“வறட்சியால் பாதிக்கப்பட்ட இடங்களில் கூட நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் ஊழல் நடைபெறுகிறது என்றால் நமது அரசின் நிலைமையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அரசு நியாயவிலைக் கடைகளில் இலவசமாக வழங்கும் கோதுமை, அரிசி கொண்டே அங்குள்ள பல குடும்பங்கள் தங்கள் பசியைப் போக்கிக் கொண்டிருந்தனர்.”
உ த்தரப் பிரதேச மாநிலத்தின், ஜான்சி நகரில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு சிறிய கிராமம் தான் இந்த பவா. கடந்த ஆறு ஆண்டுகளாக கடும் வறட்சி யால் பாதிக்கப்பட்ட இந்த கிராமத்திற்கு கடந்த மாதம் நேரில் சென்று பாதிப்புகளை குறித்து மக்களிடையே கேட்டறியும் வாய்ப்பு கிடைத்தது. 800 குடும்பங்களுக்கு மேல் வசிக்கும் இந்த விவசாய கிராமத்தில், விவசாயம் நடந்து நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என்று கண்ணீருடன் கூறினார் ஒரு விவசாயி. தனது 60 வயதில் மூன்று பெரும் பஞ்சங்களை தான் கடந்து வந்துள்ளதாகவும் அதில் இது தான் மிகவும் கடுமையான பஞ்சம் எனவும் கூறினார். இந்த கிராமத்தில் மட்டும் சுமார் 1500 கால்நடைகள் பராமரிப்பு இல்லாமல் கைவிடப் பட்டுள்ளன. தமிழ்நாட்டை விட வட இந்திய கிராமங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் என்பது தெரியும் ஆனால் நான் எதிர் பார்த்ததை விட பவா மிகவும் மோசமாகவே இருந்தது. சாலை,மின்சாரம், போக்குவரத்து, சுகாதாரம், மருத்துவம் போன்ற எந்த வசதிகளும் இல்லாத கிராமங்களை ஏற்கனவே கண்டிருக்கிறேன் என்ற போதிலும். அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத நிலையில் கூடுதலாக வறட்சியின் பிடியில் பவா ஒரு வாழத் தகுதியற்ற பாலைவனமாகவே காட்சியளித்தது. அங்கு இருந்த குடிநீர் கிணறுகள் ஒவ் வொன்றும் சுமார் ஆறு வருடங்களுக்கு முன்பே முற்றிலும் வற்றி போயிருந்தது. நிலத்தின் இரண்டடி ஆழத்திலே கடுமையான பாறைகள் தென்படுவதால் அந்த ஏழை எளிய மக்களுக்கு ஆழ்துளை கிணறு தோண்டுவதும் சாத்தியம் இல்லாமல் போயிருந்தது. பவா கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் மட்டும் தினமும் 2கி.மீ தூரம் சென்று தண்ணீர் சேகரித்து வரும் அவல நிலை இருந்தது. ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதியில் 1000 பேருக்கு ஒரு அடி பம்ப் மட்டுமே இருந்தது. காலை 6 மணி ஆகட்டும் இல்லை இரவு 8 மணி ஆகட்டும் எப்பொழுதும் பெண்கள் கூட்டமாக அடிபம்ப் குழாயில் தண்ணீருக்காக காத்திருப்பதைப் பார்க்க முடிந்தது. தண்ணீர் சேகரிக்கும் பணிகளுக்கு பெண்களே உட்படுத்தப்பட்டிருந்தனர், அந்த பெண்களின் பெரும்பான்மை நேரம் வீட்டு வேலைகளுக்கும் , தண்ணீர் கொண்டுவரவுமே சரியாக இருந்தது. இதைப் பெண் அடிமைத் தனத்தின் அடையாளமாகவே அங்கு பார்க்க முடிந்தது. பவா கிராமத்தில் உள்ள பண்டிட், ராஜ்புட், பண்டேல்லா, சத்திரி போன்ற பல முன்னேறிய சாதியினர் வறட்சியால் தங்களின் விவசாயத்தையும் வாழ்வாதாரத்தையும் இழந்திருந்தாலும் , அதிகம் பாதிப்பு என்னமோ அங்குள்ள தலித் மற்றும் ஷகரியா எனப்படும் ஆதிவாசி குடும்பங்களுக்கே. மூன்று மாதங்களாக அவர்கள் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை பார்த்ததற்கான சம்பளப் பணம் வராத காரணத்தினால் கடந்த ஒரு வருடமாக யாரும் அந்த வேலைக்கும் செல்லவில்லை..
இது போன்ற வறட்சியால் பாதிக்கப்பட்ட இடங்களில் கூட நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் ஊழல் நடைபெறுகிறது என்றால் நமது அரசின் நிலைமையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அரசு நியாயவிலைக் கடைகளில் இலவசமாக வழங்கும் கோதுமை, அரிசி கொண்டே அங்குள்ள பல குடும்பங்கள் தங்கள் பசியைப் போக்கிக் கொண்டிருந்தனர். அங்கு நாங்கள் தங்கி இருந்த நான்கு நாட்களும் அம்மக்களின் வீட்டில் தான் உணவு உண்டோம், ஒவ்வொரு வேலையும் ஒவ்வொரு வீட்டில் எங்களுக்கு சாப்பாடு வழங்கும் விதமாக ஏற்பாடு செய்திருந்தனர், எனவே அவர்களின் உணவு முறையை நேரில் பார்க்க முடிந்தது, ஒவ்வொரு குடும்பத்துடனும் நெருங்கி பழகவும் முடிந்தது. இன்னும் சில ஆதிவாசி குடும்பங்கள் புல்லில் ரொட்டி(Grass Roti) செய்து சாப்பிடுவதையும் கண்டோம். ஒவ்வொரு குடும்பமும் தங்கள் வாழ்விற்கும் சாவிற்கும் நடுவே குறிக்கோள் ஏதும் இல்லாமல் கிடைத்ததை உண்டு வாழ்கையை நகர்த்தி வருகிறார்கள். ஏற்கனவே பலர் ஊரைக் காலி செய்துவிட்டு பிழைப்பு தேடி வேறு பகுதிகளுக்கு சென்றிருந்தனர். என்னுடன் வந்த மற்ற மூன்று நண்பர்களுக்கும் ஹிந்தி தெரியும் என்பதால் அவர்கள் மக்களின் குறையை அவர்களுடன் பேசி கேட்டறிந்து கொண்டிருந்தார்கள் நான் அங்குள்ள (5 வயதுக்கு உட்பட்ட) குழந்தைகளின் எடை மற்றும் உடல் அளவு ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதனை அதற்க்கான கருவிகளை கொண்டு சோதித்துக் கொண்டிருந்தேன்… அப்பொழுது ஆதிவாசி குடும்பங்களை சேர்ந்த 10 இல் மூன்று குழந்தைங்கள் ஊட்டச்சத்து குறைவுடனே இருந்தனர். அதில பாவனா என்ற நான்கு வயது குழந்தை வெறும் பத்து கிலோ எடை மட்டுமே இருந்தது குறிப்பிடதக்கது. விவசாயிகள் தற்கொலை, மக்கள் இடம் பெயர்வது, பராமரிப்பின்றி கைவிடப்பட்ட கால் நடைகள் உயிரிழப்பு ஆகிய பிரச்சனைகளுடன் சேர்ந்து குழந்தைகள் ஊட்ட சத்து குறைவோடு எலும்பும் தோலுமாக காட்சியளித்தது மிகவும் வேதனையாக இருந்தது, வறட்சியால் பாதிக்கபட்ட இடங்களில் ஊட்டசத்து குறைவாக உள்ள குழந்தைகளுக்கும், தாய்மார்களுக்கும் அரசாங்கம் உதவி தொகை வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ள போதிலும் அந்த திட்டம் பற்றி இந்த மக்களுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை, இன்னும் சொல்லப் போனால் தங்கள் குழந்தை ஊட்டச்சத்து குறைப்பாட்டுடன் வளர்வதே அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.
