ஃபுகுஷிமாவிற்கு வாருங்கள், பிரதமர் மோடி!

மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு,

நாங்கள் ஃபுகுஷிமாவைச் சேர்ந்த பெண்கள். இந்த பகுதியில்தான் டோக்யோ மின் சக்தி நிறுவனத்தின் ஃபுகுஷிமா டாய்ச்சி அணு உலையில் வரலாறு இதுவரை கண்டிராத மிகப்பெரிய விபத்தொன்று கடந்த 2011 ஆண்டு மார்ச் மாதம் 11ந் தேதி நிகழ்ந்தது.

இந்த விபத்து எங்களது வாழ்க்கைகளை புரட்டிப் போட்டது. எங்களில் சிலர் வீடுகளை இழந்தோம், வேலைகளை இழந்தோம். நிலத்தையும் நண்பர்களையும் இழந்தோம். எதிர்காலத்தையும் மகிழ்ச்சியையும் இழந்தோம். எங்களில் சிலர் உயிரை இழந்தோம். இதையெல்லாம் அந்த விபத்துதான் எங்களிடமிருந்து எடுத்துச் சென்றது. ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்னமும் முடிவுக்கு வரவில்லை அந்த விபத்து. அணு உலையிலிருந்து வெளியாகும் கதிரியக்கக் கழிவுகளுக்கிடையில்தான் எங்கள் வாழ்க்கையும் கழிகிறது. அரசாங்கம் எங்களை எங்களது வீடுகளுக்குத் திரும்பச் சொல்கிறது. ஆனால் சொந்த வீட்டுக்குச் செல்ல முடியாத நிலையைதான் எம் பிள்ளைகளின் உடல் நலன் பற்றிய அச்சங்கள் உருவாக்கியிருக்கின்றன. ஃபுகுஷிமா பகுதியில் மட்டும் இன்று 174 குழந்தைகள் தைராய்ட் கான்சரால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னும் வரவிருக்கும் நோய்கள் பற்றிய அச்சத்தில்தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அணு விபத்துக்கு சட்டப் பொறுப்பு யார் என்பதை தீர்மானிக்கும் நீதிமன்ற நடவடிக்கைகள் இன்னமும் தொடங்கவில்லை. விபத்துக்கான காரணம், மனிதத் தவறு பற்றிய கேள்வி, விபத்து சரியான முறையில் கையாளப்பட்டதா என்கிற கேள்வி என்று எண்ணற்ற கேள்விகள் இன்னமும் தொக்கி நிற்கின்றன. இப்போது இந்த அணு உலைகளை மீண்டும் இயக்குவது பற்றிய பிரச்னைகள் எழுந்திருக்கின்றன. அணு உலைகளை மீண்டும் தொடங்காமல் இருக்க சட்டப் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தகாமா அணு உலை போல அல்லாமல் சில அணு உலைகளின் இயக்கங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் ஜப்பான் தனது அணு உலைகளை மற்ற நாடுகளுக்கு விற்க முயற்சிப்பது துரதிருஷ்டவசமானது மட்டுமல்ல அவமானகரமானதும் கூட. இந்தியாவில் அமையவிருக்கும் அணு உலைகளில் இது போன்ற ஒரு விபத்து நிகழலாம் என்பதே எங்களை கவலைக்குள்ளாக்குகிறது. ஃபுகுஷிமா அணு உலை விபத்தில் நேரடியாக பாதிக்கப்பட்ட பெண்கள் என்கிற முறையில், இந்த அனுபவம் உலகில் யாருக்கும் நேரக் கூடாது என்றே நாங்கள் விரும்புகிறோம்.

திரு மோடி அவர்களே, ஃபுகுஷிமாவிற்கு வருகை தந்து அதன் நிலையை நேரடியாக நீங்கள் பார்க்க வேண்டுமென்று உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். அழிந்துபோன அணு உலையும் மக்கள் வாழ முடியாத நிலங்களும் கைவிடப்பட்ட நகரங்களாகவும், கதிரியக்க கழிவின் குன்றுகளாகவும், எழுந்து நிற்கும் எரிகூடங்களாகவும், குழந்தைகள் விளையாட முடியாத வீதிகளாகவும் மாறியிருக்கின்றன. ஃபுகுஷிமாவின் உண்மையை நேரடியாக பார்த்த பிறகு, அணு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தைப் பற்றி ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று கோருகிறோம். அணு உலைகள் உங்கள் குடிமக்களுக்கு மகிழ்ச்சியைத் தரப்போவதில்லை. அணு உலை விபத்தின் காயங்களை அனுபவித்தவர்கள் நாங்கள். இந்த உண்மையை எங்கள் உடல்களின் மூலமாகவும் வாழ்க்கையின் மூலமாகவும் உணர்ந்துகொண்டிருக்கிறோம். திரு. மோடி அவர்களே, இந்திய மக்களுக்காகவும் இந்தியாவின் எதிர்காலம் பொருட்டும் இந்திய ஜப்பான் அணு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். இந்த பிரச்னையில் நீங்கள் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

அணுசக்திக்கு எதிரான ஃபுகுஷிமா பெண்கள் கடிதம்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments