான மரங்களைக் கொண்ட அடர்ந்த காடுகள் இருந்தன. வேளாண்மை என்ற பெயரில் இந்தக் காடுகள் அழிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து அந்த மலைப்பகுதிகளில் இருந்த மண்வளம் கடலில் கரைந்தது. இப்போது வறண்ட பாறைகள் மட்டுமே மிஞ்சியிருக்கும் பாலைகளாக அந்த மலைகள் காட்சி அளிக்கின்றன.
நமது உதகமண்டலமும்கூட அதன் இயல்புநிலை திரிந்து பச்சைப்போர்வை போர்த்திய பாலையாகவே காட்சியளிக்கிறது. இன்று உலகம் முழுவதும் பல ஆறுகள் வறண்டு கிடப்பதற்கும்கூட வேளாண்மைதான் காரணம் என்று நீரியல் அறிஞர்கள் கூறுகின்றனர். ஆறுகளுக்கு தண்ணீரை சேமித்து அளிப்பவை சோலைக்காடுகள் போன்ற இயற்கை வளங்கள்தான். ஆனால் வேளாண்மையின் பெயரால் சோலைக்காடுகள் மட்டுமல்ல: அனைத்து வகைக் காடுகளும் அழிக்கப்பட்டன. மேலும் வேளாண்மைக்காக உலகின் பல பகுதிகளிலும் நீர்வழித்தடங்கள் மாற்றியமைக்கப்பட்டன. இந்த இரண்டு செயல்பாடுகளும் பல நதிகளை கொன்று செரித்ததாக, அந்த நதிகளில் வாழ்ந்த பல உயிரினங்களை பூண்டோடு அழித்ததாக நீரியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
***
ஆனால் தாவர உணவு மட்டுமே இயற்கைச் சமநிலையை பாதுகாக்க உகந்தது. விலங்கு உணவு என்பது சூழல் சீர்கேட்டிற்கு இட்டுச் செல்லும் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.
பண்ணை முறையில் விலங்குகளை வளர்த்தல் என்பது இயற்கைக்கு எதிரானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதேபோன்ற பண்ணை முறையில்தான் வேளாண்மையும் மேற்கொள்ளப்படுகிறது என்பதை மறுக்க இயலாது.
எனவே தாவர உணவுக்கு வழிகாணும் வேளாண்மையே இயற்கைச் சமநிலையை பாதுகாக்க உகந்தது என்ற வாதமோ, விலங்கு உணவு உண் பவர்கள் மட்டுமே உயிர்க்கொலை புரிபவர்கள்-தாவர உணவு உண் பவர்கள் உயிர்க்கொலை புரிவதில்லை என்பதில்லை என்ற வாதமோ ஏற்க தகுந்ததல்ல!
இது ஒரு விவாதம்தான். இறுதி தீர்ப்பல்ல. உங்களிடம் மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். வாருங்கள் விவாதிப்போம். உண்மையை கண்டறிவோம்.
விவாதக் களம்
சுந்தரராஜன்.பி