மத்திய அமைச்சரான உமா பாரதி அவர்கள் கடந்த 2015 ஜனவரி மாதம் இந்த பவா கிராமத்தை தத்தெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது . பெருமைக்கு கிராமங்களை தத்தெடுக்கும் இவர்கள் கொஞ்சமாவது மக்களுக்காக ஏதாவது செய்தால் நலம். நகரத்தில் இருந்து பல நூறு கி.மீ தொலைவில் ஏதோ ஒரு மூலையில் உள்ள கிராமத்தில் தண்ணீர் பஞ்சத்தால் ஏற்பட்டுள்ள வறட்சியில் வாழ்க்கைக்காகப் போராடி கொண்டிருக்கும் ஏழை மக்களை பற்றி நம்மை ஆளும் அரசாங்களுக்கு எந்த கவலையும் இல்லையே!, இதையெல்லாம் பார்க்கும் பொழுது அரசாங்கம் என்று ஒன்று எதற்காக இருக்கிறது என்ற கேள்வி நமக்கு எழும் அதே நேரத்தில், தொடர்ந்து இயற்கையை அலட்சியப்படுத்தி வரும் நமக்கும் நாளை இதே கதி தானே என்று நினைக்கையில் நெஞ்சம் பதைக்கிறது. பவா கிராமம் ஒரு உதராணம் மட்டுமே, உத்தர பிரதேசம், மகாராஷ்ட்ரா, ஒடிசா, ராஜஸ்தான், ஜார்கண்ட், குஜராத், சட்டிஸ்கர், தெலுங்கான பகுதிகளில் இன்னும் இதைப் போல் பல நூறு கிராமங்கள் அரசாங்கத்தின் உதவிகள் கிடைக்காமல் தண்ணீர் பஞ்சத்திலும் வறட்சியிலும் சிக்கி சிதைந்து கொண்டிருக்கின்றன. வறட்சியால் சிறுக சிறுக செத்துக்கொண்டிருக்கும் ஏழை எளிய மக்களுக்கு ஆதரவாக நாடு முழுவதிலும் உள்ள செயற்பாட்டாளர்களும், மக்கள் இயக்கங்களும் ஒருங்கிணைந்து, மக்கள் நலனில் துளியும் அக்கறை இல்லாத இந்த அரசாங்கத்தினை எதிர்த்து கேள்வி எழுப்ப வேண்டியது நமது ஒவ்வொருவரின் கடமை என்பதை வலியுறுத்தவே இதை நான் இங்கு எழுதுகிறேன். வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் வட இந்திய மக்களை இந்த அவநிலையில் இருந்து மீட்டு அவர்களுக்கான உடனடி நிவாரணங்களையும் நிரந்தரத் தீர்வுகளையும் அரசு அவர்களுக்கு வழங்க வேண்டும், இந்த கோரிக்கையினை வலியுறுத்தி தமிழ்நாட்டில் இருந்து நாமும் குரல் எழுப்புவோம். மனிதாபிமான அடிப்படையில் மட்டுமல்ல, அந்த மக்களின் இந்த நிலைமைக்கு ஏதோ ஒரு வகையில் நாமும் நம் நவீன வாழ்க்கை முறையும் ஒரு காரணம் என்ற அடிப்படையில் அவர்களுக்காக குரல் எழுப்புவது நமது கடமையே.. பருவநிலை மாற்றத்திற்கும் புவி வெப்பமயமாதலுக்கும் துளியும் தொடர் பில்லாத இந்த பவா கிராமத்து மக்கள் தான் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள். பருவநிலை மாற்றத் தினால் நாம் சந்திக்க இருக்கும் பிரச்சனைகளை நமக்கு உணர்த்தும் ஒரு எச்சரிக்கை மணியாகவே பவா போன்ற கிராமங்கள் நம்முன் காட்சியளிக்கின்றன. இனியும் இயற்கைக்கு எதிராக அகம் பாவத்துடன் தான் நாம் நடப்போம் என்றால் நாமும் கிராஸ் ரொட்டி சாப்பிட பழகிக்கொள்ள வேண்டியதுதான்.
வீ.பிரபாகரன்